திருவருகைக் காலம் 4 ஆம் வாரம்ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்முதல் வாசகம் : 2 சாமூவேல் 7:1-5, 8b-12, 14-16 இரண்டாம் வாசகம் : உரோமையர் 16:25-27 நற்செய்திவாசகம் ; லூக்கா 1:26-38 திருவருகைக் காலம் 4 ஆம் வாரத்தில் காலடி வைக்கின்றோம். ஆண்டவரின் வருகைக்காக நம்மை நாமே எவ்வாறு தயார் செய்துள்ளோம்? நமது கரடு முரடான வழிகளைச் செம்மையாக்கினோமா? நமது ஆன்மீக வாழ்க்கையில் காணப்பட்ட ஏற்றத் தாழ்வுகளை ஆய்வு செய்து ஒளியான இறைவனின் அருளைப் பெற்றுக் கொண்டோமா? மனம் மாற்றம் பெற்று இறைவனுடன் ஒப்புரவு செய்து கொண்டோமா? நமது வாழ்க்கையில் இறைவனுக்கும் அடுத்திருப்பவர்களுக்கும் எதிராக உள்ள பிளவுகளை சரி செய்யும் போதுதான் ஆண்டவர் நம்மோடு இருப்பார் என்பது உண்மை. இம்மானுவேலாகிய இறைவன் நம்மோடு நமது உள்ளத்தில் உள்ளார் என்பதை உணர்ந்து நன்றாக அறிந்திருக்க வேண்டும். இறைமகன் இயேசு உண்மையில் வாழ்கின்றார். அவரைக் அழைக்கும்போது உடனிருந்து செயலாற்றுபவர். அவருக்கு விருப்பமான செயல்களைச் செய்வதற்கு நமக்கு ஆவியானவரின் துணை தேவை. திருப்பாடல் 127 முதல் வசனம் கூறுவது ‘ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும் என்று மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. ஆண்டவருக்காக கட்டப்படும் ஆன்மீகம் அவருடைய துணையால்தான் கட்டி எழுப்ப முடியும். மனித பலத்தால் கட்டப்பட்டால் அது கண்டிப்பாக கட்டமுடியாது. இறைவன் கையில் நமது விருப்பத்தையும், வேண்டுதல்களையும் விட்டுக் கொடுத்து அவருடைய வார்த்தையின்படி வளர வேண்டும். நமது விருப்பம் இறைவனுக்கு ஏற்றதாக இருக்கின்றதா? இறைவன் நம்மோடு இருக்கின்றாரா? நமது குடும்பத்திலும், சமுதயாத்திலும், வாழ்க்கைச் சூழ்நிலையிலும் இறைவனுடைய அருள் பிரசன்னத்தை உணர்கின்றோமா? இறைவாக்கினர் நாத்தான், ஆண்டவரின் தூதராகிய கபிரியேல் கூறியது போல் ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார் என்று மற்றவர்களிடம் கூறுகின்றோமா? அல்லது மற்றவர்கள் நம்மைப் பார்த்து கூறுகின்றார்களா? சிந்திப்போம்.
இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் தன்னுடைய மீட்பின் திட்டத்தில் இரண்டு மிகமுக்கியமான நபர்களின் வாழ்க்கையில் எவ்வாறு இறைவன் செயலாற்றுகின்றார் என்பதை விளக்குகின்றது. இறைவனால் அபிசேகம் செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட தாவீது அரசருடைய வாழ்க்கையிலும், அன்னைமரியாளினுடைய வாழ்க்கையிலும் ஆண்டவர் உடனிருந்து செயலாற்றினார் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்ற உண்மையே. தாவீது அரசர் கேதுரு மரங்களாலான அரண்மனையில் தான் மட்டும் வாழ்வதை உணர்கின்றார் ஆனால் இறைவனுடைய பேழையோ கூடாரத்தில குடியிருக்கின்றது என்று வருத்தத்துடன் இறைவாக்கினர் நாத்தானை நோக்கி கேட்கின்றார். அப்போதுதான் அவர் தாவீது அரசரிடம் கூறுகின்றார் “ நீ விரும்பியது அனைத்தையும் செய்துவிடும் ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார் என்று கூறுகின்றார். தாவீது அரசர் இறைவனுக்கு ஆலயம் எழுப்ப விரும்புகின்றார் ஆனால் இறைவன் இறைவாக்கினர் நாத்தான் வழியாக ஒரு வார்த்தைக் கூறுவதைக் சற்று கவணிப்போம். நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன் என்று. இதற்கு அர்த்தம் தான் ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார். இறைவாக்கினர் மோசேயிடமும், யோசுவாவிடமும் இறைவன் கூறியதும் இதுதான். எனது பிரசன்னம் உன்முன்பாகச் செல்லும். உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன் என்று வாக்கு தருகின்றார். மேலும் திருவெளிப்பாடு நூல் அதிகாரம் 21, 3 ஆம் இறைவசனம் கூறுவது, “இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவரகள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார், அவரே அவர் களுடைய கடவுளாய் இருப்பார் “என்று. தாவீது அரசர் விரும்பினாலும் அவரால் இறைவனுக்கு ஆலயம் எழுப்பமுடியவில்லை ஆனால் ஆண்டவரே சாலமோன் வழியாக ஆலயத்தைக் கட்டி எழுப்பினார். இறைவனின் திருவுளம் வேறு மனிதனின் திருவுளும் வேறு என்பதை இதனால் அறியமுடிகின்றது.
