இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பாஸ்கா காலம் 3ஆம் ஞாயிறு

தேடு தேடப்படு .....

I. திருத்தூதர் பணிகள் 5:27-32, 40-41
II. திருவெளிப்பாடு 5:11-14
III. யோவான் 21:1-19

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான் இது நமது திருத்தூதர்களின் வாழ்வில் உண்மையானது. உயிர்த்த இயேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிற்றில் அடியெடுத்து வைத்திருக்கும் உங்களை துணிவுடன் வாழ இறைவன் அழைக்கின்றார். இதுவரை பயந்து நடுங்கி ஒளிந்து இருந்த சீடர்கள் இப்போது துணிவுடன் மற்றவர்கள் முன் பேசுகிறார்கள். யாரை எதிர்கொள்ள தயங்கினார்களோ அவர்கள் முன்னே தெளிவுடனும் துணிவுடனும் எதிர்த்துப் பேசுகிறார்கள். அவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டுகிறார்கள். இவரது குற்றப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருக்கட்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்த யுதர்கள் பரிசேயர்கள் இப்போதுஅந்த குற்றப்பழியைக் கண்டு அஞ்சும்படி செய்கின்றார்கள்... உயிர்த்த இறைவன் தந்த துணிவும் உற்சாகமுமே இதற்கு காரணம். ' இயேசு, தான் அன்பு செய்த சீடர்களை, இறந்து உயிர்த்த பின் காண வருகின்றார். தன்னைத் தேடி அலைந்த சீடர்களை தான் தேடி வருகின்றார். பிரிந்தவர்கள் மீண்டும் சேரும் போது எங்கெல்லாம் அவர்கள் சென்று மகிழ்ந்திருந்தார்களோ அதை நினைத்தும் பேசியும் இயலுமானால் அங்கு சென்றும் தங்கள் மகிழ்வைப் புதுப்பித்துக் கொள்வார்கள். அப்படியே இயேசுவின் சீடர்களும் இயேசுவும் தங்கள் மகிழ்வைப் புதுப்பித்ததோடு மட்டுமல்லாமல் அதனை பலப்படுத்தியும் கொள்கிறார்கள் . திபேரியக் கடல் இயேசு பலமுறை பயணம் செய்து அற்புதங்கள் நிகழ்த்திய இடம் . அங்கே கூடி சீடர்கள் தங்களது தளர்ந்த நம்பிக்கையைப் புதுப்பிக்கின்றனர். பயத்தினால் மறைக்கப்பட்டிருந்த அவர்களது விசுவாசம், உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தினால் வெளிக்கொணரப்படுகிறது. பயம் மனித பலவீனம் . ஆனால் இந்த பலவீனத்தையே பலமாக மாற்றினார்கள் சீடர்கள். பிள்ளைகளே என்று அன்போடு (மன்னித்து) அழைத்து, உழைக்க வழிகாட்டி,உற்சாகமூட்டி, உண்ண வாருங்கள் என அழைத்து, உடன் உணவுண்டு தனது இருப்பினால் பலம் ஊட்டுகிறார் இயேசு. ஒரு திருப்பலிக் கொண்டாட்டமே அங்கு நிகழ்த்தப்படுகிறது. அழைப்பு, மன்னிப்பு, வார்த்தைக்கு செவிமடுத்தல், (வலப்பக்கமாக வலைகளை வீசுங்கள்) காணிக்கை, ( பிடித்த மீன்களைக் கொண்டு வாருங்கள்) திருவிருந்து என அனைத்துமே நிகழ்த்தப்படுகிறது. சீடர்களின் பயம் என்னும் பலவீனம் துணிவு என்னும் பலமாக மாறியதற்கு காரணம் அவர்களிடம் இருந்த தேடுதல். இயேசுவை காணவில்லை என்று ஆரம்பித்த அவர்களின் தேடல், வாழ்வின் கடைசி வரை தொடர்ந்துகொண்டே இருந்தது. உயிர்ஹ்த இயேசுவைப்பார்த்து விட்டோம் இது போதும் என்று அவர்கள் ஓய்ந்து விடவில்லை. மாறாக தேடிக்கொண்டே இருக்கிறார்கள் ஒவ்வொரு முறை உயிர்த்த இயேசு காட்சி தரும் போதும் ஒவ்வொரு விதமான அனுபவம் பெறுகின்றார்கள். தங்களின் பயம் இதுதான் என கண்டுணர்ந்து அதை மாற்றிக் கொள்கிறார்கள். பயம் மனிதனின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதற்கு ஒரு சிறிய கதை. ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது. தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான். பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி அருகிலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான். பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து இன்னொரு கிளைமேல் பற்றி கீழே இறங்கி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார். ஆம் அன்பானவர்களே நமது இறைவன் பயம் என்னும் நமது பலவீனத்திலிருந்து நம்மை மாற்ற தயாராயிருக்கின்றார். நமது வாழ்வின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளும் அதன் அருகில் தான் இருக்கின்றன. நாம் தான் அவற்றைத் தேடாமல், அவரைத் தேடாமல் பயத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சீடர்கள் தங்கள் பயத்தின் மாற்றம் துணிவு என்பதை உணர்ந்தனர் தேடினர் கண்டடைந்தனர். தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் வாழ்வு என்பதை உணர்வோம். தேடுவோம் உயிர்த்த இயேசுவை நமது வீடுகளில் பணித்தளத்தில் சமூகத்தில். தேடப்படுவோம் பிறரால், நமது நல்ல இருப்பால், செயல்களால், சொல்லால். நம்மைத் தொலைத்தவர்களை நாம் தேடக்கூடாது. நம்மைத் தேடுபவர்களை நாம் தொலைத்துவிடவும் கூடாது. தேடுவோம்.... தேடப்படுவோம்.... இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.