தவக்காலம் இரண்டாம் ஞாயிறுமூன்று கூடாராம் அமைப்போம் வாரீர்I. தொடக்க நூல் 15:5-12,17-18,21 II. பிலிப்பியர் 3:17-4:1 III. லூக்கா 9:28-36
கூடாரம் பழைய ஏற்பாட்டில் உடன்படிக்கை பேழையின் அடையாளமாக கருதப்பட்டது. பின் அது மெருகேற்றப்பட்டு திருக்கோயிலாக உருமாற்றப்பட்டது. தவக்காலத்தின் இரண்டாம் வாரத்தில் நுழையக் காத்திருக்கும் நாம் கூடாரங்கள் அமைத்து அதன் மூலம் திருக்கோயில்களாக நமது உள்ளமும் உடலும் மாறி வாழ இன்றைய வாசகங்கள் அழைப்புவிடுக்கின்றன. கூடாரங்கள் பழைய ஏற்பாட்டு மக்களின் வாழும் இல்லம். நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் கூடாரங்கள் அமைத்து தங்களின் வாழ்நாளில் பாதியை சிலர் முழுவதையுமே அதில் செலவழித்து கடந்து செல்வர். நன்மை, தீமை இன்பம் துன்பம் என அனைத்து உணர்வுகளும் கலந்து உலவும் இடமாகவே இந்தக் கூடாரங்கள் கருதப்பட்டன. இப்படிப்பட்ட உணர்வுகளின் சங்கமமாகக் கருதப்பட்ட கூடாரங்களாக நாம் மாற அழைக்கப்படுகின்றோம். மூன்று விதமான கூடாரங்கள் அமைக்கலாம் என்று பேதுரு இயேசுவின் உருமாற்றத்தின் போது அவரிடம் கூறியதாக நாம் வாசிக்கக்கேட்டோம். மோசேக்கு ஒன்றும் எலியாக்கு ஒன்றும் நமக்கு ( மூன்று சீடர்கள் + இயேசு ) ஒன்றுமாக மூன்று கூடாரம் அமைக்கக் கேட்டார். மோசே பழைய ஏற்பாட்டு இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மிக முக்கியமானவர், எலியா தவறுகளை சுட்டிக்காட்டி விழிப்பு நிலைக்கு கொண்டு வருபவர், சீடர்களோ மிகுந்த துன்பத்திற்கு பின் இயேசுவின் இறையரசைப் புரிந்து கொண்டு பறைசாற்றியவர்கள். இவர்களின் பண்பு நலனைக் கொண்டு நாமும் மூன்று கூடாரங்கள் அமைப்போம்.
1. மூவரில் ஒருவராய் முக்கியமானவராய் இருக்க முதல் கூடாரம். 2. தூக்க(கலக்க)த்திற்கு பின் விழிப்படைய இரண்டாம் கூடாரம். 3. இருளில் தெளிவாய் செவிமடுக்க மூன்றாம் கூடாரம்.
1. முக்கியமானவராய்...... வாழ்க்கையில் முதலாவதாய் வரவேண்டும் மிக முக்கியமானவராய் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. ஆனால் எத்தகைய பண்பு நலன் கொண்ட முக்கியமானவராய் இருக்க வேண்டும் என்பதில் ஒவ்வொருவரும் மாறுபட்டிருப்போம். கல்தேய நாட்டிலுள்ள ஊர் என்னும் கிராமத்தில் எத்தனையோ பேர் இருந்தும் ஆபிரகாம் என்னும் ஒருவர் மட்டும் யாவே இறைவனின் கண்களுக்கு மிக முக்கியமானவராக பட்டார். ஏனெனில் அவர் நீதிமானாய் இறைப்பற்றும் இறை பராமரிப்பில் நம்பிக்கையும் உடையவராய் இருந்தார். பவுலடியார் தன்னைப் போல் வாழப் பணிக்கின்றார். தானும் தன் வாழ்வும் இயேசுவை அறிவிக்கும் பணிக்கு முக்கியம் எனக் கருதினார். இயேசுவைப் பின்பற்றிய சீடர்கள் ஏராளமானோராய் இருந்தாலும் தனது உருமாற்ற நிகழ்வை காணும் வாய்ப்பை இயேசு தனது மூன்று சீடர்களுக்கு மட்டும் அளித்தார். ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களது செயல்பாடுகளின் மூலம் இயேசுவின் கண்களுக்கு நல்லவர்களாக நம்பிக்கைக்குரியவர்களாகத் தென்பட்டனர். நாம் நம் இயேசுவுக்கு முக்கியமானவர்களாக இருக்கின்றோமா? நம்மோடு வாழ்பவர்கள் நம்மை நம்பி செயல்களைச் செய்யும் அளவுக்கு நாம் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றோமா? தபசுகாலத்தில் செய்யும் சிறு சிறு ஒறுத்தல் செயல்கள் மூலமாக நமக்கும் நம்மைச்சுற்றி வாழும் மக்களுக்கும் நம்மைக் காக்கும் இறைவனுக்கும் முக்கியமானவர்களாய் மாற வாழ முதல் கூடாரத்தை அமைப்போம்.
