யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் செவ்வாய்க்கிழமை
2024-09-17




முதல் வாசகம்

நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 12-14. 27-31

சகோதரர் சகோதரிகளே, உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது. நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள். அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டாவது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்ல செயல் செய்வோர்களையும், அதன்பின் பிணிதீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணை நிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப் பேச்சுப் பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார். எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்ல செயல் செய்பவர்களா? இல்லை. எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே! எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆர்வமாய் நாடுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் மக்கள் நாம், அவர் மேய்க்கும் ஆடுகள்
திருப்பாடல் 100: 1-2. 3. 4. 5

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! பல்லவி

4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! பல்லவி

5 ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 11-17

அக்காலத்தில் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, ``அழாதீர்'' என்றார். அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், ``இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு'' என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்சமுற்று, ``நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்'' என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நான் யார் ?

‘நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?’ என்னும் இயேசுவின் கேள்வி இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கிறித்தவர்கள், இயேசுவின் சீடர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களே, அவரைப் பல்வேறு பார்வைகளில் பார்க்கிறார்கள் என்பது கொஞ்சம் வியப்பூட்டும் செய்திதான். சிலர் இயேசுவை அற்புதங்களும், அருங்குறிகளும் செய்பவராகப் பார்க்கிறார்கள். பெந்தகோஸ்தே சபைகளுக்குச் செல்பவர்கள், அருங்கொடை ஆர்வலர்கள் போன்றோர் இதில் அடங்குவர். இன்னும் சிலர் அவரை சடங்குகளிலும், வழிபாடுகளிலும் சிறைபட்டவராகப் பார்க்கின்றனர். பெரும்பாலான மரபுக் கிறித்தவர்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒருசிலர் இயேசுவைத் தீவிர சமூகப் போராளியாகப் பார்க்கின்றனர். மக்கள் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்கள் இப்பிரிவில் உள்ளனர்.

இத்தகைய பார்வைகள் அனைத்துமே உண்மையைக் கொண்டுள்ளவை, ஆனால் குறைவானவை, முழுமையற்றவை என்பதை நாம் உணரவேண்டும். விவிலியம் காட்டும் இயேசு பன்முகத் தன்மை கொண்டவர். அவர் கடவுளின் மகனாகிய மெசியா, ஆனால் மனித இயல்பில் பாவம் தவிர மற்ற அனைத்திலும் நம்மைப் போன்றவர். நோயாளர்கள்மீது பரிவு கொண்டு, குணமாக்கியவர். ஆனால், தீமைகளைக் கண்டு சினந்து, சாட்டை எடுத்தவர். இத்தகைய முழுமையான, பன்முகத் தன்மை கொண்ட இயேசுவை நம் ஆண்டவராகவும், வழிகாட்டியாகவும், மீட்பராகவும் அறிக்கை இட்டு போற்றுவோம்.

மன்றாட்டு:

இயேசுவே, நீரே எங்கள் ஆண்டவர், நீரே இறைமகன், நீரே எங்கள் மீட்பர், நீரே வாழும் கடவுளின் மகன். உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போல நாங்களும் பன்முகத் தன்மை கொண்டவர்களாகவும், சூழ்நிலைக்கேற்றவாறு செயல்படுபவர்களாகவும் வாழ எங்களுக்கு அருள்தாரும்;. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.