திருவழிபாடு ஆண்டு - A 2020-01-12
ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா.
(இன்றைய வாசகங்கள்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-4,6-7,திருப்பாடல் 29: 1,2. 3-4. 9-10,திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 34-38, மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17)
திருப்பலி முன்னுரை
இறைமக்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம். ஆண்டவர் இயேசுவின் பிறப்பு விழாவிற்குப்பின் வரும் காலத்தின் இறுதி நாளாக ஆண்டவரின் திருமுழுக்கு விழா அமைகிறது. இன்று திருமுழுக்குவிழாவைக் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் திருமுழுக்குவிழா வாழ்த்துகள். இயேசுவின் திருமுழுக்கில் நாம் கண்டறியும் வெளிப்பாடுகள்; முதன்மையான மறையுண்மைகளை உள்ளடகியவை. திருமுழுக்கு யோவான் அறிவித்த இறைத்தூதைக் கேட்டு மனம்மாறிய மக்கள் யோர்தான் நதிக்கரைக்கு வந்து திருமுழுக்கு பெற்றுவந்தனர். மனிதருடைய பாவங்களுக்காகத் தன்னையே ஈகம் செய்யவந்த இயேசு தான் பாவம் செய்யா நிலையில் இருந்தும் மக்களுடைய பாவங்களைத் தான் ஏற்றுப் பலியாக இருப்பதால் தன் அருட்பணியின் தொடக்கமாக யோவானிடம் திருமுழுக்குப்பெற வந்தார். எனவே வானகத் தந்தையின் அன்புமக்களாக வாழ அவர் நம்பொருட்டு மகிழ இன்று நாம் கேட்ட இறைமொழிகளின் அடிப்படையில் வாழ முயல்வோம் அதனடிப்படையில்:
இயேசுவின் மொழிகளைக் கேட்போம்
சமத்துவம், நேர்மை, விடுதலை ஆகியவற்றை நம் வாழ்வாக்குவோம்.
இயேசு தரும் இந்த அருள் வாழ்வை அடித்தளமாகக் கொண்டு வாழ்வதுதான் மேலான நல வாழ்வாகும். அந்த வாழ்வைப்பெற இயேசுவுடன் என்றும் இணைந்திருக்கச் செய்வது இத் திருப்பலியாகும். இங்கு ஒப்புக்கொடுக்கப்படும் காணிக்கைப் பொருட்களுடன் நம்மையும் இணைத்து ஆண்டவருக்குக் காணிக்கையாக்குவோம்.
முதல் வாசகம்
பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-4,6-7
ஆண்டவர் கூறுவது: இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர். ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக!
திருப்பாடல் 29: 1,2. 3-4. 9-10
இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள்.
2 ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்;
தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். பல்லவி
3 ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது;
ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார்.
4 ஆண்டவர் குரல் வலிமைமிக்கது;
ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. பல்லவி
9b ஆண்டவரின் குரல் காடுகளை வெறுமையாக்குகின்றது;
அவரது கோவிலில் உள்ள அனைவரும் `இறைவனுக்கு மாட்சி' என்று ஆர்ப்பரிக்கின்றனர்.
10 ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்;
ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். பல்லவி
இரண்டாம் வாசகம் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 34-38கொர்னேலியு மற்றும் அவரது வீட்டாரை நோக்கிப் பேதுரு கூறியது: �கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து, நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர். இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்னும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர். திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது; தந்தையின் குரலொலி கேட்டது: �என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்'' அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17
அக்காலத்தில் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். யோவான், �நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?'' என்று கூறித் தடுத்தார். இயேசு, �இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை'' எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார். இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவதுபோலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, �என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்'' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அன்புத் தந்தையே! அருட்பணியை முழுமையாக நிறைவேற்ற நீர் நியமித்திருக்கும் எம் திருத் தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் : அவர்கள் உம்மைப் போல தாழ்ச்சி, பொறுமை, இறைவனிடமிருந்து வந்த அழைப்பை முழுமையாக ஏற்று வாழும் நல் லுள்ளம், பணியார்வம், ஆகியவற்யைக் கொண்டு இயங்கவும் தூய ஆவியால் நிரப்பி, தீமைகளை முறியடிக்க வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்கும் தந்தையே! மாட்சியையும், வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்: தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். என்னும் அழைப்பிற்கேற்ப வாழும் ஆற்றலை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அஞ்சாதே என்று வாழ்த்தி புத்துயிர் தந்த எம் கனிவான தந்தையே எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் திருமுழுக்கின் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட அருங்கொடைகளை உணர்ந்த உம் வார்த்தைகளின்படி வாழ்க்கை நடத்தவும், வரும் தீமைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுதலைப் பெற்றிட வேண்டிய வரத்தை எமக்கு அளித்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
நல்லாயனே இறைவா! நாங்கள் அனைவரும் எங்களின் வாழ்வில் கிறிஸ்துவை வெளிப்படுத்த தடையாக இருக்கும் கர்வம், ஆணவம், பொறாமை, போட்டி மனப்பான்மை போன்றவைகளை களைந்து கிறிஸ்துவுக்கு சான்று பகர்கிறவர்களாக திகழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எமக்கு மன்னிப்பு அளித்து எமக்கு புதுவாழ்வை வாக்களித்த தந்தையே இறைவா! எம் இளைய சமுதாயம் தனது வாலிப நாட்களில் நீர் தரும் நலன்களை கண்டுக் கொண்டு அதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள தூயஆவியானவரின் அருங்கொடைகளை அபரிமிதமாகப் பொழிந்தருளவேண்டும் என்ற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை, நாங்களும் கடைபிடித்து, எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்கு சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பாதுகாப்பின் நாயகனே! எம் பங்கில் இருக்கின்ற நோயாளிகள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை உமது அன்பில் திளைக்கவைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|