இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தூய ஆவியார் பெருவிழா

மொழிபெயர்ப்பு செயலியாக *TRANSLATORS*

I. திருத்தூதர் பணிகள் 2:1-11
II. 1 கொரிந்தியர் 12:3-7,12-13
III. யோவான் 20:19-23

இன்று தாயாம் திருச்சபையானது தூய ஆவியின் பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது. தூய ஆவியின் பெருவிழா திருவருட்சாதனங்களின் பெருவிழா. தூய ஆவியின் பங்கு திருச்சபையின் வரலாற்றில் மிக முக்கியமானது. திருச்சபையின் வரலாற்றில் மட்டுமல்ல, உலகத்தின் தொடக்கத்தில் இந்த பூமியானது வெறுமையற்று இருந்தபோது அதில் உலாவிக் கொண்டிருந்தது தூய ஆவியின் ஆற்றலே என்று நாம் விவிலியத்தின் முதல் பகுதியில் வாசிக்க கேட்டிருக்கின்றோம். உலகத்தின் தொடக்கம் தொடக்கமும் முடிவுமாக இருப்பவர் தூய ஆவியே. பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் நடக்க காரணமும் தூய ஆவியின் செயல்பாடே. இன்றைய முதல் நற்செய்தியில் தூய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்ட சீடர்களின் செயல்பாடுகளும் அது தொடர்பான நிகழ்வுகளும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது வாசகத்தில் புனித பவுலடியார் இயேசு எவ்வாறு தந்தை இறைவனால் மாட்சிமைப்படுத்தப்பட்டார் உயர்த்தப் பட்டார் என்பதை எடுத்துரைக்கின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, பயத்தோடு இருந்த சீடர்களுக்கு தூய ஆவியை அளித்த நிகழ்வானது கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று வாசகங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றன. இயேசு அளித்த தூய ஆவி , அதனைப் பெற்றுக் கொண்ட சீடர்களின் மன நிலை, தந்தை கடவுள் இயேசுவைமாட்சிமைப்படுத்திய வழிகள் என அனைத்தையும் நமக்கு நினைவூட்டி நாமும் அதன்படி வாழ அழைப்பு விடுக்கின்றது இன்றைய வாசகங்கள்.

தூய ஆவி பெருவிழாவை திருவருட்சாதனங்களின் பெருவிழா என்று கூறுவதற்கு காரணம்:

இயேசு தனது சீடர்களுக்கு தூய ஆவி அளித்த அந்த நிகழ்வினை நமது சிந்தனைக்கு என்று எடுத்துக் கொள்வோம். அவர் பேசிய ஒரு சில வார்த்தைகளில் நமது ஏழு திருவருட்சாதனங்களின் மிக முக்கிய குறிப்புகள் அடங்கியுள்ளன.
ஞானஸ்ஞானம்:
இயேசு வந்து அவர்கள் நடுவில் இருக்கின்றார். பிறந்த குழந்தையை கிறிஸ்தவ சமூகத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தி, இது கிறிஸ்தவள் கிறிஸ்தவன் என்று அழைக்கப்பட இருக்கின்றது என்பதன் அடையாளமாக ஞானஸ்ஞானம் கொடுக்கின்றனர். இயேசுவும் பயந்து கொண்டிருந்த சீடர்களின் பயத்தை நீக்க கூடியிருந்த அவர்கள்முன் வந்து நடுவில் நிற்கின்றார். தன்னை அடையாளப்படுத்துகிறார்


2 புதுநன்மை:
தனது கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டுகின்றார். இதன் மூலமாக தனது உடலாகிய நற்கருணை அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். அவரது உடலை கைகளை விலாவைக் கண்ட சீடர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள். இதன்மூலமாக திவ்ய நற்கருணை திருவருட்சாதனம் அடையாளப்படுத்தப்படுகிறது.


