யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 26வது வாரம் வெள்ளிக்கிழமை
2020-10-02

தூய காவல் தூதர்கள் நினைவு0




முதல் வாசகம்

என் தூதர் உனக்கு முன் செல்வார்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 23: 20-23

ஆண்டவர் கூறுவது: வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன். அவர்முன் எச்சரிக்கையாயிரு; அவர் சொற்கேட்டு நட; அவரை எதிர்ப்பவனாய் இராதே. உன் குற்றங்களை அவர் பொறுத்துக் கொள்ளார். ஏனெனில், என் பெயர் அவரில் உள்ளது. நீ அவர் சொல் கேட்டு நடந்தால், நான் சொல்வது யாவற்றையும் கேட்டுச் செயல்பட்டால், நான் உன் எதிரிகளுக்கு எதிரியும், உன் பகைவர்க்குப் பகைவனும் ஆவேன். ஏனெனில், என் தூதர் உனக்கு முன் செல்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: உம்மைக் காத்திட, தம் தூதர்க்கு ஆண்டவர் கட்டளையிடுவார்.
திபா 91: 1-2. 3-4. 5-6. 10-11

உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். 2 ஆண்டவரை நோக்கி, `நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்' என்று உரைப்பார். பல்லவி

3 ஏனெனில், ஆண்டவர் உம்மை வேடரின் கண்ணியினின்றும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார். 4 அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும். பல்லவி

5 இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும் நீர் அஞ்சமாட்டீர். 6 இருளில் உலவும் கொள்ளைநோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர். பல்லவி

10 ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. 11 நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள்

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10

அக்காலத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, ``விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?'' என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: ``நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்கச் சொல்கிறேன்' என்றார்}} (மத்தேயு 18:20)

இயேசுவை நம்பிக்கையோடு ஏற்று வாழ்கின்ற மக்கள் குழு திருச்சபை. இது இயேசுவின் போதனையைப் பிரமாணிக்கமாகப் பின்பற்ற அழைக்கப்படுகின்ற மக்கள் குழுவாகத் திகழ்கிறது. இச்சபையின் சிறப்புப் பண்புகள் யாவை என மத்தேயு பல இடங்களில் விளக்குகிறார். இயேசுவின் திருச்சபையில் நிலவ வேண்டிய ஒரு முக்கியமான பண்பு ''பாவ மன்னிப்பு'' ஆகும். கடவுளுக்கோ மனிதருக்கோ எதிராகச் செய்யப் படுகின்ற பாவங்கள் கிறிஸ்தவ சமூகத்தை உள்ளிருந்தே கொல்கின்ற சக்தி வாய்ந்தவை. எனவே, குற்றம் செய்வோரைத் திருத்தி நல்வழிப்படுத்த எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இயேசுவின் போதனை (காண்க: மத் 18:15-18).

திருச்சபைக்குள் நிலவ வேண்டிய ஒற்றுமை பல நிலைகளில் வெளிப்பட வேண்டும். இறைவழிபாட்டுக்காகக் கூடி வருகின்ற திருச்சபையில் இந்த ஒற்றுமை தோன்றும். எனவே, ஒருமித்த மனத்தோடும் ஒத்த கருத்தோடும் இறைவனை வேண்டும்போது நம் வேண்டுதல் கேட்கப்படும். இயேசுவின் பெயரால் நாம் ஒன்றுகூடி வரும்போது நம்மிடையே அவரும் உடனிருப்பார் (மத் 18:20). இந்த வாக்குறுதி உயிர்த்தெழுந்த இயேசு தம் திருச்சபையோடு இருந்து அதை வழிநடத்துவதைக் குறிப்பதாக மத்தேயு நற்செய்தியின் இறுதியில் காண்கின்றோம். ''இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்'' என இயேசு வாக்களித்துள்ளார் (மத் 28:20). அதுபோலவே மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்திலும் இயேசுவின் பிறப்பின்போது அவர் ''இம்மானுவேல்'' (அதாவது ''கடவுள் நம்முடன் இருக்கிறார்'') என அறிமுகப்படுத்தப்படுகிறார் (மத் 1:23). ஆக, கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர் அனைத்திலும் ஒன்றித்திருந்து, ஒற்றுமையோடு செயல்பட அழைக்கப்படுகிறார்கள். பிளவுகள் தோன்றினாலும் அவற்றைப் போக்குவதற்கான வழிகளைத் தேட வேண்டும்; அன்பும் மன்னித்து ஏற்கும் பண்பும் நம்மில் மிளிர வேண்டும். அப்போது கடவுள் நம்மோடு இருக்கிறார் என்னும் உண்மை உலகுக்குத் தெளிவாகத் தெரியும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் ஒற்றுமையை வளர்க்க அருள்தாரும்.