திருப்பலி வாசக விளக்கவுரை
ஆண்டின் பொதுக்காலம் இருபத்தோராம் ஞாயிறு (ஆ)
முதல் வாசகம்: யோசுவா 24,1-2.15-17.18
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 34
இரண்டாம் வாசகம்: எபேசியர் 5,21-32
நற்செய்தி: யோவான் 6,60-69
முதல் வாசகம் யோசுவா 24,1-2.15-17.18
1செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் அதிகாரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடினர். 2யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது: 'இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: 'முற்காலத்தில் ஆபிரகாம், நாகோர் ஆகியோரின் தந்தை தேரா உட்பட்ட உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் வாழ்ந்தபொழுது அவர்கள் மற்ற தெய்வங்களுக்கு ஊழியம் செய்தனர்.
...................
15ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ
இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம். 16மக்கள் மறுமொழியாக, 'ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக! 17ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்தார். எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார். நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும் எங்களைக் காத்தருளினார். ஆண்டவர் எல்லா மக்களையும், இந்நாட்டில் வாழ்ந்த எமோரியரையும் எங்கள் முன்னிருந்து விரட்டினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்' என்றனர்.
முதல் ஏற்பாட்டில் ஆறாவது இடத்தில் அமைந்துள்ள இந்த நூல் பாரம்பரியமாக யோசுவா என்னும் மேசேயுடைய உதவியாளரினால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இந்த புத்தகம் எப்போது எழுதப்பட்டது என்பதிலும் பல வியாக்கியானங்கள் உள்ளன. அநேகமாக கி.மு 1050ல் எழுதப்பட்டது என ஆயவாளர்கள் ஊகிக்கின்றார்கள். தற்கால ஆய்வாளர்கள், யோசுவா புத்தகத்திற்கு இணைச்சட்டம், நீதிபதிகள், 1-2சாமுவேல், 1-2 அரசர்கள் போன்றவற்றோடு இறையியலில் நெருக்கிய தொடர்பிருப்பதனை அவதானிக்கின்றனர். இதனை 'இணைச்சட்ட வரலாறு' என்று அழைப்பர். எது எவ்வாறெனினும், இறையியலில் மிகவும் அழகான புத்தகங்களில் இதுவும் ஒன்று. நாடு, கடவுள் தரும் கொடை, தேசியத்தை நிறுவுவதில் ஒற்றுமை, இஸ்ராயேலின் உள்நாட்டு ஒற்றுமை, உடன்படிக்கையில் நம்பகத்தன்மை, மற்றும் புனிதப்போர் போன்றவை யோசுவா நூலின் முக்கியமான சிந்தனைகள்.
பிரேதேச வாதங்களையும், சாதிப்-பொய்யையும், சம்மந்தமில்லா மதப்பிரிவினைகளையும், மற்றும் காலங்கடந்த ஆணாதிக்க சிந்தனைகளையும் தேவையில்லாமல் உள்வாங்கி ஈழ தேசிய ஒற்றுமையை சிதைக்க நினைப்பவர்களுக்கு இந்த புத்தகத்தின் இறையியல், உண்மையில் அழகான எதிர்க்கருத்து.
இன்றைய வாசக பகுதியில் யோசுவாவில் நம்பிக்கையும், அவருடைய திட்டமான நம்பிக்கையும் முன்வைக்கப்படுகிறது. தலைவர் முதலில் நான் போதிப்பதை நம்ப வேண்டும், நம்புவதை அவர் கடைப்பிடிக்க வேண்டும். இந்த பண்புகள் யோசுவாவிடம் அதிகமாகவே காணப்பட்டது. இந்த புத்தகத்தின் இறுதி அதிகாரத்தில் யோசுவா முக்கியமான தீர்மானத்தை எடுக்கிறார், இந்த இடத்தில் ஆசிரியர் யோசுவாவை மோசேக்கு இணையான நம்பிக்கையாளராகவும், தலைவராகவும் காட்டுகிறார்.
வ.1: செக்கேம் (שְׁכֶם ஷெகெம்) இஸ்ராயேலர்களின் வாழ்வில் முக்கியமான இடம். இது எருசNலிமிலிருந்து 67 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த இடத்தில், அதன் புவியியல் அமைப்பை பொறுத்து, யோசுவா அனைத்து குல தலைவர்களையும் ஒன்று கூட்டுகிறார். விசேடமாக அவர் இஸ்ராயேலின் அனைத்து முதியோர்களையும் (זִקְנֵי יִשְׂרָאֵל ட்சிக்னெ யிஸ்ரா'ஏல்), தலைவர்களையும் (רָאשָׁ֗יו ரா'ஷாய்வ்), நடுவர்களையும் (שֹֽׁפְטָיו֙ ஷோப்தாய்வ்), அதிகாரிகளையும் (שֹׁ֣טְרָ֔יו ஷோத்ராய்வ்), அழைக்கிறார் அத்தோடு அவர்களை கடவுளின் முன்னிலையில் ஒன்று கூட்டுகிறார்.
இந்த வரிமூலமாக யோசுவா அனைத்து இஸ்ராயேலர்களுடைய அங்கீகாரத்தையும் பெற்றிருந்த தலைவர் என்பதைக் காட்டுகிறார். யோசுவாவிற்றுகு அனைவரையும் கூட்டும் அதிகாரம் இருக்கிறதென்றால் அனைவரும் அவர் சொல்வததைக் கேட்க வேண்டும் என்ற கட்டாயமும் இருக்கிறது என்பது மறைமுகமாகச் சொல்லப்படுகிறது.
வ.2: பேசுகிறவர் யோசுவா என்பதைக் காட்ட 'யோசுவா சொன்னார்' என்கிறார் ஆசிரியர்
וַיֹּאמֶר יְהוֹשֻׁ֜עַ אֶל־כָּל־הָעָ֗ם வாய்யோ'மெர் யெஹோஷுவா' 'எல்-கோல் ஹா'ஆம்- இப்படிச் சொன்னார் யோசுவா அனைத்து மக்களுக்கும்.
யோசுவா கடவுள் சொன்னதைத்தான் நினைவு கூறுகிறார், ஆக இது யோசுவாவின் கதையல்ல மாறாக கடவுள் சொன்ன உண்மை வார்த்தைகள் என்பது சொல்லப்படுகிறது
(כֹּֽה־אָמַר יְהוָה֮ אֱלֹהֵי יִשְׂרָאֵל கோஹ்-'ஆமர் 'ஏலோஹெ யிஸ்ரா'எல்- இப்படிச் சொல்கிறார் இஸ்ராயேலின் ஆண்டவர்).
இஸ்ராயேலின் தந்தை ஆபிரகாம், அவர் சகோதரர் நாகோர் மற்றும் அவர்களின் தந்தை தொராகு நதிக்கு அப்பால் வாழ்ந்த காலத்தை நினைவுகூர்கிறார். நதி என்பது இங்கே யூப்பிரதீசு நதியைக் குறிக்கிறது. இந்த இடத்தில்தான் இவர்கள் பிறந்து வளர்ந்தார்கள். இந்த முன்னைய பபிலோனிய நாட்டில் இருந்துதான் ஆபிரகாம் கானானிற்கு வந்தார். ஆக பபிலோனியா
இஸ்ராயேலருக்கு உறவில்லாத இடம் அல்ல.
