பொதுக்காலம் 14ம் ஞாயிறுமகிழ்வின் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?I. எசாயா 66:10-14 II. கலாத்தியர் 6:14-18 III. லூக்கா 10:1-12, 17-20 br /> >வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சி எது தெரியுமா? நம்மால் முடியாது என அடுத்தவர்கள் கூறியதை அவர்கள் முன்னே செய்து காட்டுவது. இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்று சொல்வதை விட வாய்ப்புக்களைப் பயன்படுத்த முயலவில்லை என்று சொல்வதே சரியானது. நாம் இந்த உலகில் பிறந்தது வளர்ந்தது வாழ்ந்தது வாழ்ந்து கொண்டிருப்பது எல்லாமே மகிழ்வினை எப்படியாவது எட்டிப்பிடித்துவிட வேண்டும் அதை நம்முடனே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையினால் தான். இந்த மகிழ்வின் பட்டியலில் நமது பெயர் இடம்பெற்றிருக்கின்றதா? என்பதை கண்டறியவே இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் துன்புற்ற இஸ்ரயேலர் அடையும் மகிழ்வு நிலை பற்றி எடுத்துரைக்கின்றார். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவது போல அவர்கள் தேற்றப்படுவார்கள் என்கிறார். சிறு குழந்தைகள் தங்களது தாயை கட்டி அணைத்து மகிழ்வைத் தெரிவிப்பர். தாய் தனது சீராட்டல் உணவூட்டல் மூலமாக தனது அன்பினை வெளிப்படுத்துவார். அது போல இஸ்ரயேல் மக்கள் சீராட்டப்படுவர் என்று வாக்கு கொடுக்கின்றார். இரண்டாம் வாசகத்திலோ பவுலடியார் புதிய படைப்பாவதே இன்றியமையாதது என்கிறார். இதன் மூலம் மீண்டும் பிறந்து மகிழ்வோடு வாழுங்கள் என்கின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு மகிழ்வோடு வாழ என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக தனது சீடர்களுக்கு எடுத்துரைப்பதன் மூலம் நாமும் எப்படி மகிழ்வாக வாழ வேண்டுமென்றும் நமக்கும் வெளிப்படுத்துகிறார். சீடர்களை பணிக்கு அனுப்பும் பகுதி இன்றைய நற்செய்தி வாசகமாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெறும் சீடர்கள், அவர்களின் செயல்பாடுகள் நமக்கு மகிழ்விற்கான வழியைக் காட்டுகின்றன. அதன்படி நாமும் செயல்பட்டால் நமது பெயர்களும் விண்ணகத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் என்பதில் நாம் மகிழ்வடைவோம். கீழ்ப்படிதல் : இயேசு சொன்னவுடன் இருவர் இருவராக தெரியாத ஒரு ஊருக்கு செல்கின்றனர். ஏன் போக வேண்டும் என்றோ? எதற்காக போக வேண்டும் என்றோ? கேட்கவில்லை. நான் இவரோடு போக மாட்டேன் இந்த ஊருக்கு போக மாட்டேன் என்று சொல்லவில்லை மாறாக, உடனடியாக கீழ்ப்படிகின்றனர். இன்று நாம் பல நேரங்களில் உரிமை என்ற பெயரில் தேவையில்லாமல் கேள்விகள் கேட்டு நமது வாய்ப்புக்களை தவறவிடுகின்றோம். நமது கேள்வி கேட்கப்படும் இடம் சூழல் சரிதானா என்று பார்த்து கேட்க வேண்டும்.
செயல்படுதல்: இயேசு சொன்னதை செயலில் காட்டுகின்றார்கள். அவர் சொன்னதெல்லாம் செய்யுங்கள் என்ற வார்த்தைக் கேற்ப வாழ்கின்றார்கள். சரி என்று சொல்லிவிட்டு போகாமலோ, முடியாது என்று சொல்லிவிட்டு சென்றோ இவர்கள் இருக்கவில்லை. மாறாக சொன்னதை செயலில் காட்டுகின்றார்கள். நாம் சில செயல்களை செய்வதற்கு கால தாமதம் செய்கின்றோம். அதை விடுத்து உடனடி செயலில் இறங்க முயல்வோம்.
குணமளித்தல் : தங்களுக்கு கிடைப்பதை உண்டு நிறைவடைந்து தங்களது உடல் உள்ள பலனை அதிகரித்துக் கொள்கின்றனர். அதன் பலனாக தாங்கள் பெற்ற நலனை பிறருக்கும் குணமளிக்கும் வரமாக தருகின்றனர். நம்மிடத்தில் பலரிடம் இன்று சாப்பாட்டில் குறை கூறும் பழக்கம் இருக்கிறது. கொடுப்பதை உண்பதை விட விரும்பியதை கேட்டு உண்பதையே பெருமையாக எண்ணுகின்றோம். இதனால் பலனும் கிடைப்பதில்லை நலனும் கிடைப்பதில்லை. பறைசாற்றுதல்: பிடித்தவர் பிடிக்காதவர் என்ற வேறுபாடு இன்'றி அனைவருக்கும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்று துணிவுடன் பறைசாற்ற ஆரம்பித்தனர். விரும்பாதவர்களுக்கு எதிராக தூசியை உதறி எதிர்ப்பையும் தெரிவித்தனர். அவர்களது துணிச்சலான பறைசாற்றுதலால் எல்லாம் நலமே நடந்தேறின. நாம் பல நேரங்களில் நற்செய்தியைப் பறை சாற்றவே விரும்புவதில்லை. அப்படியே பறைசாற்றினாலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதில்லை. துணிவுடன் நற்செய்தியை பறைசாற்றி மகிழ்வோம்.
நன்மையை மட்டும் கூறுகின்றனர்.: சீடர்களது பயணத்திலும் பணியிலும் இன்பங்களோடு துன்பங்களும் நிறைந்து இருந்திருக்கும். ஆனாலும் அவர்கள் நன்மையை மட்டுமே இயேசுவிடம் தெரிவிக்கின்றனர். நாமும் நன்மையை மட்டுமே சொல்லிப் பழகுவோம்.
இப்படிப்பட்ட குணங்களோடும் நலன்களோடும் நாம் வாழும் போது நமது பெயர்கள் நிச்சயம் விண்ணகத்தில் இடம்பெற்றிருக்கும். சாதாரண அட்டைகளிலும் பலகைகளிலும் நமது பெயரைப் பார்த்து மகிழும் நாம் விண்ணகத்தின் நுழைவாயிலில் நமது பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் குறித்து பெருமகிழ்வடைவோம். ஏனெனில் நம்மை அடையாளப்படுத்துவது நம் பெயர். நமது பெயர் இடம்பெற்றிருக்கும் இடம் , அது பத்திரிக்கை ஆனாலும் மடலானாலும் வாழ்த்துப் பலகையானாலும் உயரத்திற்கும் வடிவத்திற்கும் ஏற்ப நமக்கு மகிழ்வைத்தரும். ( எனது பெயர் பெரிய எழுத்துக்களில் பதாகைகளில் வரவேண்டும். முன்னாடி பின்னாடி இந்த அடைமொழிகளும் பட்டங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம்.) இதற்கு எல்லாம் மேலாக நமது பெயர்கள் விண்ணகத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. என்பது குறித்து அகமகிழ்வோம். அதற்கேற்ப நமது பெயரை அப்பட்டியலில் சேர்க்க முயற்சி செய்வோம். மகிழ்வு என்னும் பெயர்ப்பட்டியலில் நமது பெயரையும் சேர்க்க நம்மாலான செயல்களை செய்ய முற்படுவோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.
|