தவக்காலம் முதல் ஞாயிறு முயற்சிக்க பயிற்சி...... I. இணைச் சட்டம் 26:4-10 II. உரோமையர் 10:8-13 III. லூக்கா 4:1-13 முயற்சிக்க பயிற்சி......
முயற்சிக்கும் பயிற்சிக்கும் என்ன வேறுபாடு என்று ஒரு கல்லூரி மாணவனிடம் கேட்டபோது, ஒரு பெண்ணிடம் ஐ லவ் யூ என்று சொன்னால் அது முயற்சி . அதுவே பல பெண்களிடம் சொன்னால் அதுதான் பயிற்சி என்றான். இப்போதெல்லாம் முயற்சியும் பயிற்சியும் இப்படித்தான் இருக்கின்றன. இந்த முயற்சியையும் பயிற்சியையும் பற்றி நான் சொல்ல வரவில்லை. தவக்காலத்தின் முதல் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் நம்மை இன்றைய வாசகங்கள் அனைத்தும் முயற்சி செய்ய பயிற்சிக்க அழைக்கின்றன. தவக்காலம் அருளின் காலம். நம்மை நாமே ஒறுத்து பாவ செயல்பாடுகள் தீய எண்ணங்களிலிருந்து நம்மை விடுவித்து இறை அன்பை அனுபவிக்கும் காலம். இந்த காலத்தை தக்க விதத்தில் பயன்படுத்தி இறை அருளை பெற்றுக் கொள்ளும் அருளின் காலமாக அமைத்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை. விளையாட்டு வீரர்கள் விளையாடத் தொடங்குமுன் சில பயிற்சிகளைச் செய்து தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்வது போல, நாமும் உயிர்ப்பு என்னும் அருளினைப் பெற நம்மை தயார்படுத்திக் கொள்ளும் காலமே இத்தவக்காலம். இதனை உணர்ந்து நம்மை, "முயற்சிக்க பயிற்சி செய்" என அழைப்பு விடுக்கின்றன இன்றைய வாசகங்கள். இன்றைய முதல் வாசகத்தில் 40 ஆண்டுகளாக பாலை நிலத்தில் இறைவனால் வழிநடத்தப் பட்ட இஸ்ரயேல் மக்கள் இறைவனுக்கு செலுத்த வேண்டிய நன்றிப்பலி பற்றி கூறப்பட்டுள்ளது. இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் இயேசு இறந்த பின்பு 40 நாட்கள் சீடர்களுக்கு காட்சி அளித்து அவர்களை மீட்படையச்செய்த மீட்பின் பலி பற்றி எடுத்துரைக்கின்றது. இறுதியாக நற்செய்தியில் இயேசு 40 நாட்கள் பாலைவனத்தில் சோதிக்கப்பட்டு, வெற்றி அடைந்த வாழ்க்கைப்பலி உருவாக காரணமான நிகழ்வு பற்றி எடுத்துரைக்கின்றது. நமக்கும் இந்த 40 நாட்கள் வருடம் முழுவதும் வருகின்றன. நாம் நமது இந்த நாட்களை எப்படி பயனுள்ள விதமாக ஆக்குகின்றோம் என்பதை சிந்திப்போம். நமது வாழ்வு நன்றிப்பலி செலுத்துகிறதா ? மீட்பின் பலியை உணர்கிறதா? இல்லை வாழ்க்கைப்பலியாக வாழ்கிறதா?
