முதலாவது திருவழிபாடு ஆண்டு புதன்கிழமை 7வது வாரம் பொதுக்காலம் 2019-02-27
முதல் வாசகம்
ஞானம் தன் மக்களை மேம்படுத்தும்!
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 4: 11-19
ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும்; தன்னைத் தேடுவோர்க்குத் துணை நிற்கும். ஞானத்திற்கு அன்பர் வாழ்விற்கும் அன்பர்; அதனை வைகறையிலேயே தேடுவோர் மகிழ்ச்சியால் நிரம்புவர்.
அதனைப் பற்றிக்கொள்வோர் மாட்சியை உரிமையாக்கிக் கொள்வர்; அது செல்லும் இடமெல்லாம் ஆண்டவர் ஆசி வழங்குவார். அதற்குப் பணி செய்வோர் தூய இறைவனுக்கே ஊழியம் புரிகின்றனர்; ஞானத்துக்கு அன்பர் ஆண்டவருக்கும் அன்பர். ஞானத்துக்குப் பணிவோர் மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்குவர்; அதற்குச் செவிசாய்ப்போர் பாதுகாப்பாய் வாழ்வர்; ஞானத்தை நம்புவோர் அதனை உரிமையாக்கிக் கொள்வர்; அவர்களுடைய வழிமரபினரும் அதனை உடைமையாக்கிக் கொள்வர்.
முதலில் அவர்களை அது கோணல் வழியில் அழைத்துச் செல்லும்; அவர்களுக்கு அச்ச நடுக்கத்தை வருவிக்கும்; தனக்கு அவர்கள்மீது நம்பிக்கை ஏற்படும்வரை அவர்களை அது கண்டிக்கும், வதைக்கும்; தன் நெறிமுறைகளால் அவர்களைச் சோதிக்கும். அது மீண்டும் அவர்களிடமே வந்து அவர்களை மகிழ்விக்கும்; அவர்களுக்குத் தன் இரகசியங்களை வெளிப்படுத்தும். அதை விட்டு அவர்கள் விலகிச் சென்றால், அவர்களை அது கைவிட்டுவிடும்; அழிவுக்கு அவர்களை இட்டுச்செல்லும்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு.
திருப்பாடல்கள் 119: 165;168, 171-172,174-175
165
உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு; அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை.
168
உம் நியமங்களையும் ஒழுங்குமுறைகளையும் நான் கடைப் பிடிக்கின்றேன்; ஏனெனில், என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவை. - பல்லவி
171
உம் விதிமுறைகளை எனக்கு நீர் கற்பிப்பதால், என் இதழ்களினின்று திருப்புகழ் பொங்கிவரும்.
172
உம் வாக்கைக் குறித்து என் நா பாடுவதாக! ஏனெனில், உம் கட்டளைகள் எல்லாம் நீதியானவை. - பல்லவி
174
ஆண்டவரே! உம்மிடமிருந்து வரும் மீட்பை நான் நாடுகின்றேன்; உமது திருச்சட்டத்தில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
175
உயிர் பிழைத்து நான் உம்மைப் புகழ்வேனாக! உம் நீதி நெறிகள் எனக்குத் துணைபுரிவனவாக! - பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 14: 6
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 38-40
அக்காலத்தில்
யோவான் இயேசுவிடம், “போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார். அதற்கு இயேசு கூறியது: “தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.”
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ
அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்'' (லூக்கா 6:39)
இயேசு வழங்கிய போதனைகளில் மிக முக்கியமான ஒன்று அன்புக் கட்டளை ஆகும். எல்லா மனிதரையும் அன்புசெய்யக் கேட்ட இயேசு நம் பகைவரையும் நாம் அன்புசெய்திட வேண்டும் என அறிவுறுத்துகிறார். நமக்கு எதிராகச் செயல்படுவோரை நாம் மன்னிக்காவிட்டால் கடவுளிடமிருந்து நாம் மன்னிப்பை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? பிறருக்கு அன்பு காட்டி, அவர்களை மன்னித்து நாம் ஏற்றுக்கொண்டால் நாமும் மன்னிப்பைப் பெற்றுக்கொள்வோம்; அன்புசெய்யத் தவறுவோர் தம்மைப் பிறர் அன்புசெய்ய வேண்டும் எனக் கேட்கலாமா? இதை விளக்குவதற்குத் தான் இயேசு ''நீங்கள் அளந்து கொடுப்பதற்கு ஏற்ப உங்களுக்கும் அளந்து தரப்படும்'' என்றார். நடைமுறை வாழ்க்கையில் இது எவ்வாறு செயல்படும் என்பதைக் காட்ட இயேசு, ''பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்'' என்று கூறினார். இயேசுவின் போதனையைச் சுருக்கமாகத் தருகின்ற இக்கூற்றினைப் ''பொன்விதி'' எனவும் கூறுவர்.
சிலர் தாராளமாக அளந்துகொடுக்கத் தயக்கம் காட்டுவர். பெருமளவில் பிறருக்குக் கொடுத்துவிட்டால் தமக்கு ஒன்றும் இல்லாமல் போய்விடுமே என இவர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் நாம் தாராள உள்ளத்தோடு கொடுக்க முன்வர வேண்டும் எனக் கோருகிறார் இயேசு. நம்மிடம் இருக்கின்ற பொருள்களை மட்டுமல்ல, நம் நேரத்தையும் திறமைகளையும் நாம் பிறருக்கு உதவிசெய்வதில் செலவிடும்போது நாம் தாராள உள்ளத்தோடு செயல்படுகிறோம் எனலாம். நாம் அளந்தளிப்பது பிறருக்குத் தாராளமாகச் சென்று சேரவேண்டும் என்றால் நம் உள்ளம் அன்புணர்வினால் நிறைய வேண்டும்; கடவுள் நம் மட்டில் காட்டிய தாராளத்தை நாம் பிறர் மட்டிலும் காட்ட வேண்டும். எனவே, ''உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்'' (லூக்கா 6:36) என இயேசு வழங்கும் அறிவுரையின் அடிப்படையில் நம் உள்ளத்திலும் வாழ்விலும் இரக்கம் என்னும் நற்பண்பு மேலோங்கி விளங்கிட நாம் முயன்றிட வேண்டும். கடவுளிடமிருந்து இரக்கம் பெற்றோர் பிறர் மட்டில் இரக்கம் காட்டத் தவறமாட்டார்கள். ஆனால், கடவுளின் இரக்கத்தை உண்மையாகவே அனுபவத்து, நன்றியோடு ஏற்காதோர் இரக்கத்தின் உள்பொருளையே புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். அவர்கள் பிறர் மட்டில் இரக்கம் காட்டத் தயங்குவார்கள்.
மன்றாட்டு:
இறைவா, எங்களை நீர் மன்னித்து ஏற்பதுபோல நாங்களும் பிறரை மன்னித்து ஏற்றிட அருள்தாரும்.
|