யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2020-04-12

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10:34, 37-43 ,திருப்பாடல் 118:1-2, 16-17, 22-23 ,திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:1-4,+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-9 )




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இறந்த இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார்!

உயிர்ப்புக்குரியவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரணத்தை வீழத்தி, வெற்றி வீரராக உயிர்த்தெழுந்த பெருவிழாவை நாம் இன்று கொண்டாடுகிறோம். உயிர்த்த இயேசுவுக்கு சாட்சிகளாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு வான தூதர்கள் சான்று பகர்ந்தனர். வெறுமையாக இருந்த கல்லறையும் இயேசுவின் உயிர்ப்பை பறைசாற்றியது. உயிர்த்த இயேசுவை முதலில் கண்டவர் மகதலா மரியா என்று விவிலியம் கூறுகிறது. இயேசுவின் உயிர்ப்பை முதலில் நம்பத் தயங்கிய திருத்தூதர்களும், மற்ற சீடர்களும், தங்கள் உயிரையும் கையளித்து அவரது உயிர்ப்புக்கு சான்று பகர்ந்தனர். என்றென்றும் வாழ்பவராம் இறைமகன் இயேசுவுக்கு உலக முடிவு வரை சான்று பகரும் உயிர்ப்பின் மக்களாக வாழும் வரம் வேண்டி, நாம் இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார்.
இறைவாக்கினர் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10:34, 37-43

அப்போது பேதுரு பேசத் தொடங்கி, திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக்குறித்துச் சான்று பகர்கின்றனர்" என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்
திருப்பாடல் 118:1-2, 16-17, 22-23

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என்று இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! -பல்லவி

ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்; -பல்லவி

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! -பல்லவி

இரண்டாம் வாசகம்

மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:1-4

நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவாகளானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சாhந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா, அல்லேலூயா ! ”நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகவே நாம் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக” அல்லேலூயா அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-9

வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, ``ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!'' என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உயிர் அளிப்பவரே இறைவா,

உம் திருமகனின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு தோன்றி வளர்ந்த திருச்சபை உலக மக்கள் அனைவராலும் ஏற்கப்பட்டு, புனிதமான மக்களை உமக்காக உருவாக்க வரமருள வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

மருத்துவர்களுக்கு மேலான மருத்துவரே எம் இறைவா!

மாந்தர்களின் இந்த கொடிய நோய்களிலும் தன்னலம் கருதமால் இராப்பகலாக உழைக்கும் அன்பு மருத்துவர்கள், அவரது உதவியாளர்கள், துப்பரவுத் தொழிலாளர்கள் மற்றும் காவல் துறையினர் அனைவரையும் நலமுடன் காத்து, அவர்தம் பணி சிறக்க அருள்மாரிப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

வெற்றி வேந்தனே எம்இறைவா!

இந்த கொடிய தொற்று நோயால் இறந்த அனைத்து மாந்தர்களையும் நினைவு கூர்ந்திடும் இவ்வேளையில், அவர்களை உமது வான் வீட்டில் சேர்த்துக் கொள்ளவும், அவர்களின் குடும்பத்தினர்க்கு ஆறுதல் வேண்டியும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மருத்துவருக்கு எல்லாம் மருத்துவராகிய எம் இறைவா!

உலகமெங்கும் பரவி வரும் தொற்று நோயின் கொடுமைகளிலிருந்து எம் மக்களைக் காப்பாற்றும். நோயைக் கட்டுபடுத்தவும், அவர்களுக்குப் பணிவிடைச் செய்யும் அனைவரையும் அந்த நோயின் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்து, உழைக்க நல்ல ஆரோக்கியத்தையும், மன உறுதியையும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இளைஞனே எழு! எழுந்து ஒளிவீசு என்ற எம் இறைவா!

சிற்றின்பமான உல்லாசமான வாழ்கையில் தங்களின் ஆற்றலையும், திறமைகளையும் வீணாக்குகின்ற இளைஞர்கள் இயேசுவின் அன்பினால் ஈர்க்கப்படவும், தங்களின் வாழ்வை புனிதமான வழிகளில் நடத்தவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குணமளிக்கும் வள்ளலே எம் இறைவா,

உம் மக்கள் இன்றைய சூழலில் வயது முதிர்ந்தவர்களை பேணி காக்கும் நிலைமாறி, முதியோர் இல்லங்கள் பெறுகிவரும் நிலையில் அவர்களுக்கு நீர் தந்தையாகவும், தாயாகவும் நின்று, தாங்கள் கடந்து வந்த பாதையைக் குறித்து அவர்கள் துன்புறும் வேளையில் அவர்களுக்கு அன்பினை பொழிந்து அரவணைத்தும் நல்ஆயனாக இருந்து வழி நடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

பாதுகாப்பின் நாயகனே!

