பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறுமனநிறைவோடும் மனமகிழ்வோடும் வாழ்யோபு 7: 1-4,6-7 1 கொரிந்தியர் 9: 16-19, 22-23, மாற்கு 1: 29-39நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது நம்மைச்சுற்றி வாழ்பவர்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைத்து உதவி செய்து வாழ்பவர்கள் தான் மனநிறைவுடன் வாழ்பவர்கள். “மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை” என்று கூறுவார் அறிஞர் சாக்ரடீஸ். ஏழையான ஒருவன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். காலையில் வயலுக்கு சென்று கடுமையாக உழைப்பது, மாலையில் வீட்டுக்கு வந்ததும் மனைவி குழந்தைகளுடன் மகிழ்ந்து உரையாடி, உறங்குவது என்று வாழ்ந்து வந்தான். இவன் இப்படி மகிழ்வாக வாழ்வதைக் காண பொறுக்காத அந்த ஊரின் பண்ணையார், அவனை சந்தோசமாக வாழவிடக்கூடாது என்று எண்ணினான். அவனுக்கு பிற இதர செல்வங்களின் மேல் ஆசையைத் தூண்டினார். அவன் எதற்கும் மடியவில்லை. அவனது மனைவிக்கு நகை, புடவை, சொத்து என்று பிற பெண்கள் வழியாக ஆசையை ஏற்படுத்தினான். எதுவும் நடக்கவில்லை. இறுதியாக ஒரு தந்திரக்காரனிடம் ஆலோசனைக் கேட்டு அதன்படி நடக்க முயன்றான். இரவோடு இரவாக ஏழைக்குடியானவன் வீட்டின் முன் 99 பொற்காசுகள் அடங்கிய பணமூட்டையை வைத்தான்.
மறுநாள் காலையில் வேலைக்குச்செல்லும் முன் அந்தக் குடியானவன், அவனது வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த மூட்டையைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தான். வீட்டிற்குள் எடுத்துச் சென்று மூட்டையில் என்ன இருக்கின்றது என்று பார்த்தவன் வியந்தான். அதில் உள்ள பொற்காசுகளை பலமுறை எண்ணினான். எவ்வளவு எண்ணியும் அதில் 99 பொற்காசுகளே இருந்தன. எப்படி ஒரு மூட்டையில் 99 பொற்காசுகள் வைத்திருப்பார். முழுமையாக 100 காசுகள் தானே வைத்திருப்பார். ஒரு பொற்காசு எங்கோ விழுந்திருக்கும் அதைத்தேடிக் கண்டுபிடிப்போம் என்று எண்ணினான். அன்று அவன் வயலுக்குச் செல்லவில்லை. தனது மனைவி, பிள்ளைகள் என அனைவரையும் வீடு முழுக்க, வீட்டிற்கு வெளியே என எல்லா இடங்களிலும் தேடச் சொன்னான். நாள் முழுவதும் தேடியும் பொற்காசு கிடைக்கவில்லை. இரவானது சோர்வில் அனைவரும் தூங்கினர். மறுநாள் எழுந்ததும் குடியானவன், இந்த முட்டையை முழுமையாக்க மீதமுள்ள ஒரு பொற்காசை எப்படியாவது உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணினான். கடுமையாக வேலை செய்தான். அவனது சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்றாலும் கூட அந்த ஒரு பொற்காசை அவனால் வாங்க முடியவில்லை. மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானான் அதனால் நோய்வாய்ப்பட ஆரம்பித்தான் குடியானவன். குடியானவனது மகிழ்ச்சியைப் பறித்து விட்ட மகிழ்வில் பண்ணையார் மிகவும் மகிழ்ந்தார்.
மூட்டையில் இருக்கும் 99 பொற்காசுகள் குடியானவனுக்கு மகிழ்வைத் தரவில்லை மாறாக விடுபட்ட அந்த ஒற்றைப் பொற்காசே அவனுக்கு மிக உயர்வாகப்பட்டது. இருப்பதில் நிறைவுகாண்பதை விட்டுவிட்டு இல்லாத ஒன்றிற்காக ஏங்கும் மனநிலை கொண்டதால் இருப்பதையும் இழந்தான். நம்மிடம் இருப்பதில் ஒருபோதும் நிறைவு அடையாது இல்லாத ஒன்றிற்காக நாம் நமது ஆற்றலை நேரத்தை வீணாக்குகின்றோம். மனநிறைவு என்பது அவரவர் மனநிலை பொருத்தது. வாழ்வில் ஒவ்வொருவரும் எத்தனை தான் வசதி படைத்தவர்களாக இருந்தாலும், மனநிறைவினை எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்களால் வாங்க முடியாது. பொதுக்காலத்தின் ஐந்தாம் வாரத்தில் இருக்கும் நமக்கு இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் மனநிறைவுடன் மகிழ்வுடன் வாழ வலியுறுத்துகின்றார். இன்பத்திலும் துன்பத்திலும் கடவுளைப் போற்றி மனநிறைவுடன் வாழ்ந்த யோபு, மக்கள் அனைவரையும் கிறிஸ்துவிற்குள் கொண்டு வரவேண்டும் என்று வாழ்ந்த தூய பவுல், தன்னை நாடி வந்த மக்களின் குறைகளைத் தீர்த்து அவர்களை நிறைவுள்ளவர்களாக மாற்றிய இயேசு என இன்றைய வாசகங்கள் வழியாக நாமும் மனநிறைவு கொண்டவர்களாக மனமகிழ்வுடன் வாழ அழைக்கின்றார் இறைவன்.
