தூய ஆவியார் பெருவிழாஅன்பு மொழியைக் கற்போம்.I. திருத்தூதர் பணிகள் 2:1-11 II. 1 கொரிந்தியர் 12:3-7, 12-13 III. யோவான் 20:19-23 r />
இறையேசுவில் அன்புக்குரியவர்களே உங்கள் அனைவரையும் தூய ஆவியாரின் பெருவிழாவிற்கு அன்போடு வரவேற்கின்றேன். இயேசுவின் விண்ணேற்பிற்கு பின் ஆவலோடு இயேசுவின் மறு வருகைக்காகவும் காட்சிக்காகவும் காத்திருந்த சீடர்களுக்கு எப்போதும் துணையாய் இருக்கும்படி துணையாளராக வருகின்றார் தூய ஆவியார். தூய ஆவியின் துணையோடு சீடர்கள் பல அற்புதங்களையும் செயல்களையும் செய்கின்றனர். பயத்தினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் இப்போது பரவசத்தினால் ஆட்கொள்ளப்படுகின்றனர். மனிதர்களால் இயக்கப்பட்டவர்கள் இப்போது கடவுளின் வல்லமையால் இயக்கப்படுகின்றார்கள். இன்றைய பெருவிழா திருச்சபையின் பெருவிழா. கிறிஸ்தவம் மிக வேகமாக வளரத்தொடங்கிய நாள் இன்று. இன்றைய நாளில் அகில உலக திருச்சபைக்காகவும், அதிலுள்ள ஏராளமான கிறிஸ்தவ மக்களுக்காகவும் நாம் இன்றைய நாளில் செபிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இன்றைய பெருவிழா நமக்கு விடுக்கும் செய்தி என்ன? தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட சீடர்கள் பல நாட்டவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் பேசுகின்றனர். அவர்கள் பல மொழிகளில் பேசினார்களா இல்லை அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அன்பு மொழியில் பேசினார்களா? தெரியவில்லை. ஆனால் இன்று அதே தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் அனைவரும் அன்பு மொழியில் பேச வேண்டும், நமது செயல்களைச் செய்ய வேண்டும் என்று இன்றைய வாசகங்கள் மூலம் அழைக்கின்றார் இறைவன். இன்று நமது நாட்டில் மொழிக்கான பிரச்சனைகள் பல எழுந்துள்ளன. மொழிப்பற்று கொண்டோரும் மொழியின் மீதான ஆர்வம் கொண்டோரும் அதற்கான போராட்டங்களிலும் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மொழி மனிதனுக்கு மிகவும் முக்கியமானது. தனது எண்ணத்தை வெளிப்படுத்தவும், உணர்வை வெளிக்காட்டவும் தனது கருத்தை தெரிவிக்கவும் மொழி மிகவும் கட்டாயமான ஒன்று. அதிலும் அனைத்து உயிர்களும் புரிந்து கொள்ளும் அன்பு மொழி மிக முக்கியமானது எனவே தான் இவ்வேளையில் அனைவருக்கும் பொதுவான அன்பு மொழியினை நாம் நம் வாழ்வில் செயலாக்க இறைவன் அழைக்கின்றார். சீடர்கள் தூய ஆவியைப் பெற ,,, 1. ஒன்றாகக் கூடி இருந்தனர். 2. வெளியில் இரைச்சல் உள்ளுக்குள் அமைதி. 3. பிறர் மேல் தூய ஆவியை காண்கின்றனர். 4. வேறு மொழி பேசுகின்றனர். 5. யூதர் கிரேக்கர் கடவுளின் வல்லமையை உணர்கின்றனர். 1 ஒன்றாகக் கூடியிருந்தனர். தனித்தனியே இருந்த சீடர்களை ஒன்றாக இணைத்தவர் இயேசு . அவர்களுக்கு அப்போஸ்தலர்கள் என்று பெயரிட்டு உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் . இன்று ஒற்றுமையாக கூடி இருப்பதினால்தான் தூய ஆவி அவர்கள் மேல் பொழியப்படுகின்றது . ஒற்றுமையின் வலிமை இங்கு வெளிப்படுகின்றது. ஆனால் நாம் நம்மில் சிலர் தனிமையாய் இருப்பதையும் தனித்திருப்பதையும் பெருமையாக கருதுகிறோம். எனவே தனிமையில் பல விளைவுகளை சந்திக்கின்றோம். நமக்கு எல்லாம் மிக பரிச்சயமான கதை ஒன்று உண்டு. மாடுகள் கூட்டமாக இருக்கும் தங்களைத் தாக்க வரும் விலங்கினங்களை ஒன்றாக சேர்ந்து விரட்டி அடிக்கும். எனவே அவைகளை உண்ண நினைக்கும் சிங்கம் முதலில் அவற்றை தனித்தனியாக பிரிக்கும் பின் அவற்றை ஒவ்வொன்றாய் உண்ணத் தொடங்கும். இது தான் இன்றைய நமது நிலைமை. நாம் குடும்பத்தோடும் ,நண்பர்களோடும் கூடி இருக்கும் போதும் நமக்கு நன்மை மட்டுமே நடக்கும். நாம் நமது சுய நலத்திற்காக தனித்தனியே பிரியும் போது தான் நமக்கு ஏராளமான பிரச்சனைகள். ஒன்றாகக் கூடி இருப்போம். நாட்டில் வீட்டில் குழுவில் குடும்பத்தில் ... ஆவியின் வல்லமையை உணர்வோம்.