இந்த இடத்தில் இருந்தபோது, அபிரகாமும் புறவினத்தவரே, அவர் வழிபட்டதும் பொய்த் தெய்வங்களே என்பது சொல்லப்படுகிறது. வரலாறு எங்கனம் மாறுகிறது என்பதை அவதானிக்கலாம் וַיַּעַבְדוּ אֱלֹהִ֥ים אֲחֵרִים׃ வாய்யா'அவ்தூ 'எலோஹிம் 'அஹெரிம்- வேறு தெய்வங்களுக்கு பணிவிடை செய்தார்கள்.
வவ.3-14: இஸ்ராயேலருக்கு அவர்களுடைய பழைய வரலாறு சொல்லி நினைவூட்டப்படுகிறது. எகிப்திற்கு சென்றமை, அதிலிருந்து மீண்டு வந்தமை, அனைத்தும் அத்தோடு பாரவோனின் படைகள் எங்கனம் சிதறடிக்கப்பட்டது, அத்தோடு அவர்களின் படைவீரர்களுக்கு செங்கடலில் என்ன நடந்தது என்பதும் நிiவூட்டப்படுகிறது.
எமோரியர்களின் யோர்தான் அக்கரைப் பகுதியில் இவர்களுக்காக தான் செய்ததையும் கடவுள் நினைவூட்டுகிறார். மோவாபு நாட்டிலும் அந்த அரசனுக்கு எதிராக கடவுள் தன் மக்களுக்காக செய்தவையையும் அவர் நினைவூட்டுகிறார். பாலாம் என்ற புறவின இறைவாக்கினர்கூட கடவுளுக்கு அஞ்சி இஸ்ராயேலரை சபிக்காமல், ஆசித்ததையும் கடவுள் நினைவூட்டுகிறார்.
எரிக்கோவிற்குள் நுழைந்த இஸ்ராயேலரை தடுக்க பலவின மக்கள் ஒன்று சேர்ந்தனர், அவர்கள், எமோரியர், பெரிசியர், கானானியர், இத்தியர், கிர்காசியர், இவ்வியர், எபூசியர், போன்றவர்கள் ஆவார்கள். இருந்தும் கடவுள் அனைவரையும் சிதறடிக்கிறார். இதனைச் செய்தது,
இஸ்ராயேலரின் வில்லும் அம்பும் அல்ல, மாறாக கடவுளின் சித்தம் என்பது நேர்த்தியாக சொல்லப்படுகிறது. அத்தோடு கானானை பற்றி சொல்கின்றபோது, கடவுள் அதனை அவர்கள் நடாத திராட்சைத் தோட்டம் என்றும், ஒலிவத் தோட்டம் என்றும் சொல்கிறார். அதாவது கானான் நாடு இஸ்ராயேலர்களுடைய பூர்வீக நாடு அல்ல, மாறாக கடவுள் அதனை இஸ்ராயேலருக்கு ஒரு தேவையின் பொருட்டு கொடுத்திருக்கிறார். இதனை அவர்கள் யோசுவாவின் காலதிலும் மறந்தார்கள் இன்றும் யூத அரசியல் தலைமைத்துவம் இதை மறந்துவிட்டது, அதனால்தான் அவர் மற்றவர்களை புறவினத்தவர்கள் என்று வெளியேற்ற முயல்கிறார்.
(நிலம் கடவுளுக்குரியது, இன்று நம்முடையது நாளை யாருடையதோ? கடவுள் தீர்மானிக்கிறார். மற்றவர்களை நிலமற்றவர்களாக்குவதும், அகதிகள் என்பதும் எங்கனம் நியாயம்?- இஸ்ராயேலருக்கு மட்டுமல்ல, இது அனைவருக்கும் பொருந்தும்).
அனைத்தும் கடவுள் கொடுத்தவையே என்பது யோசுவாவின் முக்கியமான படிப்பினை. அத்தோடு அனைத்து புறவின தெய்வங்களையும் விட்டு விலகச் சொல்கிறார். புறவினத் தெய்வங்களில் இஸ்ராயேலர் தொடர்ச்சியாக ஈடுபாடு காட்டினர் என்பதை இந்த வரி மறைமுகமாகச் சொல்கிறது.
வ.15: விவிலியத்திலும், யோசுவா புத்தகததிலும் இந்த வரி மிக முக்கியமான வரிகளில் ஒன்றாகிறது. யோசுவா தன்னுடைய விசுவாசத்தை மக்களுக்கு உதாரணமாக கொடுத்து ஒரு உறுதியான முடிவை எடுக்கச் சொல்கிறார்.
ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என தோன்றினால் அதனை அவர் நடைமுறைப் படுத்தலாம் என சற்று காட்டமாகவே சொல்கிறார். அத்தோடு ஆபிரகாமின் மூதாதையர், நதிக்கு அப்பால் (யூப்பிரதீசு) பபிலோனிய தெய்வங்களுக்கு ஊழியம் செய்ததையும், அல்லது இப்போது கானானில் உள்ள பொய்தெய்வங்களுக்கோ இவர்கள் ஊழியம் செய்யலாம் என்ற தெரிவைக் கொடுக்கிறார். ஆனால் நல்ல எபிரேயனாக தானும் தன் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம் என்கிறார். இந்த வரி விவிலியத்தில் அதிகமாக கோடிடப்பட்ட வரிகளில் ஒன்று.
אָנֹכִ֣י וּבֵיתִ֔י נַעֲבֹד אֶת־יְהוָֽה׃ 'ஆனோகி வுவெதி, ந'அவோத் 'எத்-அதோனாய்- நானும் என்வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.
வ.16: யோசுவாவின் உறுதிப்பாட்டை மக்களும் எடுக்கிறார்கள். அதனை உறுதியான எடுககோலாக எடுப்பதாக எபிரேய விவிலிய வரி காட்டுகிறது. חָלִילָה לָּ֔נוּ מֵעֲזֹב אֶת־יְהוָה ஹாலிலாஹ் லானூ, மெ'அட்சோவ் 'எத்-அதோனாய்- ஆண்டவரை கைவிடுவது எங்களிடமிருந்து தூர இருப்பதாக.
வ.17: மக்கள் விசுவாச அறிக்கையிடுவதாக இந்த வரி அமைகிறது. ஏற்கனவே யோசுவா நினைவூட்டிய விசுவாச பிரகடனத்தை இவர்களும் ஏற்றுக்கொள்வது போல இது அமைகிறது. எகிப்தை அடிமைத்தன வீடு என்று ஏற்றுக்கொள்கிறார்கள் (אֶרֶץ מִצְרַיִם מִבֵּית עֲבָדִים 'எரெட்ஸ் மிட்ஸ்ராயிம் மிபெத் 'அவாடிம்- அடிமைவீடாகிய எகிப்து நிலம்). இந்த நிலத்திலிருந்து தங்களை வெளியே கொண்டுவந்ததும் கடவுள் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றனர். தங்கள் கண்முன்னாலே இந்த அரும் அடையாளங்களைச் செய்தார் என்றும் ஏற்றுக்கொள்கின்றனர். அதாவது, இது ஒரு வரலாற்று நிகழ்வல்ல மாறாக நிகழ்கால நிகழ்வாக இன்றும் இருக்கிறது என்பது சொல்லப்படுகிறது.
இவர்கள் நடந்து வரும் வழிகளில் பல மக்களின் எதிர்ப்பை சந்தித்தாலும், இவற்றிலிருந்து கடவுள் இவர்களை காத்தார் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றனர்.