நன்றிப்பலி: இஸ்ரயேல் மக்கள் 40 ஆண்டுகள் பாலைவனத்தில் கால்கடுக்க நடந்து இறைவன் காண்பித்த நாட்டை அடைகின்றனர். கானான் நாட்டை சென்றடையும் வரை அவர்களுக்குள் ஏராளமான பிரச்சனைகள் தகராறுகள் வேதனைகள் சோதனைகள்.. அது அனைத்தையும் பொறுமையோடு ஏற்று முன்னேறிச் சென்றவர்களே வளமையான கானான் நாட்டை அடைந்தனர். மற்றவர்கள் பாலைநிலத்திலேயே மாண்டு மடிந்தனர். எகிப்து நாட்டில் துன்புற்றபோது அவர்கள் இறைவனை நோக்கி கூக்குரலிடுகின்றனர். இறைவனும் அவர்களது குரலைக் கேட்டு செவிமடுக்கின்றார். அவர்கள் குரலைக் கேட்கிறார், அவர்கள் படும் துன்பத்தைக் கண்ணால் காண்கிறார். அவர்களை மீட்டு பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்துச்செல்கின்றார். 40 ஆண்டுகள் பாலைவனப்பயணத்திலும் இவ்வாறு பல முறை அவர்கள் இறைவனுக்கு எதிராக முணுமுணுத்துக் கொண்டும் புலம்பிக்கொண்டும் இருந்திருப்பர். ஆனாலும் இறைவன் அவர்களைக் கண்ணும் கருத்துமாய் காத்து வழிநடத்தி வருகின்றார். இப்படிப்பட்ட இறைவனுக்கு விளைச்சலின் முதல் பலனைக் காணிக்கையாகக் கொடுக்க பணிக்கின்றார் மோயீசன். நம்மில் பலரும் இந்த தவக்காலத்தில் பல விதமான தப முயற்சிகளை மேற்கொண்டும், நற்செயல்கள் செய்தும் தங்களது வேண்டுதல்களையும் கோரிக்கைகளையும் இறைவன் முன் வைப்பர். இவை அனைத்தும் நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற ஆசையோடு நின்று விடாமல் அதையும் தாண்டி நமது வாழ்வுநிலை முன்னேற்றமடைய வேண்டும் என்ற குறிக்கோளோடு செய்யப்பட வேண்டும். சிலர் 40 நாட்கள் மட்டும் புனிதர்கள் போல தூய வாழ்வு வாழ்வர். அதன்பின் பழைய குருடி கதவைத் தொறடி என்பது போல பழைய வாழ்வு என்னும் சேற்றில் புதைந்துவிடுவர். சிலருக்கு தவக்காலம் என்பது வேண்டுவது அனைத்தும் உடனடியாக கிடைக்க மன்றாடும் காலமாக இருக்கின்றது. அப்படி அல்ல . மோயீசன், இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தைக் கடந்து கொண்டிருக்கும் போதே அவர்களுக்கு நினைவுறுத்துகிறார். நீங்கள் சென்றடையும் இடம் பாலும் தேனும் பொழியும் கானான் தேசம் அங்கு சென்றதும் நிலத்தின் விளைச்சலில் முதல் பலனைக் கடவுளுக்கு காணிக்கையாக செலுத்துங்கள் என்று சட்டமாக அறிவிக்கின்றார். கடவுளால் வழிநடத்தப்படும் நாம் கண்டிப்பாக வளமையான நாட்டிற்குள் தான் வாழவைக்கப்படுவோம் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. இன்று அதே நம்பிக்கை நம்மிடம் தேவை என்பதை வலியுறுத்துகிறார். அந்த நம்பிக்கையை முயற்சித்து வாழ்வில் பயிற்சித்து நன்றிப்பலி செலுத்த முயல்வோம் கேட்டது அனைத்தும் கிடைக்கப்பெற்றது என்ற நம்பிக்கையோடு செபிப்போம்.. மீட்பின் பலி: சீடர்கள் இயேசு இறந்த பின்பு நிலைகுலைந்து போகின்றனர். நம்பிக்கை இழந்து போகின்றனர். அந்த நிலையில் இயேசு தொடர்ந்து 40 நாட்கள் அவர்களுக்கு காட்சி கொடுத்து திடப்படுத்துகிறார். அந்த திடம் அவர்களது வாழ்வை மாற்றிப்போடுகிறது. அவரை நம்பியவர்கள் அவருக்கு ஏற்புடையவர்களாகின்றனர். அவரைப் பின்பற்றியவர்கள் மீட்படைந்தவர்களாகின்றனர். அந்த நாற்பது நாளும் அவர்களுக்கு பல விதமான பிரச்சனைகள் ஆள்பவர்களாலும் அதிகாரிகளாலும் என பிரச்சனைகளின் நடுவே வாழ்ந்த போதும் இயேசுவின் காட்சியால் திடப்படுத்தப்படுகின்றனர். இயேசுவைக் கண்ணால் கண்டு உடன் வாழ்ந்தவர்களைக் காட்டிலும் அவரது சீடர்களின் வல்லமையான சாட்சியால் இயேசுவையும் அவர்தம் போதனைகளையும் பின்பற்றியவர்களே அதிகம். ஊருக்கு பயந்து வீட்டிற்குள்ளும் குகைகளுக்குள்ளும் பயந்து வாழ்ந்த அவர்கள் 40 நாள் அனுபவத்திற்கு பிறகே வல்லமையுள்ள மனிதர்களாக உருமாறுகின்றனர். மீட்படைந்து பிறரும் மீட்படைய வழிவகுக்கின்றனர். நமது இந்த நாற்பது நாட்கள் இயேசுவின் சீடர்கள் போல துன்பம் நிறைந்ததாக இருக்கப்போவதில்லை. ஆனால் அவர்கள் போல மீட்படைய வழிவகுக்கலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்மை உருமாற்ற அவருக்கு முழு அனுமதி கொடுக்க வேண்டும். தன்னில் மாற்றம் காண விழைபவர்களே மீட்படைய முடியும். நாம் யாராக இருந்தாலும் எப்படிப்பட்டவராக இருந்தாலும் நமது குறைகளையும் பாவங்களையும் நினைத்து மனம் வருந்தி இறைவனிடம் அறிக்கையிட்டு மன்றாடுகையில் நாமும் மீட்படைவோம். நாம் மனம் மாற முயற்சி செய்வோம். முடியும் வரை அல்ல நாம் நினைத்தது நடந்து முடிக்கும் வரை..அப்போது தான் நம்மாலும் மீட்பின் பலியினை உணர முடியும்..
