இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 27வது வாரம் செவ்வாய்க்கிழமை 2018-10-09
முதல் வாசகம்
பிற இனத்தவர்க்கு நற்செய்தியை அறிவிக்குமாறு திருவுளங்கொண்டார்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 13-24
சகோதரர் சகோதரிகளே, பவுல் ஆகிய நான் யூத நெறியைப் பின்பற்றி வந்த காலத்தில் எவ்வாறு நடந்துகொண்டேன் என்பதுபற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்கவனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரைவிட யூத நெறியில் சிறந்து விளங்கினேன்.
ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள், தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை. எனக்கு முன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் போகவுமில்லை. ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன்.
அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன். ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை. நான் உங்களுக்கு எழுதுவதில் பொய் ஒன்றுமில்லை; இதற்குக் கடவுளே சாட்சி! பிறகு நான் சிரியா, சிலிசியப் பகுதிகளுக்குச் சென்றேன்.
ஆயினும் யூதேய நாட்டிலிருந்த கிறிஸ்தவச் சபைகளுக்கு அதுவரை அறிமுகம் ஆகாமலேயே இருந்தேன். ``ஒரு காலத்தில் தங்களைத் துன்புறுத்தியவன், தான் முன்பு ஒழிக்க முயன்ற விசுவாசத்தை இப்பொழுது நற்செய்தியாக அறிவிக்கிறான்'' என்று மட்டும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். அதற்காக என் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.
- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இதறைவனுக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
என்றும் உள்ள வழியில் என்னை நடத்தியருளும் ஆண்டவரே.
திருப்பாடல் 139: 1-3. 13-14. 15
ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! 2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். 3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. பல்லவி
13 ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே! 14 அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். பல்லவி
15 என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுடன் ஓர் ஊருக்குச் சென்றார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ``ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்'' என்றார்.
ஆண்டவர் அவரைப் பார்த்து, ``மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது'' என்றார்.
- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.
|
இன்றைய சிந்தனை
மார்த்தாவும், மரியாவும் !
இயேசுவின் நண்பர்களான மார்த்தாவும், மரியாவும் பேறுபெற்றவர்கள். இயேசு எப்போதெல்லாம் ஓய்வெடுக்க விரும்பினாரோ, அப்போதெல்லாம் அவரைத் தம் வீட்டில் வரவேற்கும் பேறு பெற்றிருந்தனர். உரிமையுடன் இயேசுவை உபசரிப்பதிலும், அவரோடு தனியே உரையாடி, அவர் அமுத மொழிகளைக் கேட்கவும் கொடுத்து வைத்தவர்கள். இன்றைய வாசகத்தில் மார்த்தாவின் மன நிலையைக் கொஞ்சம் சிந்திப்போம். மார்த்தாவுக்கு நல்ல எண்ணம் இருந்தது. இயேசுவை நன்கு உபசரிக்க வேண்டும், அவருக்கு நன்கு பணிவிடை செய்ய வேண்டும். இந்த எண்ணம் பாராட்டுக்குரியது. ஆனால், அடுத்து அவர் செய்ததுதான் இயேசுவின் கவனத்தை ஈர்த்தது. மார்த்தா இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த மரியா பற்றி இயேசுவிடமே உரிமையுடன் புகார் சொல்கின்றார். என்னைத் தனியே விட்டுவிட்டாள் என்ற குற்றச்சாட்டுடன், எனக்கு உதவி புரியும்படி சொல்லும் என்ற விண்ணப்பத்தையும் இயேசுவிடம் வைக்கிறார். இயேசு அவரது தவறான மனநிலையை அவருக்குச் சுட்டிக்காட்டுகிறார்.
நல்ல எண்ணம் கொண்டவர்களும் தவறு செய்யலாம் என்பதற்கு இந்த நிகழ்வு எடுத்துக்காட்டாக இருக்கிறது. எனவே, நாம் கவனமோடு இருப்போம். பிறரது வழிபாட்டுப் பங்கேற்பு, ஆர்வங்கள் பற்றி அவசரப்பட்டு தீர்ப்பிட்டு விடாமலும், குற்றம் சுமத்தாமலும் நம்மைக் காத்துக்கொள்வோம். அத்துடன், வாழ்க்கையில் நல்ல பங்கு எது என்கிற தெளிவையும் கற்றுக்கொள்வோம்.
மன்றாட்டு:
நல்ல நண்பரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். மார்த்தாவின் அறியாமையை அவருக்கு அன்புடன் சுட்டிக்காட்டியதுபோல, எங்களின் அறியாமையையும், குறை காணும் மனநிலையையும் சுட்டிக்காட்டியருளும். இதனால், நாங்கள் சரியானவைகளை உணரும் ஆற்றலை உமது தூய ஆவியால் பெற்றுக்கொள்வோமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
|