பொதுக்காலம் 25ம் ஞாயிறு எண்ணம் போல் வாழ்க்கை. I. எசாயா 55:6-9 II. பிலிப்பியர் 1:20-24,27 III. மத்தேயு 20:1-16 அன்பர் இயேசுவின் ஆசீர்வாதம் பெற ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் அனைவரையும் பொதுக்காலத்தின் 25ம் ஞாயிறு சிந்தனையில் பங்கு பெற அழைக்கிறேன். இன்றைய வாசகங்கள் அனைத்தும் நமது எண்ணங்கள் / இறைவனின் எண்ணங்கள் எப்படி இருக்கின்றன என்பதை எடுத்துரைக்கின்றன. எசாயா இறைவாக்கினர் முதல் பவுலடியார் வரை அனைவரும் அவரவர் எண்ணங்களை இறைவனின் எண்ணங்களோடு ஒப்பிட்டு மதிப்பீடு செய்து கொள்கின்றனர். அதிலும் சிறப்பாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமை மூலமாக நம்முடைய எண்ணங்கள் கடவுளுடைய எண்ணங்களுக்கு எவ்வளவு தூரமானவை நமது எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதனையும் எடுத்துரைக்கின்றார்.
இந்த உவமையில் நிலக்கிழார் ஆண்டவராகவும், வேலைக்கு அமர்த்தப்படும் வேலையாட்கள் மனிதர்களாகிய நாமாகவும் சித்தரிக்கப்படுகின்றோம். திராட்சைத் தோட்டம் நம் திருச்சபையாகவும், சந்தை வெளி மக்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கின்ற / கழிக்கின்ற பொழுதுபோக்கு இடங்களாகவும் கொள்ளலாம். அல்லது திருச்சபையைப் பற்றி அறிந்திராத அறிய முயற்சி செய்யாத மக்கள் என்று கூட எடுத்து கொள்ளலாம். நிலக்கிழாரின் ( ஆண்டவரின்) எண்ணங்கள்: # தனது திராட்சைத் தோட்டத்திற்கு தேவையான வேலையாட்களை தானே சென்று அழைக்கின்றார். விடியற்காலையில் வெளியே சென்றவர் 9,12,3,5 என தொடர்ந்து சென்று தன் வேலையாட்களை தெரிவு செய்கின்றார். # பிறரது முகம் பார்த்தே அவர்கள் தேவையை அறிந்து கொள்பவராக இருக்கின்றார். அதனால் தான் சந்தை வெளியிலும் தெருவிலும் நிற்கும் அவர்கள் வேலையைத் தான் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பதைக் கண்டு கொள்கின்றார். # அன்போடு அவர்களிடம் பேசுகின்றார். நீங்களும் என் திராட்சை தோட்டத்துக்கு போங்கள் உங்களுக்குரிய நேர்மையான கூலியை நான் உங்களுக்குக் கொடுப்பேன். ஏன் இங்கே நின்று கொண்டிருக்கின்றீர்கள் நீங்களும் போங்கள் என்று அன்போடு அழைக்கின்றார். அழைப்புவிடுக்கின்றார். # அன்றன்றுக்குரிய கூலியை நியாயமாக வழங்கக் கூடிய ஒரு நிலக்கிழாராக இருக்கின்றார். உழைத்தவன் ஒரு போதும் வெறும் கையோடு தன் வீடு திரும்பக் கூடாது மாறாக அவன் செய்த வேலைக்குரிய கூலியை அவன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் படைத்தவராக இருக்கின்றார். # வேலை இல்லாமல் தெருவில் நின்று பிறர் உதவியை எதிர்பார்க்கும் மக்களை பிச்சைக்காரர்களாக மதிக்கும் இன்றைய சமூகத்தில், உரிமையாளரோ அவர்களின் மாண்பை மதித்து தொழிலாளர்களாக மாற்றுகின்றார். அவர் நினைத்து இருந்தால் 5 மணிக்கு வேலைக்கு அமர்த்தியவர்களை தர்மம் எடுப்பவர்கள் என்று கருதி அப்பொழுதே அந்த ஒரு தெனாரியத்தைக் கொடுத்து இருக்கலாம் . ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மனிதத்தை மதிக்கும் மாண்பானவர். # மேற்பார்வையாளரை நியமித்து அவர்களுக்கான கூலியை கொடுக்க சொல்கின்றார். தனது குணம் போல் தனக்கு கீழ் இருப்பவரும் வளர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்.
