பொதுக்காலம் 22ம் ஞாயிறுகைம்மாறு கருதாத வாழ்வுசீராக் 27: 4-7, எபிரேயர்; 10; 5-10 லூக்கா : 1; 39-45 பொதுக்காலத்தின் 22 ஆம் ஞாயிற்றில் இருக்கும் நம்மை இன்றைய வாசகங்கள் வழியாக கைம்மாறு கருதாத வாழ்வு வாழ இயேசு அழைக்கின்றார். விருந்தில் முதல் இடத்தைத் தேடாதே. வறியவர்களுக்கு விருந்து வை. பணிவாய் இரு என்னும் மூன்று முக்கியமான பண்புகளில் வளர இயேசு அழைக்கின்றார்.
விருந்தில் முதலிடத்தை தேடாதே.
விருந்து என்பது உறவை வளர்த்தெடுக்கும் அற்புதமான ஒரு நிகழ்வு. குடும்பங்களில் கொண்டாடப்படும் விழாக்களுக்கு நாம் ஒன்று கூடும் போதுதான் உறவுகள் புதுப்பிக்கப்படுகின்றன. நம்முடைய பழைய உறவினர்கள், மறந்து போன சொந்தங்கள் என அத்தனை பேரையும் பார்த்து பழக நமக்கு வாய்ப்பு கிடைக்கின்றது. இப்படிப்பட்ட விருந்து ஒன்றிற்கு ஒருவர் நம்மை அழைக்கின்றார் என்றால் நம்மோடு அவர் கொண்டுள்ள உறவை வளர்ப்பதற்கும் வலுப்படுத்துவதற்குமே. ஊர்களில் அழையாத விருந்திற்கு யாரும் செல்வதில்லை. அதிலும் குடும்ப உறுப்பினர்களில் யாரையாவது மறந்துவிட்டோம் அல்லது பத்திரிக்கை கொடுக்கும் போது விடுபட்டுவிட்டது என்றால் அவ்வளவு தான். விருந்து வருந்தும் இடமாக மாறும் அளவுக்கு சூழல் மாறிவிடும். ஆக விருந்தும் அதற்கு அழைக்கும் முறையும் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. இத்தகைய விருந்திற்கு அழைக்கப்பட்ட நாம், நாமாகவே முன் இருக்கையை தேர்ந்துகொண்டோம் என்றால் அதனால் அவமானம் நமக்கு தான். பந்தியில் முதல் இருக்கையை நாடுதல் நமது மேட்டிமையைக் குறிக்கின்றது. இயேசுவின் காலத்திலும் திருமணம் திருவிழா போன்ற நற்காரியங்களுக்கு முக்கியமான விருந்தினர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களும் விருந்துகளுக்கு இறுதியாக வருவதையே தங்களது வழக்கமாக்கிக் கொண்டனர்.
இறுதியாக வந்தாலும் அவர்களுக்குரிய முதல் இருக்கை அவர்களுக்கென்று ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்று விரும்பினர். இந்த முக்கியமானவர்கள் எந்த விருந்துகளுக்கு சென்றாலும் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் அமர்ந்துவிடுவர் அல்லது யாராவது வந்து அடடே நீங்களா உங்களுக்காக தான் இத்தனை நேரம் காத்திருந்தோம் வாங்க வாங்க என்று சொல்லி அவர்களை முன்னிலைப்படுத்தி விழாவையும் விழா நாயகர்களையும் பின்னால் தள்ளி விடுவர் .இப்படி செய்வதனால் விருந்திற்கு இவர்களை அழைத்தவரை சென்று பார்க்கும் பழக்கமோ அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டினை தெரிவிக்கும் பழக்கமோ இவர்களுக்கு இல்லாமல் போய் விடுகின்றது. விருந்து கொடுப்பவர்களே இவர்களை தேடிவந்து வாழ்த்தி நன்றியைத் தெரிவித்து வந்தனர். இது முறையன்று இது விருந்திற்கான நாகரீகமும் அன்று என்று எடுத்துரைக்கின்றார் இயேசு. விருந்து என்பது ஒருவரை ஒருவர் நன்றாக பார்த்து பேசி பழகி தங்களுடைய அன்பையும் உறவையும் ஆழப்படுத்திக் கொள்வதற்காகவே. இதனை மறந்து தங்களுக்கென்று ஒரு வட்டம் அமைத்துக் கொண்டு மற்றவர்கள் அனைவரும் தங்களை வந்துக் காண வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் தவறானது என்கின்றார். தான் மட்டுமே முன்னால் நிற்க வேண்டும் தனக்கு மட்டுமே அத்தனை சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது தவறானது. என்று வலியுறுத்துகின்றார்.
