திருவழிபாடு ஆண்டு - A 2022-11-27
(இன்றைய வாசகங்கள்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5,திருப்பாடல்கள் 122;1-2,4-9,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 11-14,மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 37-44)
திருப்பலி முன்னுரை
அழைக்கப்பட்டவர்களே, திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். புதிய திருவழிபாட்டு ஆண்டின் முதல் நாளாகிய இன்று, ஆண்டவரின் இரண்டாம் வருகையைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். நாம் வாழும் இந்த பாவச் சூழ்நிலை ஆண்டவரின் வருகைக்கான எச்சரிக்கை என்பதை இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கிறது. திருடனைப் போன்று, நினையாத நேரத்தில் மானிட மகனின் வருகை நிகழும் என்று இயேசு எச்சரிக்கிறார். இறைவனின் அரசுக்காக எடுத்துக் கொள்ளப்படுவோரில் ஒருவராய் இருக்குமாறு விழிப்புடன் வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5
யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி: இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்: எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்: மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து ;புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்: யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்: நாமும் அவர் நெறிகளில் நடப்போம் ; என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்: எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும். அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்: பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்: அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.
திருப்பாடல்கள் 122;1-2,4-9
1 `ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். -பல்லவி
4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்;
இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க
ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன.
அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். -பல்லவி
6 எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள்;
உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!
7 உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக!
உன் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!" பல்லவி
8 �உன்னுள் சமாதானம் நிலவுவதாக!'' என்று நான் என் சகோதரர் சார்பிலும்
என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.
9 நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால்,
உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். -பல்லவி
இரண்டாம் வாசகம் நமது மீட்பு மிக அண்மையில் உள்ளது. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 11-14சகோதர சகோதரிகளே, இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள்: உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததை விட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது. இரவு முடியப்போகிறது: பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக! பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! திபா85:7
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 37-44
அக்காலத்தில், மானிடமகன் வருகையைப் பற்றி இயேசு தம் சீடரை கோக்கிக் கூறியது "நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்: மற்றவர் விட்டு விடப்படுவார்.இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்: மற்றவர் விட்டு விடப்படுவார். விழிப்பாயிருங்கள்: ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்."
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
விழித்திருக்க அழைப்பவரே இறைவா, உமது திருமகனின் வருகைக்காக இந்த உலகை விழிப்புடன் தயார் செய்யும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் நிறைவாய் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
அன்புத் தந்தையே எம் இறைவா! உக்ரைன் ரஷ்யா போர் விரைவில் முடிவு பெறவும்; அமைதியான சூழல் ஏற்படவும், போரின் பாதிப்புக்கள் விரைவில் சீரடையவும், வன்முறைகள் முற்றுப்பெறவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஞானத்தின் உறைவிடமான எம் இறைவா! போரினால் பலவித இழப்புக்களைச் சந்திக்கின்ற மக்களை ஒப்புக்கொடுக்கின்றோம். அன்பான மனிதர்களை, உடல் உறுப்புக்களை, உடமைகளை, நிம்மதியை, மன மகிழ்ச்சியை, வேலைகளை இன்னும் பலவற்றை இழந்து தவிப்போருக்கு ஆறுதலாகவும்; ஆதரவாகவும் நீரே இருக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
நல் ஆயனே! எம் இறைவா! கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றபோது சண்டைகளை விடுத்து அமைதிப் பேச்சு வார்த்தைகளில் தீர்வு காணவும், மக்களின் அமைதியான வாழ்வையும், நலனையும் குறித்து அக்கறை கொள்ளவும், எங்கள் தலைவர்களை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
இரக்கத்தின் ஊற்றே எம் இறைவா! இறந்து போன அனைத்து ஆத்மங்களையும் உமது இரக்கத்துடன் கண்ணோக்கியருளும். அவர்கள் குற்றங்களை பொறுத்து அல்ல, மாறாக உமது பேரன்பிற்கேற்ப இரக்கம் வைத்தருளும். இதனால் அவர்கள் அனைவரும் உமது வான்வீட்டை அடைந்து, உமது அன்பு பிரசன்னத்தில் இளைபாற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
வல்லமை தருபவரே இறைவா, போர்களாலும், வன்முறைகளாலும் நிறைந்திருக்கும் இந்த உலகை உமது அரசுக்குரிய அமைதியான இடமாக மாற்றும் வரத்தை, உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருக் கும் வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
இறைவா! மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
உதவி செய்பவரே இறைவா, எம் இளைஞர்களுக்காக உம்மை மன்றாடுகின்றோம். இவர்கள் கடவுளின் பிள்ளைகளாய் நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதிபெறவும்,ஞானத்தோடு அனைத்தையும் செய்து முடிக்கவும், தீமைகளிலிருந்து விலகி உம்முடைய சாட்சிகளாய் அவர்கள் வாழ அவாகளை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|
இன்றைய சிந்தனை
நிறைவு தரும் ஆட்சி
அரசனின் கடமை தன் ஆளுகைக்குட்பட்ட மக்களை குறையின்றி பேணி காப்பது. "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்." ஆகவே, காத்தல் அரசனின் சிறப்புப் பண்பு. எனவேதான் படை வீரர், "நீ ய+தர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள்" (லூக் 23'37) என்கின்றனர். குற்றவாளிகளுள் ஒருவனும், "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று "என்று கோரிக்கை வைக்கிறான்.
இந்த காப்பாற்றும் பண்பு நம் இறைவனில் நிறைவாக உள்ளதை விவிலியம் முழுவதும் காண்கிறோம். இன்னும் சிறப்பாக ஏழைகள், பாதிக்கப்பட்டோர்,துன்புறுவோர்,பாவிகள் இவர்களை அவர் காக்கும் விதமே அலாதியானது. "அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்."(மத் 5'45) "இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன்."(எசாயா 49 :16)"அவர் உம் கால் இடறாதபடி பாhத்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார்."(தி.பா 121 :3); "நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும்இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்." (தி.பா121'8) ஆயன் தன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுக்கும் "நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்."( யோவா 10 :11) "மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்." ( எசா 53 :4) நம் இறைவன் காக்கும் தன் உயிர் கொடுத்து காக்கும் தெய்வம். உண்மை அரசர். அவரது அரசின் மக்களாயிருப்பது நமக்குப் பெருமை. அவரை போற்றி புகழ்ந்து நன்றி செலுத்தி வாழ்வோம். அவரது அரசில் வாழும் நமக்கு குறை இருக்காது.எல்லாம் நிறைவாக இருக்கும்.
மன்றாட்டு:
நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். வியத்தகு செயல்களை வான்வெளியிலும், இயற்கையிலும் காணும நான், உம்மை வியப்புக்குரியவர் எனப்போற்றுகிறேன். அருங்குறிகளைத் தேடி ஓடாமல், ஏமாறாதபடி விழிப்பாயிருக்கும் அருளை எனக்குத் தந்தருளும்.
|