அன்னை மரியாள் இம்மானுவேலாகிய இறைவனை தனது உதரத்திலே தாங்கி இறைவனுக்கு ஆலயமாக விளங்கினார். ஆண்டவரின் தூதர் இவ்வாறு கூறுகின்றார் , அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார் என்று வாழ்த்துகின்றார். அன்னை மரியாள் இறைவனுடைய அருளைக் கண்டடைந்துள்ளார். உன்னத இறைவனின் வல்லமையால் நிழலிட்ட தூய்மை நிறைந்த அன்னை. அவர் பெற்றெடுக்கும் குழந்தைக்கு இயேசு என்னும் பெயரிடுவீர் என்றும். அவருடைய ஆட்சி முடிவே இராது என்று கூறகின்றார். அன்னை மரியாள் இறைவனுடைய அழைப்பை தயங்காமல் ஏற்று, அவருடைய திருவுளத்திற்கு அடிபணிந்து, மீட்பரை உலகிற்கு தந்தவர். அன்னை மாியாள் இறைவனிள் அருளைப் பெற்றிருந்தாலும் பலவகையான இன்னல்களுக்கும் அவமானங்களுக்கும் ஆளாகி இறுதியில் வெற்றி பெற்று பரலோக பூலோக ராணியாக விளங்குகின்றார். அன்னை மரியாள் அருள்நிறைந்த உறைவிடமாக இருந்தது போல் நானும் நீங்களும் இன்று வாழவேண்டும். மனம் என்னும் குகையில் இம்மானுவேலாகிய இறைவன் குடிகொண்டிருக்க வேண்டும். அப்போது அமைதியும் அன்பும் நம்மில் வளரும்.
இறைவனின் உருவத்தை பெற்றுள்ள நாம் அனைவரும் இறைவன் வாழும் கோவில் என்று இறைவார்த்தை கூறுகின்றது. இந்த புனிமான கோவிலை அருட்சாதனங்கிளின் வழியாக அலங்காரம் செய்து இம்மானுவேலனாகிய இறைவனை வரவேற்க வேண்டும். இன்று நம்மைக் காணும் பிறர் எப்பொழுதாவது கூறியிருக்கின்றார்களா? ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார். நீங்கள் கடவுளின் அருளைக் கொண்டுள்ளீர்கள் என்று. சிந்தித்து செயலில் இறங்குவோம். காலம் தாழ்த்த வேண்டாம். இறைவன் நம்மோடு இருக்கும் போது நம்மால் அனைத்தும் செய்ய முடியும். குயவன் கையிலுள்ள களிமண்ணைப்போல நாம் அனைவரும் இறைவன் கையில் இருந்தால் அவர் நம்மை அவருடைய விருப்பம்போல் உள்ள கலமாக மாற்றி அமைப்பார். இறைமகன் இயேசுவின் பிறப்பபை கொண்டாடுவதற்கு முன்பு முதலில் உள்ளார்ந்த மாற்றத்தைப் பெற்று இறைவன் வாழும் கோவிலாக நம்மை கட்டி எழுப்ப அவரிடம் முழுமையாக சரணடைவோம்.
என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன், மதிப்புமிக்கவன். நான் உன்மேல் அன்பு கூர்கிறேன். எசாயா 43:4a
|