பணிவாய் இரு.
பணிவு மனிதனை மேன்மைப்படுத்தும் ஒரு சிறந்த குணம். பணிவுடையவனாகவும் இன்சொல்லை உடையவனாகவும் இருப்பதே ஒரு மனிதனுக்கு மிகச்சிறந்த அணிகலன் என்று வள்ளுவர் கூறுவது போல பணிவோடு வாழ இயேசு இன்றைய நாளில் அழைக்கின்றார். தன்னைத் தானே உயர்த்துகிறவன் எவரும் தாழ்த்தப்படுகிறான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுகின்றான். உயரமான மலை ஏறுபவர்கள் நிமிர்ந்து நின்று ஏறுவதில்லை மாறாக குனிந்து தான் ஏறுகின்றனர் அப்படி ஏறும் போது அவர்களுக்கு இன்னும் அதிக உயரத்தை அடைய வலிமை கிடைப்பதாக உணர்கின்றனர். வாழ்க்கையும் அப்படித்தான் பணிந்து போக போக நாம் உயர்வடைகின்றோம். உதிக்கும் சூரியன் தன்னைத்தாழ்த்தி கீழிறங்கி மறைந்தால் தான் அடுத்த நாள் புதிய சூரியனாக பிரகாசிக்கவே முடியும். நான் தான் உலகத்திற்கே ஒளி கொடுக்கின்றேன் நான் மறையவும் மாட்டேன் பணியவும் மாட்டேன் என்று நினைத்தால் நம் கதி என்னவாகும். (12 மணி நேர வெயிலையே நம்மால் தாங்க முடிவதில்லை இதில் முழு நேரமும் வெயில் என்றால் பாதிபேர் ஆப்பிரிக்க நாட்டிற்கு நிறம் மாறி இருப்போம்.)
ஆக நாம் பார்க்கும் இயற்கை படைப்புக்கள் அனைத்தும் தன்னைத்தானே தாழ்த்தி முன்னுக்கு வருகின்றன. எனவே நாம் பணிவோடு செயல்பட குறிப்பாக விருந்திலும் பணிவோடு இருக்க இயேசு வலியுறுத்துகின்றார். நம்மை விருந்திற்கு அழைத்திருந்தாலும் நாம் முதல் இருக்கையை நாடாது பிறருக்கு முன்னுரிமை கொடுத்து வாழ வேண்டும். நாமாக முன்னுரிமையைத் தேடிக்கொண்டால் அது அவமானத்தையும் கஷ்டத்தையும் நமக்குக் கொடுக்கும். அதுவே நம்மைத் தேடி வந்தால் நமக்கு மகிழ்வையும் மன நிறைவையும் தரும்.
கைம்மாறு கருத்தாத உதவி.
