இரண்டாவது திருவழிபாடு ஆண்டு கிறீஸ்து பிறப்புக்காலம் 1வது வாரம் திங்கட்கிழமை 2019-12-30
முதல் வாசகம்
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்றும் நிலைத்திருப்பார்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-17
என் பிள்ளைகளே, அவர் பெயரால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப் பட்டுள்ளன. எனவே உங்களுக்கு எழுதுகிறேன். தந்தையரே, தொடக்கமுதல் இருக்கும் அவரை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
எனவே உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞர்களே, தீயோனை நீங்கள் வென்றுள்ளீர்கள்.
எனவே உங்களுக்கு எழுதுகிறேன். சிறுவரே, நீங்கள் தந்தையை அறிந்துள்ளீர்கள்.
எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன். தந்தையரே, தொடக்கமுதல் இருக்கும் அவரை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன்; இளைஞரே, நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள், கடவுளின் வார்த்தை உங்களுள் நிலைத்திருக்கிறது; தீயோனை நீங்கள் வென்றுள்ளீர்கள்.
எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன். உலகின் மீதும் அதிலுள்ளவை மீதும் அன்பு செலுத்தாதீர்கள். அவ்வாறு அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு இராது.
ஏனெனில் உலகு சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை தந்தையிடமிருந்து வருவன அல்ல. அவை உலகிலிருந்தே வருபவை. உலகம் மறைந்து போகிறது; அதன் தீய நாட்டங்களும் மறைந்துபோகின்றன. ஆனால் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்றும் நிலைத்திருப்பார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக.
திருப்பாடல் 96: 7-8. 8-9. 10
7 மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்; மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். 8ய ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். பல்லவி
8b உணவுப் படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். 9 தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். பல்லவி
10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: `ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அன்னா குழந்தையைப்பற்றிப் பேசினார். �
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 36-40
ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார்.
ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்'' (யோவான் 1:14)
கடவுள் மனிதரிடமிருந்து வேறுபட்டவர் என்றும் மனிதரை விட்டு வெகு தொலையில் வாழ்பவர் என்றும் சிலர் உருவகிப்பதுண்டு. கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் கடவுள் மனிதரை விட்டு அகன்று நிற்பவர் அல்ல. மனிதரைப் படைத்தவர் கடவுள் என்பதால் அவர் நம்மோடு நெருங்கிய விதத்தில் இணைந்துள்ளார். ஆனால், கடவுள் அதைவிடவும் மேலாகத் தம்மை மனிதரோடு ஒன்றித்திட விரும்பினார். கடவுளே மனிதராக மாறிட விழைந்தார். இதை நாம் ஒரு மறைபொருள் என அழைக்கிறோம். இதன் முழுப் பொருளும் நமக்கு ஒருநாளும் தெளிவாகாது என்றாலும் கடவுள் மனிதராக மாறிய உண்மையை விவிலியம் தெளிவாக எடுத்துரைக்கிறது. குறிப்பாக யோவான் நற்செய்தி இதை உணர்த்துகிறது. கடவுளோடு எக்காலத்திலும் இணைந்திருந்த வாக்கு காலம் நிறைவேறியபோது மனிதராக மாறினார் என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் செய்தி. நம்மைத் தேடிவந்த கடவுளை நாம் அடையாளம் காண வேண்டும். மனிதர் ஆன வாக்கு ''நம்மிடையே குடிகொண்டார்'' என்பதால் அவருடைய உடனிருப்பு ஒரு தொடர் நிகழ்வாகிறது. கடவுள் நம்மிடையே குடிகொண்டிருக்கின்ற உண்மையிலிருந்து சில முக்கிய விளைவுகள் பிறக்கின்றன. கடவுளை விட்டு மனிதர் அகன்றிருப்பதில்லை என்பதால் அந்த உடனிருப்பை நாம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்திட வேண்டும். அந்த உணர்வோடு நம் செயலும் ஒருங்கிணைந்து சென்றால் கடவுளின் விருப்பம் நமது விருப்பமாக மாறும். அப்போது நமது செயலும் விருப்பும் ஒன்றாக இணைந்த விதத்தில் நம் வாழ்வும் பொருள்பொதிந்ததாக உருப்பெறும். மனிதரான கடவுள் தம்மை ஒவ்வொரு மனிதரோடும் இணைத்துக்கொண்ட உண்மை நம்மை வழிநடத்த வேண்டும்.
மன்றாட்டு:
இறைவா, உம் உடனிருப்பை எங்கள் உள்ளத்தில் உணர்ந்திட அருள்தாரும்.
|