யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2025-03-02

(இன்றைய வாசகங்கள்: சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 27: 4-7,பதிலுரைப்பாடல்: திபா: 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி:1a),திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்: 15:54-58,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 6: 39-45)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

அன்பிற்கினியவர்களே ! பொதுக்காலம் 8 - ஆம் ஞாயிறு திருவழிபாடு, நம் பார்வை, சிந்தனை, சொல், செயல் - இவற்றினை சீர்தூக்கிப் பார்க்க அழைக்கின்றது. பார்வை சரியானால், பேச்சும் சரியாகும். சிந்தனை சரியாக இருந்தால், செயல்களும் சரியாக இருக்கும். எண்ணங்கள் தான் வாழ்க்கையை வண்ணமயமாக்குகின்றது - என்பது பல உளவியல் அறிஞர்களின் கூற்று. இக்காலத்தில் நேர்மறை சிந்தனைகளை பற்றி அதிகம் கேட்கிறோம் வாசிக்கின்றோம். இதைத் தான் இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் நமக்கு கற்றுக்கொடுக்கின்றார். நம் பார்வையை சரிசெய்ய வேண்டும். நம் பேச்சில் கவனமுடன் இருக்கவேண்டும். நம் செயல்கள் நல்ல கனி கொடுக்கும் மரமாக வேண்டும். 'பிறரிடம் எப்போதும் குறைகளை பார்த்துக் கொண்டே இருந்தால் அவர்களை அன்பு செய்ய நமக்கு நேரம் இருக்காது" - என்கிறார் புனித அன்னைதெரசா . பிறருடைய குறைகளை எளிதில் அடையாளம் காண்கின்ற நாம், பல வேளைகளில் நம் குறைகளை மறந்து விடுகின்றோம், மறைத்து விடுகின்றோம். பிறரது குறைகளை பெரிதுபடுத்தி தகாத சொற்களால் செயல்களால் அவர்களை அவமானப்படுத்திவிடுகின்றோம் . இப்படிப்பட்ட பரிசேய வாழ்வை இயேசு வன்மையாக கண்டிக்கின்றார். இன்றைய பலிபீடம் வந்திருக்கும் நாம் நம் சிந்தனையை உயர்ந்தவையாக்குவோம், பார்வையை நேர்மறையாக்குவோம் , பேச்சினை தூய்மையாக்குவோம் , செயல்களை நல்லவையாக்குவோம், எல்லாவற்றிலும் இயேசுவைப்போல வாழும் வரம் வேண்டி இத்திருப்பலியில் தொடர்ந்து ஜெபிப்போம்.



முதல் வாசகம்

பேசுவதற்கு முன்பே மனிதரைப் புகழாதே
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 27: 4-7

சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது; அவ்வாறே, மனிதரின் பேச்சில் மாசுபடிந்துவிடுகின்றது. குயவரின் கலன்களை, சூளை பரிசோதிக்கின்றது; மனிதரை, உரையாடல் பரிசோதிக்கப்படுகின்றது. கனி, மரத்தின் கண்காணிப்பைக் காட்டுகின்றது; சொல், மனிதரின் உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது. ஒருவர் பேசுவதற்குமுன்பே அவரைப் புகழாதே; பேச்சைக் கொண்டே அவரை அறிந்து கொள்ளலாம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று;
பதிலுரைப்பாடல்: திபா: 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி:1a)

ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. பல்லவி

நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். பல்லவி

அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்; 'ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர். பல்லவி

இரண்டாம் வாசகம்

இயேசுவின் வழியாக வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்: 15:54-58

அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்: ;சாவு முற்றிலும் ஒழிந்தது: வெற்றி கிடைத்தது.சாவே, உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே? ;பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே.ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!எனவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, உறுதியோடு இருங்கள்: நிலையாய் நில்லுங்கள். ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பிலி 2: 15-16 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 6: 39-45

மேலும் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: ;பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா? சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போலிருப்பர்.;நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ;உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா? ; என்று எப்படிக் கேட்க முடியும்? வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள்.அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும். ;கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை: நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை.ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை: முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவ+லத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வாழ்வே இறைவா!

நாங்கள் புறநிலைகளின் அடிப்படைகளை அளவீடுகளாகக் கொள்ளாமல், கிறிஸ்து இயேசுவைக் கொண்டு மனித மாண்புகளை மலரச் செய்ய வரம் அருள, இறைவா உம்மை வேண்டுகிறோம்.

எம் வாயில் சொற்கள் உருவாகுமுன்பே அதை அறிபவரே எம் இறைவா!

நாங்கள் இயேசுவை மட்டும் சிந்தை, சொல், செயலில் வைத்து அவரையே நினைக்கவும், பேசவும், செய்திடவும் வரம் தர, இறைவா உம்மை வேண்டுகிறோம்.

