யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 29வது வாரம் வெள்ளிக்கிழமை
2018-10-26




முதல் வாசகம்

உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவரும் ஒருவரே; திருமுழுக்கும் ஒன்றே.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-6

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழுமனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்குக் கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுள் முகத்தைத் தேடுவோரின் தலைமுறையினர் இவர்களே.
திருப்பாடல் 24: 1-2. 3-4 5-6

மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4யb கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 54-59

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: ``மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது. வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்? நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார். கடைசிக் காசு வரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நீங்களே வழக்கைத் தீர்த்துக்கொள்ளுங்கள் !

இயேசு மக்கள் கூட்டத்துக்கு வழங்கிய அறிவுரைகளில் ஒன்று நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் என்பது. இயேசுவின் இந்த வாக்கு எத்துணை ஞானம் நிறைந்தது, இந்த நுhற்றாண்டுக்கும் எத்துணை பொருத்தமானது என்பதை எண்ணி, எண்ணி வியக்கிறோம். இன்றைய நாள்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. குடும்ப நீதிமன்றங்களில் மணமுறிவுக்கான வழக்குகள் குவிகின்றன. சொத்துச் சண்டை, பாகப் பிரிவினை என்பது தனி நபர்களுக்குள் மட்டுமல்ல, மாநிலங்களுக்கிடையேகூட உருவாகி, மாநிலங்களும் வழக்கு தொடுக்கின்ற காட்சிகளை இன்று காண்கிறோம்.

நீதிமன்றங்களுக்குச் செல்வதால் பண விரயம், கால விரயம், மன உளைச்சல், தொடரும் பகை உணர்வு முதலியனதான் ஏற்படுகின்றனவே ஒழிய, நேர்மையான, அனைவருக்கும் ஏற்புடைய தீர்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே, இயேசுவின் அறிவுரை முன் எப்போதையும்விட இக்காலத்துக்கு இன்னும் நன்றாகப் பொருந்துகிறது. வழக்கு மன்றங்களுக்குச் செல்வதற்கு முன் உரையாடல் வழி சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள முடியுமா என்று முயற்சி செய்ய வேண்டும். இயேசுவின் சொற்களைக் கவனிப்போம்: வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அமைதியை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கவர்;களின் துணையோடு இந்த முயற்சிகள் வெற்றி பெறும்போது அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்குமே! நமது அலுவலகங்களிலும் சிக்கல்களை மேலிடத்துக்கு எடுத்துச்n செல்லும் முன் நாமே அவற்றைத் தீர்க்க முடியுமா என்று முயற்சி செய்வோமா?

மன்றாட்டு:

ஞானம் நிறை நாயகனே இயேசுவே, நீர் தந்த இந்த ஞானம் நிறை வார்த்தைகளுக்காக உம்மைப் போற்றுகிறோம். எங்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை, சிக்கல்களை உரையாடல் மூலமே தீர்த்துக்கொள்ள எங்களுக்கு ஞானமும், நல்லறிவும் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.