யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2020-11-15

(இன்றைய வாசகங்கள்: நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31,திருப்பாடல் 128: 1-2. 3. 4-5 ,திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று பொதுக்காலம் முப்பத்தி மூன்றாம் ஞாயிறு. நமக்கு ஆசி வழங்கி, நல் வாழ்வைக் காணும்படி செய்யும் நம் தந்தையாம் இறைவனின் திருப்பாதத்தில் ஒரே குடும்பமாக ஒன்று கூடியுள்ளோம்.

இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் கொடைகளையும், ஆற்றல்களையும் பொது நன்மைக்காக வழங்குகின்றார். ஆகவே நாம் அவற்றைச் சரியாகவும், சிறப்பாகவும் பயன்படுத்தி மனிதருக்கு ஆறுதலையும், கடவுளுக்கு மகிமையையும் கொண்டுவரவேண்டுமென்பது இன்றைய இறைவார்த்தைகள் தரும் செய்தியாகின்றது. அத்தோடு நாம் எப்பொழுதும் விவேகத்தோடும், அறிவுத் தெளிவோடும் இருந்து தீமைகளை விலக்கி எப்பொழுதும் கடவுளைச் சந்திக்கத் தயாராய் இருக்கவேண்டும் என்ற சிந்தனையும் நமக்குத் தரப்படுகின்றது. இந்தச் சிந்தனைகளை நாம் நம் மனத்தில் ஆழமாகப் பதித்து, இறைவன் விரும்பும் வாழ்வை நாம் வாழ வரம் கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31

திறமை வாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தை விடப் பெருமதிப்புள்ளவள். அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒருநாளும் தீங்கு நினையாள். கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள். இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள். எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!
திருப்பாடல் 128: 1-2. 3. 4-5

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! -பல்லவி

3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். -பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! -பல்லவி

இரண்டாம் வாசகம்

ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

சகோதரர் சகோதரிகளே, காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. ஏனெனில் திருடன் இரவில் வருவது போல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள். `எங்கும் அமைதி, ஆபத்து இல்லை' என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவது போல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்; யாரும் தப்பித்துக்கொள்ள இயலாது. ஆனால் அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல. ஆகவே மற்றவர்களைப் போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறிய உவமை: விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார். நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, `ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்' என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், `நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன், உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, `ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்' என்றார். அவருடைய தலைவர் அவரிடம், `நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, `ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது' என்றார். அதற்கு அவருடைய தலைவர், `சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்' என்று கூறினார். `எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்து பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்று அவர் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஆயனே எம் இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் : அவர்கள் ஒவ்வொருவரும் உமக்கு அஞ்சி உமது வழிகளில் நடக்கவும், அவர்களுக்கு நீர் கொடுத்த கொடைகளையும், ஆற்றல்களையும் சிறப்பாகவும் பயன்படுத்தி மனிதருக்கு ஆறுதலையும், உமக்கு மகிமையையும் கொண்டுவர வேண்டிய மனப்பக்குவத்தை அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சீயோனிலிருந்து எமக்கு ஆசி வழங்கும் தந்தையே!

உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள், உமக்கு அஞ்சி உமது வழிகளில் நடக்கவும், எங்களுக்கு நீர் கொடுத்த கொடைகளையும், ஆற்றல்களையும் சிறப்பாகவும், சரியாகவும், பயன்படுத்தி மனிதருக்கு ஆறுதலையும், உமக்கு மகிமையையும் கொண்டுவர வேண்டிய ஆற்றலை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் வாழ்வின் நிறைவாகிய இறைவா!

எங்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்து வெளியிடங்களிலும், வெளிநாட்டிலும் வாழும் எம் சகோதரச் சகோதரிகளை உம் திருமுன் நினைவுகூர்கிறோம். அங்கு அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் உமது உடனிருப்பை உணர்ந்து நல்வாழ்வு வாழ்ந்திடவும், பாச உணர்வுகளுடன் தங்கள் குடும்பங்களோடு ஒன்றிணைந்திருக்கத் தேவையான வரங்களையும், தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பையும் வழங்கிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஆயத்தமாயிருக்க அழைப்பவரே இறைவா!

உலகின் முடிவிலும், எங்களது வாழ்வின் முடிவிலும் இறைமகன் இயேசுவை சந்திக்க விழிப்புடனே செயல்பட்டு இறையாட்சிக்குள் நுழையும் தகுதியைத் தருகின்ற நேரிய பாதைகளைப் பற்றிக் கொண்டு, உமது ஆற்றலையும், மாட்சியையும் கண்டு மகிழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இறை நம்பிக்கையில் வாழ்ந்து மரிப்போர் இறையாட்சியில் நுழையும் தகுதி பெறுவார்கள் என்றுரைத்தவரே இறைவா!

