யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
2024-12-24

கிறிஸ்துப்பிறப்பு நள்ளிரவுத் திருப்பலி

(இன்றைய வாசகங்கள்: எசாயா ஆகமத்திலிருந்து வாசகம் 9:1-6,திருப்பாடல் 6(95):1-2a.2b-3.11-12.13.,திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2:11-14. ,புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:1-14)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

அன்பிற்கினியவர்களே! கிறிஸ்து பிறப்பின் பெருவிழா நல்வாழ்த்துக்களை கூறி அனைவரையும் கிறிஸ்துப்பிறப்பின் ஆடம்பர திருப்பலி கொண்டாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம். .

கிறிஸ்மஸ் இரவு மகிமையின் இரவு ,அந்த மகிமையை வானதூதர்கள் பெத்லகேமில் பறைசாற்றினர் .

கிறிஸ்மஸ் இரவு, மகிழ்ச்சியின் இரவு ,அந்த மகிழ்ச்சியை வானதூதர்கள் இடையர்களுக்கு அறிவித்தனர் ..

கிறிஸ்மஸ் இரவு, விடுதலையின் இரவு, அந்த விடுதலை தான் விண்ணகம் விட்டு மண்ணகம் வந்த கிறிஸ்து ..

இன்று விடியலின் திருநாள், வீடுவீடாய் கதவை தட்டியும் கிடைக்காத இடம் இறுதியில் கிடைத்தது மாடடைக் குடிலில். இந்த மாடடைக் குடிலும் குழந்தையேசுவின் தொட்டிலானது , விடியலும் நம் வசமானது. விண்ணிலிருந்து வந்த அந்த விடியலை கொண்டாடவே நடுச்சாமம் கண்விழித்து விடியும் வரை வண்ண விளக்குடன் மகிழ்வுடன் இருக்கின்றோம். அன்று கிறிஸ்து பிறப்பார் என்று மக்கள் ஏங்கி இருந்தனர், இன்று நாம் கிறிஸ்து பிறந்துவிட்டார் என்று மகிழ்ந்து இருக்கின்றோம். கிறிஸ்து பிறப்பை ஆண்டாண்டு காலமாய் கொண்டாடி மகிழும் நாம் எப்போது கிறிஸ்துவாக பிறக்கப்போகின்றோம்? விடுதியில் இடம் இல்லை என்று புறக்கணிக்கப்படும் இயேசு மரி சூசை போன்ற குடும்பங்களை எப்போது அடையாளம் கண்டுகொள்ளப்போகிறோம்? கிறிஸ்மஸ் விழாவினை கொண்டாடுவதால் நம் வீட்டில் கிறிஸ்து பிறந்துவிட்டார் என்று அற்பமாக எண்ணாமல், கிறிஸ்துவின் விழுமியங்களான மகிழ்ச்சி, எளிமை, ஏழ்மை ,அமைதி, பகிர்வு போன்றவற்றை நம் அடையாளமாக்குவோம், கிறிஸ்துவாக பிறப்போம். பாலன் இயேசுவின் பிறப்பின் ஆசீர்வாதம் நம் பங்கில் முழுமையாக ததும்பட்டும், நம் வீடுகளில் அமைதி நிரம்பட்டும், நம் உள்ளங்களில் அவர் அருள் ஊற்றாய் பொங்கிவழியட்டும். இத்தகைய ஆசீரை குடும்பமாய் பெற்று வளமாய் வாழ தொடர்ந்து ஜெபிப்போம் இத்திருப்பலியில்................



முதல் வாசகம்

ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்:
எசாயா ஆகமத்திலிருந்து வாசகம் 9:1-6

ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது; முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார். காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்; அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர். அமளியுற்ற போர்க்களத்தில் போர்வீரன் அணிந்திருந்த காலணிகளும், இரத்தக் கறைபடிந்த ஆடைகள் அனைத்தும் நெருப்புக்கு இரையாக எரிக்கப்படும். ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ "வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்" என்று அழைக்கப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
திருப்பாடல் 6(95):1-2a.2b-3.11-12.13.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.

அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.

விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.

அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார்.

இரண்டாம் வாசகம்

நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது.
திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2:11-14.

மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:1-14

அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், ' அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.12 குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் ' என்றார். உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, ' உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! ' என்று கடவுளைப் புகழ்ந்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

மீட்பின் ஒளியாம் இறைவா!

அமைதியின் அரசராக எம் மண்ணில் பிறந்த கிறிஸ்துவின் அமைதியை இவ்வுலகில் எத்திக்கும் பரப்ப சிறந்த பணியாளர்களாக மாற்ற எம் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவியர் அனைவரையும் இறை அமைதியால் நிரப்பி நிறை மகிழ்ச்சியை தந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம் .

