யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2019-12-15

(இன்றைய வாசகங்கள்: எசாயா ஆகமத்திலிருந்து வாசகம் 35:1-10,திருப்பாடல் 146: 7-10, யாக்கோபு 5:7-10,புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11:2-11)




எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். 
உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். 
உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.


திருப்பலி முன்னுரை

இறைமக்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம். இன்று இறைவன் உங்களுக்குத் தரும் அருள்வாழ்வில் நீங்கள் எல்லாரும் நிறைவான நலன்கள் பெற்று வாழ உங்களை அன்புடன் வாழ்த்துகிறேன். இன்று திருவருகைக் காலம் மூன்றாம். இந்த பீடத்தை அழகுபடுத்தும் இம்மலர்கள் போல் உங்கள் உள்ளங்கள் மலர்ந்து பொலிவுபெற இறையருள் பெற வேண்டுகிறேன்.

சோர்வுற்றுத் தளர்ந்திருக்கும் நேர்மையான உள்ளங்களை ஆண்டவர் அப்படியே விட்டுவிடுவதில்லை என்ற உறுதி தரப்படுகிறது. இயேசுவே நம் ஒரே மீட்பர் என நாம் முழுமையாகப் புரிந்துகொண்ட நிலையில் அவருடைய வருகைக்காக பொறுமையோடு நாம் காத்திருக்கவேண்டும். ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஒன்றைக் குறிப்பிடுகிறார் திருத்தூதர் யாக்கோபு. பயிரிடுபவர் நல்ல சிறந்த பலனை எதிர்பார்த்து நிலத்தைப் பக்குவம் செய்து முன்மாரி பின்மாரிக்காகக் காத்திருந்து மிகுந்த பொறுமையோடு பணிசெய்து சிறந்த பலனை அடைதல் போல நாமும் செயல்படவேண்டும் என இன்று கேட்டுக்கொள்ளப்படுகிறோம்.

யாரோடும் பகையற்ற நிலையில், ஒருவரைப்பற்றி ஒருவர் முறையிடாமல், சிறந்த இறைவாக்கினரை மாதிரிகையாகக் கொண்டு பொறுமையோடு வாழ அழைக்கப்படுகிறோம். இனிவரும் நாட்களில் இறை உறவில் மகிழ்ந்து வாழ, இறையன்பால் நிறைந்து, இறைப்பற்று மிக்கவர்களாய் வாழ்வோம். நமக்கு மீட்பு வழங்க வந்த இயேசுவின் மனநிலையில் பொறுமையோடு அனைத்தையும் எதிர்கொள்வோம். தூய வாழ்வு வாழ்ந்த மேலோரைப் பின்சென்று இக்காலத்தில் சிறந்த முன்மாதிரிகையுடன் வாழ்வோம். எல்லாவற்றிற்கும் மேலாக நம்முன் இன்று இத்திருப்பலியில் பலியாகும் இயேசுவோடு இணைந்து நின்று தூய பலியாக நம்மையே கையளித்து ஆண்டவருக்காக அவருடைய மதிப்பீடுகளுக்காகப் பலியாவோம்.



முதல் வாசகம்

அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.
எசாயா ஆகமத்திலிருந்து வாசகம் 35:1-10

"பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்: பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும்." அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்: லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப்படும்: கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்: ஆண்டவர் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள். தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்: தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, "திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்: அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார். " அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்: காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்: வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்: பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்: வறண்ட நிலத்தில் நீரோடைகள்" பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்: தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்: குள்ளநரி தங்கும் வளைகள்எங்கும் கோரையும் நாணலும் முளைத்து நிற்கும். அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்: அது "தூய வழி " என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்: அவ்வழிவரும் பேதையரும் வழி தவறிச் செல்லார். அங்கே சிங்கம் இராது: அவ்வழியில் கொடிய விலங்குகள் செல்வதில்லை, காணப்படுவதுமில்லை: மீட்படைந்தவர்களே அவ்வழியில் நடப்பார்கள். ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்: மகிழ்ந்து பாடிக் கொண்டே சீயோனுக்கு வருவர்: அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்: அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்: துன்பமும் துயரமும் பறந்தோடும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே எங்களை மீட்க வந்தருளும்.
திருப்பாடல் 146: 7-10

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்: பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்: சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி:

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்: தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்: நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். பல்லவி:

ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்: அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்: ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். பல்லவி:

சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா! பல்லவி:

இரண்டாம் வாசகம்

ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள்.
யாக்கோபு 5:7-10

சகோதர சகோதரிகளே, ஆண்டவரின் வருகை வரை பொறுமையோடிருங்கள். பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார். நீங்களும் பொறுமையோடிருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது. சகோதர சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார். அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11:2-11

அக்காலத்தில் யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார். அவர்கள் மூலமாக, "வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? " என்று கேட்டார். அதற்கு இயேசு மறுமொழியாக, " நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்: கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்: தொழுநோயாளர் நலமடைகின்றனர்: காது கேளாதோர் கேட்கின்றனர்: இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்: ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர் " என்றார். அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: " நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர். பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன். "இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் " என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ள தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்கும் நிறைவான ஆன்மிகச் சக்தியையும், பலத்தையும் வழங்கி ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும், அருள்தரும் ஆண்டினை முழங்கவும், அவர்களை வழிநடாத்திக்காத்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பொறுமையின் சிகரமே எம் இறைவா!

