பொதுக்காலம் நான்காம் ஞாயிறுஇறைவாக்கினரா? என்ன? எங்கு? எப்படி?I. எரேமியா 1:4-5, 17-19 II. 1 கொரிந்தியர் 12:31-13:13 III. லூக்கா 4:21-30
இறைவார்த்தையை வாழ்வாக்கி வடிவமாக்கி வாழ்பவர்கள் இறைவாக்கினர்கள் . இன்னாரைப் போல் வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதைவிட , நம்மைப் போல் பிறர் வாழ வேண்டும் என்று எண்ணுமளவிற்கு வாழ்ந்து காட்டுபவர்களே இறைவாக்கினர்கள். இன்றைய இறைவார்த்தைப் பகுதிகள் அனைத்தும் ஒரு இறைவாக்கினர் எப்படி இருக்க வேண்டும் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. இறைவாக்கினராக அழைக்கப்பட்டிருக்கிறாயா? உனக்கு இறைவன் தரும் பணி என்ன ? எங்கு உன்னை அனுப்புகிறார்? எப்படி பணி செய்ய பணிக்கிறார்? என்பதே இன்றைய வாசகங்கள் நமக்கு விடுக்கும் செய்தி. என்ன? நான் யார் என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும். ஒரு சிலர் கேள்விக் கேற்ற பதிலைக் கண்டுபிடிப்பர். ஒரு சிலர் பதிலைக் கொண்டு கேள்வியை உருவாக்குவர். நாம் இந்த உலகத்தில் படைக்கப்பட்டிருக்கிறோம். வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். நாம் செய்ய வேண்டிய பணி என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும். நாம் செய்யாவிட்டால் அதை வேறு யாராலும் செய்ய முடியாது, அவ்விடத்தை வேறு யாரைக் கொண்டும் நிரப்ப முடியாது என்பர் அறிஞர்கள். ஆக நாம் என்ன பணி செய்து கொண்டிருக்கிறோம்? எதற்காக செய்து கொண்டிருக்கிறோம் என்ற புரிதல் நமக்கு மிக முக்கியம். இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் இறைவாக்கினர்களை எதற்காக அழைக்கின்றார் என்ற விதம் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன என்ன செய்தார்??? தாயின் வயிற்றில் தேர்ந்தெடுத்தார். திருநிலைப்படுத்தினார். இறைவாக்கினராக ஏற்படுத்தினார். என்ன செய்யச்சொல்கிறார்??? இடையை வரிந்து கட்டு, புறப்படு, சொல், கலங்காதே, என்கிறார். இதன் மூலமாக எந்நிலையிலும் ஆயத்த நிலையில் இருக்கச்சொல்கிறார். என்ன செய்யப்போகிறார்?? நம்மை அரண் சூழ் நகராக, இரும்புத்தூணாக, வெண்கலச்சுவராக, மாற்றப்போகிறார். நம்மை விடுவிக்க நம்மோடு இருக்கப்போகிறார். ஆக இறந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் என எல்லா நிலையிலும் நம்மோடு இருந்து நம்மைக் காக்க ஆவலோடு இருக்கிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான் நாமும் இறைவாக்கினர்களே என்ற தெளிவு இருந்தால் மட்டும் போதுமானது. நாம் செய்யும் பணிகள் பலவாறாக இருக்கலாம் . ஆனால் செய்யும் முறை , இறைவாக்கினர்கள் போல இருக்க வேண்டும் என்கிறார். இறைவன் நம்மோடு இருந்தார், இருக்கிறார், இருப்பார் என்னும் நம்பிக்கை மனநிலையோடு நாம் வாழ வேண்டும். எங்கு?? எங்கு பணி செய்ய அழைக்கப்பட்டுள்ளோம் நாம் . யார் மத்தியில் பணிபுரிய செல்கிறோம்? நம் இயேசுவும் இறைவாக்கினர்கள் போல அழைக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்டார். பணிபுரிய அனுப்பப்பட்டார். அவர் பணி செய்த போது அவருக்கு கிடைத்த பாராட்டுக்களை விட விமர்சனங்களும் அவதூறுகளும் தான் அதிகம். இருப்பினும் அவர் அதனை பொருட்டாக எண்ணாமல் தொடர்ந்து பணிபுரிந்தார். உதாரணத்திற்கு இன்றைய நற்செய்தி வாசகம். இயேசு தொழுகைக் கூடத்திற்கு சென்று வாசிக்க எழுந்ததும் அனைவரும் அவரையே ஆர்வமாக பார்த்தனர். வாசித்து