வாழ்க்கைப்பலி: இயேசு நாற்பது நாள் பாலைவனத்தில் சாத்தானால் சோதிக்கப்பட்டு தனது பணிவாழ்வுக்குள் நுழைகின்றார். மனிதனின் அடிப்படை தேவைகளாக கருதப்படும் உணவு செல்வம், பாதுகாப்பு என்னும் மூன்றின் அடிப்படையில் அவருக்கு இந்த சோதனைகள் நடைபெறுகின்றன. சாதாரண மனிதருக்கு தான் இவை மூன்றும் தேவை. இயேசுவோ இறைவனின் மைந்தன். அவருக்கு இவை தேவை இல்லை தான் என்றாலும் மானிடமகனாக வந்து மனுக்குலத்தை மீட்க பாடுபடும் அவரை மனிதர் போலவே சோதிக்கிறது சாத்தான். 40 நாளும் உணவின்றி வாடும் இயேசுவிடம் அவர் பசியுற்ற நேரம் பார்த்து, சோதிக்கிறது. நமக்கும் சில நேரம் பட்ட காலிலே படும் என்பது போல ஒரு துன்பம் வரும் போது தான் பிற துன்பங்களும் சேர்ந்து வந்து நம்மை வாட்டி வதைக்கும். ஆனால் துணிவோடிருந்தால் சோதனைகளையும் சாதனைகளாக்கும் வல்லமை பெறுவோம். இல்லையென்றால், சோதனைகள் பயிற்சி செய்யப் பயன்படும் பரிசோதனைக் கூடமாகிவிடுவோம். இன்று வீட்டில் சும்மா இருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? செல்வம் பெருக செய்ய வேண்டியவை என்ன என்று வலைதளத்தில் தேடிப்பார்த்து முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் இயேசு, இந்த செல்வம் அழிந்து போகக் கூடியது அதன் பின் போகாதே என்று எச்சரிக்கின்றார். மனிதனையும் அவன் படைத்த உபகரணங்களையும் ஆராதித்து, பணம் பொருள் சேர்க்காதே மாறாக ஆண்டவரை வணங்கு அவர் இறைவார்த்தையின்படி நட என்கிறார். உணவோ பணமோ செல்வமோ பதவியோ உன் நிலையை வாழ்வை மாற்றாது இறைவார்த்தையும் அவரது வாழ்வும் தான் உன்னை மாற்றக் கூடியது என்கிறார். இதை உணர முயற்சி செய்வோம் . முயன்று பார்த்தால் வேதனை தான் கிடைக்கும் அந்த வேதனையையும் கடந்து பார்ப்போம் வெற்றி கிடைக்கும். அதனால் நமது வாழ்வு இறைவனுக்கு உகந்த வாழ்க்கைப்பலியாக மாறும் . தபசு காலம், வேகமாக விரைந்து ஓடிக்கொண்டிருக்கின்ற நமது வாழ்க்கையை சற்று நின்று நிதானித்து பார்க்க உதவும் காலம். நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்து சரிசெய்யாது விட்டு வந்த வேலைகளை திரும்பச்செய்ய நமக்கு கொடுக்கப்பட்ட காலம். செய்த தவறுகளைத் திருத்தி நம்மை புதுப்பிக்கும் காலம். இக்காலத்தில் நமது வாழ்க்கையை நன்றிப்பலியாக்குவதும் மீட்பின் பலிக்கு ஆயத்தபடுத்துவதும், அதை நமது வாழ்க்கைப்பலியாக்குவதும் நமது கையில் தான் உள்ளது. நம்மை நாமே மாற்றத்திற்கு உட்படுத்த நாம் செய்ய வேண்டியது முயற்சி . அதற்கு தேவை இடைவிடாத பயிற்சி... முயற்சிப்பதும் பயிற்சிப்பதும் நமது கடமை எட்டிப்பார்க்கும் தூரத்தில் வெற்றி இல்லை . அதை விட்டுவிடும் எண்ணத்தில் நாமும் இல்லை என்ற மனநிலையோடு முன்னேறுவோம் . முயற்சிக்க பயிற்சிப்போம். வெற்றி என்னும் இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவர் மேலும் இருப்பதாக ஆமென்.
|