உழைப்பின் பயனை அடையப் பொறுமையையும், துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தையும், எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் வழங்கி இறுதியில் நிலைவாழ்வு என்றும் மகிழ்ச்சியைப் பெற்றிட, இந்த வருகைக் கால்த்தில் எங்களை நாங்கள் உமது வருகைக்காகத் தயாரிக்க, பகைமை மறந்து உறவுகளைப் புதுப்பிக்கத் தேவையான உம் ஆசீர் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம்மைத் தேடிவந்த அன்பே எம் இறைவா,

மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்வது என் உள்மன வேலைதான் என்பதை உணர்ந்து எம் இளைய சமுதாயம் அந்த மகிழ்ச்சியைப் பெற்றிடத் தங்கள் பொறமை, கோபம், வெறுப்புகள், பொய்மை, சுயநலம் ஆகியவற்றை விடுத்துப் புதிய உருவெடுக்கவும், அவர்களின் உள்மனம்காயங்கள் மறைந்திடவும் வேண்டிய அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மகிழ்ச்சியின் மன்னராம் இறைவா,

வரும் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் முன் தயாரிப்புகளை நாங்கள் வெறும், வெற்று வெளி அடையளங்களை மையப்படுத்தி வாழாமல் ஆன்மீக தயாரிப்புகளில் எங்களை புதுப்பித்துக் கொண்டு உம் பிறப்பு ஏழைகளுக்கு நற்செய்தியாக அமைந்தது போல நாங்களும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஒளியான எம் இறைவா!

இளைஞர், இளம்பெண்கள் தங்கள் வாழ்வில் உம்மை அறியாமல் வாழ்ந்தக் காலங்களில் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, இவ்வுலகச் சிற்றின்பங்களைப் பெரிதாகக் கருதி அதற்கு ஏற்பத் தங்கள் வாழ்வை இழந்த நிலையில் தங்களைத் தேற்றுவதற்கு யாரும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கும் இவர்களுக்கு நீர் உமது உடனிருப்பை நிறைவாகப் பொழிந்து உமது ஆவியின் அருளை நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மகிழ்ச்சியின் மன்னராம் இறைவா,

வாழ்வின் குறிக்கோளை அறிந்துகொள்ளாமல் இவ்வுலகின் செயற்கைச் சூழலில் சிக்கி, தவறான இலக்கை நோக்கிய பாதையில் பயணம் செய்து கொண்டிருப்போர் மனந்திரும்ப உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

புனிதர்களின் பேரின்பமாகிய எம் இறைவா!

எங்கள் அருகிலுள்ள ஏழைகள், துயருறுவோர், தனிமையில் விடப்பட்டோர், நோயாளிகள், அனைவருக்கும் இறைவனின் அன்பையும் பரிவையும் அளிக்கும் அன்புக் கருவியாக எம் இளைய சமுதாயம் மாறிவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

மெசியாவின் காலம் !

வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா? என்னும் யோவானின் சீடர்களின் கேள்விக்கு இயேசு அளிக்கும் மறுமொழி பளிச் என்று ஒளிர்கிறது. நீங்கள் கண்டவற்றையும், கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள் என்று சொல்லும் இயேசு தனது இறையாட்சிப் பணிகளை பட்டியல் இடுகிறார். அதில் நோயாளர் நலம் பெறுவதும் நற்செய்தி அறிவிக்கப்படுவதும் சேர்கின்றன. இயேசு வாய்ச்சொல் வீரர் அல்லர். செயல்வீரர். தம் செயல்களாலே நற்செய்தி அறிவித்தவர். அவருடைய செயல்கள் மெசியாவின் காலம் வந்துவிட்டது என்பதைப் பறைசாற்றின. நாமும் மெசியாவின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நமது செயல்களால்தான் எண்பிக்க முடியும். நற்செய்தி அறிவிப்பு என்பதைப் பலர் கூட்டங்கள் போட்டு, போதிப்பது என்று தவறாகப் பொருள்கொள்கின்றனர். நற்செய்தி அறிவிப்பு என்பது இயேசுவைப் போல செயல்களால் பறைசாற்றுவது. உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் வானகத் தந்தையை அனைவரும் மகிமைப்படுத்த வேண்டும் என்னும் இயேசுவின் அமுத மொழிகளை நம் வாழ்வாக்குவோம்.

மன்றாட்டு:

உலகின் ஒளியான இயேசுவே, உமது செயல்களால் இறையாட்சி மலர்ந்துவிட்டது என்பதைப் பறைசாற்றினீரே. உம்மைப் போற்றுகிறோம். நாங்களும் எங்கள் சொல்லால் அல்ல, செயல்களால் உமது வருகையை, உமது உடனிருப்பை, உமது மீட்பின் காலத்தைப் பறைசாற்ற அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.