மனநிறைவுடன் வாழ்ந்த யோபு
கடவுளின் அருளால் எல்லா வளங்களையும் பெற்று மிக செல்வச்செழிப்புடன் வாழ்ந்தவர் யோபு. அத்தனையும் இழந்த பின்னும் கடவுளைப் போற்றி மனநிறைவுடன் தனது வாழ்க்கையை வாழ்ந்த அவர், தனது உள்ளக்குமுறலை பலவாறாக வெளிப்படுத்துகின்றார். யோபு கடவுளுக்கு மிகவும் பிரமாணிக்கமுள்ளவராகவும், கடவுள் முன் நேர்மையானவராகவும் விளங்கினார். தனக்குக் கிடைத்த அனைத்தும் கடவுளால் தான் என்று முழுமையாக நம்பியதால் அவை தன்னைவிட்டு போனபோதும் கூட அவையும் கடவுளால் நிகழ்ந்தது என்று நம்பி அத்தனையையும் ஏற்றுக்கொண்டார். தன் நிலை அறிந்து புலம்பல்களாக தன் எண்ணங்களை வெளிப்படுத்திய யோபு அடிமையாக வேலையாளாக தன்னைக் கருதுகின்றார். அடிமைகள், வெயில், குளிர் என்று பாராமல் கடினமான வேலைகளைச் செய்யப் பணிக்கப்பட்டார்கள். அத்தகைய அடிமையைப் போலவும், வேலையாள் போலவும், தன்னை ஒப்புமைப்படுத்துகின்றார். தறியின் ஓடுகட்டை இடைவிடாது ஓடுவது போல, தானும் இடைவிடாது துன்பத்தில் உழல்வதாக எடுத்துரைக்கின்றார்.
கடுமையான வெயிலில் உழைத்து சோர்வடைந்த அடிமை நிழலுக்காக ஏங்கி இருக்கும் நிலையில் இறைவனின் இரக்கத்திற்காக வேண்டுகின்றார். அடிமையின் தலைவன் நினைத்தால் அவனுக்கு இளைப்பாறுதல் அளிக்க முடியும். அவ்வகையில் இறைவனை தனக்கு தலைவனாகவும், தன்னை அடிமையாகவும் கருதி தனது நிலையினை எடுத்துரைக்கின்றார். கூலிக்காக காத்திருக்கும் பணியாள் போன்றும் தன்னை உருவகப்படுத்துகின்றார். அவர் எடுத்துரைக்கும் அனைத்திலும் மனநிறைவு காண ஏங்கும் மனிதரின் உளப்பாங்கு வெளிப்படுகின்றது. இருளைத் தரும் இரவைத் தொடர்ந்து கட்டாயம் ஒளிதரும் பகல் இருக்கும். தறியின் ஓடுகட்டை விரைவாக நிற்காமல் ஓடுவது அழகான வேலைப்பாடு கொண்ட துணி கிடைக்கப்படுவதற்காக. அடிமை, கூலியாள் என அனைவரும் தலைவன் தங்களுக்கு நல்ல இளைப்பாறுதலை தருவார் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். எவ்வளவு தான் துன்பங்கள் அனுபவித்தாலும் அத்தனையும் கடவுளின் செயல் என எண்ணுகின்றார். மனநிறைவுடன் வாழ்கின்றார் இவை அனைத்தும் கடவுளை இகழும் பொருட்டில் அல்ல மாறாக தனது உள்ளக்கிடக்கை அவருக்கு வெளிப்படுத்தும் வண்ணம் எடுத்துரைக்கின்றார். ஆக யோபு இறைவன் என்னும் தலைவனிடம் தன் நிலையை எடுத்துரைத்து மனநிறைவிற்காக வேண்டுகின்றார். அது கட்டாயம் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரது அருளினை நாடுகின்றார்.
