யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 3வது வாரம் திங்கட்கிழமை
2023-01-23




முதல் வாசகம்

பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்த கிறிஸ்து, மீண்டும் ஒரு முறை தோன்றுவார்.
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 9:15,24-28

சகோதரர் சகோதரிகளே,
இயேசு புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராய் இருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட, என்றும் நிலைக்கும், உரிமைப் பேற்றைப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது. இது ஒரு சாவின்மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சாவு முந்திய உடன்படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பு அளிக்கிறது. அதனால்தான் கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார். தலைமைக் குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார். மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி. அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அவரது வியத்தகு செயல்களுக்காய், புதியதோர் பாடல் பாடுங்கள்.
திருப்பாடல்கள் 98:1. 2-3ab. 3cd-4. 5-6

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். ஆவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ab இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார்.

3cd உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.

5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்


நற்செய்திக்கு முன் வசனம்

2 திமொ 1: 10b
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3:22-30

அக்காலத்தில்
எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும் “பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆகவே இயேசு அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: “சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு. முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.” ‘இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது’ என்று தம்மைப்பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது;... அவர் என்னை அனுப்பியுள்ளார்'' (லூக்கா 4:18-19)

எசாயா இறைவாக்கினர் எழுதிய நூலிலிருந்து இயேசு வாசித்த பகுதியில் கூறப்படுகின்ற கருத்து இயேசுவின் வாழ்வில் உண்மையாகிறது. அக்கருத்தினை இயேசு தம்முடைய பணித்திட்டமாக அறிக்கையிடுகிறார். இயேசுவின் வாழ்விலும் பணியிலும் ''ஆவி''யின் செயல் துலங்குவதை நற்செய்தி நூல்கள் பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றன. மரியாவின் வயிற்றில் கருவாக உருவான நொடியிலிருந்து இயேசு சிலுவையில் தொங்கித் தம் ஆவியைக் கையளித்த நேரம் வரை ஆவியின் செயல் வெளிப்பட்டது. ஏன், இயேசு சாவிலிருந்து ஆவியின் வல்லமையால் உயிர்பெற்றெழுந்து, தம் சீடரையும் ஆவியால் திடப்படுத்துகிறார். இவ்வாறு கடவுள் இயேசுவின் வழியாகச் செயல்பட்டதை ஆவிக்கு ஏற்றியுரைப்பதை இவண் காண்கின்றோம். கடவுளின் ஆவி தம்மில் தங்கியிருப்பதை உணர்கின்றார் இயேசு. அந்த இறைப் பிரசன்னத்திலிருந்து இயேசுவின் சொல்லும் செயலும் பணியும் பிறக்கின்றன. -- கடவுளின் ஆவி நமக்குத் தரப்பட்டுள்ளார். ஆவியால் வழிநடத்தப்படும் நாம் ஆவியின் தூண்டுதலைக் கண்டுகொள்ள வேண்டும். அதற்கேற்ப நடக்க வேண்டும். இயேசு எந்த ஆவியால் ''அருள்பொழிவு'' பெற்றாரோ அதே ஆவி திருமுழுக்கின் வழி நம்மையும் நிறைத்துள்ளார். இதனால் இயேசுவின் பணியில் நாமும் பங்குபெறுகின்றோம். ''ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணி''யை நாம் செய்வதற்கு ஆவி நம்மைத் தூண்டுகிறார். இயேசுவைப் போல, இயேசுவைத் தொடர்ந்து நம் பணியை ஆற்றிட ஆவி நமக்கு வல்லமை அளிக்கிறார்.

மன்றாட்டு:

இறைவா, உம் ஆவியின் துணையோடு நாங்கள் வழிநடக்க அருள்தாரும்.