திருவழிபாடு ஆண்டு - A 2020-05-31
தூய ஆவி பெருவிழா
(இன்றைய வாசகங்கள்:
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11,திருப்பாடல்04: 1,24. 29-30. 31,34,திருத்தூதர் பவுல்கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 3-7, 12-13,புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20:19-23)
திருப்பலி முன்னுரை
"தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்."
அன்புச் சகோதரச் சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசுவின் துணையாளராம் தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாட அன்று மாடியில் கூடியிருந்தத் திருத்தூதர்கள் போல நம் ஆலயத்தில் ஒன்றிணைந்து ஆவலுடன் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள்!
இந்த மே மாதத்தின் சிறப்பு அம்சமாக ஆண்டுதோறும் நாம் அனுபவிப்பது இரண்டு காரியங்கள்.
ஒன்று: பாஸ்காக் காலத்தின் தொடர்ச்சியாக இருக்கும் பெரும்பகுதி.
இரண்டாவது: அன்னை மரியாவுடைய மாதம் என்பதால் வணக்க மாதம், செபமாலை, பக்தி முயற்சிகள்:
இவ்வாறு நம்முடைய விசுவாச வாழ்வை அர்த்தப்படுத்துகின்ற, அழகுபடுத்துகின்ற இரண்டு மாபெரும் காரியங்கள்:
பாஸ்காக்காலக் கொண்டாட்டம், அன்னை மரியினுடைய வணக்கமாதக் பக்தி கொண்டாட்டம்: இந்த இரண்டும் இந்த திருப்பலியிலே இணைத்து திருப்பலி ஒப்புக்கொடுப்போம்.
மரியாளோடு ஒரு மனத்தோடுகூடிச் செபிக்கும்வேளையில் துணையாளராம் தூய ஆவியின் அருட்பொழிவைப் பெற்றுக்கொண்டனர் சீடர்கள். பல வல்லசெயல்கள் அரங்கேறியது. கூடியிருந்த மக்கள் தத்தம் மொழிகளில் சீடர்கள் பேசியதைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தனர். புதிய ஆற்றல் பெற்றுப் புதுபொலிவுடன் பயம் தெளிந்தச் சீடர்கள் இறையரசை அறிவிக்க உலகெங்கும் புறப்பட்டுச் சென்றார்கள். தூய ஆவியானவரின் வருகை நமக்குச் சொல்வது இதுதான். தூய ஆவியானவர் நம்மைத் தழுவிக்கொடுக்கும் தென்றல் அல்ல. மாறாக அவர் நம்மை வாரிச் சுருட்டும் சூறாவளி. தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட நம்மில் இன்னும் இவை இருக்கின்றது என்றால் இன்னொரு சூறாவளி நமக்கும் அவசியம்! அவற்றைப் பெற இன்றையத் திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.
முதல் வாசகம்
நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லோரும் மலைத்துப்போய், "இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி? " என வியந்தனர். பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேகியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே! "என்றனர்
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
திருப்பாடல்04: 1,24. 29-30. 31,34
1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!
24யஉ ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை!
பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. பல்லவி
29 நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.
30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி
31 ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக!
அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக!
34 என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக!
நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். பல்லவி
இரண்டாம் வாசகம் திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது. திருத்தூதர் பவுல்கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 3-7, 12-13சகோதரர், சகோதரிகளே! நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வராக! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வு அற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமை மிக்க தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்: இவ்வுலகில் மட்டும் அல்ல: வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோயிருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது. - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20:19-23
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! " என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன் " என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா " என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திரு அவையை வழி நடத்தும் எம் திருதந்தை, அவர் வழியாய் மந்தைகளைச் செவ்வனே பராமரித்து வழி நடத்தும் ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவியர்கள், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழியாக மீண்டும் தங்கள் பணிவாழ்வைக் கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப இறைசமூகத்தை ஆன்மீக வாழ்விற்கு அழைத்துச் செல்லத் தேவையான உம் அருளை நிறைவாய் வழங்கிட இறைவா உம்மை வேண்டுகிறோம்.
