திருவழிபாடு ஆண்டு - B 2023-12-31
இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம்
(இன்றைய வாசகங்கள்:
தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-6; 21: 1-3
,திருப்பாடல் 105: 1-2. 3-4. 5-6. 8-9,எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 8, 11-12, 17-19
,லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40)
திருப்பலி முன்னுரை
அன்பிற்கினியவர்களே! திருக்குடும்ப பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் இயேசுமரி சூசையின் திருக்குடும்ப பெருவிழா நல்வாழ்த்துக்கள். இறைவனின் மீட்புத்திட்டத்திற்கு தன் ஒத்துழைப்பை கொடுத்த நேர்மையாளரான சூசை, கன்னிமை குன்றா கன்னிமரியாள், மனுவுரு எடுத்த இயேசு கிறிஸ்து இம்மூவரும் இணைந்து ஏற்படுத்தியது தான் திருக்குடும்பம். ஒவ்வொரு குடும்பமும் இப்படி தான் வாழ வேண்டும் என்பதற்கு சிறந்த மாதிரியான குடும்பம் இயேசுமரி சூசையின் திருக்குடும்பம் .குடும்பம் உயிர்களின் பிறப்பிடம். உறவுகளின் ஊற்று.ஒருவர் மற்றவரை சார்ந்து அன்பு செய்து வாழ ஏற்ற இடம் குடும்பம். இன்பத்திலும் துன்பத்திலும் உடல்நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாய் இருப்பேன் என்ற திருமண வாக்குறுதியுடன் தொடங்கப்பட்ட குடும்பம் ஒவ்வொன்றும் திருக்குடும்பமாகி வாழ அழைக்கப்படுகின்றது. இறைவனின் அருள் பெற்றிருக்கின்றது. திருக்குடும்பத்தின் பாதுகாவலரான யோசேப்பிடம் காணப்பட்ட நேர்மை, கண்ணியம், கடமை, பொறுப்பு, கடின உழைப்பு, தந்தை உள்ளம் ஒவ்வொரு குடும்ப தலைவியிடமும் காணப்பட வேண்டும். திருக்குடும்பத்தின் தலைவியான அன்னைமரியாளின் அடக்கம், பணிவு, கற்பு, தாயுள்ளம், நன்றியுணர்வு உதவிசெய்யும் உள்ளம் ஒவ்வொரு குடும்ப தலைவியிடமும் காணப்பட வேண்டும். திருக்குடும்பத்தின் மையமாக திகழும் இயேசுவிடம் காணப்பட்ட குழந்தையுள்ளம், கீழ்படிதல், ஞானம் இறையன்பு, பிறரன்பு, துணிவு நம் குழந்தைகளிடமும் காணப்பட வேண்டும் என்பதைத் தான் இன்று நம் திருஅவை கொண்டாடும் திருக்குடும்ப பெருவிழா நமக்கு கற்றுக்கொடுக்கின்றது. இன்றைய திருப்பலிபீடம் நம் அனைவரின் குடும்பங்களையும் கொண்டு வருவோம். நம் குடும்பத்தின் அமைதியை சீர்குலைக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் ஆண்டவரிடம் அர்ப்பணிப்போம். ஆண்டவரின் திருக்குடும்ப அருள் நம் குடும்பங்களை நிரப்பவும், நம் குடும்பமும் திருக்குடும்பமாக வாழ அருள் வேண்டுவோம். கணவன் - மனைவியிடையே ஒன்றிப்பு, பெற்றோர் - பிள்ளைகளிடையே அன்பு, உற்றார் - உறவினர்களிடையே நற்பண்பு போன்ற பூக்கள் நம் குடும்பத்தில் மலர வரம் வேண்டி தொடர்ந்து இணைந்து ஜெபிப்போம் இத்தெய்வீக திருப்பலியில்.
முதல் வாசகம்
உனக்குப் பிறப்பவனே உனக்குப்பின் உரிமையாளன் ஆவான்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-6; 21: 1-3
ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: “ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்."
அப்பொழுது ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப் பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்! நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப்போகிறான்” என்றார். அதற்கு மறுமொழியாக, “இவன் உனக்குப் பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப் பின் உரிமையாளன் ஆவான்” என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.
