இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் நான்காம் ஞாயிறு

இக்கால இறைவாக்கினர்களாக வாழ்வோம்

இணைச்சட்டம் 18:15-20,
1 கொரிந்தியர் 7:32-35,
மாற்கு 1: 21-28

 அரசன் ஒருவர். தனக்குப் பின் தன் நாட்டின் குறுநிலப்பகுதியை ஆள துணிவுள்ள ஒருவரைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். எனவே தன் நாட்டில் இருக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களில் ஒருவராவது, தன்னம்பிக்கை உடையவராக, நாட்டை ஆளும் தகுதி உள்ளவராக இருக்கின்றாரா என்று பார்க்க ஒரு சிறிய போட்டி வைத்தார். ஊரின் எல்லையில் உள்ள கோட்டையின் கதவுகளை மூடி இந்தக் கதவை ஒரு கையால் திறந்து வெற்றி பெறுபவருக்கு இந்த  குறுநிலப்பகுதியை ஆளும் அரசராகும் தகுதி வழங்கப்படும். தோற்பவரின் கைகள் வெட்டப்படும் என்று அறிவித்தார். அரசராகும் ஆசை பலருக்கு இருந்தாலும் தோற்றால் கைகள் வெட்டப்படுமே என்று அஞ்சி அதில் பங்கேற்காமல் பலர் இருந்தனர். சிலர் முன்வந்தாலும் மக்களின் அவநம்பிக்கையான சொல் மற்றும் செயல்களால் போட்டியில் பங்கேற்காமல் இருந்தனர். இறுதியில் ஒரு இளைஞன் மட்டும் முன்வந்து கோட்டையின் கதவுகளைத் திறக்க துணிந்தான். மக்களும் அவனது நண்பர்களும் அவனிடம், நன்றாக யோசித்து செயல்படு, தோற்றால் கைகள் போய்விடும். அதன்பின் உன் வாழ்நாள் முழுவதும் கைகள் இல்லாமலே நீ வாழ வேண்டியிருக்கும் என்று கூறினர்.

அவனோ மிக உறுதியான மனதுடன், முயன்று தான் பார்ப்போமோ, வென்றால் நாட்டை ஆளும் உரிமை கிடைக்கும். தோற்றால் கைகள் தானே போகும், உயிரல்லவே என்றான். இன்னும் அதிமதிகமாக துணிவையும் தன்னம்பிக்கையையும் மனதில் கொண்டவனாக, தன் முழு பலத்துடன் கோட்டையின் கதவுகளைத் தள்ளினான். என்ன ஆச்சர்யம் கதவுகள் எளிதில் திறக்கப்பட்டன. ஏனென்றால் கோட்டைக் கதவுகளின் தாழ்ப்பாள்கள் பூட்டப்படாமலேயே இருந்தன. இளைஞன் ஒருவன் போட்டியில் வென்றுவிட்ட செய்தி மன்னரின் காதுகளை எட்டவே, இளைஞன் இருக்கும் இடத்திற்கு விரைந்து வந்தார். இளைஞனை மக்கள் அனைவரும் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது அரசன், வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதும் நாம் எளிதில் வென்று விடலாம். எதிலும் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் நாம் இறங்கி செயல்படும்போது, அதில் நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும் என்று கூறினார். சில மனிதர்கள் வெற்றியை விட தோல்வியையே அதிகமாக எண்ணுகின்றார்கள் அதனால் தான் அவர்களால் எளிதில் வெற்றி பெற முடிவதில்லை. தோற்றால் என்ன ஆகும் என்று ஒருவன் நினைக்க ஆரம்பிக்கும் பட்சத்தில் வெற்றி அவனைவிட்டு வெகுதொலைவிற்கு செல்ல ஆரம்பிக்கின்றது என்று கூறி வெற்றி பெற்ற இளைஞனிடம் குறுநிலப்பகுதியை ஒப்படைத்தார்.

