திருவழிபாடு ஆண்டு - A 2020-01-26
(இன்றைய வாசகங்கள்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9:1-4,திருப்பாடல் 27: 1. 4. 13-14 ,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-13,17,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 12-23)
திருப்பலி முன்னுரை
நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு: மன உறுதிகொள்: உன் உள்ளம் வலிமை பெறட்டும்: ஆண்டவருக்காகக் காத்திரு.
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு. உயிர்த்த இயேசுவின் விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி: மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கும் இயேசுவின் சந்நிதானத்தில் ஒன்று கூடியுள்ளோம்.
இவ்வுலகத்தின் மாபெரும் விடுதலைச் சக்தியாக இருப்பவர் இறைவன் மாத்திரமே. அவர் தரும் விடுதலையே நமக்கு நிறைவானதும், நிம்மதியும், ஆறுதலும் தருவதுமாகும். இந்த உண்மையை: மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்: அவர்கள்தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்: அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர். என்னும் இறைவார்த்தைகள் உறுதிப்படுத்துகின்றன. எனினும் பவுலடியார் மூலமாக வெளிப்படும் இறைவனின் ஏக்கத்தை நாம் நம் கவனத்திற்கொள்ள வேண்டும். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே: நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும், ஒரே நோக்கமும் கொண்டிருங்கள். எனவே இன்றைய திருப்பலியில் நாம் அன்பிய சமுதாயமாக வாழ நம்மை ஒப்புக்கொடுத்துச் செபிப்போம்.
முதல் வாசகம்
காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்;.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9:1-4
முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப் பகுதி, யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச் செய்வார். காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவதுபோல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்ததுபோல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்; அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு
திருப்பாடல் 27: 1. 4. 13-14
1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்?
ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்;
யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? -பல்லவி
4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்;
அதையே நான் நாடித் தேடுவேன்;
ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்,
ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்;
அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். -பல்லவி
13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின்
நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு;
மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்;
ஆண்டவருக்காகக் காத்திரு. -பல்லவி
இரண்டாம் வாசகம் திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-13,17சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே: நீங்கள் ஒத்த கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள். என் அன்பர்களே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர். நான் இதைச் சொல்லக் காரணம், உங்களுள் ஒவ்வொருவரும் `நான் பவுலைச் சார்ந்துள்ளேன்' என்றோ `நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்' என்றோ `நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்' என்றோ, `நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன்' என்றோ சொல்லிக்கொள்கிறீர்களாம். கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்? திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தல் ஆகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார் அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 12-23
அக்காலத்தில் யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தை விட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது: ``செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது.'' அதுமுதல் இயேசு, ``மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'' எனப் பறைசாற்றத் தொடங்கினார். இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, ``என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்'' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அன்புத் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் : அவர்கள் தாங்கள் பெற்றுக் கொண்ட அழைத்தலுக்கு ஏற்ப பிரமாணிக்கமாய் வாழ்ந்து, மக்களின் விடுதலைச் சக்தியாய்ச் செயற்படுவதற்கு வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பிரிவுற்ற அனைவரையும் ஒன்றிணைத்து அமைதியை உருவாக்கும் தந்தையே! நாங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருந்து. எங்களிடையே உள்ள பிளவுகளைத் தவிர்த்து கிறீஸ்துவுக்குள் ஒரே மனமும், ஒரே நோக்கமும் கொண்டு, உமக்குகந்த அன்பிய சமூகமாக வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அஞ்சாதே என்று வாழ்த்தி புத்துயிர் தந்த எம் கனிவான தந்தையே எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் திருமுழுக்கின் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட அருங்கொடைகளை உணர்ந்த உம் வார்த்தைகளின்படி வாழ்க்கை நடத்தவும், வரும் தீமைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுதலைப் பெற்றிட வேண்டிய வரத்தை எமக்கு அளித்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
நல்லாயனே இறைவா! நீரே எம் ஒளி: நீரே எம்; மீட்பு: யாருக்கு நான் அஞ்சவேண்டும்? நீரே எம்உயிருக்கு அடைக்கலம்: யாருக்கு நாம் அஞ்சி நடுங்க வேண்டும்? இன்று இயற்கையின் தாக்கத்திற்குட்பட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக் கொள்ளவும், இயற்கை, செயற்கை அழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஒளியும், மீட்புமான தந்தையே இறைவா! எமது இளைஞர்களுக்கு நீர் ஒளியாகவும், வழியாகவும் இருந்து வழிகாட்டி உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை, நாங்களும் கடைபிடித்து, எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்கு சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பாதுகாப்பின் நாயகனே! எம் பங்கில் இருக்கின்ற நோயாளிகள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை உமது அன்பில் திளைக்கவைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|
இன்றைய சிந்தனை
இயேசுவின் பணித் தொடக்கம் !
இயேசு தன் பணிவாழ்வைத் தொடங்கிய செய்தியை இன்றைய நற்செய்தி வாசகம் தருகிறது. மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் பணி வாழ்வின் தொடக்கத்தை இறைவாக்கினர் எசாயாவின் அறைகூவலின் நிறைவேறுதலாகப் பார்க்கிறார். “காரிருளில் வாழ்ந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது“. கிறிஸ்து பிறந்ததால் ஒளியும், வாழ்வின் நம்பிக்கையும் இந்தப் புவிப் பரப்பில் உருவானது என்ற நற்செய்தியை மத்தேயு பறைசாற்றுகின்றார். என்னுடைய பணியும், வாழ்வும் இயேசுவின் பணியும், வாழ்வும் போல அமைந்திருக்கின்றனவா என்று ஆய்ந்து பார்க்க அழைப்பு விடுக்கிறது இன்றைய வாசகம். எனது பணி இருளில் வாழ்வோர்க்கு ஒளியாக, நம்பிக்கை அற்றோருக்கு நம்பிக்கையாக இருக்கிறதா என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன். எனது வாழ்வும் இயேசுவின் வாழ்வு போல அமைய அருள்வேண்டுகிறேன்.
மன்றாட்டு:
நம்பிக்கையின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது பணியும், வாழ்வும் நம்பிக்கை அற்றோருக்கு நம்பிக்கையை. இருளில் வாழ்ந்தோருக்கு ஒளியைக் கொண்டுவந்ததபோல, எனது வாழ்வும், பணியும் அமைய என்னi வலிமைப்படுத்தியருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
|