2. விழிப்புணர்வாய்..... தூக்கம் மனிதனுக்கு மிகவும் முக்கியமானது. அதுபோல கலக்கமும் அவசியமானது. எவ்வாறு தூக்கம் இல்லா மனிதன் துடிப்புடன் செயல்பட முடியாதோ அதுபோல கலக்கம் என்னும் துன்பம் இல்லா மனிதனும் கவனமுடன் செயல்பட முடியாது. இங்கு ஆபிரகாமும் தூக்க கலக்கமாய் இருக்கிறார். சீடர்களும் தூக்க கலக்கமாய் இருக்கின்றனர். ஆபிரகாமிற்கு யாவே இறைவனின் வாக்குறுதி எப்படி தன்னில் நிறைவேறுமோ என்ற கலக்கம் ஆழ்ந்த தூக்கத்திற்கு இட்டுச்செல்கிறது. சீடர்களுக்கு, இயேசு இரண்டாவது முறையாக தான் பாடுபட்டு எவ்வாறு இறக்கப்போகிறேன் என்று கேட்டதும் இவர் ஏன் துன்பப்பட்டு சாக வேண்டும்? என்ன ஆகும் இவர் வாழ்வு? இவரோடு சேர்ந்த நமது வாழ்வு என்ன ஆகும்? என்ற குழப்பம், தூக்க கலக்கத்திற்கு இட்டுச்செல்கிறது. இருவருமே ஒருவிதமான துன்பத்தில் தான் தூங்குகின்றனர். ஆனால் தக்க சமயத்திற்காக காத்திருந்தார்ப் போல விழித்தெழுகின்றனர். அவர்களின் அந்த விழித்தெழுதல் அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு விடியலாய் அமைகின்றது. ஆபிரகாம் கடவுளின் ஆசீரைப் பெறுகின்றார். சீடர்கள் இயேசுவின் உண்மை நிலையை உணர்வுப் பூர்வமாக அறிகின்றனர். தூக்கமும் கலக்கமும் மனிதனுக்கு இயல்பு ஆனால் அதிலிருந்து விழித்தெழுபவனே உயரிய நிலையை அடைகின்றான். நமது துன்ப நிலைக்கு பின் ஒரு இன்ப நிலை வரும் என்பதை உணர்ந்து எந்நிலையிலும் விழிப்புணர்வுடன் வாழ இரண்டாவது கூடாரத்தை அமைப்போம். 3. செவிசாய்ப்பாய்..... அமைதியான (அக, புற,)சூழலில் சப்தங்களைக் கண்டு உணர்வது எளிது. ஆனால் அதுவே சந்தடி உள்ள இடத்தில் ஒலிகளைக் கருத்தாய்க் கேட்பது என்பது இயலாத காரியம். மிகவும் கடினம். ஆபிரகாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து விழித்தெழுகிறார். தன்னைச்சுற்றிலும் இருள் பரவி இருப்பதைக் காண்கிறார். தீச்சட்டியின் புகை, தீப்பந்தத்தின் நெருப்பு சுவாலை, வெட்டப்பட்ட விலங்குகளின் இரத்த வாடை , இவற்றிற்கு மத்தியில் இறைவனின் குரலுக்கு செவிமடுக்கின்றார். சீடர்கள், இறந்த இருவரோடு (ஆவியோடு) இயேசு பேசிக்கொண்டிருப்பதைக் காண்கின்றனர். இயேசுவின் இறப்பை பற்றி பேசுவதை கேட்கின்றனர். மேகத்தால் சூழப்படுகின்றனர். இப்படிப்பட்ட அச்சுறுத்தும்வேளையில் வானிலிருந்து ஒரு குரல் கேட்கின்றது இவரே என் அன்பார்ந்த மகன் என்று.... அவர்கள் அதற்கு செவிமடுக்கின்றனர். நாம் எங்கு எப்படி இருந்தாலும் இறைவனின் அழைப்பும் ஆசீரும் நமக்கு நிச்சயம் உண்டு. நாம் செவிசாய்க்க தயாராய் இருந்தால்.... எனவே எந்நிலையிலும் இறை குரலுக்கு செவிமடுப்பவர்களாய் மாற அருள் வேண்டி மூன்றாம் கூடாரத்தை அமைப்போம். இன்று பெரும்பாலான மனிதர்களுக்கு இத்தகைய கூடாரம் தேவையாய் இருப்பதில்லை அவர்கள் பணக் கூடாரம், பதவிக் கூடாரம், பேராசைக் கூடாரம் காமக் கூடாரம் சந்தடிகளின் கூடாரம் என பல கூடாரங்களை அமைத்து, தங்களையே அதில் மறைத்துக் கொள்கின்றனர். இந்தக் கூடாரங்கள் திருக்கோயில்களாக ஒரு போதும் மாறாது. மாறாக குப்பைக் கூளங்கள் போல மக்கி மண்ணோடு மண்ணாகும். இறைத் துணையோடு நாம் அமைக்கும் கூடாரங்களோ நம்மை திருக்கோயில்களின் சிற்பங்களாய் மாற்றிவிடும். நாம் கூடாரம் அமைப்பது அங்கேயே தங்கி வாழ்ந்து மடிவதற்கு அல்ல. மனிதன் உறையும் கூடாரமாய் இருக்கும் நமது உள்ளம் நாளை இறைவன் வசிக்கும் ஆலயமாக மாறவே.... எனவே அன்பு உள்ளங்களே கூடாரம் அமைப்போம் இறைவனின் ஆலயமாய் நம் உள்ளத்தையும் உடலையும் மாற்றுவோம். இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.
|