மூன்றாவது திருவழிபாடு ஆண்டு 2024-12-25
(இன்றைய வாசகங்கள்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52:7-10,திருப்பாடல் 98: 1. 2-3a. 3cd-4. 5-6,எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1:1-6,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:1-18)
திருப்பலி முன்னுரை
நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள் அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள்!
அன்புமிக்க சகோதரரே! சகோதரிகளே! நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய
உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கின்ற நம் இறைத் தந்தையின் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி, நம் மீட்பரும் ஆண்டவருமான இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பு விழாப் பெருமகிழ்ச்சித் திருப்பலியில் கலந்து செபிக்க வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
தம் இரக்கத்தை முன்னிட்டு கடவுள் நம்மை மீட்டார். ‘ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்’ என்றும் ‘தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்’ என்றும் இனி ‘கைவிடப்படாத நகர்’ என்றும் பெயர் பெறுவாய்.என்னும் இறைவனின் வாக்குறுதிகள் அவலங்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு பெரும் ஆறுதல் தரும் செய்தியாக இருக்கின்றன. அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம்
நிகழ்ந்திருந்தது என்னும் இறைவாக்கும், நமக்குத் தரப்படுகின்ற இறைவனின்
வாக்குறுதிகள் நிறைவேறியே தீரும் என்ற உண்மையை அழுத்திக்
கூறுகின்றன.ஆண்டவர் நம்மை ஆட்சி செய்கின்றபோதுதான் நாம் முழுமையான விடுதலையைப் பெற்றுக் கொள்ளுகின்றோம் என்பதுதான் இன்றைய முக்கிய செய்தியாக இருக்கின்றது.
இச் செய்திகளை நம் மனத்தில் இருத்திக்கொண்டு, இவ்வுலகில் வாழும் நாம் கடவுளுக்கு உகந்ததோர் வாழ்க்கை வாழவும், எப்பொழுதும் இயேசுவை
அயலவரிலும், அருட்சாதனங்களிலும் கண்டு செயல்படுகின்றவர்களாகவும் வாழ வரம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் செபிப்போம்.
முதல் வாசகம்
மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52:7-10
நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, "உன் கடவுள் அரசாளுகின்றார் " என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்: அவர்கள் அக்களிப்பு ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்: ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்: ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்: எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார். பிறஇனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்: மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.திருப்பாடல் 98: 1. 2-3a. 3cd-4. 5-6
திருப்பாடல் 98: 1. 2-3a. 3cd-4. 5-6
1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி
2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3a
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி
3cd
உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி
5
யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.
6
ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். - பல்லவி
இரண்டாம் வாசகம் கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1:1-6பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்: இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்: இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப் படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். இவ்வாறு இறைமகன் வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார். ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது "நீ என் மைந்தர்: இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன் " என்றும், "நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார் " என்றும் எப்போதாவது கூறியதுண்டா? மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, "கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக " என்றார். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே, வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:1-18
தொடக்கத்தில் வாக்கு இருந்தது: அவ்வாக்கு கடவுளோடு இருந்தது: அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது:வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.அனைத்தும் அவரால் உண்டாயின: உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.அவரிடம் வாழ்வு இருந்தது: அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது: இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்: அவர் பெயர் யோவான்.அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார்.அவர் அந்த ஒளி அல்ல: மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.+அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள். வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார். யோவான் அவரைக் குறித்து, "எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்" என உரத்த குரலில் சான்று பகர்ந்தார். இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
மீட்பின் ஒளியாம் இறைவா! அமைதியின் அரசராக எம் மண்ணில் பிறந்த கிறிஸ்துவின் அமைதியை இவ்வுலகில் எத்திக்கும் பரப்ப சிறந்த பணியாளர்களாக மாற்ற எம் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவியர் அனைவரையும் இறை அமைதியால் நிரப்பி நிறை மகிழ்ச்சியை தந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம் .
மீட்பின் ஒளியாம் இறைவா! இம்மானுவேலனாக எம் மத்தியில் பிறந்த பாலகன் இயேசுவின் உடனிருப்பு இன்று கிறிஸ்மஸ் விழாவினை குதூகலமாக கொண்டாடும் எங்கள் அனைவரின் வாழ்விலும் உடனிருக்கவும் இன்ப துன்ப நேரங்கள், வேதனை சோதனை வேளைகள் ,பணிச்சுமை ,கடன் சுமை, பொருளாதார சுமை போன்ற இக்கட்டுககளில் நாங்கள் இம்மானுவேலனின் துணையினால் வழிநடத்தப்பட இறைவா மன்றாடுகின்றோம்.
மீட்பின் ஒளியாம் இறைவா! அஞ்சாதீர்கள் ! உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார் என்று இடையூர்களுக்கு அறிவிக்கப்பட்ட மகிழ்வின் நற்செய்தி துன்பங்களோடு போராடும் அனைவருக்கும், குறிப்பாக கிறிஸ்தவ விசுவாசத்திற்காக சித்திரவதைக்கு உள்ளாகின்ற விசுவாசிகளுக்கு இன்றைய கிறிஸ்மஸ் மகிழ்வின் விழாவாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மீட்பின் ஒளியாம் இறைவா! ஏழை எளிமை வாழ்வை தேர்ந்துகொண்ட கிறிஸ்துவின் ஆட்சி எம் நாட்டிலும் எம் பங்கிலும் எம் குடும்பங்கலும் நிலவவும் கிறிஸ்மஸ் பெருவிழாவின் மையமாக விளங்குகின்ற பகிர்தல் , புரிதல் , மகிழ்தல் போன்ற கிறிஸ்துவின் மதிப்பீடுகள் இன்றைய திருப்பிலியில் பங்கெடுக்கும் எங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரகாசிக்க வரம் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|