வ.18: வழியில் மட்டுமல்ல கானான் நாட்டிலிருந்தும் முன்னமே இருந்த மக்களை இவர்களுக்காக விரட்டினார், என்பதையும் ஏற்றுக்கொள்கின்றனர். ஏற்கனவே கானானில் இருந்தவர்கள் எமோரியர்கள் என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார்கள். யோசுவாவைப் போல, இவர்களும் கடவுளை ஏற்றுக்கொள்கிறார்கள் என்கிறார். גַּם־אֲנַחְנוּ נַעֲבֹ֣ד אֶת־יְהוָ֔ה காம் 'அநாஹ்னூ நா'அவோத் 'எத்-அதோனாய்- நாங்களும் கடவுளுக்கு ஊழியம் செய்வோம், כִּי־הוּא אֱלֹהֵינוּ׃ கி-ஹு' 'ஏலோஹெனூ- ஏனெனில் அவர்தான் எங்கள் கடவுள்.
பதிலுரைப் பாடல் திருப்பாடல் 34
கடவுளின் கருணையைப் புகழ்தல்
(தாவீதுக்கு உரியது அவர் அபிமெலக்கின் முன் பித்துப் பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத்துரத்திவிட, அவர் வெளியேறினார்; அப்போது அவர் பாடியது)
1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும்
என் நாவில் ஒலிக்கும்.
2நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.
3என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்.
5அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம்
அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்.
7ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.
8ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர்
பேறுபெற்றோர்.
9ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு
எக்குறையும் இராது.
10சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு
நன்மை ஏதும் குறையாது.
11வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி
உங்களுக்குக் கற்பிப்பேன்.
12வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா?
13அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை
உன் வாயைவிட்டு விலக்கிடு!
14தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு.
15ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன் அவர் செவிகள்
அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.
16ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே
உலகில் அற்றுப்போகச் செய்வார்.
17நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து
இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.
18உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை
அவர் காப்பாற்றுகின்றார்.
19நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல் அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.
20அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது.
21தீயோரைத் தீவினையே சாகடிக்கும்; நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர்.
22ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார்.
இந்த முப்பதிநான்காம் திருப்பாடலின் தலையங்க வரி இதற்கு பின்னால் உள்ள வரலாற்றை நினைவுபடுத்துகின்றது. (தாவீதுக்கு உரியது அவர் அபிமெலக்கின் முன் பித்துப் பிடித்தவர்போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத்துரத்திவிட, அவர் வெளியேறினார்; அப்போது அவர் பாடியது). இந்த பின்னணியை ✽1சாமு 21,10-14 இல் வாசிக்கலாம். சவுலுக்கும் தாவீதிற்கும் இடையில் நடந்த அதிகாரப் போட்டியில் தாவீது தன் உயிரைக் காக்க அந்நியரான பிலிஸ்திய அரசன் காத்தின் பாதுகாப்பை நாடி அவர் நாட்டில் தங்கினார். காத்தினுடைய தனிப்பட்ட பெயர் ஆகிஷ் ஆனால் இந்த திருப்பாடல் அவரை அபிமெலெக் அல்லது அகிமெலக் என வாசிப்பது வித்தியாசமாக உள்ளது ( אֲבִימֶלֶךְ அவிமெமெலக், Αχιμελεχ அகிமெலெக்). இந்த பிலிஸ்திய அரசன் தாவீதிற்கு அடைக்கலம் கொடுத்த போது சவுலின் பகைமையை மட்டுமே நினைத்திருப்பார், அனால் பிலிஸ்தியருக்கெதிரான தாவீதின் செயல்கள் அவருக்கு நினைவூட்டப்பெற்ற போது அவர் தாவீதை சிறைப்பிடிக்க முயல்கிறார், இதனால் தாவீது மனநோயாளிபோல் நடித்து தப்பிக்கிறார். தாவீது சிறந்த போர் வீரன் மட்டுமல்ல நல்ல தற்பாதுகாப்பு நடிகன் என்பதையும் நிரூபிக்கிறார். ஆகிஷிடம் இருந்து தப்பித்தது, தாவீதுக்கு ஒரு கடவுள் அனுபவத்தைக் கொடுக்கிறது, அந்த கடவுள் அனுபவம் அவரை இந்த பாடலை இயற்றி படிக்க வைத்ததாக எபிரேய வரலாற்று நம்பிக்கை எடுத்துரைக்கிறது.
(✽10பிறகு தாவீது எழுந்து அந்நாளில் தப்பியோடி காத்தின் மன்னன் ஆக்சிடம் சென்றார். 11ஆக்கிசின் அலுவலர்கள் அவரிடம், 'இவன் இஸ்ரயேல் நாட்டு அரசன் தாவீது அன்றோ? 'சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றான்' என்று பெண்கள் நடனமாடித் தங்களுக்குள் பாடிக் கொள்ளவில்லையா?' என்றனர். 12தாவீது இவ்வார்த்தைகளைத் தம் மனதில் வைத்துக் கொண்டு, காத்தின் அரசன் ஆக்கிசை முன்னிட்டு மிகவும் அஞ்சினார். 13அதனால் தம் முகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வாயிற் கதவுகளில் கிறுக்கிக் கொண்டு, தாடி வழியே வாயிலிருந்து நுரை ஒழுகச் செய்து அவர்கள் முன்னிலையில் ஒரு பைத்தியக்காரன் போல் நடித்தார். 14அப்போது ஆக்கிசு தன் அலுவலர்களிடம், 'இதோ இம்மனிதனைப் பாருங்கள்; இவன் ஒரு பைத்தியக்காரன்! இவனை ஏன் என்னிடம் அழைத்து வந்தீர்கள்? 15என் முன்னிலையில் பைத்தியக் காரத்தனத்தை காட்ட நம்மிடம் பைத்தியங்கள் குறைவா? இவன் என் வீட்டினுள் நுழையலாமா?' என்று சினமுற்றான்.)
வவ.1-2: இந்த முன்னுரையின் உதவியுடன் இந்த வரிகளை வாசிக்கின்ற போது இந்த வார்த்தைகளின் ஆழத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆண்டவரை புகழ்தல் அல்லது அவரது பெருமைகளை பறைசாற்றுதல் என்பது, ஒரு காலத்திற்கு உட்பட்டதல்ல ஏனெனில் கடவுள் ஒருவர் பலமாக இருக்கும் போது மட்டுமல்ல அவர் பலவீனமாக இருக்கும் போதும் தேவையானவர், என்ற உண்மையை தாவீது பிலிஸ்தியரின் அரண்மனையில் புரிந்துகொண்டார். கடவுளின் பெருமைகளை கேட்டபோது எளியோர் அக்களிப்பர் என்று தாவீது பாடுவது, இஸ்ராயேலரை குறிக்கும் அல்லது தாவீதைச் சார்ந்த இஸ்ராயேலரைக் குறிக்கிறது என்றும் எடுக்கலாம்.
יִשְׁמְעוּ עֲנָוִים וְיִשְׂמָחוּ யிஷ்மெ'ஊ 'ஆனாவிம் வெயிஸ்மாஹு- எளியோர் இதைக் கேட்ப்பார்கள், மகிழ்வார்கள்.
வ.3: தன்னோடு இணைந்து ஆண்டவரை பெருமைப்படுத்தக் கேட்கிறார் ஆசிரியர், அதனை அவர் ஆண்டவரின் பெயரை மேன்மைப் படுத்தல் முயற்ச்சி என்கிறார்.