யோபு தன் வாழ்வில் தனக்குக் கிடைத்த அனைத்தும் இறைவனாலேயே தனக்குக் கிடைத்தது என்று எண்ணுகின்றார். அதனால் தான் செல்வம் செழிப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனநிறைவுடன் வாழ்கின்றார். யோபுவின் மனநிலையை நமதாக்க முயல்வோம். இருப்பிலும் இல்லாமையிலும் இறைவனின் கரம் செயல்படுவதை நாம் உணர ஆரம்பித்து விட்டோமானால் மனநிறைவும் மகிழ்வும் நம்மில் நீங்காது குடியிருக்கும்.
மனநிறைவைக் கைம்மாறாகப் பெற்ற தூய பவுல்
உயிர்த்த இயேசுவால் ஆள்கொள்ளப்பட்டு அனைவரையும் அவர் பக்கம் கொண்டுவர மனநிறைவுடன் பணிகள் செய்தவர் தூய பவுல். சட்ட வல்லுனராக திகழ்ந்து மறைநூல்களை நன்கு கற்றிருந்த பவுல், நம்பிக்கைக் கொண்ட அனைத்து மக்களையும் கிறிஸ்துவிற்குள் கொண்டு வர, அடிமை போல ஆனேன் என்று கூறுகின்றார். கிறிஸ்துவை அறிக்கையிட்டு வந்தவர்களை கைது செய்வதற்காக தமஸ்கு நகர் நோக்கி சென்று கொண்டிருந்தவர் உயிர்த்த இறைவனாலேயே ஆள்கொள்ளப்படுகின்றார். இறைவனால் ஆள்கொள்ளப்பட்டவரின் வாழ்க்கையானது முற்றிலும் மாறிவிடும் என்பதற்கு முழுமையான எடுத்துக்காட்டு தூய பவுல். நற்செய்தியை அறிவிக்காவில் ஐயோ எனக்குக் கேடு என்று கூறுமளவிற்கு அதன் மீது அளவற்ற பற்று கொண்டவரானார். ஒவ்வொருவரும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பொறுப்பாக நற்செய்தி அறிவித்தலைக் கருத வேண்டும் என்று எண்ணுகின்றார். அதற்கு கைம்மாறாக மனநிறைவை நாம் பெற்றுக்கொள்வோம் என்று கூறுகின்றார். நற்செய்தியை நாம் முழுமனதுடன் அறிவிக்கும் பொழுது மனநிறைவு நமக்கு கைம்மாறாகக் கிடைக்கும்.
நற்செய்தி அறிவித்தல் என்பது திருவிவிலியத்தை வாசித்து அதனை மக்களுக்கு வார்த்தையால், வாயால் எடுத்துரைப்பது மட்டுமல்ல. நமது அன்றாட வாழ்வில் நாம் செய்யும் பணியில், பழகும் மனிதர்களில், நமது செயல்கள் வழியாக அன்பினால் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் நற்செய்தி அறிவிப்பே. எனவே தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இயேசுவை சந்திப்பவர்களின் இதயங்களும் முழு வாழ்க்கையும் நற்செய்தியின் மகிழ்ச்சியால் நிரப்பப்படுகின்றது. அவரால் மீட்கப்படுவதற்கு அனுமதிப்பவர்கள் பாவம், சோகம், உள்மன வெறுமை, தனிமையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று தனது மறைக்கல்வி உரையில் எடுத்துரைத்துள்ளார்.
ஆக மனநிறைவை நமது வாழ்வின் கைம்மாறாக பெற விரும்பும் நாம் முழுமையான மகிழ்வுடன் உள்ளத்துடன் நற்செய்தியைப் பிறருக்கு அறிவிக்கவேண்டும். எல்லாருக்கும் எல்லாமாய் இருப்பதாக எடுத்துரைத்த தூய பவுல் வலுவற்றவர்களுக்கு வலுவற்றவராக வாழ்ந்தார். நாமும் முழுமன நிறைவுடன் நமது சொல்லால் செயலால் நற்செய்தியை அறிவிப்போம். எந்த ஒரு செயலையும் விரும்பிச்செய்தால் பல நன்மைகள் ஏற்படும் என்று கூறிய தூய பவுலைப்போல விரும்பி நற்செய்தியை அறிவிப்போம். மனநிறைவுடன் வாழ முயற்சிப்போம்.
