இரண்டாவது திருவழிபாடு ஆண்டு 2024-03-30
(இன்றைய வாசகங்கள்:
தொடக்க நூலிலிருந்து வாசகம். 1: 1-2:2,104: 1-2a. 5-6. 10,12. 13-14. 24,35c (பல்லவி: 30),விடுதலைப் பயண நூலிருந்து வாசகம். 14: 15- 15:1,லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 1-12)
திருப்பலி முன்னுரை
நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று புனித சனி. நம் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பை இன்று நாம் நினைவு கூருகின்றோம். தமது திருப்பாடுகளாலும், சிலுவை மரணத்தாலும் பாவத்தை அழித்து மரணத்தை முறியடித்தவர் மாபரன் இயேசுக் கிறிஸ்து. இறைவனின் மகிமையை எதிர்த்து நிற்கவோ, தடுத்துப் பார்க்கவோ எந்தச் சக்தியாலும் முடியாது என்பதைத்தான் இயேசுவின் உயிர்ப்பு நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. இந்த உயிர்ப்பின் மகிமையில் நாமும் பங்குபெற அழைக்கப்படுகின்றோம் என்பதை உணர்ந்து பெரு மகிழ்ச்சியுடனும், நன்றி உணர்வுடனும் பாஸ்காத் திருவிழிப்பு சடங்கினில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன.
தொடக்க நூலிலிருந்து வாசகம். 1: 1-2:2
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது கடவுள், 'ஒளி தோன்றுக! ' என்றார்: ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். கடவுள் ஒளிக்குப் 'பகல் ' என்றும் இருளுக்கு 'இரவு ' என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், 'நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும் ' என்றார். கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் வானத்திற்கு 'விண்ணுலகம் ' என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், 'விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக! ' என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் உலர்ந்த தரைக்கு 'நிலம் ' என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் 'கடல் ' என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், 'புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும் ' என்றார். அது அவ்வாறே ஆயிற்று. புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், 'பகலையும் இரவையும் வௌ'வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக! அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும் ' என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார். கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்: பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வௌ'வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், 'திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக! ' என்றார். இவ்வாறு, கடலின பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி 'பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும் ' என்றுரைத்தார். மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், 'கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக ' என்றார். கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், 'மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும் ' என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்: கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்: ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, 'பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்: அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்: கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள் ' என்றார். அப்பொழுது கடவுள், 'மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்: இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன் ' என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது. விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவரே! உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
104: 1-2a. 5-6. 10,12. 13-14. 24,35c (பல்லவி: 30)
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.
2a
பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர். - பல்லவி
5
நீவிர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது என்றென்றும் அசைவுறாது.
6
அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது; மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது. - பல்லவி
10
பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்; அவை மலைகளிடையே பாய்ந்தோடும்.
12
நீரூற்றுகளின் அருகில் வானத்துப் பறவைகள் கூடுகட்டிக் கொள்கின்றன; அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன. - பல்லவி
13
உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்; உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது.
14
கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்; மானிடருக்கெனப் பயிர்வகைகளை வளரச் செய்கின்றீர். - பல்லவி
24
ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
35c
என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! - பல்லவி
இரண்டாம் வாசகம் இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். விடுதலைப் பயண நூலிருந்து வாசகம். 14: 15- 15:1ஆண்டவர் மோசேயை நோக்கி, "ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல்." கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள். நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன். "பார்வோனையும் அவன் தேர்களையும் குதிரைவீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, 'நானே ஆண்டவர் ' என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்" என்றார்." இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர் இடம்பெயர்ந்து அவர்களுக்குப் பின்வந்து நின்றார். மேகத்தூணும் இடம்பெயர்ந்து முன் பக்கத்திலிருந்து அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்று கொண்டது. அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது: இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை. மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது. வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல்வரை சென்றனர். பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார். "அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர், "இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்று விடுவோம். ஏனெனில், ஆண்டவர்தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்" என்றனர்." "ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு" என்றார்." மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது. அதற்குஎதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார். திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரைவீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை. ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது. இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார். கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர். எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர். அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்: ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்: குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