தொழிலாளர்களின் (நமது) எண்ணங்கள்: @ காலை முதல் இவ்வளவு நேரம் வேலை பார்த்தது நாம் தாம். @ நமக்கு பின் வந்தவர்கள் நம்மை விட கீழானவர்கள். இணையானவர்களல்ல. @ வேலைப்பளு, கடும்வெயில் போன்ற துன்பங்களை அனுபவித்தவர்கள் நாங்கள். @ நமக்கு பேசப்பட்டதை விட அதிகான தெனாரியம்கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளவர்கள். @ முணுமுணுப்பவர்கள். @ தனக்கு வேலை கொடுத்த முதலாளியையே குறை கூறும் மனநிலை படைத்தவர்கள். நாம் எப்படி இருக்க வேண்டும் என இறைவன் வலியுறுத்துகிறார். * எதிர்பார்ப்பின்றி அனைத்தையும் எதிர்கொள்பவர்களாக நாம் இருக்க வேண்டும் . * கடவுளால் படைக்கப்பட்ட நாம் அனைவரும் அவர் முன் சமமே. * நமது வார்த்தைகளில் கவனம் செலுத்தி முறையான வார்த்தைகளை நாம் உபயோகிக்க வேண்டும். * தொழிலாளர்கள் ஒரு வேளை தங்கள் ,முதலாளியிடம் கொஞ்சம் பரிவுடன் தங்கள் ஊதியத்தை உயர்த்தி கேட்டிருந்தால் கண்டிப்பாக அவர் கொடுத்திருப்பார். வேலையின்றி தெருவோரம் இருந்தவர்களை அழைத்து வேலை வாங்கி கூலி கொடுத்தவர் ,முறையாக வேலைக்கு வந்த இவர்களுக்கு கொடுக்காமல் இருந்திருப்பாரா? கட்டாயம் கொடுத்திருப்பார். * யாருடனும் நம்மை ஒப்பிட்டு தாழ்வாகவும் உயர்வாகவும் கருதக் கூடாது.
எண்ணங்களின் சக்தி: நாம் எதை அதிகமாக நினைக்கின்றோமோ அதுவாகவே நாம் மாறுகின்றோம். நமது எண்ணங்களின் அடிப்படையிலேயே நமது வாழ்க்கை அமைகின்றது. இன்று நாம் இருக்கும் இந்நிலை என்றோ ஒரு நாள் நாம் மனதில் நினைத்தது . அதன்படியே நமது வாழ்க்கை அமைந்து விடுகின்றது. இறைவாக்கினர்களும், அப்போஸ்தலர்களும் இயேசுவும் கூட தாங்கள் நினைத்தபடியே வாழ்ந்தார்கள். இந்த ஆழமான எண்ணங்கள் தான் நம்பிக்கைகளாக உருவெடுக்கின்றன. நமது எண்ணங்கள் இறைவனின் எண்ணங்கள் அல்ல. மண்ணுலகத்தினின்று விண்ணுலகம் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம் இறைவனின் எண்ணங்கள் உயர்ந்தது என்று எசாயா இறைவாக்கினர் கூறுகின்றார். இறைவனைப் போல எண்ண முடியாது ஆனால் இறைவனின் எண்ணங்களுக்கு ஏற்றவாரு நாம் நமது எண்ணங்களை மாற்றி அமைத்துவாழ முயற்சிக்கலாம். இறைவனின் அழைப்பு எந்த நேரத்திலும் எந்த வடிவத்திலும் வரலாம் எனவே நாம் எதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும், தாமதமாக வந்தவர்கள் நேர்மையான கூலியை உங்களுக்கு கொடுப்பேன் என்ற நிலக்கிழாரின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு வேலை செய்தனர் . கூலி பெற்றனர். மகிழ்வடைந்தனர். எனவே இறைவன் நமக்கும் நேர்மையான ஊதியத்தை தருவார் என்ற நம்பிக்கை நல்ல எண்ணம் நமக்கு ஆழப்பட வேண்டும். பவுலடியாரிடம் இருந்த அந்த பேராவல் எதிர்நோக்கு நம்மிடமும் வளர வேண்டும். எனவே நாம் நம் எண்ணத்தில் கவனமுடன் இருப்போம். எண்ணங்கள் நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன. எண்ணம் போல் வாழ்க்கை. எண்ணம் போல் தான் வாழ்க்கை. நல்லதை எண்ணி நலத்துடனும் வளத்துடனும் வாழ இறைவன் நிறைவாக ஆசீர் பொழிவாராக ஆமென்.
|