எங்கள் குடும்பங்களிலே இறை விசுவாசத்தில் வாழ்ந்து மரித்துள்ள அனைத்து விசுவாசிகளுக்கும் உமது பேரிரக்கத்தால் அமைதியும், ஒளியும் கொண்ட நிலைவாழ்வை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பின் இறைவா,

யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நலம் அளிக்கும் வல்லவரே! எம் இறைவா!

தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து எங்களைக் காத்துவந்தவரே, நோயின் வீரியம் குறைந்து மக்கள் அனைவரும் நலமுடனும், வளமுடனும் வாழத் தேவையான அருளையும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தொற்றுநோயினால் ஏற்பட்ட மனஅழுத்தத்திலிருந்து விடுபடவும் தேவையான நல்ல சுகாதார, வளமான நல்ல சூழ்நிலையைத் தரவேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்'' (மத்தேயு 25:20)

இறையாட்சி பற்றி இயேசு கூறிய உவமைகளுள் ''தாலந்து உவமை'' சிறப்பானது. தாலந்து என்னும் நாணயம் வெள்ளியாகவோ பொன்னாகவோ இருக்கலாம். பத்து ஆண்டுகள் வேலை செய்தால் கிடைக்கின்ற கூலி ஒரு வெள்ளி தாலந்துக்கும் அதைப் போல முப்பது மடங்கு ஒரு பொன் தாலந்துக்கும் மதிப்பு உண்டு. எனவே, தாலந்தின் எண்ணிக்கை ஐந்தோ, இரண்டோ, ஒன்றோ எதுவாக இருந்தாலும் அதன் மதிப்பு உண்மையிலேயே பெரிதுதான். இவ்வாறு பெருந்தொகையைப் பெற்ற மூவருள் இருவர் மட்டுமே அத்தொகையைக் கொண்டு வாணிகம் செய்து மேலும் பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் ஒரு தாலந்து பெற்றவர் தாம் பெற்ற பணத்தைப் புதைத்துவைக்கிறார். திருடர்களின் கண்களில் பணம் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவே அவர் இவ்வாறு முன்மதியோடு செயல்பட்டிருக்கலாம். ஆனால் அவர் தாம் பெற்ற பணத்தை நன்முறையில் முடக்கி, மேலும் அதிக பணம் திரட்ட முன்வரவில்லை. இந்த உவமை வழியாக இயேசு உணர்த்துகின்ற செய்தி என்ன? கடவுளின் ஆட்சி என்பது நம்மேல் திணிக்கப்படுகிற ஒன்று அல்ல. அது கடவுள் நமக்குத் தருகின்ற கொடை. ஆனால் அக்கொடையைப் பெற்ற நாம் சோம்பேறிகளாக இருத்தல் ஆகாது. நாம் பெற்ற கொடையை நன்றியோடு ஏற்க வேண்டும்; அதே நேரத்தில் அக்கொடை நமக்கும் பிறருக்கும் பயன்படுகின்ற விதத்தில் நாம் விழிப்பாகச் செயல்பட்டு, பெரு முயற்சி செய்து அதை மேம்படுத்த வேண்டும்.

''இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்'' என்று கூறிய பணியாளர் தம்மிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பைத் தட்டிக் கழிக்கவில்லை. மாறாக, பொறுப்புணர்வோடு செயல்பட்டார். அவ்வாறு பொறுப்புணர்வோடு செயல்பட்டதால்தான் தலைவர் அவரைப் பார்த்து, ''என் மகிழ்ச்சியில் பங்குகொள்ளும்'' எனக் கூறி வரவேற்கிறார். கடவுள் வழங்குகின்ற மகிழ்ச்சி நம் உள்ளத்தை நிரப்ப வேண்டும். அவரோடு ஆழ்ந்த உறவு கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். கடவுள் நம்மைத் தேடி வந்து தம் அன்புப் பிணைப்பில் நம்மை அணைத்துக் கொள்வதால் நாம் மகிழ்ச்சியில் திளைக்கிறோம். எனவே, கடவுளின் ஆட்சியில் பங்கேற்க விழைவோர் பொறுப்போடு செயல்பட வேண்டும். தம் தலைவராகிய கடவுளின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப ஒழுக வேண்டும். அப்போது ''என் மகிழ்ச்சியில் பங்குகொள்ளும்'' என்னும் அழைப்பு நம்மையும் வந்துசேரும் (காண்க: மத்தேயு 25:21,23).

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் பெற்ற கொடைகளை மண்ணில் புதைத்துவைக்காமல் நன்முறையில் பயன்படுத்த அருள்தாரும்.