யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
2022-11-20

கிறிஸ்தரசர் பெருவிழா

(இன்றைய வாசகங்கள்: சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-3,திருப்பாடல்கள் 122: 1-2. 4-5,திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-20,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 35-43)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இறையரசுக்குரியவர்களே, கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை கொண்டாட உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். என்றென்றும் ஆட்சி செய்பவரான நம் ஆண்டவர் இயேசுவின் அரசத் தன்மையைப் பற்றி சிந்திக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் ஆண்டவர் இயேசு ஆட்சியுரிமையுடன் வரும்போது நம்மை நினைவில் கொள்வதற்கு தகுதி உள்ளவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இயேசு அனைத்துலகின் அரசர் என்பதை நல்ல கள்வன் அறிக்கையிடுவதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. ஒரு குற்றமும் செய்யாத இறைமகன் இயேசு, நமது மீட்புக்காக சிலுவையின் கொடிய வேதனையை ஏற்றுக்கொண்டார். இத்தகைய இரக்கமுள்ள அரசரின் மாட்சியில் பங்கேற்பதற்காக, அவரது அரசை உலகில் பரவச் செய்கிறவர்களாக வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-3

அந்நாள்களில் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: “நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள். சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். ‘நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்’ என்று உமக்கே ஆண்டவர் கூறினார்.” இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.
திருப்பாடல்கள் 122: 1-2. 4-5

1 "ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்" என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். பல்லவி

4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி

இரண்டாம் வாசகம்

திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-20

சகோதரர் சகோதரிகளே, தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்கு பெற உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கியுள்ளார். அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார். அம்மகனால்தான் நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம். அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடு இணைந்து நிலைபெறுகின்றன. திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மாற் 11: 10
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 35-43

அக்காலத்தில் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்ததை மக்கள் பார்த்துக்கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், ``பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக்கொள்ளட்டும்'' என்று கேலி செய்தார்கள். படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, ``நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்'' என்று எள்ளி நகையாடினர். ``இவன் யூதரின் அரசன்'' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது. சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், ``நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று'' என்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, ``கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!'' என்று பதிலுரைத்தான். பின்பு அவன், ``இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்'' என்றான். அதற்கு இயேசு அவனிடம், ``நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எம் ஆயரே இறைவா,

உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் தங்கள் பணியின் மேன்மையை உணர்ந்தவராய், மக்களை மனமாற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்ல அருள்புரிய உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே எம் இறைவா!

உக்ரைன் ரஷ்யா போர் விரைவில் முடிவு பெறவும்; அமைதியான சூழல் ஏற்படவும், போரின் பாதிப்புக்கள் விரைவில் சீரடையவும், வன்முறைகள் முற்றுப்பெறவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் உறைவிடமான எம் இறைவா!

போரினால் பலவித இழப்புக்களைச் சந்திக்கின்ற மக்களை ஒப்புக்கொடுக்கின்றோம். அன்பான மனிதர்களை, உடல் உறுப்புக்களை, உடமைகளை, நிம்மதியை, மன மகிழ்ச்சியை, வேலைகளை இன்னும் பலவற்றை இழந்து தவிப்போருக்கு ஆறுதலாகவும்; ஆதரவாகவும் நீரே இருக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல் ஆயனே! எம் இறைவா!

கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றபோது சண்டைகளை விடுத்து அமைதிப் பேச்சு வார்த்தைகளில் தீர்வு காணவும், மக்களின் அமைதியான வாழ்வையும், நலனையும் குறித்து அக்கறை கொள்ளவும், எங்கள் தலைவர்களை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கத்தின் ஊற்றே எம் இறைவா!

இறந்து போன அனைத்து ஆத்மங்களையும் உமது இரக்கத்துடன் கண்ணோக்கியருளும். அவர்கள் குற்றங்களை பொறுத்து அல்ல, மாறாக உமது பேரன்பிற்கேற்ப இரக்கம் வைத்தருளும். இதனால் அவர்கள் அனைவரும் உமது வான்வீட்டை அடைந்து, உமது அன்பு பிரசன்னத்தில் இளைபாற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் துயரத்தையெல்லாம் களிநடமாக மாற்றுவதாக வாக்களித்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம்.

துன்பங்கள் சான்று பகரும் வாய்ப்புகள் என்று மொழிந்தீரே, உமக்கு நன்றி. கவலைப்படாதீர்கள் என்று சொன்னீரே, உமக்குப் புகழ். துன்ப வேளைகளில் சான்று பகரும் மனநிலையை எங்களுக்குத் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா!

மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உதவி செய்பவரே இறைவா,

எம் இளைஞர்களுக்காக உம்மை மன்றாடுகின்றோம். இவர்கள் கடவுளின் பிள்ளைகளாய் நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதிபெறவும்,ஞானத்தோடு அனைத்தையும் செய்து முடிக்கவும், தீமைகளிலிருந்து விலகி உம்முடைய சாட்சிகளாய் அவர்கள் வாழ அவாகளை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

நிறைவு தரும் ஆட்சி

அரசனின் கடமை தன் ஆளுகைக்குட்பட்ட மக்களை குறையின்றி பேணி காப்பது. "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்." ஆகவே, காத்தல் அரசனின் சிறப்புப் பண்பு. எனவேதான் படை வீரர், "நீ ய+தர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள்" (லூக் 23'37) என்கின்றனர். குற்றவாளிகளுள் ஒருவனும், "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று "என்று கோரிக்கை வைக்கிறான்.

இந்த காப்பாற்றும் பண்பு நம் இறைவனில் நிறைவாக உள்ளதை விவிலியம் முழுவதும் காண்கிறோம். இன்னும் சிறப்பாக ஏழைகள், பாதிக்கப்பட்டோர்,துன்புறுவோர்,பாவிகள் இவர்களை அவர் காக்கும் விதமே அலாதியானது. "அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்."(மத் 5'45) "இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன்."(எசாயா 49 :16)"அவர் உம் கால் இடறாதபடி பாhத்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார்."(தி.பா 121 :3); "நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும்இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்." (தி.பா121'8) ஆயன் தன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுக்கும் "நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்."( யோவா 10 :11) "மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்." ( எசா 53 :4) நம் இறைவன் காக்கும் தன் உயிர் கொடுத்து காக்கும் தெய்வம். உண்மை அரசர். அவரது அரசின் மக்களாயிருப்பது நமக்குப் பெருமை. அவரை போற்றி புகழ்ந்து நன்றி செலுத்தி வாழ்வோம். அவரது அரசில் வாழும் நமக்கு குறை இருக்காது.எல்லாம் நிறைவாக இருக்கும்.

மன்றாட்டு:

நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். வியத்தகு செயல்களை வான்வெளியிலும், இயற்கையிலும் காணும நான், உம்மை வியப்புக்குரியவர் எனப்போற்றுகிறேன். அருங்குறிகளைத் தேடி ஓடாமல், ஏமாறாதபடி விழிப்பாயிருக்கும் அருளை எனக்குத் தந்தருளும்.