திருவழிபாடு ஆண்டு - C 2019-09-08
தூய கன்னி மரியாவின் பிறப்பு
(இன்றைய வாசகங்கள்:
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 9;13-18,திருப்பாடல்கள் 90;3-6,12-14,17,திருத்தூதர் பவுல் பிலமோனுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1;9-10,12-17 ,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்;14;25-38)
திருப்பலி முன்னுரை
அன்பு ஆண்டவரின் அன்புமக்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கத்தை உரியதாக்குகின்றேன். பொதுக்காலத்தின் இருபத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
பின்தொடர்பவர்களே, கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டு இயேசுவை பின் தொடரும் நாம், அவருடைய சீடர்களாக மாற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவுக்காக தம் உறவுகளையும், உடைமைகளையும், உயிரையும் இழக்கத் தயாராக இருப்பவரே அவருடைய சீடராக மாற முடியும். தம் சிலுவையைச் சுமக்காமல் இயேசுவை பின்செல்பவர் எவரும் அவருக்குச் சீடராய் இருக்க முடியாது. பணத்துக்காகவும், புகழுக்காகவும் இயேசுவை பின்தொடர விரும்பும் எவரும் அவரது சீடராக முடியாது என்பதே நாம் இன்று கற்க வேண்டியப் பாடம். அன்னை மரியாவைப் போன்று கிறிஸ்துவுக்காக அனைத்தையும் இழக்கும் மனநிலை நம்மில் உருவாக வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை; நம்முடைய திட்டங்கள் தவறக்கூடியவை.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 9;13-18
13 "கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்? ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்?
14 நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை; நம்முடைய திட்டங்கள் தவறக்கூடியவை.
15 அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த மண் கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது.
16 மண்ணுலகில் உள்ளவற்றையே நாம் உணர்வது அரிது! அருகில் இருப்பவற்றையே கடும் உழைப்பால்தான் கண்டுபிடிக்கிறோம். இவ்வாறிருக்க, விண்ணுலகில் இருப்பவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பவர் யார்?
17 நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உம் தூய ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள இயலும்?
18 இவ்வாறு மண்ணுலகில் வாழ்வோருடைய வழிகள் செம்மைப்படுத்தப்பட்டன. உமக்கு உகந்தவற்றை மனிதர் கற்றுக்கொண்டனர்; ஞானத்தால் மீட்பு அடைந்தனர். "
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக!
திருப்பாடல்கள் 90;3-6,12-14,17
3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; 'மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர்பல்லவி .
4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.பல்லவி
5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர் பல்லவி ;
6 அது காலையில் தளிர்த்துப் ப+த்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்து போகும்.12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
பல்லவி
13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.பல்லவி
14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம் பல்லவி
.17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும் பல்லவி
!
இரண்டாம் வாசகம் நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக் கொள்வது போல் அவனையும் ஏற்றுக் கொள்ளும். திருத்தூதர் பவுல் பிலமோனுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1;9-10,12-17 9 அன்பின் பெயரால் வேண்டுகோள் விடுவிக்கவே விரும்புகிறேன். கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக அவர் பொருட்டுக் கைதியாக இருக்கும்
10 பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்த போது பிள்ளையான ஒனேசிமுக்காக உம்மிடம் வேண்டுகிறேன்.12 அவனை உம்மிடம் திரும்ப அனு;பபுகிறேன். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும்.
13 நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக்கும் எனக்கு, உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக் கொள்ள விரும்பினேன்.
14 ஆனால் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல், மனமாரச் செய்ய வேண்டு மென்று நினைத்தே, உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை.
15 அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மை விட்டுச் சிறிது காலம் பிரிந்திருந்தான் போலும்!
16 இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையை விட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக் கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்குரியவனாகிறான்!
17 எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக் கொள்வது போல் அவனையும் ஏற்றுக் கொள்ளும். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்;14;25-38
5 பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது;
26 "என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது.
27 தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.
28 "உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா?
29 இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக,
30 "இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை" என்பார்களே!
31 "வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?
32 எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?
33 அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நன்மைகளின் ஊற்றாம் இறைவா, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இயேசுவின் வழியில் அனைவருக்கும் நன்மை செய்பவர்களாகவும், நற்செய்திக்காக அனைத்தையும் இழக்கும் துணிவுள்ளவர்களாகவும் வாழ வரம் அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
எங்கள் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்கும் எம் இறைவா! எங்கள் பங்கை, எம் குடும்பங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். எங்கள் அனைவரின் உள்ளத்திலும் ஆவியானவரின் அருளும், இயேசுவின் சீடராய் மாறிட அடிப்படைத் தேவையான அர்ப்பணிப்பு வாழ்வு, அதன் மூலம் உம் அன்பின் ஒளியாய் சுடர் விட்டுப் பணியாளராய் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இரக்கத்தின் சிகரமே எம் இறைவா! ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்வர்கள், வறுமையில் வாடுபவர்கள், விதவைகள், ஆகிய அனைவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்தும், பாதுகாப்பற்றச் சூழலில் உள்ள இவர்களை அன்போடு பாதுகாத்து, அவர்களின் வாழ்வு வளம்பெற, நாங்கள் அனைவரும் தோள் கொடுத்து உதவிட, தொண்டுள்ளம் கொண்டவர்களாய் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
கருணை நிறைந்த இறைவா! கிறிஸ்துவின் சீடர்கள் எனப் பெருமை கொள்ளும் நாம் இயேசுவின் பணிவு, தாழ்ச்சி, பிறருக்குப் பணிச் செய்வது, தாராள உள்ளத்தோடு உதவிடும் நிலைகளை எடுத்துரைத்த இன்றைய வாசகங்களை உள்வாங்கி, அதன்படி நம் வாழ்வில் இயேசுவின் சீடராய் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அமைதி அருள்பவரே இறைவா, உலகு சார்ந்த பாரம்பரியங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளில் சிக்கித் தவிக்கும் எம் நாட்டு மக்கள் அனைவரும், உம்மைப் பற்றிய உண்மைகளை உணர்ந்து நீர் தரும் அமை தியை பெற்றுக்கொள்ள வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
குடும்பங்களின் பாதுகாவலான எம் இறைவா! எம் குடும்பங்களில் உள்ள எம் பெற்றோர், பெரியோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் சமாதானத்தோடும், ஒற்றுமையோடும் பிரிவினைகள் கருத்துவேறுபாடுகள் இல்லாமல் வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பரிவன்புமிக்க எம் இறைவா! எம் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் இவர்களின் மனங்களில் இறுமாப்பு, ஆடம்பரம் என்ற இருள் சூழ்ந்துக் கொள்ளமால் அன்பு, பிறர்நலம் காணும் நல்லெண்ணம் வளர்ந்திடவும், தாழ்வுமனப்பான்மை அகற்றி தாழ்ச்சியில் உயர்ந்து ஓங்கிடத் தேவையான வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
|