இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 26ம் ஞாயிறு

ஏழையா? பணக்காரனா?

ஆமோஸ் 6: 1, 3-7,
திமொத்தேயு 6: 11-16,
லூக்கா 16: 19-31)

/>அன்பர் இயேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே, பொதுக்காலத்தின் 26ம் ஞாயிறு நாம் ஏழையா? பணகாரர்களா? என்று சிந்திக்க அழைப்புவிடுக்கின்றது. வெறும் பணபலமும் புகழ் பலமும் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார்கள் என்று சொல்லி விட முடியாது. அதே போல எந்த பணமும் புகழும் இல்லாமல் வாழும் அனைவரும் வருத்தத்தோடு இருக்கின்றார்கள் என்றும் சொல்ல முடியாது. ஆக நாம் ஏழையா பணக்காரனா என்பதை முடிவு செய்வது நம் மனதே தவிர நம்மிடம் இருக்கும் பொருள்கள் அல்ல. இதே சிந்தனையுடன் இன்றைய நற்செய்தி வாசகத்திற்குள் நுழைவோம்.

இன்றைய நற்செய்தியில் இரு கதாபாத்திரங்கள் இடம் பெறுகின்றன. ஒருவர் பணக்காரர் என்றும் மற்றொருவர் ஏழை என்றும் அவர்களது வெளிப்புற செயல்பாடுகள் மற்றும் சூழலை வைத்து அழைக்கப்படுகின்றனர். பெயர் , ஆடை , உணவு, பார்வை என்ற அடிப்படையில் அவர்கள் இருவரின் செயல்பாட்டினை கூர்ந்து நோக்க நாம் அழைக்கப்படுகின்றோம்.

பெயர் :
செல்வந்தருக்கு பெயர் குறிப்பிடப்படவில்லை. ஏழைக்கு லாசர் என்று ஒரு பெயர் இருக்கின்றது. பெரும்பாலும் நாம் வாழும் இடங்களில் தெருவோரமாக தர்மம் எடுப்பவர்களை நாம் பெயர் சொல்லி அழைப்பதில்லை. மாறாக, ஐயா, பெரியவரே, அம்மா, இந்தாம்மா, என்று தான் அழைப்போம் ஆனால் நற்செய்தியில் இயேசு ஏழைக்கு ஒரு பெயர் வைப்பதிலிருந்து அவர் எளிய மனத்தவர்க்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார் என்பது புரிகின்றது. நமது வழக்கில் சொல்லப்படும் ஒரு வாக்கியம். இல்லாதவன் ஆட்ட மேய்க்கிறான் இருக்கிறவன் நாய மேய்க்கிறான். அது உண்மை தான் என்று இன்றைய காலகட்டங்களில் நிருபனமாகின்றது.
நாய்க்கு கூட பெயர் வைத்து தான் அடையாளப்படுத்துகிறான் மனிதன் செல்வந்தன். ஆனால் அவனின் அடையாளத்தை பணத்தில் தொலைக்கின்றான். நாம் எப்படி அழைக்கப்படுகின்றோம் நம் பெயர் கொண்டா? இல்லை பணம் கொண்டா? இல்லை குணம் கொண்டா?

ஆடை:
ஆடை மனிதனுக்கு மிகவும் முக்கியம் . முற்காலத்தில் எல்லாம் ஆடை அணிவதைக் கொண்டே அவர்கள் எவ்வளவு செல்வாக்கானவர்கள் முக்கியமானவர்கள் என்று அறிந்து கொள்ளலாம். ஆனால் இப்போதோ அதற்கு நேர் மாறாக ,
" வாங்கிய ஆடை கிழியும் வரை உடுத்தினால் அவன் ஏழை,
கிழிந்த ஆடையை வாங்கி உடுத்தினால் அவன் பணக்காரன் " என்று மாறிவிட்டது. இருவரில் யார் ஏழை பணக்காரன் என்று பாகுபாடு பார்க்க முடியாத அளவிற்கு இருவருக்கும் இடையே உடையில் ஒற்றுமை வந்துவிட்டது. ஆனால் நற்செய்தியில் இடம்பெறும் இருவருக்கு இடையே இந்த ஒற்றுமை இன்னும் வரவில்லை என்பது தான் உண்மை. செல்வந்தர் செந்நிற மெல்லிய ஆடை அணிந்து தன்னை உயர்வாக காட்டுகின்றார். ஏழையோ கந்தலாடை அணிந்து தன் இயலாமையைக் காட்டுகின்றார். அவரவர்கள் உடுத்தும் ஆடையைக் கொண்டே அவர்களுக்கு மரியாதையும் முக்கியத்துவமும் கொடுக்கப்படுகின்றது. ஆடை இல்லாதவன் அரை மனிதன். கிழிந்த ஆடையை ஒட்டு போட்டு அணிந்து தன் மானம் காப்பவன் முழு மனிதன். நாம் நம் மனிதத்தையும் மரியாதையையும் ஆடையில் காட்டுகின்றோமா?

