இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 34வது வாரம் செவ்வாய்க்கிழமை 2018-11-27
முதல் வாசகம்
உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது.
திருத்தூதர் யோவான் எழுதிய திரு வெளிப்பாட்டில் இருந்து வாசகம் 14: 14-20
சகோதரர் சகோதரிகளே, யோவான் என்னும் நான் ஒரு வெண் மேகத்தைக் கண்டேன். அதன்மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் வீற்றிருந்தார். அவரது தலையில் பொன் முடியும் கையில் கூர்மையான அரிவாளும் காணப்பட்டன.
மற்றொரு வானதூதர் கோவிலிலிருந்து வெளியே வந்து, மேகத்தின்மீது வீற்றிருந்தவரை நோக்கி, ``உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது; மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது'' என்று உரத்த குரலில் கத்தினார்.
உடனே மேகத்தின்மீது வீற்றிருந்தவர் மண்ணுலகெங்கும் தமது அரிவாளை வீசி அறுவடை செய்தார். மற்றொரு வானதூதரும் விண்ணகத்தில் உள்ள கோவிலிலிருந்து வெளியே வந்தார். அவரிடமும் கூர்மையான அரிவாள் ஒன்று இருந்தது. நெருப்பின் மேல் அதிகாரம் கொண்டிருந்த இன்னுமொரு வானதூதர் பலிபீடத்திலிருந்து வெளியே வந்தார்.
அவர் கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம், ``உமது கூர்மையான அரிவாளை எடுத்து மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்திடும்; ஏனெனில் திராட்சை கனிந்துவிட்டது'' என்று உரத்த குரலில் கூறினார்.
ஆகவே அந்த வானதூதர் மண்ணுலகின் மீது தம் அரிவாளை வீசி மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்தார்; கடவுளின் சீற்றம் என்னும் பெரிய பிழிவுக் குழியில் அவற்றைப் போட்டார். நகருக்கு வெளியே இருந்த அந்தப் பிழிவுக் குழியில் அவை மிதிக்கப்பட்டன. அந்தப் பிழிவுக் குழியிலிருந்து இரத்த வெள்ளம் ஏறத்தாழ இரண்டு மீட்டர் ஆழம், முந்நூறு கிலோ மீட்டர் தொலைக்குப் பாய்ந்தோடியது.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.
திருப்பாடல் 96: 10. 11-12. 13
வேற்றினத்தாரிடையே கூறுங்கள்; ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி
11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். 12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். பல்லவி
13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர்
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-11
அக்காலத்தில் கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.
இயேசு, ``இவற்றை யெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்'' என்றார்.
அவர்கள் இயேசுவிடம், ``போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?'' என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், ``நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, `நானே அவர்' என்றும், `காலம் நெருங்கி வந்துவிட்டது' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது'' என்றார்.
மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ``நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளைநோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு பிலாத்துவை நோக்கி, 'அரசன் என்று நீர் சொல்கிறீர்.
உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்;
இதற்காகவே உலகிற்கு வந்தேன்' என்றார்'' (யோவான் 18:37)
வழிபாட்டு ஆண்டின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஆங்கில ஆண்டு மாதங்களாகப் பிரிக்கப்படுகிறது. ஆண்டின் தொடக்கம் ஜனவரி மாதம். நிறைவு டிசம்பர் மாதம். இதே போல, திருச்சபையில் வழிபாட்டு ஆண்டு இருக்கிறது. இதனை காலங்களாகப் பிரிக்கிறார்கள். திருவருகைக்காலம், பொதுக்காலம், தவக்காலம் மற்றும் பாஸ்கா காலம். வழிபாட்டு ஆண்டின் தொடக்கம் திருவருகைக்காலம். நிறைவு வாரம், கிறிஸ்து அரசர் பெருவிழா வாரம். இதுதான் பொதுக்காலத்தின் நிறைவாகவும், வழிபாட்டு ஆண்டின் கடைசி வாரமாகவும் இருக்கிறது. எதற்காக கிறிஸ்து அரசர் பெருவிழா, திருவழிபாட்டு ஆண்டின் கடைசி வாரத்தில் கொண்டாடப்படுகிறது? கிறிஸ்துவின் மகிமையை திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் இதற்கு காரணம். அதேபோல, திருவருகைக்காலங்களில் சுட்டிக்காட்டப்படும் இயேசுவின் வருகை மற்றும் உலகத்தின் இறுதிநாட்கள் போன்றவற்றையும், இதில் நாம் சிறப்பாக புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். இறைவன் தான் நமக்கு என்றும் அரசர், அவருக்கே என்றென்றும் மகிமையும், ஆராதனையும், புகழ்ச்சியும் என்பதை உறுதிப்படுத்த வந்த விழா தான், இந்த கிறிஸ்து அரசர் பெருவிழா. இஸ்ரயேல் மக்களுக்கு, யாவே இறைவனைத்தவிர வேறு யாரும் அரசர் கிடையாது. அவர்களை ஏற்றுக்கொள்வதும் கிடையாது. இறைவன் ஒருவரே அரசர். அவரைத்தவிர வேறு யாரையும், அந்த இடத்தில் வைப்பது கிடையாது. அதே போல, இந்த விண்ணகம் மற்றும் மண்ணகத்தின் அரசர் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. அவர் சாவையே வெற்றி கொண்டு நமக்கெல்லாம் வாழ்வு கொடுத்தவர். அந்த வாழ்வை நமக்குக் கொண்டு வந்து, மீட்பராக, அரசராக இந்த வரலாற்றிலும் அவர் நிலைகொண்டிருக்கிறார்.
நாம் அனைவருமே அவரால் வாழ்வு பெற்றுள்ளோம். அவரது தியாகத்தால் மீட்பு பெற்றுள்ளோம். அந்த வாழ்வுக்கு தன்னையே அவர் தன்னுடைய உடலையும், இரத்தத்தையும் விலையாகக் கொடுத்தார். அத்தகைய அரசரை பெற்றுள்ள நாமும், நமது வாழ்வில், மற்றவர்களுக்காக, நம்மையே இழக்க முன்வருவதற்கு, இந்த விழா நமக்கு அழைப்புவிடுக்கிறது.
மன்றாட்டு:
எம் இறைவா, எம் அரசே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். உம்மை எம் தலைவராக, ஆண்டவராக, அரசராக ஏற்று வழிபடுகிறோம். நீர் எங்களுக்குக் கற்றுத் தந்த, மாதிரி காட்டிய தலைமைப் பண்பை ஏற்று, பிறர்க்குப் பணிவிடை புரிந்து தலைவர்களாய் விளங்க அருள்தாரும் உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
|