3 உறுதிப்பூசுதல்:
அவர் அவர்கள்மேல் ஊதி தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார். உறுதிபூசுதல் திருவருட்சாதனத்தின் பொழுது நம் ஒவ்வொருவரின் நெற்றியின் மீது திருத்தைலம் பூசப்பட்டு தூய ஆவியைப் பெற்றுக் கொள் என்ற வரிகள் கூறப்பட்டு நாம் தூய ஆவியால் நிரப்பப்படுகின்றோம். இங்கு இயேசுவின் வார்த்தைகள் மூலம் இந்த திருவருட்சாதனம் இங்கு அடையாளப் படுத்தப் படுகின்றது.


4,5 குருத்துவம், திருமணம்:
"தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்" ஒவ்வொருவருக்கும் ஒரு அழைப்பு. சிலருக்கு திருமண அழைப்பு. சிலருக்கு குருத்துவ, அழைப்பு, துறவற அழைப்பு. ஒவ்வொருவரும் அவரவரது அழைப்புக்கேற்ற ஆற்றலை பெறுகின்றனர். முதல் வாசகத்தில் கூறப்படுவது போல கடவுளுடைய இந்த அழைப்புக்கு ஏற்ற எதிர்நோக்கை நாம் ஒவ்வொருவரும் பெற்றுள்ளோம். இயேசுவும் தனது சீடர்களை தந்தை அவரை அனுப்பியது போல அனுப்புகின்றார். இதன் மூலமாக குருத்துவம் திருமணம் எனும் அருட்சாதனங்கள் நிறைவேற்றப்படுகின்றன அடையாளப் படுத்தப் படுகின்றன.


6,7 நோயில் பூசுதல், பாவமன்னிப்பு:
நீங்கள் எவருடைய பாவங்களை மன்னிப்பீர்களோஅவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாது இருப்பீர்களோ அவை மன்னிக்கப்படா என்கின்றார். இதன் மூலமாக பாவமன்னிப்பு, நோயில் பூசுதல் எனும் திருவருட்சாதனங்கள் அடையாளப் படுத்தப் படுகின்றன.

ஆக இயேசு தூய ஆவியை சீடர்களுக்கு அளிக்கின்ற இந்த பெரு விழாவானது, திருவருட்சாதனங்களை தம் சீடர்களுக்கு அளிக்கின்ற திருவிழாவாகவும் கொண்டாடப்படுகின்றது. இயேசு அளிக்கின்ற இந்த தூய ஆவியை பெற்றுக்கொண்ட, பெற்றுக் கொள்ளும் நாம் அவர் நமக்கு விட்டுச் சென்ற அந்த அமைதியையும் பெற்றுக் கொள்வோம்.