2. வெளியில் இரைச்சல் உள்ளுக்குள் அமைதி: தாங்கள் தங்கியிருந்த வீட்டின் வெளியே ஏராளமான இரைச்சலும் சந்தடியும் கூட்டமும் குழப்பமும் நிறைந்து இருக்கின்றன. அது போக இடி மின்னலின் இரைச்சல் வேறு. இருப்பினும் சீடர்களின் உள் மனம் அமைதியில் இருக்கின்றது. வெளியில் இருக்கும் சத்தத்திற்கு தங்கள் மனதை கொடுக்காமல் துணையாளரின் வருகைக்காக அமைதியில் செபத்தில் இணைகின்றனர். நாம் பல நேரங்களில் வெளியிலும் அமைதி இல்லாது உள்ளுக்குள்ளும் அமைதி இல்லாது இருக்கின்றோம்.எவ்வளவு தான் கடினமான சூழ்நிலை இருந்தாலும் அதிலும் அமைதியோடு செயல்படும் போது தீர்க்கமான நல்லதொரு முடிவினை நாம் எதிர்பார்க்கலாம்.
3. பிறர் மேல் தூய ஆவியின் வல்லமையைக் காண்கின்றனர். ஒவ்வொருவரும் தனக்கு முன் இருக்கும் நபர் தூய ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டதாக உணர்கின்றனர். அப்படியே அவர்களை காண்கின்றனர். பிறரை மகிமைப்படுத்தி உயர்த்தும் போது தாங்களும் அந்த நிலைமைக்கு உயர்த்தப்படுகின்றனர். ஒவ்வொருவரும் பிறரை தூய ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு நபராகப் பார்க்கின்றனர். அதனால் தாங்களும் தூய ஆவியினால் நிரப்பப்படுகின்றனர். நம் எதிரில் இருப்பவர்களும் நம்மோடு வாழ்பவர்களும் கண்ணாடி போல, நாம் அவர்களை எப்படி மதித்து அன்பு செய்கின்றோமோ அதன்படியே நாமும் அவர்களால் மதிக்கப்படுவோம். அன்பு செய்யப்படுவோம்.
4. வேற்றுமொழி பேசுகின்றனர்: அவர்கள் வேற்று மொழி பேசுகின்றனர். அங்கிருந்த யூதரும் கிரேக்கரும் ஏனைய பிறரும் அவரவர் மொழிகளில் அதனைக் கேட்கின்றனர். அவர்கள் பேசிய அன்பு மொழியினை நாமும் கற்க ஆசிப்போம். அன்பு மொழியினை ஐந்து வகைகளில் வெளிப்படுத்தலாம். அன்பான தொடுதல், உறுதியூட்டும் வார்த்தைகள், சொல்லற்ற செயல்கள், அன்பளிப்புகள், அவர்களுடன் இருக்கும் பயனுள்ள நேரம் (குவாலிட்டி டைம்) இவை ஐந்தையும் நாம் நமது வாழ்வில் செயல்படுத்தும் போது நாமும் சீடர்கள் போல வேற்று மொழி பேசுபவர்களாக மாறுவோம். நமது பேச்சையும் செயலையும் மற்றவர்கள் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வர்.
5. ஏனையவர்கள் கடவுளின் வல்லமையைக் காண்கின்றனர். சீடர்களின் பரவசப் பேச்சினை புரிந்து கொண்டவர்கள், சீடர்களின் வல்லமை இது என்று பேசவில்லை மாறாக கடவுளின் வல்லமை என்கின்றனர். இதுதான் சீடர்கள் இவ்வுலகிற்கு விட்டுச்சென்ற பாடம். இயேசு கற்றுக்கொடுத்த பாடம். இயேசு தந்தையை மகிமைப்படுத்தினார். சீடர்களும் அதே தந்தையையும் மகனையும் மகிமைப்படுத்துகின்றனர். நமது செயல்கள் அனைத்தும் நமது பெருமையை பறைசாற்றுகின்றனவா இல்லை தந்தைக் கடவுளை மகிமைப்படுத்துகின்றனவா என்று சிந்திப்போம். இன்றைய பெருவிழாவைக் கொண்டாடி மகிழும் நாமும் அன்பு மொழி பேச முயல்வோம். அன்பு மொழியினைக் கற்க நல்லெண்ண உணர்வுகளால் நம்மை நிரப்புவோம். வண்ணங்களில் இல்லை வாழ்க்கை நம் நல்ல அன்பான எண்ணங்களில் இருக்கின்றது. மனிதர்களாகிய நாம் பல வண்ணங்களில் படைக்கப்பட்டிருந்தாலும் நல்ல அன்பு எண்ணங்கள் உடையவர்களே அழகானவர்களாக காட்சி அளிக்கின்றனர். நாமும் அன்பானவர்களாக மாற அன்பு மொழியில் பேசத்தொடங்குவோம். துணையாளராம் தூய ஆவியார் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்தி காப்பாராக ஆமென்.
|