ஆண்டவரை பெருமைப் படுத்தலும், அவரது பெயரை பெருமைப் படுத்தலும் (גַּדְּלוּ לַיהוָה கத்லூ லஅதோனாய்- ஆண்டவரை உயர்த்தல்: נְרוֹמְמָה שְׁמוֹ நெரோம்மாஹ் ஷெமோ- அவர் பெயரை உயர்த்துங்கள்), ஒத்த கருத்து வினைகளாக பார்க்கப்படுகிறது.
வ.4: தான் ஆண்டவரை துணைவேண்டி மன்றாடியதாகவும், அவர் மறுமொழி பகர்ந்ததாகவும், எல்லாவகையான அச்சத்திலிருந்தும் தன்னை விடுவித்ததாகவும் சொல்கிறார்.
ஆண்டவர் ஒருவருக்கு மறுமொழி கொடு;த்தல் மற்றும் அனைத்து விதமான அச்சங்களிலிருந்தும் விடுவித்தல் என்ற உணர்வுகள் ஆழமான நம்பிக்கையின் வரிகள். இதனை உரைக்கின்றவர், நிச்சயமாக ஆண்டவரைப் பற்றி பல ஆழமான அனுபவங்களைக் கொண்டவராக இருக்க வேண்டும். இந்த வரியும், தாவீதுதான் இந்த பாடலை எழுதினார் என்பதற்கு இன்னொரு சான்றாக இருக்கிறது. כָּל־מְגוּרוֹתַי கோல்-மெகூரோதாய்- என்னுடைய எல்லாவகையான அச்சங்கள்.
வ.5: ஆண்டவரை நோக்கி பார்த்தோரை இந்த வரி எழுவாய்ப் பொருளாக எடுக்கிறது. ஆண்டவரை மனித பண்புகளோடு வர்ணிப்பது திருப்பாடல்களின் தனித்துவம். ஆண்டவரின் முகம் என்பது அவரது பிரசன்னத்தைக் குறிக்கலாம். ஆண்டவரை பார்த்தல் என்பது அவரது பிரசன்னத்தை உணர்தல் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும்.
மக்கள் மகிழ்ச்சியால் மிளிர்தல் என்பது, அவர்களுடைய உள்ளத்தின் நிறைவைக் காட்டுகின்றது. அவர்களின் முகம் அவமானத்தை சந்திக்கவில்லை என்பது, அவர்கள் தோல்வியை சந்திக்கவில்லை என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.
வ.6: ஆசிரியர் தன்னை 'இந்த ஏழை அழைத்தான்' என்கிறார் (זֶה עָנִי קָרָא ட்செஹ் 'ஆனி காரா'). இவருடைய கூவி அழைத்தலுக்கு, மன்றாட்டு என்ற அர்த்தமும் கொடுக்கப்படலாம். ஆசிரியர் மிகவும் தாழ்ச்சியுடையவராக இருந்திருக்க வேண்டும், இதனால்தான் தன்னை ஏழை என்கிறார்.
செவிசாய்த்தலும், அனைத்து நெருக்கடிகளில் நின்று விடுவித்தலும், ஒத்த கருத்துச் செயற்பாடுகள். மீண்டும் மீண்டும் ஆண்டவரின் செவிசாய்த்தல் என்ற அர்த்தம் இந்த வரிகளில் வருவதைக் காணலாம்.
வ.7: ஆண்டவரின் தூதர், ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை காத்திடுவார் என்று உறுதிப்படுத்துகிறார். ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோர் என்போர், ஆண்டவரில் மிக நம்பிக்கை உள்ளோரைக் குறிக்கும். ஆண்டவருக்கு அச்சம் என்பது பயத்தை குறிக்காது. ஆண்டவரின் தூதர் ஒருவரைக் காத்தல் என்பதன் மூலம், அந்த நபர் ஆண்டவருக்கு அருகில் இருக்கிறார் என்பது சொல்லப்படுகிறது. מַלְאַךְ־יְהוָ֓ה סָ֘בִ֤יב לִֽירֵאָ֗יו மல்'அக்-அதோனாய் சாவிவ் லிரெ'ஆவ்- ஆண்டவரின் தூதர் அவருக்கஞ்சுவோரை சுழ்ந்திடுவார்.
வ.8: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப்பார்க்கச் சொல்கிறார். இந்த வரி நற்கருணை ஆண்டவரோடு தொடர்பு படுத்தப்படுகிறது. இந்த வரி திருப்பாடல்கள் புத்தகத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட வரிகளில் ஒன்று. טַעֲמוּ וּרְאוּ כִּי־טוֹב יְהוָה த'அமூ வுரெ'ஊ கி-தோவ் அதோனாய்- சுவையுங்கள் பாருங்கள், ஆண்டவர் நல்லவர் என்று.
சுவை என்பது முதல் ஏற்பாட்டில் அனுபவமாகத்தான் இருக்கவேண்டும். இவர்கள் நற்கருணை கொண்டாடத்தில் பங்கெடுக்கவில்லை. அக்காலத்தில் நற்கருணை கொண்டாட்டமும் இருந்திருக்கவில்லை. ஆண்டவரை சுவைத்தலை அவரிடம் அடைக்கலம் புகுதல் என்ற ஒத்த கருத்துச் சொல்லில் இன்னொருமுறை வார்த்தைப் படுத்துகிறார் (יֶחֱסֶה־בּֽוֹ யெஹெசெஹ்-போ அவரில் அடைக்கலம் புகுவோர்).
வ.9: ஆண்டவருக்கு அஞ்சுவோரை ஆண்டவரின் தூயவர் என்கிறார் தாவீது. ஆண்டவருக்கு அஞ்சுதல் அதாவது அவரில் நம்பிக்கை கொள்ளல் என்பது தூய்மையான மக்களின் வாழ்வைக் குறிக்கிறது. இவர்களுக்கு எக்குறையும் இருக்காது என்கிறார். இந்த குறைகள் எவை என அவர் சொல்லவில்லை.
தாவீது பலவிதமான குறைகளை அனுபவித்தவர், அவர் ஆழமான நம்பிக்கையை கொண்டிருந்தபடியால், அக்குறைகள் அவரை தாக்கவில்லை. அனைத்து குறைகளையும் அவர் தாண்டி வந்திருக்கிறார். அந்த அனுபவம்தான் இங்கே சொல்லப்படுகிறது. קְדֹשָׁיו கெதோஷாவ்- அவர் தூயவர்கள்.
வ.10: அருட் தந்தை பெக்மான்ஸ் (இந்தியா தமிழ்நாடு) இந்த வரிகளைக் கொண்டு அழகான பாடல் வரியை உருவாக்கியுள்ளார்.
