பொதுக்காலம் 15ம் வாரம் ஆதலால் உதவி செய்வீர்....இணைச்சட்ட நூ. 30:10-14, கொலோசையரு 1: 15-20, லூக்கா 10:25-37) />உதவி இன்று பலவகைகளில் பல மனிதர்களால் செய்யப்படுகின்றது. சிலர் உதவிகளை மறைமுகமாக செய்து வருகின்றனர். மற்றும் சிலர் நேரடியாக சென்று உதவுகின்றனர். மற்றும் பலரது உதவும் நிலையோ, உணர்வினை வெளிப்படுத்துவதோடு (ஐயோ பாவம்) மட்டுமே நின்று விடுகின்றது. சிலரோ குறுஞ்செய்தி பகிர்தலோடு தங்களது உதவும் மனப்பான்மையை நிறுத்திவிடுகின்றனர். இப்படி இருக்க நமது உதவி செய்யும் மனப்பான்மை எந்த நிலையில் உள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்கவே இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட திருச்சட்ட அறிஞருக்கு , முழு மனம், உள்ளம், ஆன்மாவோடு கடவுளை அன்பு செய். உன்னை அன்பு செய்வது போல உன் அயலானையும் அன்பு செய் என்கின்றார். நமது அயலான் யார் என்பதற்கு நல்ல சமாரியன் உவமையினை எடுத்துக் கூறுகிறார். இவ்வுவமையில் கதாபாத்திரங்களாக, வழிப்போக்கன், கள்வன், குரு, லேவியன், நல்ல சமாரியன், சாவடிப் பொறுப்பாளன் என ஆறு பேர் இடம்பெருகின்றனர். நமக்குள்ளும் இந்த ஆறுவகை மனிதர்களும் அவர்களின் குணங்களும் நிறைந்து இருக்கின்றன. அவர்களின் குணங்களும் செயல்களும் நாம் எப்படி இருக்க வேண்டும் / இருக்கக் கூடாது என்பதனை நமக்கு வெளிப்படுத்துகின்றன.
வழிபோக்கன்: தன்னந்தனியனாக பயணத்தைத் தொடங்குகிறான். தன்னைப் பாதுகாத்துக்கொள்ளக் கூட இயலாதவனாக இருக்கின்றான். நாமும் பல நேரங்களில் பிறர் உதவி இல்லாது தனியே செயல்பட நினைக்கின்றோம். விளைவு ஆபத்தில் மாட்டிக் கொள்கின்றோம். தனித்து செயல்பட நினைப்பது தவறல்ல. ஆனால் அதில் விவேகமும் வேகமும் கட்டாயம் தேவை. இல்லையெனில் இப்படி தான் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும். இரண்டாவதாக தன்னை பாதுகாத்துக் கொள்பவனாலே, பிறரையும் காத்துக் கொள்ள முடியும் . இயேசு கூட உன்னை அன்பு செய்வது போல உன் அயலானையும் அன்பு செய் என்கின்றார். நம்மை நாம் அன்பு செய்தால் மட்டுமே பிறரையும் அன்பு செய்ய முடியும். தன்னை பாதுகாத்துக் கொள்கின்ற வலிமை உடையவர்களாய் நாம் மாறும் போது தான் பிறரையும் காக்கும் வலிமை பெறுவோம்.
கள்வர்கள்: இவர்கள் தங்களது சுயநலத்திற்காக பிறரை தாக்கும் குணம் படைத்தவர்கள். தாங்கள் மட்டும் நலமோடு வாழ்ந்தால் போதும் என்று எண்ணுபவர்கள். நாமும் பல நேரங்களில் இப்படி சுயநலத்தோடு செயல்பட்டிருப்போம். இப்படி இருந்தால் நாமும் யாருக்கும் அயலாராக ஆக முடியாது .பிறரும் நமக்கு அயலானாக அமைய முடியாது. நிலைவாழ்வின் நிழலைக் கூட நம்மால் நெருங்க முடியாது.
குரு, லேவியன்: தங்களது கடமைகளில் கருத்தோடு இருக்க நினைத்து பிறரைக் குறித்து கவலைப் படாதவர்கள். கண்ணெதிரே தீமை நடந்தும் அதைக் காணாது செல்பவர்கள். கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், உணர்விருந்தும் உயிரற்ற உடலாய் வாழ்பவர்கள். நாமும் நமது அருகில் இருப்பவர்களின் துன்ப நேரத்தில் அதைக் கண்டு கொள்ளாது இவர்கள் போல செயல்பட்ட நேரங்கள் பல. மனிதனாக வாழ்வது பெரிதல்ல, மனிதாபிமானத்துடன் வாழ்வது தான் பெரிது என்பதை உணர்ந்து வாழ்வோம் .
