யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2025-03-09

(இன்றைய வாசகங்கள்: இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம். 26:4-10,பதிலுரைப்பாடல்: திபா: 91: 10-15,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10:8-13,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4:1-13)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

அன்பிற்கினியவர்களே! தவக்காலத்தின் முதல் ஞாயிறு திருப்பலி கொண்டாட்டம் சோதனையை வெல்ல அனைவரையும் அழைக்கின்றது.மனிதவாழ்வு சோதனைகள் நிறைந்தது. முதல் பெற்றோர் ஆதாம் ஏவாளில் தொடங்கிய சோதனை, இறைமகன் இயேசுவையும் விட்டுவைக்கவில்லை. நம்மில் பலருக்கு, ஏன்? கடவுள் எனக்கு மட்டும் அடுத்தடுத்து துன்பச் சோதனைகளை அனுப்புகிறார் என்ற அங்கலாய்ப்பும் வேதனையும் உண்டு. சோதனைகள் கடவுளிடமிருந்து வருபவை அல்ல, சோதனைகளைத் தருவது அலகை, அச்சோதனைகளைச் சந்திக்க நம்மை அழைத்துச் செல்வது தூய ஆவியார். சோதனைகளை சந்திக்க, கடவுள் நம்மை இழுத்துச் செல்வதில்லை, அழைத்துச் செல்கிறார் என்பதே இன்றைய நற்செய்தி கூறும் உண்மை. எல்லாவற்றையும் செய்யும் வல்லமை கொண்ட இயேசு சாத்தானின் அதிகாரத்திற்கு முன், தன் இறைவல்லமையை இறைவார்த்தையால் அடக்கத்துடன் வெளிப்படுத்துகிறார். தூய ஆவியின் துணையால் இயக்கப்படுகிறார். இறை வார்த்தையால் சாத்தானின் சோதனையை வெல்லுகிறார். அன்பு சகோதரமே! அன்றாடம் நாம் சந்திக்கும் பாவச் சோதனைகள் வருவதை தவிர்க்க முடியாது.அதனால் தான் பாவச் சோதனைகளிலிருந்து நம்மை விடுவிக்க இறைவனிடம் வேண்ட வேண்டும் என்று இயேசுவும் தன் சீடர்களுக்கு ஜெபிக்க கற்றுக்கொடுத்தார் . அடிக்கடி நாம் சந்திக்கின்ற பாவச் சோதனைகளையும், துன்பச் சோதனைகளையும் இக்கல்வாரி பலிபீடம் கொண்டுவருவோம். அவற்றினின்று ஆண்டவர் நம்மை விடுவித்தருள மன்றாடுவோம். தூய ஆவியின் தூண்டுதலால், அவரின் துணையால், சோதனைகளை வென்ற இயேசுவை முன்மாதிரியாகக் கொண்டு வாழ முயற்சிப்போம். அலகையை வென்ற ஆண்டவர் நம்மோடு - என்ற நம்பிக்கையில், சோதனைகளை மனவுறுதியோடு வெல்ல வரம் வேண்டி இப்பலியில் இணைவோம்.



முதல் வாசகம்

தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களினத்தின் விசுவாச அறிக்கை.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம். 26:4-10

மோசே மக்களை நோக்கிக் கூறியது, முதற்பலன் நிறைந்த கூடையை குரு உன் கையிலிருந்து எடுத்து, அதை உன் கடவுளாகிய ஆண்டவரது பலிபீடத்தின்முன் வைப்பார். நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது: 'நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அன்னியராய் இருந்தார். ஆனால் அங்கேயே பெரிய, வலிமைமிகு, திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார். எகிப்தியர் எங்களை ஒடுக்கினார்: துன்புறுத்தினர்: கடினமான அடிமை வேலைகளை எங்கள்மீது சுமத்தினர். அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்டவர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியையும் கண்டார். தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டிவந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார். எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனைக் கொண்டு வந்துள்ளேன் ' என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: துன்ப வேளையில் என்னோடு இருந்தருளும் ஆண்டவரே.
பதிலுரைப்பாடல்: திபா: 91: 10-15

உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். ஆண்டவரை நோக்கி, ;நீரே என் புகலிடம்: என் அரண்: நான் நம்பியிருக்கும் இறைவன் ; என்று உரைப்பார். பல்லவி

ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது: வாதை உம் கூடாரத்தை நெருங்காது. நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். பல்லவி

உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வர். சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்: இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன்பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். பல்லவி

'அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்: அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்: அவர்கள் என்னை நோக்கி மன்றாடும் போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்: அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்: அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்: பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவில் விசுவசிக்கிறவனுக்குரிய விசுவாச அறிக்கை.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10:8-13

சகோதரர் சதோதரிகளே, மறைநூலில் சொல்லியிருப்பது இதுவே: 'வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது: உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது. ' இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும். ஏனெனில், 'இயேசு ஆண்டவர் ' என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்: வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். ஏனெனில், 'அவர் மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார் ' என்பது மறை நூல் கூற்று. இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை: அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். 'ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர் ' என்று எழுதியுள்ளது அல்லவா?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மத் 4: 4bm
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4:1-13