நாம் கொண்டாடும் விருந்துகளில் அழைக்கப்படும் விருந்தாளிகள் பெரும்பாலும் நம்மை அவர்களது விருந்துகளுக்கு அழைத்தவர்களாகவே இருப்பர். பரிசுப்பொருட்களை பணமாகவும் பொருளாகவும் கொடுத்தவர்கள் தங்களது இல்ல விழாக்களின் போது அதனை மீண்டும் பெற்றுக் கொள்கின்றனர். கொடுத்தல் வாங்குதலை எதிர்பார்த்து செய்யப்படுவதாகவே பல விருந்துகள் உள்ளன. திருநெல்வேலியில் உள்ள ஒரு தன்னார்வ அமைப்பு வயோதிகர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் உணவு வழங்கும் செயலை வித்தியாசமாக செய்கின்றது. தங்களது குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு, நாட்டில் துன்புறும் ஏழைகளின் நிலையை எடுத்து சொல்லி குழந்தைகளின் சிறுசேமிப்பில் வாங்கிய பொருட்களை அவர்களே நேரடியாக கொடுக்க வைக்கின்றனர். கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை என்பதை வாழ்க்கை அனுபவத்தின் மூலம் கற்றுக் கொடுக்கின்றனர். உனக்கு எத்தனை பரிசுப் பொருட்கள் வந்தது என்று கேட்கும் நிலை மாறி நான் இத்தனை பேருக்கு பரிசளித்தேன் அதுவும் என்னுடைய சிறு சேமிப்பில் இருந்து பரிசளித்தேன் என்று குழந்தைகள் மகிழ்ந்து கூற வழிவகுக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது வறியவர்களின் ஆசை என்னவென்று கேட்டு அதனைப் பூர்த்தி செய்கின்றனர். கிடைப்பதை உண்டு பசியாறி உயிர் வாழும் மக்கள் மத்தியில் சிலர் தங்களது வாழ்வில் மீன் உணவு உண்டதே இல்லை என்றும் அதனை யாரும் அவர்களுக்கு வழங்கியதே இல்லை என்பதையும் அறிந்து மீன் உணவு வகைகளை சமைத்து அவர்கள் அனைவருக்கும் அளித்து மகிழ்ந்திருக்கின்றனர். நம்மிடம் இருப்பதில் இருந்து கொடுப்பதோ அல்லது எஞ்சியவற்றைக் கொடுப்பதோ எல்லாராலும் முடியும். ஆனால் அவர்கள் தேவை ஆசை என்னவென்று அறிந்து கொடுப்பது எல்லாராலும் முடியாது. நன்றி என்ற வார்த்தையையும் கண்களில் ஆனந்தக் கண்ணீரையும் தவிர அவர்களால் வேறு எந்த பரிசுப் பொருட்களையும் கொடுக்க முடியாது . இத்தகைய கைம்மாறு கருதாத செயல்களையே இறைவன் செய்ய சொல்கின்றார். இறுதியாக,
கூர்ந்து கவனித்தல் இங்கு இயேசு ஓய்வு நாளில் என்ன செய்யப்போகிறார் அவரிடம் என்ன குற்றம் காணலாம் என்று பரிசேயர்களும் யூதர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் கொண்டு அவரை மடக்கி இக்கட்டில் மாட்டிவைக்க எண்ணினர். மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றனர். அடுத்தவர் என்ன தவறு செய்வார் எப்படி வார்த்தைகளை சிதறவிடுவார் அதைக் கொண்டு அவர்களை எப்படி துன்பத்தில் சிக்க வைக்கலாம் என்று துடித்துக் கொண்டிருப்பர். அதில் அவர்களுக்கு ஒரு ஆனந்தம். இத்தகைய கூர்ந்து கவனித்தல் தேவை இல்லை என்று வலியுறுத்துகின்றார் இயேசு. பிறர் செய்யும் நல்லவற்றை மட்டும் பாருங்கள் அவர்கள் என்ன தவறு செய்கின்றார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் நாம் தீய எண்ணங்களாலே நிரப்பப்படுகின்றோம். எனவே இத்தகைய கூர்ந்து கவனித்தலைக் கைவிடுத்து வாழவேண்டும் என்று எடுத்துரைக்கின்றார்.
ஆக முதல் இருக்கையை நாடாது, பணிவோடு, கைம்மாறு கருதாமல், பிறரது குற்றங்களைக் காணாமல் நாம் வாழும் வாழ்வு மிகச்சிறந்த வாழ்வாக இருக்கும் என்று எடுத்துரைக்கின்றார். எனவே அன்பு உள்ளங்களே கைம்மாறு கருதாத வாழ்வு வாழ்ந்து சிறக்க இறைவன் தன்னுடைய அருளையும் ஆசீரையும் நம்மீதும் நம் குடும்பத்திலுள்ள அனைவர் மீதும் நிறைவாகப் பொழிய இறையருளை சிறப்பாக வேண்டுவோம்.
|