மீட்பின் ஒளியாம் இறைவா!

இம்மானுவேலனாக எம் மத்தியில் பிறந்த பாலகன் இயேசுவின் உடனிருப்பு இன்று கிறிஸ்மஸ் விழாவினை குதூகலமாக கொண்டாடும் எங்கள் அனைவரின் வாழ்விலும் உடனிருக்கவும் இன்ப துன்ப நேரங்கள், வேதனை சோதனை வேளைகள் ,பணிச்சுமை ,கடன் சுமை, பொருளாதார சுமை போன்ற இக்கட்டுககளில் நாங்கள் இம்மானுவேலனின் துணையினால் வழிநடத்தப்பட இறைவா மன்றாடுகின்றோம்.

மீட்பின் ஒளியாம் இறைவா!

அஞ்சாதீர்கள் ! உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார் என்று இடையூர்களுக்கு அறிவிக்கப்பட்ட மகிழ்வின் நற்செய்தி துன்பங்களோடு போராடும் அனைவருக்கும், குறிப்பாக கிறிஸ்தவ விசுவாசத்திற்காக சித்திரவதைக்கு உள்ளாகின்ற விசுவாசிகளுக்கு இன்றைய கிறிஸ்மஸ் மகிழ்வின் விழாவாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மீட்பின் ஒளியாம் இறைவா!

ஏழை எளிமை வாழ்வை தேர்ந்துகொண்ட கிறிஸ்துவின் ஆட்சி எம் நாட்டிலும் எம் பங்கிலும் எம் குடும்பங்கலும் நிலவவும் கிறிஸ்மஸ் பெருவிழாவின் மையமாக விளங்குகின்ற பகிர்தல் , புரிதல் , மகிழ்தல் போன்ற கிறிஸ்துவின் மதிப்பீடுகள் இன்றைய திருப்பிலியில் பங்கெடுக்கும் எங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரகாசிக்க வரம் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்'' (யோவான் 1:14)

கடவுள் மனிதரிடமிருந்து வேறுபட்டவர் என்றும் மனிதரை விட்டு வெகு தொலையில் வாழ்பவர் என்றும் சிலர் உருவகிப்பதுண்டு. கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் கடவுள் மனிதரை விட்டு அகன்று நிற்பவர் அல்ல. மனிதரைப் படைத்தவர் கடவுள் என்பதால் அவர் நம்மோடு நெருங்கிய விதத்தில் இணைந்துள்ளார். ஆனால், கடவுள் அதைவிடவும் மேலாகத் தம்மை மனிதரோடு ஒன்றித்திட விரும்பினார். கடவுளே மனிதராக மாறிட விழைந்தார். இதை நாம் ஒரு மறைபொருள் என அழைக்கிறோம். இதன் முழுப் பொருளும் நமக்கு ஒருநாளும் தெளிவாகாது என்றாலும் கடவுள் மனிதராக மாறிய உண்மையை விவிலியம் தெளிவாக எடுத்துரைக்கிறது. குறிப்பாக யோவான் நற்செய்தி இதை உணர்த்துகிறது. கடவுளோடு எக்காலத்திலும் இணைந்திருந்த வாக்கு காலம் நிறைவேறியபோது மனிதராக மாறினார் என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் செய்தி. நம்மைத் தேடிவந்த கடவுளை நாம் அடையாளம் காண வேண்டும். மனிதர் ஆன வாக்கு ''நம்மிடையே குடிகொண்டார்'' என்பதால் அவருடைய உடனிருப்பு ஒரு தொடர் நிகழ்வாகிறது. கடவுள் நம்மிடையே குடிகொண்டிருக்கின்ற உண்மையிலிருந்து சில முக்கிய விளைவுகள் பிறக்கின்றன. கடவுளை விட்டு மனிதர் அகன்றிருப்பதில்லை என்பதால் அந்த உடனிருப்பை நாம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்திட வேண்டும். அந்த உணர்வோடு நம் செயலும் ஒருங்கிணைந்து சென்றால் கடவுளின் விருப்பம் நமது விருப்பமாக மாறும். அப்போது நமது செயலும் விருப்பும் ஒன்றாக இணைந்த விதத்தில் நம் வாழ்வும் பொருள்பொதிந்ததாக உருப்பெறும். மனிதரான கடவுள் தம்மை ஒவ்வொரு மனிதரோடும் இணைத்துக்கொண்ட உண்மை நம்மை வழிநடத்த வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் உடனிருப்பை எங்கள் உள்ளத்தில் உணர்ந்திட அருள்தாரும்.