திருவழிபாடு ஆண்டு - C 2019-03-17
(இன்றைய வாசகங்கள்:
தொடக்க நூலிலிருந்து வாசகம். 15:5-12, 17-18, 21,பதிலுரைப்பாடல்: திபா: 27: 1, 7-9, 13-14,திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:17-4:1,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9:28-36)
திருப்பலி முன்னுரை
இயேசுக் கிறிஸ்துவின் பாஸ்காவிழாவிற்கு அணியமாகும் வகையில் தவக்காலப் பக்தி முயற்சிகளில் பங்கேற்று இன்று சிறப்பாக தவக்கால இரண்டாம் ஞாயிறு திருப்பலி வழிபாட்டில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் பெரியோர்களே, வருங்காலத் திரு அவையின் கருவாகிய இளையோர்களே, சிறுவர் சிறுமிகளே உங்கள் அனைவருக்கும் தவக்காலம் தரும் புதிய பாஸ்காப் பெருவாழ்வு கிடைக்க அன்புடன் வாழ்த்துகிறேன். நம் ஆண்டவர் இயேசுவின் மாட்சியில் பங்குபெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த நாளில் இன்றைய இறை வாக்குகளுக்கு ஏற்ற வகையில் மூன்று உறுதிமொழிகளை நம் உள்ளத்தில் பதியவைப்போம். அவை:-
1. கடவுளின் மக்களாய் வாழ்வோம்.
2. பாடுகளில் பங்கேற்போம்.
3. இறை மொழிகளுக்குச் செவிசாய்ப்போம்.
இன்றைய இறைச் செய்திகள் நம்மை ஈக வாழ்வு வாழத் தூண்டுகின்றன. அந்த மன நிலையுடனே இன்று இந்த மாண்புமிக்க உயர் பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
கடவுள் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம். 15:5-12, 17-18, 21
அந்நாட்களில், ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்" என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். "ஆண்டவர் ஆபிராமிடம், "இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே" என்றார்." அதற்கு ஆபிராம், "என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?" என்றார். ஆண்டவர் ஆபிராமிடம், "மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா" என்றார். ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டுவந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை. துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார்.
கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. கதிரவன் மறைந்ததும் இருள்படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன.
அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, "எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்" என்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவரே என் ஒளி: அவரே என் மீட்பு:
பதிலுரைப்பாடல்: திபா: 27: 1, 7-9, 13-14
ஆண்டவரே என் ஒளி: அவரே என் மீட்பு: யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்: யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி
ஆண்டவரே, நான் மன்றாடும் போது என் குரலைக் கேட்டருளும்; என் மீது இரக்கங் கொண்டு எனக்குப் பதிலளித்தருளும். ;புறப்படு, அவரது முகத்தை நாடு ; என்றது என் உள்ளம்: ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன். பல்லவி
உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்: நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கி விடாதிரும்: நீரே எனக்குத் துணை: என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடா தேயும். பல்லவி
இரண்டாம் வாசகம் கிறிஸ்து நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார்: திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:17-4:1சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள். கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். அழிவே அவர்கள் முடிவு: வயிறே அவர்கள் தெய்வம்: மானக்கேடே அவர்கள் பெருமை: அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே. நமக்கோ விண்ணகமே தாய்நாடு: அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.
ஆகவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி: நீங்களே, என் வெற்றி வாகை: அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, ; என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் ; என்று ஒரு குரல் ஒலித்தது. (மாற் 9:7) அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9:28-36
அக்காலத்தில், இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது: அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர். மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.
அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.
அந்த மேகத்தினின்று, "இவரே என் மைந்தர்: நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
மாட்சி மிகுந்தவரான இறைவா, திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், ஆபிரகாம் கொண்ட நம்பிக்கையின் வழிமரபினராக விளங்கும் திருச்சபையின் மக்களை, உமது மாட்சிக்கு உகந்தவர்களாக உருமாற்றும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற உம்மையே எளிமையாக்கிக் கொண்ட இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எவ்வளவு மாட்சி நிறைந்த நீர், எவ்வளவு எளிமையாய், பணிவாய் பணியாற்றினீர். இவ்வாறு, தந்தைக்குப் பெருமை சேர்த்தீரே. உமக்கு நன்றி. நாங்களும் உம்மைப் போல தந்தையின் விருப்பத்தையே நிறைவேற்றவும், இறைத் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
அன்புத் தந்தையே இறைவா! நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர்கள் இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பின் நாள் என்னும் இறைவெளிப்பாட்டை தம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து: இக்காலத்தை உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும் உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
விடுதலையின் நிறைவே இறைவா, பலவிதமான உடல், உள்ள, ஆன்ம நோய்களால் வருந்தும் மக்களை கனிவுடன் கண்ணோக்கி, அவர்களுக்குத் தேவையான நற்சுகமும், புதுவாழ்வும் அளித்து பாதுகாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
திருஅவையின் வருங்காலத் தூண்களை வழிநடத்தும் எம் இறைவா! இளையோர்பால் திருஅவைக் கொண்டிருக்கும் நம்பிக்கைளை அவர்கள் புரிந்துகொள்ளவும், கிறிஸ்துவ நம்பிக்கை வழியில் இளையோரது பங்கேற்பையும் பங்களிப்பையும் திருஅவைக்கும், சமூகத்திற்கும் செய்து நற்செய்திப் பணியாற்றுபவர்களாக இளையோர் திகழ்ந்திடவும், தங்கள் தேர்வுகளைச் சிறப்பான முறையில் எழுதி வெற்றிப் பெறவும் ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
உமது மகன் இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோர் நிலைவாழ்வுப் பெறுவர் என்ற வாக்களித்த எம் இறைவா! எங்கள் நம்பிக்கை இறை இயேசுவில் நிலைப்பெற்று, எம் வாழ்வு ஏற்றம் பெறவும், அதனால் நாங்கள் உம் இறையரசின் சாட்சிகளாய் ஒளிர்ந்திடவும், அடுத்திருக்கும் எம் மக்களையும் இறையரசில் இணைத்திட உழைக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஆற்றல் வழங்கும் இறைவா, சோதனைகளை வெல்வதற்கு இயேசுவுக்கு வலிமை தந்தீரே, உம்மைப் போற்றுகிறோம். எங்களை சோதனையில் விழவிடாதேயும். சோதனை வேளைகளில் இயேசுவைப்போல இறைமொழி கொண்டு வெற்றி பெற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|