இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 9வது வாரம் வெள்ளிக்கிழமை 2020-06-05
முதல் வாசகம்
மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது
2 திமொத்தேயு 3:10-17
என் போதனை, நடத்தை, நோக்கம், நம்பிக்கை, பொறுமை, அன்பு, மனஉறுதி ஆகியவற்றைப் பின்பற்றிவந்திருக்கிறாய்.
அந்தியோக்கியாவிலும், இக்கோனியாவிலும், லிஸ்திராவிலும் எனக்கு நேரிட்ட இன்னல்களும் துன்பங்களும் உனக்குத் தெரியும். இத்தகைய இன்னல்களைப் பொறுத்துக் கொண்டேன். இவை அனைத்திலிருந்தும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர்.
ஆனால், தீயோர்களும் எத்தர்களும் மேலும் மேலும் கேடுறுவார்கள். ஏமாற்றும் இவர்கள் ஏமாந்து போவார்கள்.
நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்; யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே.
நீ குழந்தைப் பருவம் முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது.
மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது.
இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
உம் திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு நல்வாழ்வு உண்டு.
திபா 119: 157-160. 161,165. 166,168
157 என்னைக் கொடுமைப்படுத்துவோரும் பகைப்போரும் பலர்;
ஆனால், உம் ஒழுங்குமுறைகளை விட்டு நான் தவறுவதில்லை.
160 உண்மையே உமது வார்த்தையின் உட்பொருள்;
நீதியான உம் நெறிமுறைகள் எல்லாம் என்றும் நிலைத்துள்ளன. -பல்லவி
161 தலைவர்கள் என்னைக் காரணமின்றிக் கொடுமைப்படுத்துகின்றனர்;
ஆனால், உம் வாக்கை முன்னிட்டு என் உள்ளம் நடுங்குகின்றது.
165 உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு;
அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை. -பல்லவி
166 ஆண்டவரே! நீர் அளிக்கும் மீட்புக்காக நான் காத்திருக்கின்றேன்;
உம் கட்டளைகளைச் செயல்படுத்துகின்றேன்.
168 உம் நியமங்களையும் ஒழுங்குமுறைகளையும் நான் கடைப் பிடிக்கின்றேன்;
ஏனெனில், என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவை. -பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
அல்லேலூயா, அல்லேலூயா! “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-37
அக்காலத்தில் இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, “மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி? தூய ஆவியின் தூண்டுதலால், ‘ஆண்டவர் என் தலைவரிடம், ``நான் உம் பகைவரை உமக்கு அடிபணியவைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” என்று உரைத்தார்’ எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா! தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி?” என்று கேட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை.
மாறாக அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்' என்றார்'' (மாற்கு 12:25)
இயேசுவை அணுகிக் கேள்வி கேட்டு அவரிடம் குறைகாண முயன்றவர்களுள் பரிசேயரும் இருந்தனர், சதுசேயரும் இருந்தனர். இறப்புக்குப் பின் மனிதர் உயிர்பெறுவர் என்பது பரிசேயர் கொள்கை. ஆனால் சதுசேயர் இதை மறுத்தனர். இயேசு யாருக்குச் சார்பாகப் பேசுவார் என்றறிய இரு கட்சியினரும் முனைகின்றனர். ஆனால் வழக்கம்போல இயேசு அவர்களுடைய கேள்விக்கு நேரடியான பதில் கூறாமல் அவர்களுக்குக் கடவுளின் போதனையை எடுத்துக் கூறுகிறார். கடவுளை நாம் நம்முடைய குறுகிய அறிவுக்குள் கொண்டுவர இயலாது. நமது குறுகிய சிந்தனைப்படி கடவுள் செயல்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கவும் கூடாது. எனவேதான் இயேசு இவ்வுலகப் பாணிக்கும் மறுவுலகப் பாணிக்கும் இடையே வேறுபாடு உண்டு என்பதைக் குறிப்பிடுகிறார். இவ்வுலக முறைப்படி மனிதர் திருமணம் செய்கின்றனர்; குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, குடும்பத்தை நிறுவுகின்றனர். மறுவுலகில் இத்தகைய முறை இராது. அங்கே திருமணத்திற்கும் குழந்தைப் பேற்றுக்கும் இடம் இல்லை. ஏனென்றால் ''அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்'' (மாற் 12:25).
விண்ணகத் தூதர் எப்படி இருப்பார்கள் என்னும் கேள்வி எழுகிறது. இதற்கும் இயேசு நேரடியான பதில் தரவில்லை; மாறாக, மனிதருக்கும் விண்ணகத் தூதருக்கும் இடையே வேறுபாடு உண்டு என நாம் அறிகிறோம். இதை உறுதிப்படுத்துகின்ற விதத்தில் இயேசு கடவுளின் உண்மைத் தன்மையை நமக்குக் காட்டுகிறார். அதாவது கடவுள் ''இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள்'' (மாற் 12:27). மனிதருக்கு வாழ்வு வழங்குவதே கடவுளின் திட்டம்; மனிதர் மடிந்து ஒழிய வேண்டும் என்பதல்ல அவருடைய பார்வை. எனவே, கடவுள் மனிதருக்கு உயிர் வழங்குவதையே தம் நோக்கமாகக் கொண்டிருப்பதால் அவர் மனிதரை சாவுக்குக் கையளித்துவிட மாட்டார். மாறாக, அவர்களுக்குத் தம் வாழ்வில் பங்களிப்பார். ஆனால் இத்தகைய பங்கேற்பு மனித சிந்தனைக்கு ஏற்ப நிகழும் என நாம் எதிர்பார்க்க முடியாது. மாறாக, கடவுளுக்கே தெரிந்த விதத்தில் நாம் எல்லோரும் வாழ்வு பெற்று நிறைவடைய அழைக்கப்படுகிறோம். கடவுளே நமக்கு நிலைவாழ்வில் பங்களிப்பார். எனவே நாம் நம்பிக்கையோடு கடவுளை நாடிச் செல்ல வேண்டும். இந்த உண்மையை இயேசு நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். எனவே, இயேசுவையும் அவர் நம்பிய கடவுளையும் நாம் நம்பி ஏற்கும்போது நாமும் உயிர்த்தெழுதலில் பங்கேற்போம். நம் வாழ்வு ஒரு நாளும் அழியாது.
மன்றாட்டு:
இறைவா, நீர் எங்களுக்கு வழங்குகின்ற வாழ்வை நாங்கள் பிறரோடு பகிர்ந்திட அருள்தாரும்.
|