சிங்கக்குட்டிகள் உணவின்றி பசியாய் இருக்காது என்பது ஆசிரியரின் நம்பிக்கை போல. சிங்கம் மிகவும் பலமான வேட்டை மிருகம். அதனை நாம் வனத்து அரசன் என்கின்றோம். இதற்கு பல புராண கதைகள் சார்பாக உள்ளன. இஸ்ராயேல் நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிங்கங்கள் அழிந்துவிட்டன. இருப்பினும் இவர்களுக்கு ஆபிரிக்காவில் வாழ்ந்த சிங்கங்களை பற்றி அதிகமாக தெரிந்திருக்க வேண்டும், அத்தோடு சிங்கம் வல்லமையின் அடையாளமாகவும்
இருந்திருக்கிறது. இதனால்தான் சிங்கக் குட்டிகள் பசியால் வாடாது என நம்பியிருக்கிறார் என எடுக்கலாம். தற்போதை ஆய்வுகளின் படி சிங்கங்கள் உண்மையாக பலமான வேட்டை மிருகங்கள் கிடையாது, சிங்கத்தைவிடவும் பலமான வேட்டை மிருகங்கள் நிலத்திலும் நீருலும் உள்ளன. அத்தோடு சிங்கங்கள் அதிகமான நேரத்தை தூக்கத்திற்கே செலவழிக்கின்றன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சிங்கம் காட்டு அரசன் என்பது ஒரு கதைதான் என்பதும் உண்மை. இவை ஆசிரியின் எழுவாய்ப் பொருள் அல்ல.
அவருக்கு தெரிந்த சிங்கம் பலமான மிருகம். இப்படி பலமான மிருகத்தின் குட்டிகளே பசியால் வருந்தினாலும், ஆண்டவரை நாடுவோருக்கு என்றுமே குறைவிராது என்கிறார். ஆக ஆண்டவரை நாடுவோர், சிங்கத்தை விட பலசாலியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள் என்பது காட்டப்படுகிறது. כְּפִירִים கெபிரிம்- குருளைகள்.
வ.11: ஆண்டவருக்கு அஞ்சுதல் என்றால் என்வென்று சொல்லித்தருவதாகச் சொல்கிறார். ஆண்டவருக்கு அஞ்சுதல் என்பது, இஸ்ராயேலர்களின் ஆன்மீகத்தில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. கடவுளுக்கு அஞ்சுதல் என்பது இறைபயத்தை குறிக்காது, அது இறைவனுக்கு மரியாதை கலந்த ஆழமான அன்பு-விசுவாசத்தைக் குறிக்கிறது.
இந்த ஆன்மீகம், தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுகிறது. பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதனை அவர்கள் தங்கள் கலாச்சாராமாகவே பார்த்தார்கள்.
לְכוּ־בָנִים שִׁמְעוּ־לִי லெகூ வானிம், ஷிம்மூ-லீ - வாருங்கள் பிள்ளைகளே எனக்கு செவிகொடுங்கள். יִֽרְאַת יְהוָ֗ה אֲלַמֶּדְכֶם׃ யிர்'அத் அதோனாய் 'அலாம்மெத்கெம்- கடவுளுக்கு அஞ்சுதலைக் கற்றுத்தருவேன்.
வவ.12-13: வாழ்க்கையில் இன்பம் காண்பது அனைவருடைய விருப்பம், இதனை அதிகமான நாட்கள் வாழ விருப்பம் என்றும் சொல்லலாம். வாழ்வில் இன்பம் காண அதிக காலம் வாழ மனிதர்கள் விரும்புவார்கள், இந்த விருப்பத்தை அக்கால மனிதர்களும் கொண்டிருந்தார்கள் என்பது இந்த வரியிலிருந்து தெளிவாகிறது. מִי־הָאִישׁ הֶחָפֵץ חַיִּ֑ים மி-ஹாயிஷ் ஹௌhபெட்ஸ் ஹய்யிம்- எந்த மனிதருக்கு வாழ்வில் மகிழ்வுகான விரும்பம்.
இதற்கான விடையாக, தீச்சொல்லிலிருந்து நாவைக் காத்திடவும், வஞ்சக மொழியை வாயைவிட்டு விலக்கிவிடுதலையும் காட்டுகிறார். தீச்சொல்லையும், வஞ்சக மொழியையும் ஆசிரியர் ஒத்த கருத்து சொற்களாக பாவிக்கின்றார். (שׁוֹנְךָ מֵרָע ஷோனெகா மெரா'- தீமையிலிருந்து நாவு). நாவும் அதனைச் சார்ந்த தீமையான வார்த்தைப் பிரயோகங்களும்தான் அனைத்து நிம்மதியின்மைகளுக்கும் காரணம் என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன். முதல் ஏற்பாடும், புதிய ஏற்பாடும் நாவை ஆபத்தான உறுப்பாக வர்ணிப்பதைக் காணலாம்.
வ.14: அழகான கட்டளை கொடுக்கப்படுகிறது. வாழ்வின் இன்பம் காண்பதற்கான இன்னொரு வாழ்கைக் கட்டளை, தீமையை விட்டு விலகுதல் என்பதாகும், அத்தோடு நன்மையை செய்தல், நல்வாழ்வை நாடுதல் மற்றும் அதனை அடைவதில் கருத்தாய் இருந்தல் என்பனவும் காட்டப்படுகின்றன. இந்த நான்கு கட்டளைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டிருக்கின்றன.
நன்மையை செய்ய ஒருவர் தீமையை விட்டுவிட வேண்டும். நன்மையையும் தீமையையும் ஒருவர் ஒருமித்து செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அவருடைய தீமை மட்டும்தான் நினைவில் கொள்ளப்படும். நன்மை கருத்தில் எடுக்கப்படாது (סוּר מֵרָע וַעֲשֵׂה־טוֹב சூர் மெரா' வ'செஹ்-தோவ்- தீமையை விலத்து, அத்தோடு நன்மையைச் செய்).
சமாதானத்தை தேடுதல் மட்டும் போதாது அதனை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் என்கிறார் ஆசிரியர். בַּקֵּשׁ שָׁלוֹם וְרָדְפֵהוּ׃ பகெஷ் ஷாலோம் வெராத்பெஹு- சமாதானத்தை தேடு அத்தோடு அதனை தொடர்ச்சியாக தேடு.
வ.15: ஆண்டவரின் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன எனவும், அவருடைய செவிகள் அவர்களின் மன்றாட்டை கேட்கின்றன எனவும், ஆசிரியர் தன் நம்பிக்கையை அழகான உருவகங்களில் முன்வைக்கிறார்.
இஸ்ராயேலர்களின் நம்பிக்கை, கடவுளை மனிதராகவோ அல்லது உருவகமாகவோ பார்க்கவில்லை. இது கானானிய நம்பிக்கைக்கும் அவர்களுக்கும் இருந்த மிக முக்கியமான வித்தியாசம். இந்த வரிகளில் ஆசிரியர் கடவுளை மனிதராகக் காட்டவில்லை. இங்கே கடவுளின் கண்கள் (עֵינֵי יְהוָה 'எனே அதோனாய்- கடவுளின் கண்கள்) அவருடைய பார்வையையும், அவருடைய செவிகள் (אָזְנָ֗יו 'ஆட்செநாவ்- அவர்காதுகள்) அவருடைய கிரகிக்கும் தன்மையையும் காட்டுகின்றன. கடவுள் நீதிமான்களை பார்க்கிறார், அவர்களது மன்றாட்டை கேட்கிறார் என்ற செய்திதான் இங்கே முக்கியமான செய்தியாகும்.
வ.16: முதல் வரிக்கு எதிராக இந்த வரி வருகின்றது. ஆண்டவர் தீவினை செய்பவர்களை என்ன செய்வார் என்பது சொல்லப்படுகிறது. ஆண்டவரின் முகம் தீமை செய்பவர்களுக்கு எதிராக
இருக்கிறது. ஆண்டவரின் முகம் என்பது இங்கே அவருடைய பிரசன்னத்தைக் குறிக்கிறது. தீமை செய்கிறவர்கள் ஆண்டவரின் பிரசன்னத்தைக் கொண்டிருக்க முடியாது என்பது சொல்லப்படுகிறது.