முடிந்ததும் இந்த மறைநூல் வாக்கு நிறைவேறிற்று என்று கூறியவுடன் அனைவரும் அவர் குடும்ப பின்னனி குறித்து பேசத்தொடங்கினர். அதன்பின் அவர் பழைய ஏற்பாட்டு விவிலிய நிகழ்வுகளை மேற்கோள் காட்டி அவர்களது உள்ளத்து எண்ணத்தினை வெளிப்படுத்தியவுடன் அவரை கீழே தள்ளி கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விட்டனர். இப்படிப்பட்ட மக்களிடத்தில் தான் இறைவாக்கினர்களாகிய நாம் பணி செய்ய அழைக்கப்படுள்ளோம். நல்லது செய்ய எண்ணும் போது யாரையும் குற்றம் சொல்லாமல் செய்தோமானால் நாம் பிழைத்தோம். யாருடனாவது ஒப்பிட்டோ குறை சொல்லியோ திருத்த முயன்றோமானால் நமது உயிருக்கும் கூட உத்திரவாதம் கிடையாது இயேசுவைப் போல. ஆக பணித்தளம் மலர்கள் தூவப்பட்ட பாதை அல்ல அதில் முட்களும் சில நேரம் மறைந்து கிடக்கலாம் கவனம் தேவை என எச்சரிக்கிறார். எங்கு பணி செய்தாலும் யாருக்கு பணி செய்தாலும் இறைவனின் அருள் நம்மிடம் உள்ளது என்ற எதிர்நோக்கோடு பயணத்தைத் தொடர்வோம் பணி செய்வோம். எப்படி??? எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் நமது பணி . இன்றைய இரண்டாம் வாசகத்தில் சொல்லப்பட்டிருப்பது போல, நமது பணி அன்பில் தோய்ந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில் அன்பே அனைத்திலும் சிறந்தது. எல்லாவற்றையும் விட சிறந்த நெறி அதுவே. நமது செயல்கள் அறிவுடைய செயல்களாக இருந்தால் மட்டும் போதாது. ஏனெனில் அறிவு அரைகுறையானது. அன்போ முழுமையானது. இன்றைய காலகட்டத்தில் அறிவுக்கு அதிக மதிப்பு மனிதர்களாகிய நம்மிடத்தில் கொடுக்கப்படுகிறது. ஆனால் அறிவை விட அன்பே உயர்ந்தது என்பதை உணர்வதற்கு ஒரு காலம் மிக விரைவில் வரும். நாம் பெருமை கொண்டு, நிலைத்து நிற்கும் என எண்ணும் அனைத்தும், ஒருகாலத்தில் அழிந்து போகும் . அழியாது நிலைத்து நிற்பது அன்பு ஒன்று மட்டுமே. ஆக நமது பணி அன்பில் தோய்ந்த சுவை மிகுந்த பணியாக இருக்க வேண்டும் . நம்பிக்கைக்கும் எதிர்நோக்கிற்கும் ஒரு சிறிய கோடளவிற்கு தான் வேறுபாடு. நம்மிடம் நம்பிக்கை அதிகமானால் அது நம்மை நாளுக்கு நாள் வளர்க்கும். எதிர்பார்ப்பு அதிகமானால் நம்மை நாளுக்கு நாள் அழிக்கும். அன்பு அதிகமானால் அதன் பலன் நம் சந்ததி வரை நிலைத்து நிற்கும். இறைவாக்கினர்களாகிய நமது பணி அன்போடு இருக்க வேண்டும்.
ஆக நமது இன்றைய வாசகங்கள் அனைத்தும் நம்மை இறைவாக்கினராக வாழ அழைப்புவிடுத்ததோடு மட்டுமல்லாமல், என்ன எங்கு எப்படி என்றும் உதாரணத்தோடு எடுத்துரைக்கின்றன. இறைப்பணி செய்ய அழைக்கப்பட்ட அருட்தந்தையர்களும் துறவிகளும் மட்டுமல்ல இறைவாக்கினர்கள் . ஆத்மார்த்தமாக அர்ப்பண மனநிலையோடு பணி செய்யும் அனைவரும் இறைவாக்கினர்களே. சொந்த ஊரில் இறைவாக்கினர்களுக்கு மதிப்பில்லை என்கிறார் இயேசு. ஆம் நமது கடந்த கால வாழ்வைப் பற்றிய எண்ணமும், எதிர்கால வாழ்வைப் பற்றிய கணிப்பும் உள்ளவர்களிடம் நாம் என்ன தான் சொன்னாலும் அவர்கள் அதை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இயேசுவை குற்றம் சாட்டிய அவரது சொந்த ஊர் மக்கள் போல. மாறாக நமது நிகழ்கால செயல்களைக் கொண்டு நம்மை நம்புபவர்கள் மத்தியில் நாம் மதிக்கப்படுவோம். அவரை நம்பி குணம் பெற்ற மக்கள் போல. எனவே நிகழ்காலத்தில் வாழ்வோம். அன்போடு அனைத்து செயல்களையும் செய்வோம் இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர்மீதும் இருப்பதாக ஆமென்.
|