“அன்னை மரியாவை நாடாமல் இறையருளை பெறுவதற்கான விருப்பம் என்பது சிறகுகளின்றி பறக்க விரும்புவதைப் போன்றது.” என்றார்
திருத்தந்தை 12ம் பத்தி நாதர். எளியோரை ஆதரிக்கும் இறைவா, மே மாதம் எங்கள் அன்னையின் மாதம். நீர் தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறவர் என்றும், தலைமுறை தலைமுறையாக அனைவருக்கும் இரக்கம் காட்டுகிறவர் என்றும், புனித கன்னி மரியாள் வழியாக அறிந்திருக்கின்றோம். உம்முடைய பெருந்தன்மையான அன்பைக் கண்டுபாவித்து
நாங்களும் சமுதாயத்தில் ஏழைகள், கைவிடப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் முதலானோரின் நல்வாழ்விற்காக ஈடுபட்டுழைக்க எங்களுக்கு வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அன்பின் இறைவா! மரியாளைப் போல நாங்களும் அடுத்தவர் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு எல்லாவித உதவிகளையும் எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் உள்ளார்ந்த அன்போடு செய்திட நல்ல மனதைத் தர வேண்டுமென்று வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஏழைகளின் துணையாளரே எம் இறைவா! இன்று தொற்றுநோயினால் ஏழைகளுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து அவர்கள் விடுப்பட்டு், அவர்கள் வாழ்வாதாரங்கள் மேன்பட்டு, நற்சான்றோர்களாக வாழவும், தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவிப்போர் மீண்டும் தங்கள் ஊருகளுக்குச் செல்லத் தேவையான வசதிகளில் பெற அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
உம் பேரருளால் எம்மை வழிநடத்தும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் தூயஆவியை எழுந்தருள் செய்யும். எங்களை உருக்கித் துரு நீக்கி எங்களை உருமாற்றும். இயேசுவின் திருவுருவை எங்களின் உள்ளத்தில் உருவாக்கும். எம்மை ஆவியின் அக்னியால் நிரப்பும். அவரின் வரங்களாலும், கொடைகளாலும், கனிகளாலும் எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அருட்பொழிவு செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எமக்குப் புதுப்பாதையை அமைத்துத் தரும் என் இறைவா! இந்த கல்வி ஆண்டில் எம் இளையோர்களைக் கரம்பிடித்து வழிநடத்தும். தொற்றுநோயின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள குழப்பங்களிலிருந்து காத்து அவர்கள் சிறந்த கல்வியைப் பெற்றிடவும், நவீன உலகமாயையால் கவனம் சிதறிவிடாமல் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிடவும், உமது உன்னதச் சாட்சிகளாய் இவ்வுலகத்தில் வாழ வேண்டிய ஞானத்ததைப் பொழிந்தட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மருத்துவருக்கெல்லாம் மருத்துவராம் எம் இறைவா! விரைவில் இந்த தொற்று நோய் முழுமையாக நீங்கிட வேண்டிய மருத்துவத்தை எமக்கு தந்து, அனைவரும் விரைவில் குணமடையவும், மரணம் அடைந்தவர்களின் குடும்பங்கள் ஆறுதலடையவும், நோயிக்கு எதிராகப் போராடும் மருத்துவ உலகம் அதில் வெற்றிபெறவும் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
|
இன்றைய சிந்தனை
"தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்".
படைப்பதும் புதுப்படைப்பாக்குவதும் தூய ஆவியின் செயல். ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டாக்குவது படைப்பு. இறைவன் உலகைப் படைத்தபோது, ஒன்றுமில்லாமையிலிருந்து, வெறுமையிலிருந்து (தொடக்க நூல் 1:1) அசைந்தாடிய ஆவியின் ஆற்றலால் அனைத்தையும் படைத்தார். அவ்வாரே தம் உயிர் மூச்சை ஊதி மனிதனைப் படைக்கிறார். இவ்வாறு தூய ஆவியை ஊதுவதால், தூய ஆவியின் செயல்பாட்டால் படைப்புகள் உண்டாகின.
மனிதன் பாவம் செய்த பின் அதே தூய ஆவி, அவன் மீது செயல்படும்போதும், அவன் மீது ஊதப்படும்போதும் அவன் புதிதாகப் படைக்கப்படுகிறான். பேயை விரட்டும்போதும், நோயைப் போக்கும்போதும், பாவத்தை மன்னிக்கும்போதும், அர்ச்சிக்கும் போதும், அருள் வாழ்வுக்கு அழைக்கும்போதும், தூய ஆவி செயல்படுவதால், மனிதன்,தன் உடலிலும் உள்ளத்திலும் மாற்றம் பெறுகிறான். தூய ஆவி அவனைப் புது படைப்பாக்குகிறார். இவ்வாறு புதுப்படைப்பாக்கப்படும்போதெல்லாம் மனிதனின் பாவங்கள் கழுவப்படுகின்றன. பாவ மன்னிப்பு கொடுத்து புதுப்படைப்பாக்கும் அருளை, திருத்தூதர்களுக்கும் அவர்கள் வழியாகத் திருச்சபைக்கும் தூய ஆவியார் வழங்குகிறார். திருட்சபை வழங்கும் ஒவ்வொரு திருவருட்சாதனத்திலும் தூய ஆவி நம் மீது பொழியப்படுவதால், நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; நாம் புதுப் படைப்பாகிறோம். புதுப்படைப்பாகும் நம்மில் "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்னும் வாழ்த்து முழுமையாகக் கிடைக்கிறது. தூய ஆவி தரும் இக்கொடைகளைப் பெற்று மகிழ்ந்து இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.
மன்றாட்டு:
உயிர்ப்;பின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்கள் நம்பிக்கை இன்மையை மன்னித்து, எங்களை ஏற்றுக்கொள்வதற்காக நன்றி. நாங்கள் உமது உயிர்ப்பில், உமது உடனிருப்பில், உமது பிரசன்னத்தில் நம்பிக்கை கொள்ளவும், அதனால், நிலைவாழ்வு அடையவும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
|