இந்த சிந்தனையை எபிரேய வரியின் வார்த்தைகள் சற்று வித்தியாசமாகக் காட்டுகிறது
פְּנֵי יְהוָה בְּעֹשֵׂי רָע பெனே அதோனாய் பெ'ஓசே ரா'- ஆண்டவரின் முகத் தீமை செய்வோருக்கு.
இந்த வரி விளக்கம் இல்லாமல் இருப்பதை இந்த வரியின் இரண்டாவது பிரிவு தெளிவு படுத்துகிறது. அதில், அவர் அவர்களின் நினைவை நிலத்தில் இருந்து வெட்டிவிடுவார் என்று காட்டுகிறது (לְהַכְרִית מֵאֶרֶץ זִכְרָֽם׃ லெஹகெரித் மெ'எரெட்ஸ் ட்சிக்ராம்- நிலத்திலிருந்து அவர்கள் நினைவை வெட்டிவிட).
வவ.17-20: இந்த வரிகளும் நீதிமான்களுடைய தகமைகளையும் அவர்களுக்கு கடவுள் செய்யும் நன்மைத் தனங்களையும் விளக்க முயல்கின்றன.
நீதிமான்கள் மன்றாடும் போது ஆண்டவர் செவிசாய்கின்றார், அவர்களை அனைத்து இடுக்கண்களிலிருந்தும் விடுவிக்கின்றார். இந்த செய்தி மூலமாக, நீதிமான்களும் மன்றாடவேண்டியவர்களே, அத்தோடு அவர்கள் இடுக்கண்களையும் சந்திக்கிறவர்களே. ஆனால் அவர்களுடைய முடிவு வித்தியாசமாக இருக்கும் என்பதே செய்தி (எபிரேய விவிலியத்தில் நீதிமான்கள் என்ற எழுவாய் மறைந்துள்ளது, சூழலியலில் இது நீதிமான்களைக் குறிக்கிறது
צָעֲקוּ וַיהוָה שָׁמֵעַ ட்சா'அகூ வாயாதோனாய் ஷாமெ'அ- அவர்கள் கூக்கிரலிடுவர் ஆண்டவர் செவிசாய்ப்பார்).
உடைந்த உள்ளத்தாரையும் (נִשְׁבְּרֵי־לֵב நிஷ்வெரே-லெவ்- உடைந்த இதயம்) நைந்த நெஞ்சத்தாரையும் (אֶת־דַּכְּאֵי־רוּחַ 'எத்-தக்'எ-ரூஹா- நொருங்கிய ஆவி) ஒத்த வார்த்தையால் ஒற்றுமைப் படுத்தி பார்கிறார் ஆசிரியர்.
நேர்மையாளருக்கு தீமைகள் பல உண்டாகும் என்பதை ஆசிரியர் ஏற்றுக்கொள்கிறார். தீமைகள் பலவா அல்லது சிலவா என்பதல்ல, மாறாக அப்படியான வேளைகளில் கடவுள் அருகில்
இருக்கிறாரா என்பதில்தான் அனைத்தும் இருக்கிறது. ஆசிரியரின் கருத்துப்படி நேர்மையாளர்களின் அனைத்து தீமைகளிலிருந்தும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கிறார் (יַצִּילֶנּוּ יְהוָה யாட்சிலெனூ அதோனாய்- ஆண்டவர் அவர்களை மீட்கிறார்).
எலும்புகள் மனிதருடைய பலத்தின் அடையாளமாக இருக்கின்றன. எலும்புகளில் உயிர் அணுக்கள் இருந்ததாகவும் நம்பப்பட்டது. இஸ்ராயேல் மக்கள் எலும்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இறந்வர்களின் எலும்புகளை சேமித்துவைப்பதையும் ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். யோசேப்பின் எலும்புகள் எகிப்பதிலிருந்து கானானிற்கு கொண்டுவரப்பட்டது நினைவுகூறப்பட வேண்டும். இந்த வரி யோவான் நற்செய்தியில் இறந்த இயேசுவின் எலும்புகள் உடைபடாததை நினைவு படுத்துகிறது. அதாவது நீதிமான்கள் துன்பப்பட்டாலும் அவர்களின் எலும்புகள் பாதுகாக்கப்படுகின்றன (காண்க யோவான் 19,31-37) עַצְמוֹתָיו 'ஆட்செமோதாய்வ்- அவர் எலும்புகள்.
வவ.20-21: தீயோரை கடவுள் சாகடிக்க வேண்டிய தேவையில்லை. அவர்கள் தங்கள் தீவினையின் செயல்களாலேயே சாகிறார்கள். அவர்கள் தண்டனை பெறுவதற்கான காரணம், அவர்கள் நல்லோரை வெறுப்பதாகும் என்கிறார் ஆசிரியர். ஆக நேர்மையாளர்களை வெறுத்தல் தீவினைக்கான காரணமாக அமைகிறது. (תְּמוֹתֵת רָשָׁע רָעָה தெமோதெத் ராஷா' ரா'ஆஹ்- தீமை தீயவனைக் கொல்கிறது)
இது தீயவர்களின் நிலையாக இருக்க, நல்லோர் ஆண்டவரினால் காக்கப்படுகிறார்கள். நல்லவர்கள் ஆண்டவரின் ஊழியர்கள் என அடையாளப் படுத்தப்படுகிறார்கள் (יְהוָה נֶפֶשׁ עֲבָדָיו அதோனாய் நெபெஷ் 'அவாதாவ்ய்). ஆண்டவரிடம் அடைக்கலம் புகுகிறவர்கள் தண்டனை அடையாமல் தப்புகிறார்கள். இங்கனம் அடைக்கலம் புகுகிறவர்கள் (הַחֹסִים ஹஹோசிம்), ஆண்டவரின் மக்களாக மாறுகிறார்கள்.
இரண்டாம் வாசகம் எபேசியர் 5,21-32
கணவர் மனைவியர் நடத்தை
21கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்.
22திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். 23ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். 24திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும். 25திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். 26வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். 27அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார். 28அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின்மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவராவார். 29தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார். 30ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள். 31'இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டு தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்; இருவரும் ஒரே உடலாயிருப்பர்' என மறைநூல் கூறுகிறது. 32இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன். 33எப்படியும், உங்களுள் ஒவ்வொருவரும் தம்மீது அன்புகொள்வதுபோல தம் மனைவியின் மீதும் அன்பு செலுத்த வேண்டும். மனைவியும் தம் கணவருக்கு அஞ்சி வாழ வேண்டும்.
ஏற்கனவே ஒளியின் மக்களாக எபேசிய திரு அவை இருக்க வேண்டும் என்று உரைத்த திருத்தூதர் பவுல் இந்த பகுதியில், நேரடியாக கணவர் மனைவியரின் நடத்தையைப் பற்றி அறிவுறுத்துகிறார். குடும்ப ஒழுக்கங்களைப் பற்றி பேசும் திருமுகங்களில் எபேசியர் திருமுகம் முக்கியம் பெறுகிறது.
