யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்காகாலம்
2024-04-26




முதல் வாசகம்

இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து தமது வாக்குறுதியை நிறைவேற்றினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 26-33

அந்நாள்களில் பவுல் பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவுக்கு வந்தபோது, அவர் தொழுகைக்கூடத்தில் கூறியது: “சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது. எருசலேமில் குடியிருக்கும் மக்களும் அவர்களுடைய தலைவர்களும் அம்மீட்பரை அறியவில்லை; ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைப் புரிந்துகொள்ளவில்லை; ஆயினும் அவருக்கு அவர்கள் தீர்ப்பளித்தபோது அவ்வார்த்தைகள் நிறைவேறின. சாவுக்குரிய காரணம் எதுவும் அவரிடம் இல்லாதிருந்தும், அவரைக் கொல்ல அவர்கள் பிலாத்திடம் கேட்டார்கள். மறைநூலில் அவரைப்பற்றி எழுதியுள்ள அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தார்கள். பின்பு அவரைச் சிலுவையிலிருந்து இறக்கிக் கல்லறையில் வைத்தார்கள். ஆனால் இறந்த அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார். அவர் கலிலேயாவிலிருந்து தம்முடன் எருசலேம் வந்தவர்களுக்குப் பல நாள்கள் தோன்றினார். அவர்கள் இப்போது அவர்தம் சாட்சிகளாக மக்கள் முன் விளங்குகின்றார்கள். இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக மூதாதையருக்கு அளித்த வாக்குறுதியை அவர்கள் பிள்ளை களாகிய நமக்கென நிறைவேற்றினார். இதுவே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி. இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில், ‘நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்’ என்று எழுதப்பட்டுள்ளது.”

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: நீரே என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.
திருப்பாடல்கள் 2: 6-7. 8-9. 10-11 (பல்லவி: 7)

6 என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தினேன். 7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; ‘நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். - பல்லவி

8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன். 9 இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்’. - பல்லவி

10 மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்; பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள். 11 அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்! அவர்முன் அகமகிழுங்கள்! - பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 14: 6
அல்லேலூயா, அல்லேலூயா! "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்’ என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்.” தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” என்றார். இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?"

தானும் தான் வாழும் சமூகமும் அழிவதற்குக் காரணம் சுயநலம். எனக்கு என்ன லாபம். எனக்கு என்ன தருவார்கள். நானும் என்னுடையவர்கள் மட்டுமே வாழ வேண்டும், வளர வேண்டும். இந்தச் சுயநலத்திற்குச் அறுசுவை சேர்ப்பதாக அமைந்துவிடுகிறது பணம் அதோடு சேரும்போது. பணமும் சுயநலமும் எந்த பழி பாவத்திற்கும் தயாராகிறது. பணத்திற்காக, சுயநலத்திற்காக, பெற்ற தாயை, வளர்த்து உருவாக்கிய தகப்பனை, உருதுணையாய் இருக்கும் உடன்பிறப்பை ஒதுக்க ஒடுக்க ஒழிக்க மிகச் சாதாரணமாக முன்வரும் மகன்கள் இல்லையா! பணத்திற்காக பதவிக்காக பாதுகாப்பிற்காக அடுத்தவனை விலைபேசி,தான் விலைபோகும் எட்டப்பன்கள் இல்லையா காட்டிக்கொடுத்தவன் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. சுயநலவாதி சுயம் கண்டதாகச் சான்று இல்லை. பணத்திற்காக பண்பை, பண்பாட்டை, பாசத்தை பரிதவிக்கவிட்டவன் பாராண்டதாக பாரம்பரியம் இல்லை. கூட இருந்து குழி பறிக்கும் குள்ள நரிகள் கோட்டைகட்டிய கதை இல்லை.முதுகில் குத்தியதால் முகவரிபெற்றவர் இல்லை. சந்தர்ப்பவாதிகள் சரித்திரம் படைத்தற்கான அறிகுறிகளே இல்லை. ஆனால் காட்டிக்கொடுத்தவன் காட்டிக்கொடுக்கப்பட்டான், கொல்லப்பட்டான் என்ற செய்திகள் பல பல. விலை பேசியவன் விலைபோனான் என்ற செய்திகள் சகஐம்.சுயநலவாதி, சந்தர்ப்பவாதி தன்னையே அழித்துக்கொண்டான், தற்கொலை செய்துகொண்டான் என்ற நிகழ்வுகள் நிஐம். காட்டிக்கொடுத்து சொத்து செல்வம், பெயர் புகழ், குவித்தவன் யாருமில்லை. இதனால் வாழ்ந்தவனும் இல்லை. மாறாக கூடி குவித்து இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்..

மன்றாட்டு:

எங்களை உமது மாட்சியின் பங்குதாரர்களாக அழைக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நீர் உமது உடலை இறைவனின் ஆலயமாக மாற்றியதுபோல, நாங்களும் எங்கள் உடலை உம்மை மாட்சிமைப்படுத்த பயன்படுத்துவோமாக ! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.