மனநிறைவின் உச்சமாய் வாழ்ந்த இயேசு
யோபு, பவுல் என நாம் மேற்சொன்னவர்கள் எல்லாரையும் விட, பிறப்பு முதல் உயிர்ப்பு வரை மனநிறைவுடன் வாழ்ந்து, பிறரையும் அதன்படி வாழ வலியுறுத்தியவர் இயேசு. மனநிறைவு என்பது நாம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்காமல் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைத்து உதவி செய்து வாழ்வது. இத்தகைய மனநிலை கொண்டவர் இயேசு. தன்னோடு எல்லா இடங்களுக்கும் உடன் வந்து, இறைவார்த்தையைப் பறைசாற்ற உதவிய தனது சீடர்களின் நலனையும் கவனிக்கத் தவறவில்லை. அவர்கள் நலமாக இருக்க அவர்களது குடும்பத்தார் நலமாக இருக்க விரும்புகின்றார். கடவுளுக்காக தன்னை அர்ப்பணிப்போர் குடும்ப காரியங்களில் அதிகமாக ஈடுபட்டு வந்தால் நம்மிடையே சொல்லப்படும் ஒரு வழக்கு சொல் ஒன்று உண்டு. நாம் அதிகமாக நம் குடும்பத்தை கவனித்தால் கடவுள் நம் குடும்பத்தை கவனிக்க மாட்டார். ஏனென்றால் அவர் கவனிப்பதற்கு பதிலாக நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணி விட்டுவிடுவார். அதுவே நாம் கடவுள் காரியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழும்போது, கடவுள், தனக்காக குடும்பத்தை துறந்து பணிசெய்யும் இவன் குடும்பத்தை, நாம் தான் காக்கவேண்டும் என்று எண்ணி கவனிப்பார். இது உண்மையும் கூட. இயேசுவைப் பின் தொடர்ந்த சீடர்கள் தங்கள் குடும்பத்தையும் உறவினர்களையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றியவர்கள்.
இயேசு சீமோன் பேதுருவின் மாமியார் காய்ச்சலால் உடல் நலமற்று இருப்பதை அறிந்து அவரது இல்லம் செல்கின்றார். தனியாக செல்லவில்லை சீடர்கள் நால்வரோடு செல்கின்றார். தான் மட்டும் சீடர்களின் குடும்பத்தாரோடு நல்லுறவு கொண்டிருந்தால் போதாது. தனது சீடர்களும் அவர்களுடன் நல்லுறவு கொள்ள வேண்டும். குடும்பமாக வாழவேண்டும் என்பதனை எடுத்துரைக்கின்றார். பெண்கள் மிகவும் கீழாக நடத்தப்பட்ட யூத சமுதாய சூழலில் மாமியாரின் கைகளைத் தொட்டு அவரைத் தூக்குகின்றார். அவரது உடற்பிணியினின்று அவரை மீட்கின்றார். இயேசுவால் குணம்பெற்ற ஆற்றலை மீண்டும் பெற்ற அவரும் உடனே எழுந்து இயேசுவிற்கும் சீடர்களுக்கும் பணியாற்ற முற்படுகின்றார். இதுவரை மருமகன் மட்டும் செய்து வந்த செயலை மாமியாரும் முழுமனதுடன் செய்கின்றார். சீமோனின் மாமியார் இருந்த ஊரில் வாழ்ந்த நோயாளிகள் அனைவரையும் இயேசு காலை முதல் மாலை வரைக் குணப்படுத்துகின்றார். அதிகாலையில் கடவுளின் ஆற்றலைப்பெற தனித்திருந்து செபிக்கின்றார். அவரது குணப்படுத்தும் வல்லமை அறிந்து அவரைப் புகழ்ந்த, அந்த ஊரிலேயே தங்காமல் வேறு ஊர்களுக்கும் செல்வோம் வாருங்கள் என்று தனது சீடர்களை அழைக்கின்றார்.
அனைத்தும் நிறைந்து இருப்பதல்ல மனநிறைவு, இருப்பதில் நிறைவு காண்பது மனநிறைவு என்பதனை தன் வாழ்வில் எடுத்துரைத்தவர் இயேசு. குடும்ப உறவை வலுப்படுத்துதல், கீழான நிலையில் இருப்பவர்களையும் கண்ணோக்குதல், எல்லா வேளையிலும் இறைவனின் துணையை நாடுதல், புகழ் இருக்கும் இடத்தில் நின்று விடாது தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருத்தல் என்பன போன்றவை மனநிறைவிற்கான வழிகளாக இயேசு எடுத்துரைக்கின்றார். தன்னம்பிக்கையில் கிடைக்கும் மனநிறைவு வேறெதிலும் கிடைப்பதில்லை. எனவே தன்னம்பிக்கையோடு முன்னேறுவோம். மனநிறைவோடு வாழ்வோம். பிறரும் வாழ வழிகாட்டுவோம். இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவரோடும் இருப்பதாக ஆமென்.
|