ஆம் அன்பு உள்ளங்களே பொதுக்காலத்தின்  நான்காம் வாரத்தில் இருக்கும் நம் அனைவரையும், துணிவுள்ளவர்களாக தன்னம்பிக்கை உள்ளவர்களாக மொத்தத்தில் இத்தகைய பண்பு கொண்ட இக்கால இறைவாக்கினர்களாக வாழவே இறைவன் அழைக்கின்றார். துணிவும் தன்னம்பிக்கையும் கொண்ட இளைஞன் எவ்வாறு போட்டியில் வென்று நாட்டை அரசாளும் உரிமை பெற்றானோ அதுபோலவே, கடவுளின் வார்த்தையை உலகிற்கு எடுத்துரைக்க அழைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும். நிகழ்காலத்தை அறிந்து கொள்பவர், கடவுளின் திட்டங்களுக்கு ஏற்ப தானும் நடப்பவர், பிறரும் நடக்க உதவுபவர், சான்றுள்ள வாழ்க்கை வாழ்பவரே இறைவாக்கினர் என்பவராவார். அதுமட்டுமன்று கடவுளின் வார்த்தையை மட்டும் எடுத்துரைப்பவராக, கவலையற்றவராக, அதிகாரத்துடன் போதிப்பவராக இறைவாக்கினர் இருக்கவேண்டும், இத்தகைய பண்பு நலன்கள் கொண்டவரையே இறைவாக்கினராகக் கடவுள் தேர்ந்தெடுக்கின்றார் என்று இன்றைய வாசகங்கள் வழியாக நமக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. 

கடவுளின் வார்த்தையை மட்டும் அறிவிக்கும் இறைவாக்கினர்

முதல் வாசகத்தில் மோசே கடவுளின் வார்த்தையை இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துரைக்கும் பகுதியை நாம் வாசிக்கக் கேட்டோம். மோசே இணையில்லாத கடவுளின் இறைவாக்கினர். அவரைப்போன்றே வேறொரு இறைவாக்கினரை உங்கள் நடுவிலிருந்து தோன்றச் செய்வேன் என்று கூறுகின்றார் இறைவன். கானான் நாட்டை சென்றடைய மேற்கொண்ட பயணத்தில் இறைவனின் குரலுக்கு செவிசாய்க்காமல் தங்கள் மனம் போன போக்கில் வாழ்ந்ததாலேயே இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டைக் காணமுடியாமல் மடிந்தனர். மாறாக அவர்களது தலைமுறையினர் வாக்களிக்கப்பட்ட நாட்டைச் சென்றடைந்தனர். நிகழ்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை நன்கு அறிந்து அதற்கேற்ப தனக்கு கீழ் இருக்கும் மக்களை வழிநடத்திச் செல்பவரே நல்ல தலைவர் நல்ல இறைவாக்கினர். மேலும் கடவுளுடைய வார்த்தையை இனம் கண்டறிந்து அதனை மக்களுக்கு எடுத்துரைக்கும் மனநிலை கொண்ட மக்களுள் ஒருவரையே தனது இறைவாக்கினராகத் தேர்ந்தெடுக்க விரும்புகின்றார் இறைவன். இக்கால இறைவாக்கினர்களாகிய நாம் நமது வாழ்வியல் சூழலில் நடக்கும் செயல்களில் இறைத்திருவுளத்தைக் கண்டறிந்து அதனை பிறருக்கு எடுத்துரைப்பவர்களாக வாழவேண்டும். கடவுள் நம்மிடம் பல வழிகளில் பேசுகின்றார். நாம் சந்திக்கும் மனிதர்கள், கிடைக்கும் அனுபவங்கள்,  நிகழ்வுகள், என எல்லாவற்றிலும் நம்மோடு பேசி நல்வார்த்தைகளை நமக்கு எடுத்துரைக்கும் இறைவன் குரலை அடையாளம் கண்டு நாம் அதனைப் பிறருக்கு எடுத்துரைக்கக் கூடியவர்களாக வாழ்வோம்.