ஆண்டவர் தாம் கூறியிருந்தபடி சாராவைக் கண்ணோக்கினார். ஆண்டவர் தம் வாக்குறுதிக்கேற்ப சாராவுக்குச் செய்தருளினார். கடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாரா கருத்தாங்கி, ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆபிரகாம் தமக்குப் பிறந்த, சாரா தமக்குப் பெற்றுக்கொடுத்த, மகனுக்கு ‘ஈசாக்கு’ என்று பெயரிட்டார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொண்டுள்ளார்.
திருப்பாடல் 105: 1-2. 3-4. 5-6. 8-9
1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
2
அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! - பல்லவி
3
அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
4
ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! - பல்லவி
5
அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.
6
அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! - பல்லவி
8
அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
9
ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். - பல்லவி
இரண்டாம் வாசகம் ஆபிரகாம், சாரா, ஈசாக்கு ஆகியோரின் நம்பிக்கை. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 8, 11-12, 17-19
ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார்.
ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிட மிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்.
ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். “ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்” என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன் வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி. - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! எபி 1: 1-2
அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். “ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை” என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,
“ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்றார்.
குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.
ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.
ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அன்புத்தந்தையே இறைவா! உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகியோர் அனைவரையும் உம்பாதம் அர்பணிக்கிறோம். உம் பணியை தங்கள் வாழ்வாக்கி, இறைமக்களை அன்பின் சமூகமாக கட்டியெழுப்பவும், உம் அன்புக் கட்டளைகளை தங்கள் வாழ்நாளெல்லாம் கடைபிடிக்கவும் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
தாயும் தந்தையுமான இறைவா! இயேசுவை மூலைக்கல்லாக கொண்டு இயங்கிவரும் எம் திருஅவை, இன்று கொண்டாடும் கிறிஸ்மஸ் பெருவிழாவினை மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும், அருள் அள்ளித்தரும் விழாவாக அமையும் வண்ணம் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடி திருக்குடும்பத்தின் வழியில் ஒவ்வொரு குடும்பத்தினையும் வழிநடத்திட தேவையான புதிய ஆன்மீகத்திட்டங்களை மேற்கொள்ள குழந்தையேசுவின் ஆசீரைத் தந்தருள் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இயேசுவின் மனுவுரு வழியாக உலகிற்கு விடுதலையையும், வாழ்வையும் கொடுத்தவரே! எம் இல்லற வாழ்வில் குடும்ப அமைதியை சீர்குலைக்கும் எந்த முறைக்கேடுகளும் நடக்காமல் ஒருவர் ஒருவரை ஒன்றிணைக்கும், புரிந்துகொள்ளுதல் விட்டுக்கொடுத்தல் அன்பு போன்ற திருக்குடும்ப நற்பண்புகள் எங்கள் பங்கின் எல்லா குடும்பங்களிலும் நிலவ குழந்தை இயேசுவின் ஆசீரை தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நலம் அருளும் நல்ல ஆயனே இறைவா! உடல்நலக் குறைவினால் மருத்துவமனையிலும், தங்கள் இல்லங்களிலும் இருந்து சிகிச்சை பெறும் ஓவ்வொரு நல்ல உள்ளங்களுக்காவும் உம்மிடம் மன்றாடுகிறோம். உமது அன்புக் கரங்களால் அவர்கள் ஒவ்வொருவரையும் தொட்டு குணப்படுத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
இறைவா! குழந்தையேசுவையும், அன்னைமரியாளையும் பாதுகாப்புடன் பராமரித்து நடத்திட்ட சூசையப்பரைப் போல எல்லா குடும்பத்தலைவர்களும் தன் குடும்பத்தை பாதுகாத்து நடத்திட வேண்டிய பொறுப்புணர்வையும், கடமையுணர்வையும் தந்து தனது கடின உழைப்பால், நேர்மையான உள்ளத்தால் குடும்பவாழ்வை சீரும் சிறப்புமாய் வளமைப்படுத்திட குழந்தையேசுவின் ஆசீர் தந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்புத்தந்தையே இறைவா! குழந்தையேசுவைப் பெற்றெடுத்த மகிழ்வில் இருக்கும் அன்னை மரியாவைப் போல எல்லா தாய்மார்களும் குடும்பத்தை மகிழ்விக்கும் சவாலைச் சந்திக்க மனவலிமையும் உடல் பலமும் எளிய உள்ளமும் பெற்றிட குழந்தையேசுவின் ஆசீரை அவர்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|