சாவடி பொறுப்பாளன்; தன்னை நோக்கி வந்த அந்நியர்களுக்கு தங்க இடம் அளிக்கின்றார். வாடகை இவ்வளவு பணம் கொடு என்று கேட்கவில்லை. கொடுத்ததை வாங்கிக் கொள்கின்றார். நல்ல சமாரியனின் கைமாறில் இவரும் பங்கேற்கின்றார். பிறரன்போடு காயம்பட்டவருக்கு உதவிகள் செய்து அவரைக் கவனித்துக் கொள்கின்றார். இவனை ஏன் இங்கு அழைத்து வந்தாய்? உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா? என்று நல்ல சமாரியனிடமும் கேட்கவில்லை. அடிபட்டவனிடம் நீ ஏன் இப்படி தனியாக வந்தாய்? பலசாலின்னு நினைப்பா? இல்லை உனக்கு தான் எல்லாம் தெரியும் என்று எண்ணமா? என்று கேள்விக் கணைகளால் அவன் மனதைக் காயப்படுத்தவும் இல்லை. நம்மில் பலர், பிறருக்கு உதவி செய்பவரையும் கேள்வி கேட்டு துளைத்தெடுப்பர். உதவி பெற நினைப்பவரையும் கேள்வி கேட்டு துன்புறுத்துவர். உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? மத்தவங்கள மாதிரி நீயும் பாத்துட்டு பார்க்காத மாதிரி போக வேண்டியதுதான. என்று உதவி செய்பவரையும், உங்களுக்கு எல்லாம் கை கால் நல்லா தான இருக்கு உழைச்சு சாப்பிட வேண்டியது தான என்று உதவி கேட்பவரையும் பார்த்து அறிவுரை கூற ஆரம்பிப்பர். (ஒருவர் நம்மிடம் உதவி செய்யுங்கள் என்று கேட்கும் முன் இவரிடம் உதவி கேட்கலாமா? என்று பலமுறை யோசித்திருப்பார். நம்மால் அவருக்கு உதவ முடியும் என்று நம்பிய பிறகு தான் நம்மிடம் உதவி கேட்க முன்வருவர். நம்மால் முடிந்தால் செய்யப் பழகுவோம். இல்லாவிட்டால் வேறு வார்த்தைகள் எதுவும் கூறி அவர்கள் மனதை புண்படுத்தாது இல்லை என சொல்லப் பழகுவோம். ) சாவடிக்காப்பாளன் போல நல்லது நினைப்போம், நல்லது செய்வோம் இல்லையெனில் நல்லது செய்பவருக்கு உதவிகள் செய்தாவது வாழ்வோம்.
நல்ல சமாரியன்; நமது கதையின் கதாநாயகன் இவர் தான். உதவி எல்லோராலும் செய்து விட முடியாது அதற்கு உள்ளமும் உடலும் இணைந்து செல்ல வேண்டும். பண்பும் பரிவும் பொங்கி எழும்ப வேண்டும். விழிப்புணர்வு நிலை வீரியமடைய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தம் வார்த்தை வாழ்வளிக்க வேண்டும். உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருள் எழுந்ததும் உடலும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றது. அவரை தன் தோள் மேல் தூக்கி தனது வாகனத்தில் ஏற்றி சாவடி நோக்கி செல்கின்றார். ஆடையின்றியும் குற்றுயிராயும் கிடந்த அவர் மேல் பரிவும் பண்பும் கொள்கின்றார். அவர் காயங்களுக்கு தன்னிடம் இருந்தபொருளைக் கொண்டு முதலுதவி செய்கின்றார். இவரது காயங்களுக்கு என்னிடம் மருந்து ஒன்றும் இல்லையே. இவரை மருத்துவமனையில் சேர்க்க பணம் இல்லையே என்று காரணம் சாக்கு போக்கு சொல்லி விலகவில்லை மாறாக இருப்பதைக் கொண்டு உதவி செய்கின்றார். நாம் பல நேரங்களில் உதவி நிலையில் இருப்போரைப் பார்த்து விட்டு நம்மால் இவர்களுக்கு உதவ முடியாது என்று கூறி விலகி விடுகின்றோம். உதவி செய்ய வாய்ப்பு கிடைத்தும் அதை செய்யாது போன தருணங்கள் பல. அடிபட்டவரின் குமுறலும் அழுகையும் இவரது கவனத்தை ஈர்த்திருக்கின்றது. அருகில் சென்று கைகளைல் எடுத்து மடி மேல் வைக்கின்றார். தனது ஆறுதலான வார்த்தைகளால் வாழ்வளிக்கின்றார். உதவி செய்ய அறிவு தேவையில்லை, நல்ல இதயம் இருந்தால் போதும் அது நம்மிடம் அதிகமாகவே உள்ளது ஆனால் அதை உணர்ந்து அதன்படி நடக்கும் விழிப்புணர்வு நிலையும் தெளிவான மனனிலையும் தான் அதிகம் தேவை. நல்ல சமாரியன் போல நாமும் மாற உதவிக்கரம் நீட்டுவோம். மனிதாபிமானத்துடனும், பண்புள்ளத்தோடும் பரிவு மனப்பான்பையோடும் நாம் வாழ்வோம். நம்மை சுற்றி துன்புறுபவர்களின் அழுகையையும் குறலையும் கேட்க பழகுவோம் . அவர்கள் அருகில் இருந்து ஆறுதல் சொல்வோம் கைகளால் உதவியும் செய்ய முன்வருவோம். நமக்கு இரண்டு கைகளை ஆண்டவர் கொடுத்துள்ளார் ஒன்று நமக்கு நாமே உதவிக்கொள்ள , மற்றொன்று பிறருக்கு உதவ. நமது உள்ளமும் பிறருக்காக இரங்கட்டும் . நமது கைகளும் பிறருக்கு உதவட்டும் . நமது விழிப்பு நிலை உயர்வு நிலை அடையட்டும்.. ஆதலால் உதவி செய்வீர்.... ஆண்டவனின் ஆசீர் பெறுவீர். அருகில் இருப்பவர் அனைவருக்கு அயலாராய் ஆவீர் ... இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.
|