கவலையற்றவர்களான இறைவாக்கினர்கள்

இன்றைய நமது இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், இறைப்பணி செய்பவர்கள் மனத்துறவு மேற்கொள்பவர்களாக இருப்பது நலம் என்று எடுத்துரைக்கின்றார். திருமண உறவால் இணைக்கப்பட்ட மனிதர்கள் ஒருவர் மற்றவரின் தேவையையும் நலனையும் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு செயல்படுவார்கள். ஆனால் திருமணமாகாதவர்கள் முழு மனநிறைவுடன் கடவுள் பணியை ஆற்றமுடியும், கவலையற்றவர்களாக வாழ முடியும் என்று கூறுகின்றார். கவலை ஒரு மனிதனின் எண்ணங்களையும் நற்செயல்களையும் விழுங்கிவிடும் தன்மை கொண்டது. தீய எண்ணங்களின் கூடாரம் கவலை. கவலை சூழ்ந்துகொண்ட மனிதனால் எந்த ஒரு செயலையும் மனநிறைவுடன் செய்ய இயலாது. கவலை நம் ஆற்றலையும் உடல் வலிமையையும் இழக்கச்செய்யும்.

நாம் கவலையற்று மனமகிழ்வுடன் இருக்கும்போது நமது உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். பல நல்ல செயல்களை நம்மால் செய்ய முடியும். தெளிவாக துணிவாக பல முயற்சிகளை எடுத்து அதில் நாம் நிறைவான  வெற்றியையும் அடையமுடியும். எனவே இறைவனின் வார்த்தையை நமது சொல்லாலும் செயலாலும் பிறருக்கு எடுத்துரைக்க அழைக்கப்பட்டிருக்கும் நாம் கவலை என்னும் தீய ஆற்றல்  நம்மைத் தாக்காதவாறு பார்த்துக்கொள்வோம். இக்காலத்தில் கவலைப்பட எதுவுமே இல்லை என்று கவலைப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. எனவே கவலையற்றவர்களாக வாழ்வோம். கடவுளின் வார்த்தையை கவனமுடன் எடுத்துரைப்போம்.

அதிகாரத்துடன் போதிக்கும் இறைவாக்கினர்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, பேய் பிடித்த ஒருவரை குணமாக்கும் நிகழ்வில் அதிகாரத்துடன் இயேசு அதற்கு கட்டளையிடுகின்றார். தொழுகைக்கூடம் என்பது இறைவார்த்தையை வாசிக்கும் இடம் அங்கும் கூட தீய ஆவியினால் பிடிக்கப்பட்ட நபர் இருக்கின்றார். ஆக கடவுளைத்தேடி, கடவுள் இருக்கும் இடத்திற்கே நாம் சென்றாலும் கூட, நம்மை சோதிக்க தீயஆவி முயற்சிக்கும். இயேசுவைக் கண்ட பேய்கள் எங்களை அழித்துவிடவா இங்கு வந்தீர்? உமக்கு இங்கு என்ன வேலை என்று கேட்கின்றன. இயேசு வாயை மூடு இவரை விட்டு வெளியே போ என்று பதிலளிக்கின்றார். அவற்றிற்கு அதிகாரத்துடன் கட்டளையிட்டு அம்மனிதரை விட்டு வெளியே போய்விட சொல்கின்றார் அவைகளும் பெருங்கூச்சல் எழுப்பி, அங்கிருந்து வெளியேறுகின்றன. இயேசுவின் அதிகாரத்துடன் கூடிய கட்டளையானது தீய ஆவிகளை விரட்டியடிக்கின்றது. நாமும் இறைவார்த்தையை அதிகாரத்துடன் எடுத்துரைக்கும் போது முதலில் நம்மில் உள்ள தேவையற்ற எண்ணங்கள் நம்மை விட்டு வெளியேறுகின்றன. நம்மைச்சுற்றிலும் உள்ள

தீய ஆவியின் செயல்பாடுகள் அனைத்தும் மறைந்து விடுகின்றன. நாம் நல்ல எண்ணங்களாலும் நற்தூண்டுதல்களாலும் ஈர்க்கப்படுகின்றோம். எனவே துணிவுடன் அதிகாரத்துடன் நாம் இறைவார்த்தையைப் பிறருக்கு எடுத்துரைப்போம்.

ஆக இக்கால இறைவாக்கினர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் ஒவ்வொருவரும் கடவுளின் வார்த்தையை மட்டும் எடுத்துரைப்பவர்களாக, கவலையற்றவர்களாக, துணிவுடனும் அதிகாரத்துடனும் இறைவார்த்தையை எடுத்துரைப்பவர்களாக வாழ முயற்சிப்போம். இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தாரோடும் இருப்பதாக ஆமென்.