அக்காலத்தில் இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார். அப்பொழுது அலகை அவரிடம் , ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும் ' என்றது. அதனிடம் இயேசு மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார். பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி, அவரிடம், 'இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன: நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும் ' என்றது. "இயேசு அதனிடம் மறுமொழியாக, ''உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக"" என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார்." பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, 'நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்: 'உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் ' என்றும் 'உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றது. "இயேசு அதனிடம் மறுமொழியாக, 'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்றும் சொல்லியுள்ளதே " என்றார். அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எங்கள் கடவுளாகிய ஆண்டவரே!

உமது அஞ்சத்தக்கப் பேராற்றலை, அடையாளங்களை, அருஞ்செயல்களை நாங்கள் கண்டு, உம்மைப் பணிந்து தொழுதிட வரம் அருள இறைவா, உம்மை வேண்டுகிறோம்.

நலன்களின் நாயகமே இறைவா!

இயேசுவே ஆண்டவர் என நாங்கள் வாயார அறிக்கையிடத் தடையாயிருக்கும் அனைத்து மேட்டிமைகளையும் தகர்த்தெறிந்துவிட, இதனால் மீட்பைப் பெற்றுக்கொள்ள அருள் தர இறைவா, உம்மை வேண்டுகிறோம்.

தந்தையே இறைவா!

உமது ஆவியை தடையற நாங்கள் பெற்று, எம் மேன்மையும், மாண்புமான இயேசு இறைவனை இன்னும் உறுதியுடன் பற்றிக்கொள்ள அருள் புரிய இறைவா உம்மை வேண்டுகிறோம்.

இறைவா!

உம் திருமகன் ஆவியால் எப்படி ஆட்கொள்ளப்பட்டாரோ, அதுபோல் நாங்களும் ஆவியால் சூழப்பட்டு, எங்கள் கண்ணும் கருத்தும் இயேசுவிலேயே நிலைபெற்றிட அருள் தர இறைவா உம்மை வேண்டுகிறோம்.

தந்தையே!

தீமைகளால் வேதனைப்படும் நாங்கள் தனித்துவிடப்படவில்லை என்பதை உணரவும் உம் திருமகனைப் போல் நாங்களும் சோதனைகளை உம் துணைகொண்டு வெல்வோம் என்ற உறுதியை அருளிடவும் உம்மை வேண்டுகிறோம்.

மனமாற்றத்தை விரும்புபவரே எம் இறைவா!

சொல்லிலும் செயலிலும் நேர்மையைக் கடைபிடித்து, நாங்கள் எடுக்கின்ற தவமுயற்சிகளில் உண்மையான மனமாற்றத்தையும், ஆன்மீக எழுச்சியையும் கண்டுணர எங்களுக்கு உமதருள் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

இயேசுவின் சோதனைகள் !

நமக்கு நன்கு அறிமுகமான இயேசுவின் மூன்று சோதனைகளையும், அந்த சோதனைகளிலிருந்து இயேசு எப்படி மேற்கொண்டார் என்பதையும் இன்று திருச்சபை நமக்கு சிந்தனைப் பொருளாகத் தருகிறது. மனிதராகப் பிறந்த அனைவரும் சோதனைக்குட்பட வேண்டும் என்று காட்டத்தான், பாவமே அறியாத இறைமகனாம் இயேசுவும் சோதனைகளைச் சந்திக்க முன்வந்தார். உடல் தேவைகளை நிறைவு செய்தல், உலகப் பொருள்கள்மீது பற்றுகொள்தல், இறைவனுக்கு எதிராகச் செயல்படுதல் என்னும் மூன்று தளங்களில் இயேசு சோதிக்கப்பட்டார். நமக்கும் இந்த மூன்று தளங்களிலும் சோதனைகள் எழும்.

இச்சோதனைகளை வெல்ல இயேசு கையாண்ட ஆயுதம் என்ன? இறைவார்த்தைதான்! மூன்று சோதனைகளிலும் அவர் மறைநுhலை மேற்கோள் காட்டினார். அந்த வார்த்தைகளைச் செயல்பாடாக்கினார். இவ்வாறு, தந்தை இறைவன்மீது அவருக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார். நாமும் நமது சோதனைகளை வெல்ல இந்த மூன்று உத்திகளையும் பயன்படுத்துவோம். இறைவார்த்தையைக் கொண்டும், இறைநம்பிக்கையைக் கொண்டும் நம் சோதனைகளை வெல்வோமாக!

மன்றாட்டு:

ஆற்றல் வழங்கும் இறைவா, சோதனைகளை வெல்வதற்கு இயேசுவுக்கு வலிமை தந்தீரே, உம்மைப் போற்றுகிறோம். எங்களை சோதனையில் விழவிடாதேயும். சோதனை வேளைகளில் இயேசுவைப்போல இறைமொழி கொண்டு வெற்றி பெற அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.