வ.21: கிறிஸ்துவிற்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருக்க கேட்கிறார். கிறிஸ்துவிற்கு அஞ்சுதல் என்பதும் பழைய ஏற்பாட்டின் 'இறை அச்சம்' என்ற கருப்பொருளிலே பார்க்கப்படவேண்டும். அச்சம் என்பது இங்கே இறையன்பையும், இறைநம்பிக்கையையுமே அதிகமாக அடையாளப்படுத்துகிறது (ἐν φόβῳ ⸀Χριστοῦ, என் பொபோ கிறிஸ்டூ- கிறிஸ்துவில் அச்சத்தில்).
வ.22: திருமணமான பெண்களுக்கு அறிவுரை தொடங்குகின்றது. யூத கலாச்சாரத்தை போலல்லாது கிரேக்க கலாச்சாரத்தில் பெண்கள் சற்று முக்கியமானவர்களாக கருதப்பட்டிருக்க வேண்டும். கிறிஸ்தவ மதத்தின் தனி மனித சுதந்திரம் பற்றிய சிந்தனைகள், பெண்களுடைய முக்கியத்துவத்தை இன்னும் ஆழப்படுத்தியிருக்க வேண்டும். இதனால் பெண்கள் சில சபைகளில் தான்தோன்றித்தனமான வாழ்க்கையை முன்னெடுத்ததாகவும் சில ஆய்வுகள் காட்டுகின்றன.
இதனைத் திருத்தவே பவுல் இந்த குறிப்பிட்ட பெண்களை சீர்ப்படுத்த முயற்சிக்கிறார் என்று எடுக்க வேண்டும். பணிந்திருக்க சொல்வது அடிமையாக இருத்தலையோ அல்லது மடமையாக இருத்தலையோ நிச்சயமாகக் குறிக்காது. கிரேக்க விவிலியம் பணிவு என்ற சொல்லையே பாவிக்கவில்லை, மாறாக 'கணவருக்குரியவராக' என்ற சொல்லைத்தான் பாவிக்கிறது. αἱ γυναῖκες τοῖς ἰδίοις ἀνδράσιν ஹாய் குனாய்கெஸ் டொய்ஸ் இதியொய்ஸ் அந்திராசின்- பெண்களே உங்கள் ஆண்களுக்குரியவராக, ὡς τῷ κυρίῳஇ ஹோஸ் டோ கூரியோ, உங்களின் ஆண்டவரைப்போல.
வ.23: கிறிஸ்து திருச்சபைக்கு தலைவர் என்ற அடையாளம் இங்கே காட்டப்படுகிறது. திருச்சபையின் உன்னதமான நிலை, மனைவிக்கு கொடுக்கப்படுகிறது. திருச்சபை தன் கிறிஸ்துவில் முழுமை அடைகிறது, அதனை ஒத்த முழுமையை நல்ல மனைவி, நல்ல கணவரிடம் அடைகிறார். இதனால் இந்த உருவகத்தை அவர் ஒத்தமைவுக்கு எடுக்கிறார். அத்தோடு திருச்சபையை உடலாகவும் ஒப்பிடுகிறார் பவுல் (σῶμα சோமா-உடல்), இந்த உடலுக்கு இயேசுவே மீட்பராக இருக்கிறார் (σωτήρ சோடேர்- மீட்பர்).
பவுலுடைய காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான உரிமைகள் சமனாக பகிரப்படாத நிலை காணப்பட்டது. யூத சமுதாயமும், உரோமைய சமுதாயமும் ஆண்களையே மையப்படுத்தியது. அக்காலத்திலேயே பவுல் பெண்களின் உரிமைக்காக பல ஆயிரம் ஆண்டுகள் முன்கூட்டியே சிந்தித்திருக்கிறார் என்பதே உண்மை. பவுலுடைய வார்த்தைகளை சூழலியலுக்கு அப்பால் சென்ற பெண் அடிமைத்தனத்திற்கு சார்பாக பயன்படுத்துவது தவறாகும்.
வ.24: பணிவு கிறிஸ்தவத்தின் உன்னதமான விழுமியங்களில் ஒன்று. கிறிஸ்துவிற்கு பணிந்திருப்பதன் வாயிலாகத்தான் திருச்சபை புனிதப்படுகிறது, பாதுகாப்பாகவும் இருக்கிறது. இதனை பவுல் கணவன் மனைவி உறவிற்கு எடுக்கிறார். திருச்சபை கிறிஸ்துவிற்கு பணிந்திருப்பது போல, மனைவியரையும் கணவருக்கு பணிந்திருக்க கேட்கிறார் பவுல் அடிகளார்.
பணிவைக் குறிக்க ὑποτάσσω (ஹுபொடாஸ்ஸோ) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்த சொல் கீழ்படிவையும், ஆழமான அன்பு கலந்த விசுவாசத்தையும் குறிக்கிறது. உரிமையற்ற அடிமை வாழ்வைக் குறிக்காது.
வ.25: ஆண்களுக்கான மிக முக்கியமான படிப்பினை இங்கே கொடுக்கப்படுகிறது. பவுல் ஆண்களை கிறிஸ்துவிற்கு ஒப்பிடுகிறார். இதன் மூலம் ஆண்கள் கிறிஸ்துக்கள், அதாவது அனைத்திலும் நல் கனவான்களாக இருக்கவேண்டியவர்கள். கிறிஸ்து ஆண் ஆதிக்கத்திற்கு எதிரானவர். ஆண் ஆதிக்கத்தை வரவேற்கும் எந்த ஆணும் கிறிஸ்துவாக இருக்க முடியாது.
கிறிஸ்து திருச்சபை மீது எப்படி அன்பு செலுத்தினாரோ அதனைப்போலவே திருமணமான ஆண்கள் தங்கள் மனைவியர் மீது அன்பு செலுத்தக் கேட்கிறார் பவுல் (ὁ Χριστὸς ἠγάπησεν τὴν ἐκκλησίαν ஹொ கிறிஸ்டொஸ் ஏகாபேசென் டேன் எக்கேலசியான்- கிறிஸ்து திருச்சபையை அன்பு செய்தது போல). இங்கே கணவர்களுக்கு கொடுக்கப்படும் கட்டளை அன்புக் கட்டளை, இது மிக புனிதமான கட்டளை. இதனை விவரிக்க கிறிஸ்துவின் உயிர் கொடுக்கும் அன்பு உதாரணமாக எடுக்கப்படுகிறது. கிறிஸ்து திருச்சபைக்காக உயிரையே கொடுத்தார், அதனைப் போலவே கணவர்களின் அன்பும் இருக்க வேண்டும்.
துர்ரதிஸ்டவசமாக, பல ஆண்கள் தங்கள் மனைவியரை, மோக பொருளாகவும், அடிமைகளாகவுமே பார்க்கிறார்கள். தன் மனைவியை திருச்சபையாக பார்க்கும் கணவன், ஆண்மைக்கு வரைவிலக்கனம். தன் மனைவியை உண்மையான அன்பு செய்யாத எவரும், அவரிடம் இருந்து எந்த பணிவையும் எதிர்பார்க்க முடியாது, அதனை பவுலும் வலியுறுத்த வில்லை.
வ.26: கிறிஸ்து திருச்சபையை நீரினாலும், வார்த்தையாலும் தூய்மைப் படுத்தியுள்ளார் என்பது இங்கே சொல்லப்படுகிறது. இந்த நீரும் வார்த்தையும், திருமுழுக்கை நினைவூட்டலாம். வார்த்தையும் நீரும் இங்கே தூய ஆவியாரின் அடையாளம் என எடுக்கலாம் என்பது சில ஆய்வாளர்களின் கருத்து (ὕδατος ἐν ῥήματι, ஹுதாடொஸ் என் ரேமாடி- தண்ணீரின் மூலமாக வார்த்தையால்).
