திருவழிபாடு ஆண்டு - B 2024-11-24
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா
(இன்றைய வாசகங்கள்:
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம். 7:13-14,பதிலுரைப்பாடல்: திருப்பாடல்: 16: 5,8,
9-10. 11,திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம். 1:5-8,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 33-37)
திருப்பலி முன்னுரை
இயேசுவே ஆண்டவர்; கிறிஸ்துவே நம் அரசர் என்று முழக்கமிட்டு, நமது விசுவாச அறிக்கையை உறுதிப்படுத்த, பொதுக்காலத்தின் இறுதிவாரமான 34ஆம் ஞாயிறு வழிபாட்டுக் கொண்டாட்டமானது நம்மை வரவேற்கின்றது. ‘கடவுள் நிலையில் இருந்த அவர் நமக்காக அடிமையானார்’ என்று திருவிவிலியத்தில் வாசிக்கின்றோம். நமக்காக அனைத்தையும் துறந்தவரை நாம் எதற்காகப் பேரரசர் என்று அழைக்க வேண்டும்? இதற்கான காரணம் என்ன? முதல் உலகப்போர் முடிவுற்ற நேரத்தில், உலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, ‘எங்கள் நாடு தான் சிறந்தது, நாங்கள்தான் உயர்ந்தவர்கள், வலிமையானவர்கள்’ என்று கூறி, மீண்டும் போர் மற்றும் வன்முறையை உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்தார்கள். இத்தருணத்தில்தான் திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் அவர்கள், ‘மனித சக்திகளுக்கும், அதிகாரங்களுக்கும் ஓர் எல்லையிருக்கிறது; ஆனால், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆட்சிக்கும், அதிகாரத்திற்கும் எல்லையில்லை; ஏனெனில், அவர் பேரரசர், அரசர்களுக்கெல்லாம் அரசர். முடிவில்லா ஆட்சி புரியும் இப்பேரரசரில் நம்பிக்கை கொண்டு இவரைக் கொண்டாடி வழிபடுவோம்’ என்று 1925-ஆம் ஆண்டு தனது சுற்று மடல் வழியாகச் சிதறிச் சென்ற மக்களை மீண்டும் ஒன்றுசேர்த்தார். இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு அன்றிலிருந்து இன்றுவரை கிறிஸ்து அரசர் பெருவிழாவினை நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். அமைதியின் அரசராம், இரக்கத்தின் அரசராம், அன்பின் அரசராம் கிறிஸ்து அரசரின் ஆட்சியில் பங்கு பெற்றிட இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசகம்
மானிட மகனின் ஆட்சியுரிமை என்றுமுளதாகும்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம். 7:13-14
அந்நாட்களில் இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்: இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்: அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார்.ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன: எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்: அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்: அதற்கு முடிவே இராது: அவரது அரசு அழிந்து போகாது.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்: அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்!
பதிலுரைப்பாடல்: திருப்பாடல்: 16: 5,8,
9-10. 11
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்: அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்: ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார்: பல்லவி
பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்: அது அசைவுறாது. உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றள்ளது: நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். பல்லவி
உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை: ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். பல்லவி
இரண்டாம் வாசகம் மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். நம்மைக் குருக்களாக ஏற்படுத்தினார். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம். 1:5-8இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி: இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்: மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்: தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென்.இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்: அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்: அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை ஆமென்! "அகரமும் னகரமும் நானே " என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே.. - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 33-37
அக்காலத்தில், பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், "நீ யூதரின் அரசனா? " என்று கேட்டான்.இயேசு மறுமொழியாக, "நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா? " என்று கேட்டார்.அதற்கு பிலாத்து, "நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்? " என்று கேட்டான்.இயேசு மறுமொழியாக, "எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல " என்றார். பிலாத்து அவரிடம், "அப்படியானால் நீ அரசன்தானோ? " என்று கேட்டான். அதற்கு இயேசு, "அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்: இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர் " என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அரசரே எம் இறைவா! திருஅவையில் திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரை அனைவரையும் உம்மிடம் அர்ப்பணிக்கின்றோம். அவர்களின் ஆன்மீக வாழ்வை நீர் நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
அரசரே எம் இறைவா! நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் உமது மதிப்பீடுகளைப் பின்பற்றி நற்பணி செய்ய வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
அரசரே எம் இறைவா! எமது பங்கிலுள்ள குழந்தைகளை உம்மிடம் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் உம்மைப் புரிந்து, உம் வார்த்தைகளை வாழ்வில் கடைப்பிடித்து வாழ வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
அரசரே எம் இறைவா! பெற்றோரின் சொற்படி நடவாமல் கால்போன போக்கில் வாழும் பிள்ளைகளை உம்மிடம் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் உறுதியான ஒழுக்க முறைகளைப் பின்பற்றுபவர்களாக வாழ வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
அரசரே எம் இறைவா! எமது பங்கிலுள்ள ஒவ்வொருவரும் இறைப்பக்தியில் தங்களை ஈடுபடுத்தி, முழுமனதுடன் திருப்பலியில் பங்கேற்க வேண்டிய அருளைப் பொழிய வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
வாழ்வானவரே இறைவா! பணத்தாலும், பதவிப்பித்தாலும் மண்ணுலக வாழ்வே நிரந்தரம் என வாழாமலும், இவ்வுலக கவலைகளினால் உயிரை மாய்த்துக் கொள்ளாமலும், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் நாமும் இறந்து, உயிர்பெற்று இறைவனை முகமுகமாய் தரிசிக்கின்ற வாழ்வுக்காக இன்றைய வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்ற வரம்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
காத்து பராமரிக்கும் அன்பு இறைவா! இளையோரின் நல்வாழ்விற்காகவும், அவர்கள் இளமையில் ஆன்மீகத்திலும், சமூகத்திலும் நல்மனப்பாங்குடன் ஈடுபட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு பிலாத்துவை நோக்கி, 'அரசன் என்று நீர் சொல்கிறீர்.
உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்;
இதற்காகவே உலகிற்கு வந்தேன்' என்றார்'' (யோவான் 18:37)
வழிபாட்டு ஆண்டின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஆங்கில ஆண்டு மாதங்களாகப் பிரிக்கப்படுகிறது. ஆண்டின் தொடக்கம் ஜனவரி மாதம். நிறைவு டிசம்பர் மாதம். இதே போல, திருச்சபையில் வழிபாட்டு ஆண்டு இருக்கிறது. இதனை காலங்களாகப் பிரிக்கிறார்கள். திருவருகைக்காலம், பொதுக்காலம், தவக்காலம் மற்றும் பாஸ்கா காலம். வழிபாட்டு ஆண்டின் தொடக்கம் திருவருகைக்காலம். நிறைவு வாரம், கிறிஸ்து அரசர் பெருவிழா வாரம். இதுதான் பொதுக்காலத்தின் நிறைவாகவும், வழிபாட்டு ஆண்டின் கடைசி வாரமாகவும் இருக்கிறது. எதற்காக கிறிஸ்து அரசர் பெருவிழா, திருவழிபாட்டு ஆண்டின் கடைசி வாரத்தில் கொண்டாடப்படுகிறது? கிறிஸ்துவின் மகிமையை திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் இதற்கு காரணம். அதேபோல, திருவருகைக்காலங்களில் சுட்டிக்காட்டப்படும் இயேசுவின் வருகை மற்றும் உலகத்தின் இறுதிநாட்கள் போன்றவற்றையும், இதில் நாம் சிறப்பாக புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். இறைவன் தான் நமக்கு என்றும் அரசர், அவருக்கே என்றென்றும் மகிமையும், ஆராதனையும், புகழ்ச்சியும் என்பதை உறுதிப்படுத்த வந்த விழா தான், இந்த கிறிஸ்து அரசர் பெருவிழா. இஸ்ரயேல் மக்களுக்கு, யாவே இறைவனைத்தவிர வேறு யாரும் அரசர் கிடையாது. அவர்களை ஏற்றுக்கொள்வதும் கிடையாது. இறைவன் ஒருவரே அரசர். அவரைத்தவிர வேறு யாரையும், அந்த இடத்தில் வைப்பது கிடையாது. அதே போல, இந்த விண்ணகம் மற்றும் மண்ணகத்தின் அரசர் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. அவர் சாவையே வெற்றி கொண்டு நமக்கெல்லாம் வாழ்வு கொடுத்தவர். அந்த வாழ்வை நமக்குக் கொண்டு வந்து, மீட்பராக, அரசராக இந்த வரலாற்றிலும் அவர் நிலைகொண்டிருக்கிறார்.
நாம் அனைவருமே அவரால் வாழ்வு பெற்றுள்ளோம். அவரது தியாகத்தால் மீட்பு பெற்றுள்ளோம். அந்த வாழ்வுக்கு தன்னையே அவர் தன்னுடைய உடலையும், இரத்தத்தையும் விலையாகக் கொடுத்தார். அத்தகைய அரசரை பெற்றுள்ள நாமும், நமது வாழ்வில், மற்றவர்களுக்காக, நம்மையே இழக்க முன்வருவதற்கு, இந்த விழா நமக்கு அழைப்புவிடுக்கிறது.
மன்றாட்டு:
எம் இறைவா, எம் அரசே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். உம்மை எம் தலைவராக, ஆண்டவராக, அரசராக ஏற்று வழிபடுகிறோம். நீர் எங்களுக்குக் கற்றுத் தந்த, மாதிரி காட்டிய தலைமைப் பண்பை ஏற்று, பிறர்க்குப் பணிவிடை புரிந்து தலைவர்களாய் விளங்க அருள்தாரும் உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
|