மூன்றாம் வாசகம் என்னிடம் வாருங்கள்: நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன். இறைவாக்கினர் எசாயா நூலிருந்து வாசகம். 55: 1-11தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்: கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்: தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்: நல்லுணவை உண்ணுங்கள்: கொழுத்ததை உண்டு மகிழுங்கள். எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்: கேளுங்கள்: அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்: தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன்.நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ, நீ அறியாத பிற இனமக்களை அழைப்பாய்: உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிறஇனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார். ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்: அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக: அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்: அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்: அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்: ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன. மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன: அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை. - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நான்காம் வாசகம் நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன்.நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிருந்து வாசகம். 36: 16-28ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டடது: மானிடா! இஸ்ரயேல் மக்கள் தங்கள் நாட்டில் வாழ்கையில் அவர்கள் தங்கள் நடத்தையாலும் செயல்களாலும் அதைத் தீட்டுப்படுத்தினார்கள். அவர்களின் நடத்தை ஒரு பெண்ணின் மாதவிலக்கின் தீட்டுப்போல என் கண்முன் இருந்தது. எனவே, நான் என் சினத்தை அவர்கள்மேல் கொட்டினேன். ஏனெனில் அவர்கள் அந்த நாட்டில் இரத்தம் சிந்தி, அதனைத் தெய்வச் சிலைகளால் தீட்டுப்படுத்தினர். நான் அவர்களை வேற்றினத்தாரிடையே சிதறடித்தேன். அவர்கள் நாடுகளெங்கும் சிதறுண்டு போயினர். அவர்களின் நடத்தைக்கேற்பவும், செயல்களுக்கேற்பவும் அவர்களுக்குத் தீர்ப்பிட்டேன். வேற்றினத்தாரிடையே அவர்கள் எங்குச் சென்றாலும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்தினர். ஏனெனில் அவர்களைக் குறித்து 'இவர்கள் ஆண்டவரின் மக்களாக இருப்பினும், அவரின் நாட்டைவிட்டுப் போகவேண்டியதாயிற்று ' என்று கூறப்பட்டது. இஸ்ரயேல் வீட்டார் சென்ற வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரைக் குறித்து நான் கவலை கொண்டேன். எனவே இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே! இஸ்ரயேல் வீட்டாரே, நான் இவ்விதம் செயலாற்றுவது உங்களை முன்னிட்டு அல்ல. மாறாக, நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன். நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள்: உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைப் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன். நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள்: நான் உங்கள் கடவுளாய் இருப்பேன். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
ஐந்தாம் வாசகம் இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார். பாரூ நூலிருந்து வாசகம்: 3:9-15,32-4:4இஸ்ரயேலே, வாழ்வுதரும் கட்டளைகளைக் கேள்: செவிசாய்த்து ஞானத்தைக் கற்றுக்கொள். இஸ்ரயேலே, நீ உன் பகைவரின் நாட்டில் இருப்பது ஏன்? இறந்தவர்களொடு உன்னையே தீட்டுப்படுத்திக்கொண்டது ஏன்? பாதாளத்திற்குச் செல்வோருடன் வைத்து நீயும் எண்ணப்படுவது ஏன்? ஞானத்தின் ஊற்றை நீ கைவிட்டாய். கடவுளின் வழியில் நீ நடந்திருந்தால் என்றென்றும் நீ அமைதியில் வாழ்ந்திருப்பாய். அறிவுத்திறன் எங்கே இருக்கிறது, அறிவுக்கூர்மை எங்கே இருக்கிறது எனக் கற்றுக்கொள். இதனால் நீண்ட ஆயுளும் வாழ்வும் எங்கே உள்ளன, கண்களுக்கு ஒளியும் அமைதியும் எங்கே உள்ளன எனவும் நீ அறிந்து கொள்வாய். ஞானத்தின் உறைவிடத்தைக் கண்டுபிடித்தவர் யார்? அதன் கருவூலங்களுக்குள் நுழைந்தவர் யார்? ஆனால் எல்லாம் அறிபவர் ஞானத்தை அறிகின்றார்: தம் அறிவுக்கூர்மையால் அதைக் கண்டடைந்தார்: மண்ணுலகை எக்காலத்துக்கும் நிலைநாட்டினார்: அதைக் கால்நடைகளால் நிரப்பினார். அவர் ஒளியை அனுப்பினார்: அதுவும் சென்றது. அதைத் திரும்ப அழைத்தார்: அதுவும் நடுக்கத்துடன் அவருக்குப் பணிந்தது. விண்மீன்கள் தமக்குக் குறிக்கப் பட்ட இடங்களில் நின்னறு ஒளிவீசி மகிழ்ந்தன. அவர் அவற்றை அழைத்தார்: அவை, 'இதோ, உள்ளோம் ' என்றன: தங்களைப் படைத்தவருக்காக மகிழ்ச்சியோடு ஒளிவீசின. இவரே நம் கடவுள், இவருக்கு இணையானவர் எவரும் இலர், மெய்யறிவின் வழி முழுவதும் கண்டவர் இவரே: தம் அடியார் யாக்கோபுக்கும், தாம், அன்புகூர்ந்த மகன் இஸ்ரயேலுக்கும் மெய்யறிவை ஈந்தவரும் இவரே. அதன் பின்னர் ஞானம் மண்ணுலகில் தோன்றிற்று: மனிதர் நடுவே குடிகொண்டது. ஞானமே கடவுளுடைய கட்டளைகள் அடங்கிய நூல்: என்றும் நிலைக்கக்கூடிய திருச்சட்டம். அதைக் கடைப்பிடிப்போர் அனைவரும் வாழ்வர்: அதைக் கைவிடுவோர் உயிரிழப்பர். யாக்கோபே, திரும்பி வா: ஞானத்தை ஏற்றுக்கொள்: அதன் ஒளியில் சீர்மையை நோக்கி நட, உனது மாட்சியை மற்றவருக்கு விட்டுக்கொடாதே: உன் சிறப்புரிமைகளை வேற்று மக்களினத்தாரிடம் இழந்துவிடாதே. இஸ்ரயேலே, நாம் பேறுபெற்றோர்: ஏனெனில் கடவுளுக்கு உகந்தது எது என்பதை நாம் அறிவோம். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
ஆறாம் வாசகம் இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 6: 3-11திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும். ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ? கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்: இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம். அவர் இறந்தார்: பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்: அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார். அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்: கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 1-12
வாரத்தின் முதல் நாள் விடியற்காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக்கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்; கல்லறை வாயிலிலிருந்து கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.