உணவு:
செல்வந்தர்களின் பலவகையான அறுசுவை உணவை விட ஏழையின் ஒரு வேளை பழைய சோறு சுவையானது . ஏனெனில் அது பசியோடு உண்ணப்படும். அதிலும் மேலாக பகிர்ந்து உண்ணப்படும் உணவு மிகவும் சுவையானதாக மாறும். நம் கதாநாயகர் லாசர் தன் பசியை மட்டுமல்லாது தனது உடலின் புண்களை நக்கி தனக்கு இடையூறு தரும் நாய்களின் பசியையும் போக்குகின்றார். இவர் உண்பது எச்சில் உணவு என்றாலும் ஐந்தறிவு உயிர்களுக்கும் அதை பகிர்ந்து உண்ணும் போது நிச்சயம் அவருக்கு அது அமிழ்தமாக இனித்திருக்கும்.இந்த நற்பண்புகளினாலேஅவர் வான் வீட்டிற்கு தூதர்களால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பார். நமது உணவும் தித்திக்கும் நாமும் பிறரோடு பகிரும் போது .

பார்வை:
செல்வந்தரின் வீட்டு வாயிலின் அருகே லாசர் என்பவர் இருந்திருக்கின்றார். அவர் அருகே இருந்தும் செல்வந்தரால் அவரை காணமுடியவில்லை. ஆனால் இறந்து ஆபிரகாமின் அருகில் இருப்பதை தொலையில் பார்க்கின்றார். உடனே கண்டுகொள்கின்றார். செல்வத்தோடு இருந்தபோது அருகில் இருக்கும் அனைத்தையும் காணாதவாறு பார்வை குறுக்கப்பட்டு கண்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. எதுவும் இல்லாத போது பார்வை விசாலமாகின்றது. வீட்டருகில் இருந்தபோது அவருக்கு நன்மை எதுவும் செய்யாத செல்வந்தர் அவர் ஆபிரகாமின் அருகில் இருக்கின்றார் என்று கண்ட போது தன்னை அவருக்கு அடையாளப்படுத்துகிறார். பெரும்பாலும் நமக்கு கிடைக்கும் அல்லது நாம் பிறருக்கு கொடுக்கும் மரியாதையும் மதிப்பும் நாம் எங்கே இருக்கின்றோம் யார் அருகில் இருக்கின்றோம் என்பதை பொருத்தே அமைகின்றது. ஒன்றை மட்டும் புரிந்து கொள்வோம் ஆனந்தமாக வாழ ஆடம்பரம் தேவையில்லை. அன்பானவர்கள் நம்முடன் இருந்தாலே போதும் அதுவும் கடைசிவரை அன்பானவர்களாகவே இருப்பது மிக அவசியம்.

ஆகவே ஏழை பணக்காரன் என்பது நாம் உடுத்தும் ஆடை, உண்ணும் உணவில் இல்லை, நாம் யாராக இருக்கின்றோம் எப்படி இருக்கின்றோம் என்பதை பொருத்தே அமைகின்றது. ஏழையாகவே இருந்தாலும் மனதளவில் பணக்காரர்கள போல இருப்போம். பணக்காரர்கள் ஆனபின் நமது நடத்தையில் ஏழைகளாக இருப்போம். நமது ஆடம்பரத்தை வெளிப்படுத்துவதை விடுத்து அன்பை வெளிப்படுத்துவோம். இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்வோம். எதிர்பார்ப்பதில் ஏழைகளைப் போலும் கொடுப்பதில் பணக்காரர்களாயும் இருப்போம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவரோடும் இருப்பதாக ஆமென்.
>