எழுச்சியூட்டும் இறைவா!

எங்களது தொய்வுகளில் நாங்கள் தோய்ந்து போகாமல், இறையுணர்வுகளில் அழுத்தம் பெற்று, இறைமகனின் இன்பப் பணியை இன்னும் அதிகமாகச் செய்திட அருள் தர இறைவா உம்மை வேண்டுகிறோம்.

வளமே இறைவா!

நல்மரமாம் கிறிஸ்துவில் நாங்கள் இணைந்து, நல்ல கனிகளை மட்டும் தந்திட வரம் அருள, இறைவா உம்மையே வேண்டுகிறோம்.

அமைதியின் தெய்வமே!

உக்ரேன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையே உள்ள போர் வன்முறை விரைவில் முடிவுக்கு வந்து அமைதியான சூழல் நிலவ, மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய முதல்வாசகம் கூறுவது போல்,

பேச்சில் நாங்கள் அனைவரும் கவனமும் எச்சரிக்கையும் கொண்டு, தற்பெருமைக்கும், தீய வார்த்தைகளுக்கும், பிறரை கெடுக்கின்ற வார்த்தைகளுக்கும் இடம் தராமல் உரையாடல்களில் உண்மைக்கும், நியாயத்திற்கும் ஏற்ற வார்த்தைகளை மட்டுமே பேசும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''முதலில் உங்கள் கண்களில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள்'' (லூக்கா 6:42)

நம்மில் இருக்கின்ற குறைகளை நாம் பெரிதாகக் கருதாமல் பிறருடைய குறைகளைப் பற்றியே அலட்டிக்கொள்வது ஓர் அனுபவ உண்மை. மனிதரிடையே நிலவும் இப்போக்கினை ஒரு சிறிய உவமை வழியாக விளக்குகிறார் இயேசு. நம் கண்கள் தெளிவாக இருந்தால்தான் நம் பார்வையும் தெளிவாக இருக்கும். கண்ணில் ஒரு சிறிய தூசு விழுந்தால்கூட கண் தானாகவே மூடிக்கொள்ளும்; அப்போது நம் பார்வையும் தெளிவு குன்றிவிடும். ஆனால் ஒரு பெரிய மரத்துண்டை எடுத்துக் கண்ணில் போட்டால் நம் பார்வை முற்றிலுமாக மறைந்துபோய் நாம் பார்வையற்றோர் போல ஆகிவிடுவோம். நமது பார்வை தெளிவாக இருக்கவேண்டும் என்றால் நம் கண் தெளிவாக இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி நம் கண்ணில் இருக்கின்ற மரக்கட்டையை அகற்றுவதுதான். நம் குறைகள் மரக்கட்டை போல இருந்து நம்மைப் பற்றிய உண்மையை நாம் உணராமல் இருக்கச் செய்துவிடக்கூடும். அதே நேரத்தில் பிறருடைய வாழ்வில் நிலவுகின்ற சிறுசிறு குறைகளை நாம் பெரிதுபடுத்துவதோடு கூட அவர்கள்மீது குறைகாணவும் தொடங்கிவிடுவோம். இதுவே பெரிய மரக்கட்டைக்கும் சிறிய துரும்புக்கும் இடையே உள்ள வேறுபாடு.

பிறரைத் திருத்துவதற்கு முன் நம்மில் என்ன மாற்றம் தேவைப்படுகிறது என நாம் கேட்டுப்பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். நம் குற்றங்களைத் திருத்தும்போது நாம் பிறருக்கும் ஒரு புதிய முன்மாதிரியாக மாறுவோம். அதைக் கண்டு அவர்களும் கடவுளிடம் திரும்புகின்ற வாய்ப்புப் பிறக்கலாம். எனவே, சகோதர அன்பின் ஒரு முக்கியமான அம்சம் நம் பகைவரையும் அன்புசெய்து, நம் சகோதரர் சகோதரிகளிடம் இன்னின்ன குறைகள் உள்ளன என்று சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்துவதற்குச் செய்யப்படுகின்ற முயற்சி ஆகும். குற்றம் காணும் போக்கினை நாம் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் நம் சகோதரர் சகோதரிகள் மன மாற்றம் பெற்று நல்மனிதராக மாறிட வேண்டும் என்னும் நோக்கத்தோடு அவர்களைத் திருத்திடவும் நாம் முயல வேண்டும். அப்போது சிறிய துரும்பைப் பெரிதுபடுத்தாமல், பெரிய மரக்கட்டையைக் கவனியாது விட்டுவிடாமல் நாம் தெளிந்த பார்வை உடைய மனிதராக மாறுவோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உண்மைநிலையை நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.