அதைக்குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப்போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர். இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களை நோக்கி, “உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மானிட மகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில் அறையப்பட வேண்டும்; மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னாரே” என்றார்கள்.
அப்போது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவில் கொண்டு, கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இவை அனைத்தையும் பதினொருவருக்கும் மற்ற அனைவருக்கும் அறிவித்தார்கள். அவர்கள் மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும் ஆவர். அவர்கள் நிகழ்ந்தவற்றைத் திருத்தூதர்களுக்குக் கூறினார்கள். அவர்கள் கூற்று வெறும் பிதற்றலாகத் தோன்றியதால் திருத்தூதர்கள் அவர்களை நம்பவில்லை.
ஆனால் பேதுரு எழுந்து கல்லறைக்கு ஓடினார். அங்கு அவர் குனிந்து பார்த்தபோது, உடலைச் சுற்றியிருந்த துணிகளை மட்டுமே கண்டார்; நிகழ்ந்ததைக் குறித்துத் தமக்குள் வியப்புற்றவராய்த் திரும்பிச் சென்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
வாழ்வின் நாயகனே இறைவா!
திருஅவையின் ஞானவழிகாட்டிகள் அனைவரும் உயிர்த்த உம் திருமகனின் அருளினால் திருஅவையினை சாட்சிய வாழ்வுக்கு இட்டுச் செல்ல இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஒளியின் இறைவா!
உயிர்ப்பு விழா கல்வாரிப் பலியில் பங்கேற்கும் நாம் அனைவரும் எமது கிறிஸ்தவ வாழ்வின் ஆதாரம் “கிறிஸ்துவின் உயிர்ப்பு” என்பதை எப்போதும் மறந்து விடாமல் வாழ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
உலகின் மீட்பரே இறைவா!
உமது திருமகனின் உயிர்ப்பின் செய்தி கிடைக்கப் பெறாத உமது பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் அவர்களையும் நீர் ஆட்கொண்டு ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இரக்கமுள்ள இறைவா!
எம் வாழ்வில் எதிர்கொள்ளும் சோதனைகளையும், சவால்களையும் உறுதியுடன் எதிர்கொண்டு, உயிர்த்த உம் திருமகனின் சாட்சிகளாக வாழ்ந்திட எமக்கு வலிமையும், மன உறுதியும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
உலகின் ஒளியே இறைவா! பாஸ்கா என்றாலே கடத்தல் என்பதை உணர்ந்து, எங்களது பழைய பாவ இயல்புகளில் இருந்து கடந்து உம் அன்பின் சிறகுகளுக்குள் தஞ்சம் அடையவும், நம்பிக்கை அன்பு, அருள் போன்ற பாஸ்கா விழாவின் கனிகளை நிரம்ப பெற்று வாழ்ந்திடவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இரக்கம் காட்டுபவரே இறைவா, உம்மோடு திருமுழுக்கிலே ஒன்றித்து, அதனை இன்று புதுப்பித்த நாங்கள் பெற்ற அருளுக்கேற்ற வாழ்க்கை நடத்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
இறைவா உயிர்ப்பை கொண்டாடி மகிழுகின்ற நாங்கள் உயிர்ப்பு தரும் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பினை உணர்ந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
வழிநடத்தும் இறைவா! கலகங்கள், போர்கள், வன்முறைகள் ஓய்ந்து உறவிலும், உண்மை அன்பிலும் நாங்கள் எல்லாரும் உயிர்க்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|