மூன்றாவது திருவழிபாடு ஆண்டு தவக்காலம் 4வது வாரம் சனிக்கிழமை 2025-04-05
முதல் வாசகம்
வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20
ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்; நானும் புரிந்து கொண்டேன். பின்னர் நீர் அவர்களின் செயல்களை எனக்குக் காட்டினீர். வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்; அவர்கள் எனக்கு எதிராய், ‘மரத்தைப் பழத்தோடு அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்; அவன் பெயர் மறக்கப்படட்டும்’ என்று சொல்லிச் சதித் திட்டம் தீட்டியதை நான் அறியாதிருந்தேன்.
படைகளின் ஆண்டவரே, நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்; உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் சோதித்தறிபவர்; நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும். ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.
திருப்பாடல் 7: 1-2. 8bc-9. 10-11
1
என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்; என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றித் தப்புவியும்.
2
இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்; விடுவிப்போர் எவரும் இரார். - பல்லவி
8b
ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும்.
9
பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்; நல்லாரை நிலைநிறுத்தும்; நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்; நீதி அருளும் கடவுள். - பல்லவி
10
கடவுளே என் கேடயம்; நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார்.
11
கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி; நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக்கொள்ளாத இறைவன். - பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 3: 16
தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம்
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 40-53
அக்காலத்தில்
யூதர்களின் திருவிழா கூட்டத்தில் சிலர் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, “வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றனர். வேறு சிலர், “மெசியா இவரே” என்றனர். மற்றும் சிலர், “கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்? தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?” என்றனர். இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது. சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை.
தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், “ஏன் அவனைப் பிடித்துக் கொண்டு வரவில்லை?” என்று கேட்டார்கள். காவலர் மறுமொழியாக, “அவரைப்போல எவரும் என்றுமே பேசியதில்லை” என்றனர். பரிசேயர் அவர்களைப் பார்த்து, “நீங்களும் ஏமாந்து போனீர்களோ? தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா? இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்றனர். அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம், “ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக, “நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்” என்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு, 'நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள்.
வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும்
சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர்' என்றார்'' (மத்தேயு 6:2)
மத்தேயு நற்செய்தியில் இயேசு வழங்கிய ''மலைப் பொழிவு'' மைய இடம் பெறுகிறது (மத் 5:1-7:29). முற்காலத்தில் மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுளின் திருச்சட்டத்தை அறிவித்ததுபோல, இயேசு உலக மக்கள் அனைவருக்கும் இறையாட்சி பற்றிய நற்செய்தியை ''அதிகாரத்தோடு'' அறிவித்தார் (மத் 7:29). இயேசுவை நம்பி ஏற்போரிடத்தில் துலங்க வேண்டிய பண்புகள் யாவை? யூத சமயத்தில் முக்கியமான அறநெறியாகக் கருதப்பட்ட நோன்பு, இறைவேண்டல், ஈகை ஆகியவை எத்தகைய மனநிலையோடு செய்யப்பட வேண்டும்? இக்கேள்விகளுக்கு இயேசு ''மலைப் பொழிவின்'' போது பதில் வழங்கினார். இயேசு வாழ்ந்த காலத்தில் ஏழை மக்கள் பலர் இருந்தார்கள். ஆனால் அவர்களது தேவையை நிறைவேற்ற அரசு திட்டங்கள் இருக்கவில்லை; இலவச மருத்துவ வசதி, சத்துணவுத் திட்டம், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை நடைமுறையில் இல்லை. நிலைமை இவ்வாறிருந்ததால் பல மக்கள் பிறரிடம் கையேந்தி உதவிபெற்றுத்தான் வாழ வேண்டியிருந்தது. எனவே, தர்மம் செய்வது உயர்ந்த பண்பு எனவும், தர்மம் செய்யாதிருப்பது தவறு எனவும் திருச்சட்டம் இஸ்ரயேலருக்கு உணர்த்தியது.
இப்பின்னணியில்தான் இயேசு மக்கள் எவ்வாறு தர்மம் செய்ய வேண்டும் என எடுத்துக் கூறுகிறார். பிறருக்கு நான் தாராள உள்ளத்தோடு உதவினாலும் அதனால் பிறர் என்னைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என நான் விரும்பி அவ்வாறு செய்தால் எனக்குக் கைம்மாறு ஏற்கெனவே கிடைத்துவிட்டது. அவ்வாறு நான் செய்யும் உதவி வெறும் ''வெளிவேடம்'' என இயேசு கூறுகிறார். தர்மம் செய்வது தன்னிலேயே நல்ல செயல்தான். ஆனால் எந்த நோக்கத்தோடு அதைச் செய்கிறோம் என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிறர் நம்மைப் புகழ வேண்டும் என்பது நமது நோக்கமாக இராமல் கடவுள் நம் செயலைப் பார்க்கிறார், அதுவே நமக்குப் போதும் என நாம் செயல்பட வேண்டும். அப்போது கடவுள் நமக்குக் கைம்மாறு வழங்குவார். அவரது கைம்மாறு கிடைக்கும் என்பதற்காகவன்றி, நாம் செய்யும் தர்மம் கடவுளுக்கு உகந்தது எனவும் பிறருக்கு நலம் பயப்பது எனவும் நமக்குத் தெரிந்தால் அதுவே போதும் என இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.
மன்றாட்டு:
இறைவா, பிறருக்கு உதவும் வேளையில் நாங்கள் தன்னலம் நாடாது செயல்பட அருள்தாரும்.
|