முதல் வாசகத்தில் தூய ஆவியை பெற்றுக்கொண்ட திருத்தூதர்கள் வெவ்வேறு மொழிகள் பேசுகின்றனர் என்று சொல்வதை விட அவர்கள் பேசிய மொழியை, பேசிய அந்த இறை வார்த்தைகளை பல்வேறு மொழிகள் பேசக் கூடிய மக்கள் தத்தம் மொழிகளில் கேட்கின்றனர். இப்பொழுது நாம் பெரும்பாலும் பிறமொழிகளின் விளக்கத்தை அறிந்து கொள்ள கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் என்னும் ஒரு செயலியை பயன்படுத்துகின்றோம். எந்த மொழியாக இருந்தாலும் நமது மொழியில் அதை கூறி பிற மொழியில் நாம் அதன் விளக்கத்தை பொருளை தெரிந்து கொள்ள முடியும். 2020 ஆண்டுகளுக்கு முன்பே இந்த மொழிபெயர்ப்பு செயலியாக தூய ஆவி செயல்பட்டிருக்கிறார். இப்பொழுது இந்தத் தூய ஆவியைப் பெற்றுக்கொள்ள நம்மையே தயாரித்துக் கொண்டிருக்கக்கூடிய நாம், அயல் மொழியில் பேச வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் அயலாரின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடியவர்களாக நாம் வாழ வேண்டும் நாம தூய ஆவியின் வெளிப்பாடு சீடர்களுக்கு இரைச்சல் போன்ற சத்தத்திலும், நெருப்பு போன்ற பிளவுற்ற நாவுகள் வடிவத்திலும் வெளிப்பட்டன நமக்கும் இன்று நம்மை சுற்றிலும் பல்வேறு விதமான இரைச்சல்கள் ஊரடங்கு வேலையின்மை, முறையான சலுகைகளின்மை, பணத்தட்டுப்பாடு, உணவுத்தட்டுப்பாடு, நீர் தட்டுப்பாடு என்று பல்வேறு விதமான இரைச்சல்கள் நம்மைச்சுற்றி எழுந்து கொண்டே இருக்கின்றன. கோடை வெயிலின் தாக்கம், அரசியல் தலைவர்களின் அராஜக போக்கினால் ஏற்படுகின்ற வருத்தம் என்னும் தீ, நெருப்பு. ஊரடங்கு உத்தரவினால் தங்களது சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக திரும்பி கொண்டிருக்கக்கூடிய வடமாநில மக்கள், அவர்கள் படும் துன்பம் இப்படி பல்வேறு நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நம்மிடம் செயல்பட இருக்கின்ற தூய ஆவி இந்த அனைத்து பிரச்சனைகளையும் ஒரே நொடியில் தீர்க்குமா என்றால், இல்லை என்பதுதான் பதில். ஆனால் இத்தனை பிரச்சினைகள் மத்தியிலும் அந்த தூய ஆவி நம்மை நிறை உள்ளவராக, மனதிற்கு இதம் தரும் ஆவியானவர் ஆக செயல்படுகின்றார். நமது கனிவான பேச்சு நமது ஆறுதலான பார்வை நம்மால் முடிந்த சிறு உதவி இவை அனைத்தும் அயல் மொழி பேசும் மொழிபெயர்ப்பு செயலியாக நம்மையும் இயங்க வைக்கும். இதனால் கடவுளின் எதிர்நோக்கு அவர் நமக்களித்த உரிமைப் பேறு எவ்வளவு மாட்சி மிக்கது என்பதையும் அவரது வல்லமை ஒப்புயர்வற்றது என்பதையும் நாம் அறிந்து கொள்வோம். நமது புற கண்களை உலக மாயை ஒளியில் இருந்து சற்று விலக்கி, அகக் கண்களை தூய ஆவியினால் ஒளியூட்டுவோம் அப்பொழுது கிறிஸ்து நம்மில் இருந்து செயலாற்றுகிறார். திருச்சபையின் ஒரு அங்கமாக நாம் வாழுகின்றோம், நமது குடும்பம் குட்டி திருச்சபையாக மாறுகின்றது,. அப்பொழுது இயேசு தந்த அந்த அமைதி நம்மிடம் நிலைத்து பெருகும். நம்மில் நிலைக்கக்கூடிய அமைதி நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் பரவும். அமைதியை ஆழமாக அனுபவிப்பவர்களாக, அமைதியை பிறருக்கும் அள்ளி தருபவர்களாக நாமும் மாறுவோம். தூய ஆவியைப் பெற்றுக் கொள்வோம் தூயவர்களாக செயல்படுவோம். இயேசு தந்த அமைதி நம்மிடமும் பிறரிடமும் செயல்பட அருள் வேண்டுவோம். ஊரடங்கில் இருந்தாலும் உள்ளூர உன்னதரின் அமைதி பெற்று வளமோடும் நலமோடும் வாழ்வோம். இறை அமைதி உங்களோடும் உங்கள் குடும்பத்தார் அனைவரோடும் நிலைத்திருக்க இறைவன் அருள் புரிவாராக ஆமென்.