வ.27: கிறிஸ்து ஏன் இப்படிச் செய்தார் என்பது சொல்லப்படுகிறது. திருச்சபை கறைதிரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் இருக்கவே இப்படிச் செய்தார். இதனால் திருச்சபை தூய்மையாக, மாசற்றதாக, மாட்சியுடன் விளங்குகின்றது.
திருச்சபையின் பாதுகாப்பிற்கும், புனிதத்திற்கும், மாட்சிக்கும் காரணம் இயேசுக் கிறிஸ்து. இங்கே பயன்படுத்தப்படுகின்ற சொற்கள் இறையியல் ஆழம் பொதிந்தவை. அதனைத்தான் பவுல் ஆண்களின் கடமையாக காட்டுகிறார். சில அடிப்படைவாத பெண்ணியல்வாதிகள் புனித பவுலை, பெண் அடிமைத்தனத்தை பாராட்டுபவராக காட்டுகின்றனர். உண்மையில் பவுல் பெண்களுக்கு மிக புனிதமான இடத்தைக் கொடுக்கிறார். தாய் திருச்சபை கிறிஸ்துவின் அன்பிற்கு பாத்திரமானவள், அந்த இடம் பெண்களுக்குத்தான். ἁγία καὶ ἄμωμος ஹாகியா காய் அமோமொஸ்- புனிதமானதும், தூய்மையானதும்.
வ.28: கணவர்கள் தங்கள் மனைவியரை சொந்த உடலாக கருதுமாறு கேட்கிறார் பவுல். உடல் கிறிஸ்தவ ஆன்மீகத்தில் மெய். அது கிரேக்க சிந்தனையை ஒத்ததல்ல. சிலர் உடலை அசுத்தமாக பார்க்கிறார்கள்.
இது கிறிஸ்தவத்தின் படிப்பினை அல்ல. பவுல் உடலை, தூய ஆவியாரின் இல்லம் என்கிறார். ஆக உடல் தன்னிலே புனிதமானது.
மனைவியரை, கணவர்கள் தங்கள் சொந்த உடலாக கருதி (ἑαυτῶν σώματα. ஹெஅவ்டோன் சோமாடா), அன்பு செய்யக் கேட்கப்படுகிறார்கள். உடல் கணவருடையது, அதனை அன்பு செய்கிறவர் தன்னைத்தான் அன்பு செய்கிறார். மனைவி உடலின் இடத்தை பெறுவதால், உண்மையில் மனைவியை அன்பு செய்கிறவர், தன்னைத்தான் அன்பு செய்கிறார். ஆக மனைவியை அன்பு செய்யாதவர் தன்னைத்தானே வெறுக்கிறார்.
வ.29: தன்னைத்தானே எவரும் வெறுப்பாரில்லை என்பது பவுலுடைய வாதம். பவுல் இக்காலத்தில் வாழ்ந்திருந்தால், தம் உடலையும் வெறுப்பாரை அடையாளம் கண்டிருப்பார்.
சாதாரணமாக மனிதர்கள் தங்கள் உடலை பேணி வளர்க்கின்றனர் (ἐκτρέφει எக்ட்ரெபெய்-வளர்க்கிறார்). இதனை கிறிஸ்துவின் செயற்பாட்டுடன் ஒப்பிடுகிறார். கிறிஸ்துவும் தன் உடலான திருச்சபையை பேணி வளர்க்கிறார்.
வ.30: கணவர் மனைவியரைப் பற்றி ஒத்தமைவுடன் பேசியவர். இந்த வரியில் திருச்சபைக்கு அனைத்து அங்கத்தவர்களையும் ஒப்பிடுகிறார். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் உறுப்புக்கள் என்ற நிலையை அடைகிறார்கள் (ὅτι μέλη ἐσμὲν τοῦ σώματος αὐτοῦ ஹொடி மேலே எஸ்மென் டூ சோமாடொஸ் அவ்டூ- அதாவது நாம் அவரது உடலின் உறுப்புக்களாக இருக்கின்றோம்.).
வ.31: இந்த வரியில், அவர் மீண்டும் கணவர் மனைவி படிப்பினைக்கு வந்துவிட்டார். தொடக்க நூல் வார்த்தை ஒன்றை பவுல் கோடிடுகிறார் (காண்க தொ.நூல் 2,24). கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டு மனைவியுடன் ஒன்றித்திருக்கிறார். இருவரும் ஒரே உடல் என்கிறார்.
குடும்பம் கணவன் மனைவியை மையப்படுத்தியது. குடும்பம் எப்போது உருவானது என்பது ஒரு ஆச்சரியமான தேடல். மனிதன் இயற்கையாகவே ஒரு குடும்பப் பிராணி. யூத மதமும், கிறிஸ்தவ மதமும் தோன்றுவதற்கு முன்பே மனிதர் குடும்பமாக வாழ தொடங்கி விட்டனர். குடும்பங்களைப் பற்றி மதங்களின் சிந்தனைகள் மிகவும் அழகானவை. யூத-கிறிஸ்தவ மதங்கள் கடவுளை குடும்பங்களின் உருவாக்கினராக காட்டுவதன் பின்னால் ஆழமான இறையியல் உள்ளது. குடும்பங்கள் பேணப்படவேண்டும் என்பதற்கு இந்த சாட்சியம் மிக முக்கியமாகிறது.
வ.32: கணவரும் மனைவியும் சேர்ந்து உருவாக்கும், குடும்பத்தின் உறவை, கிறிஸ்துவிற்கும் திருச்சபைக்கும் ஒப்பிடுகிறார் பவுல். இதனை பெரிய மறைபொருளாகக் காட்டுகிறார். மறைபொருள் என்பதே மிக முக்கியமானது, இதனை அவர் பெரிய மறைபொருள் என்கிறார் (τὸ μυστήριον τοῦτο μέγα ἐστίν· டொ முஸ்டேரியோன் டூடூ மெகா எஸ்டின்- இது பெரிய மறைபொருளாக இருக்கிறது).
குடும்பங்களுக்கு எதிராக செயற்படுகிறவர்கள், குடும்பங்களை சிதைக்கிறவர்கள், அல்லது குடும்பங்ளை வெறும் உறவு நிறுவனங்களாக பார்க்கிறவர்கள் இந்த இறைவார்த்தைகளை கவனமாக வாசிக்க வேண்டும். குடும்பங்களுக்கு எதிரானவர்கள் கிறிஸ்துவிற்கு எதிரானவர்கள். அத்தோடு ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்துதான் ஒரு குடும்பத்தை உருவாக்க முடியும் என்பதும் விவிலியத்தின் கட்டளை.
வ.33: இந்த இறுதியான வரி, கணவருக்கும் மனைவிக்கும் எச்சரிக்கை கலந்த அன்புக் கட்டளை கொடுக்கிறது. கணவர் மனைவியிடம் அன்பு செலுத்த கேட்கப்படுகிறார், அதுபோல மனைவி தன் கணவருக்கு பணிவு காட்ட கேட்கப்படுகிறார்.
இந்த இரண்டு பண்புகளும் இறையியல் பண்புகள், தூய ஆவியாரின் கொடைகள். தெய்வ பயமும், அன்பும் அனைவருக்கும் உரியதே.
|