எம் பங்கில் இருக்கின்ற நோயாளிகள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை உமது அன்பில் திளைக்கவைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு மகதலா மரியாவிடம், 'ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?' என்று கேட்டார்'' (யோவான் 20:15)

மரியா மகதலா யார்? இக்கேள்விக்கு வரலாற்றில் பல பதில்கள் தரப்பட்டதுண்டு. கி.பி. நான்காம் நூற்றாண்டில் மகதலா மரியா மனம் திரும்பிய ஒரு பாவியாகச் சித்தரிக்கப்பட்டார். முதலில் அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், இயேசுவைச் சந்தித்ததிலிருந்து அவர் மனம் மாறி, கடின தபசு மேற்கொண்டு வாழ்நாள் முழுவதும் தம் பாவத்திற்காகத் தவம் செய்ததாகவும் வரலாறுகள் எழுந்தன. ''ஏழு பேய்கள் நீங்கப் பெற்ற மகதலா மரியா'' இயேசுவின் சீடராக மாறினார் என லூக்கா நற்செய்தியில் வருகின்ற குறிப்பின் அடிப்படையில் (காண்க: லூக் 8:1-3), மரியா பெரிய பாவியாக இருந்தவர் என முடிவுசெய்தனர் சிலர். ஆனால் நோய்களுக்குக் காரணம் தீய ஆவிகளே என்னும் நம்பிக்கை நிலவிய அக்காலத்தில் மரியாவை இயேசு ஒரு நோயிலிருந்து குணப்படுத்தியிருப்பார் என முடிவுசெய்தலே சரி. பெத்தானியாவில் இயேசுவின் காலடிகளில் நறுமணத் தைலம் பூசிய மரியா கதையும் (யோவா 12:1-8), சீமோன் என்பவரில் இல்லத்தில் இயேசுவின் தலைமேல் எண்ணைய் பூசிய பெண் கதையும் (மாற் 14:3-9), அப்பெண் ''பாவியாக'' இருந்தார் என்ற குறிப்பும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒரே கதையாக மாற்றம் பெற்றன. இவ்வாறு மகதலா மரியா பற்றிய கதை எழுந்தது.

ஆனால் மகதலா மரியாவின் உண்மை வரலாறு இயேசுவின் உயிர்த்தெழுதலோடு இணைந்து பிணைந்ததாகும். கிறிஸ்தவ சமய நம்பிக்கைக்கு மையமாக இருப்பது இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார் என்னும் உண்மையாகும். மகதலா மரியாதான் உயிர்த்தெழுந்த இயேசுவை முதல்முறையாகக் கண்டவர். அவரிடம் இயேசு ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறார். அதாவது மரியா சென்று, இயேசுவின் சீடர்களைச் சந்தித்து, அவர் உயிர்பெற்றெழுந்த செய்தியை அறிவிக்க வேண்டும் (காண்க: யோவா 20:17-18). உண்மையிலேயே ''திருத்தூதர்களுக்குத் தூது அறிவிக்க அனுப்பப்பட்டவர்'' மரியா ஆனார். நான்கு நற்செய்தி நூல்களிலும் இச்செய்தி குறிக்கப்பட்டிருப்பதை நாம் கருதலாம் (காண்க: யோவா 20:1-18; மாற் 16:9-11; மத் 28:1-7; லூக் 24:1-12). இயேசு உயிர்பெற்றெழுந்த ஆண்டவராக நம்மிடையே தங்கியிருக்கிறார் என்னும் உண்மையை உலகெங்கும் பறைசாற்ற நாம் அழைக்கப்படுகிறோம். இவ்வாறு நாம் நற்செய்திக்குச் சான்று பகர வேண்டும். இயேசுவின் வழியாகக் கடவுள் நம்மிடையே உறைகிறார் எனவும், உயிர்பெற்றெழுந்த இயேசுவின் ஆவி நம்மை வழிநடத்துகிறார் எனவும் நாம் உறுதியாக நம்ப வேண்டும்; அந்த நம்பிக்கையைப் பிறரோடு பகிர்ந்திட வேண்டும். இப்பொறுப்பை ஆற்றுவதில் மகதலா மரியா நமக்குச் சிறந்த முன் உதாரணம் ஆகிறார்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் உறைந்து எங்களை வழிநடத்துகின்ற இயேசுவின் ஆவியை நாங்கள் அனுபவித்து வாழ அருள்தாரும்.