உயிர்ப்பு ஞாயிறு மூன்றாம் வாரம். எங்களோடு தங்கும் இயேசுவே....I. திருத்தூதர் பணி 2:14,22-33 II. 1 பேதுரு 1:17-21 III. லூக்கா 24:13-35 />இன்று நாம் அனைவரும் தடை உத்தரவின் பேரில் வீடுகளில் தங்கி இருக்கின்றோம். யாரும் யாருடைய வீட்டிற்கும் செல்வதில்லை . யாருடைய விருந்துகளுக்கும் அழைக்கப்படுவதில்லை. வீட்டில் தங்கி இருக்கின்றோம். ஒரே இடத்தில் இருப்பது பலருக்கு வெறுப்பு. சிலருக்கு விருப்பு. இன்றைய காலகட்டங்களில் இயேசுவோடு நாம் தங்கியிருக்க , இயேசுவை நம்மோடு தங்க அழைக்க, நம்மை இன்றைய வாசகங்கள் வலியுறுத்துகின்றன. துறவிகளும் அருட்பணியினரும் ஏன் ஏனைய மக்களும் தியானம் செய்யும் போது பெரும்பாலானவர்கள் செய்ய வலியுறுத்தப்படுவது, தனித்திரு, விழித்திரு, செபித்திரு. இது இன்றைய காலகட்டத்தில் நமக்கும் பொருந்தும். நாம் தனித்திருக்கிறோம், ஆனால் விழித்திருந்து செபிக்கிறோமா என்பது அவரவர் மனசாட்சியைப் பொருத்தது.
இயேசுவின் சீடர்கள் பலர் இருந்தனர். அவர்களில் எம்மாவுஸ் ஊருக்கு நடந்து சென்றவர் ஒருவர் பெயர் நற்செய்தியில் இடம் பெற்றுள்ளது. மற்றோருவரின் பெயர் யார் என்று தெரியவில்லை. அது நாம் தாம் என்பது மறைவல்லுனர்கள் கூறும் செய்தி.. இவர்கள் இயேசுவின் 12 சீடர்களில் இல்லை என்பது, இவர்கள் எருசலேம் சென்று பதினொருவரையும் அவர்களோடு குழுமி இருந்தவர்களையும் கண்டார்கள் என்ற செய்தி சாட்சி. இவர்கள் இயேசுவின் பரந்து பட்ட பல்லாயிரக்கணக்கான சீடர்களில் இருவர். இவர்களின் பண்பு நலன்கள் தான் இயேசுவை இவர்களோடு தங்க வைக்க செய்தது. அதே குண நலன்களை நாமும் பெற்று இயேசுவை நம்மோடு தங்க அழைப்போம்.
1. இயேசு இறந்தவுடன் அமைதியாக அழுது கொண்டு வீட்டிற்குள்ளேயே இருந்து விடவில்லை. அவரது உயிர்ப்பின் நிகழ்வை, மகதலா மரியாள் போன்றோர் சொன்ன செய்தியை பிறருக்கும் அறிவிக்க செல்கின்றார்கள். நாமும் இக்காலத்தில் உயிர்த்த நம் இறைவனின் மகிமையை பிறருக்கு நேரடியாக சென்று எடுத்துச் சொல்ல முடியாவிட்டாலும் சிறு செய்தி மூலமாக பிறருக்கு நம்பிக்கையை தருபவர்களாக மாறலாம். காலாவதியான செய்திகளை பிறருக்கு அனுப்புவதற்கு பதிலாக என்றும் வாழ்வு தரும் வாழ்வின் வார்த்தைகளாம் விவிலிய வார்த்தைகளை பகிரலாம்.
2. சீடர்களின் உரையாடல் இயேசுவைப் பற்றியதாக மட்டுமே இருந்தது. அவர்களுக்கு அவர் தான் மூச்சாகவும் பேச்சாகவும் இருந்தார். எதைப் பேசுகிறோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம். இது இயற்கை நியதி. நல்லதைப் பேசினால் நல்லதாக மாறுவோம். இப்போது நாம் தேவையற்ற பேச்சுக்களாலே அதீத பயத்தினால் ஆட்கொள்ளப்படுகிறோம். உயிர்த்த ஆண்டவரின் வல்லமையைப் பற்றி மட்டுமே பேசி வலிமை பெறுவோம்.
3. தங்களோடு உடன் வந்தவர், அந்நியரான போதிலும் அவரை மதித்து அவர் கேட்கும் கேள்விகளுக்கு முறையான பதிலை கொடுக்கின்றனர். நாம் இந்நாட்களில் நம்மோடு உடன் இருக்கும் நம் குடும்பத்தார்களை உறவுகளை மதிக்கின்றோமா? அதிகமான குடும்ப உறவுகள் விரிசலில் வீழ்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஒவ்வொருவரின் உணர்வுகளை மதித்து வாழ முயற்சிப்போம்.
4. இயேசுவின் போதனையில் மயங்கி அவரை தங்களோடு இருக்க அழைக்கின்றனர். அவரது மறைநூல் விளக்கத்திற்கு தங்கள் இதயங்களைத் திறக்கின்றனர். நாமும் இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் திருப்பலியினைக் கண்டு கொண்டிருக்கும் வேளையில் நம்முடைய இதயங்களை இறைவார்த்தைக்கு திறப்போம்.
5. இயேசு செய்த அடையாளத்தைக் கண்டு இவர் தான் இயேசு என்று அடையாளம் கண்டு கொள்கின்றனர். அவரது அப்பம் பிட்கும் ஒரு செயல் இவர்களுக்கு இயேசுவை அடையாளம் காட்டுகின்றது. நம்முடைய வாழ்விலும் இயேசு பல்வேறு செயல்களை செய்கின்றார். நாம் தாம் அவரை அடையாளம் காணாமல் இருக்கின்றோம். நம் கண்களை மாயை என்னும் உலக நிகழ்வுகள் மறைத்து விடுகின்றன.
6. அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டு கொண்டதும் தங்களது எம்மாவூஸ் பயணத்தை மாற்றி மீண்டும் எருசலேம் திரும்புகின்றார்கள். இயேசு உயிர்த்து விட்டார் என்ற செய்தியை மற்ற சீடர்களுக்கும் அறிவிக்கின்றார்கள். நமது வாழ்வின் திசையை மாற்றி அமைப்போம். பலமிலந்தவர்களுக்கு பலம் கொடுப்பவர்களாக நாம் மாறுவோம்.
இப்படி எம்மாவூஸ் சீடர்கள் போல நாமும் செயல்பட்டால் உயிர்த்த இயேசு நம்மோடும் தங்குவார். நம்மிலும் பல மாற்றங்களை அவர் ஏற்படுத்துவார். உயிர்த்த இறைவனின் ஆற்றல் பெற்றவர்களாக நாமும் மாற நம்மோடு இருப்பவர்களையும் மாற்ற அருள் வேண்டுவோம் எம்மோடு தங்கும் இயேசுவே என்று அனுதினமும் செபிப்போம் தனித்திருப்போம் அவரோடு செபித்திருப்போம் அவரோடு. இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரோடும் இருப்பதாக ஆமென்.
|