இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









குருத்து ஞாயிறு:

ஏதுவெல்லாம் ஆண்டவருக்குத் தேவை? : குருத்து ஞாயிறும் குரோனா வைரசும்

ஏசாயா 50: 4-7
பிலிப்பியர் 2: 6-11
மத்தேயு 26:14, 27-66

இறை இயேசுவில் எனக்கு பிரியமான சகோதர சகோதரிகளே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கையில் குத்தோலைகளை ஏந்திக் கொண்டு, எருசலேம் நகர் வீதிகளில் வேடிக்கை பார்த்த மக்களுக்கு மத்தியில் 2020ம் ஆண்டு இன்று கையில் குருத்துகளை ஏந்தக் கூட முடியாமல் டீவிப் பெட்டி முன்பாக அமர்ந்து கொண்டு இயேசுவின் பாடுகளை வேடிக்கையாக பார்த்துக் கொண்டு, கொரோனா வைரஸ் பயத்தில் ஆண்டவரின் பாடுகளை சிந்திக்கும் ஆண்டவரின் அன்புப் பிள்ளைகளே!.

கிறித்தவர்களாகிய நமக்கு ஒவ்வொரு ஞாயிறும் உயிர்ப்பின் ஞாயிறு என்று திருச்சபை போதித்தாலும் இன்றைய ஞாயிறு கொண்டாட்டத்தை ஆண்டவரின் பாடுகளின் ஞாயிறு என்று சிறப்பிக்கிறது. இன்று நமதாண்டவருக்கு மட்டுமல்ல அகில உலக கிறித்தவர்கள் அனைவருக்குமே இது உண்மையில் பாடுகளின் ஞாயிறாகத்தான் இருக்கின்றது. காரணம் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் கிருமி இன்று நமது நம்பிகையை புடமிட்டு பார்த்து வருகின்றது.

கழுதை குட்டின் மேல் அமர்ந்து தாவீதின் மகனுக்கு ஓசான்னா என்ற வாழ்தொலியைக் கேட்ட வண்ணம் எருசலேம் நகர் வீதிகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக உலா வருகின்றார் நமதாண்டவர் இயேசு பெருமான். ஆனால் இன்று நாம் விட்டை விட்டு கூட வெளியே வர முடியாமல் கையில் குருத்துகள் இல்லாமல், குருத்தோலை பவனி இல்லாமல், திருப்பலி இல்லாமல், இப்படி உலக வரலாற்றிலே இன்றுதான் முதல் முறையாக அகில உலகமெங்கும் ஆலயத்தில் மக்கள் இல்லாமல் பாடுகளின் ஞாயிறு தொடங்குகின்றது. ஆக உண்மையிலே இது ஆண்டவரின் பாடுகளின் ஞாயிறு மட்டுமல்ல, ஆண்டவரின் பிள்ளைகள் நம் அனைவருக்குமே பாடுகளின் ஞாயிறு.


இன்று இந்த பாடுகளின் நாயகன் நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன? இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்து நீங்கள் பெத்பெகு எனும் ஊருக்குள் சென்று கழுதைக்குட்டியை அவிழ்த்;து வாருங்கள் யாராவது உங்களிடம் கேட்டால் இது ஆண்டவருக்குத் தேவை எனச் சொல்லுங்கள் என குருத்தோலை பவனிக்கு முன்பாக கட்டளையிடுகின்றார். இயேசு சொன்னபடியே சீடர்களும் ஊருக்குள் சென்று ஆண்டவருக்குத் தேவை எனக்கூறி கழுதைக் குட்டியை அவிழத்து வருகின்றனர். பிரியமானவர்களே இங்கு மூன்று முக்கியமான சொல்லாடல்களை வைத்து இன்றைய வழிபாட்டை சிந்திக்க உங்களை அழைக்கின்றேன்.

முதலில் : ஊருக்குள் செல்லுங்கள்.
இன்று நம்முடைய அரசாங்கம் ஊருக்குள் செல்லாதீர்கள், ஏன் வீட்டை விட்டுக் கூட வெளியே வராதீர்கள் என்று நமக்கு தடைவிதித்து இருக்கின்றது. ஆனால் ஆண்டவர் இயேசு ஊருக்குள் செல்லுங்கள் என்று தன்னுடைய சீடர்களுக்கு கட்டளையிடுகின்றார். ஆண்டவர் எந்த ஊருக்கு செல்ல நம்மை பணிக்கின்றார்? இன்றைய சூழலில் ஊர் என்பது மக்கள் அதிகம் வாழும் பகுதிகளோ, அல்லது வானுயர்ந்த கட்டிடங்களை கொண்ட நகர்புரமோ, காய்ந்து கருகி கிடக்கும் கிராம பகுதிகளோ கிடையாது. மாறாக ஊர் என்பது ஒவ்வொரு மனிதருடைய ஆன்மா என்ற ஊருக்குள் செல்லுங்கள் என்று தான் ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இது புதிய சிந்தனையாக இருந்தாலும் இதுதான் ஆண்டவருக்குத் தேவை.

பிரியமானவர்களே தவக்காலத்தின் முதல் நாள் விபுதி புதன் அன்று நாம் வாசித்த நற்செய்தி பகுதியை தவக்காலத்தின் கடைசி நாளாகிய இன்று சற்று புரட்டி சிந்திப்போம். தவக்காலத்தின் மூன்று முக்கிய செயல்பாடுகளைப் பற்றி அன்றைய வாசகம் மத்தேயு 6:1-6, 16-8 ல் நமக்கு அறிவுறுத்தும். அதாவது, இயேசு தன்னுடைய சீடரை நோக்கி கூறியது “அறச் செயல்கள் செய்ய வேண்டும் ஆனால் மக்கள் பார்க்க கூடாது, தர்மம் செய்ய வேண்டும் ஆனால் மக்கள் புகழ கூடாது. ஏன் நாம் செய்யும் தர்மம் நமது வலது கைக்கு கூட தெரியக் கூடாது. நோன்பு இருக்க வேண்டும் அது பிறருக்கு தெரியக்கூடாது. இறைவேண்டல் செய்ய வேண்டும், அதுவும் மக்கள் பார்க்கும் படி செய்யக்கூடாது” என நாம் வாசிக்க கேட்டோம். தர்மம், நோன்பு, இறைவேண்டல் இம் மூன்றும் கடைபிடிக்க வேண்டும் ஆனால் மக்கள் பார்க்க கூடாது என ஆண்டவர் அறிவுறுத்துகின்றார். தவக்காலத்தில் தர்மம், நோன்பு, இறைவேண்டல் இம் மூன்றும் மக்கள் பார்க்காமல் செய்ய வேண்டும். இது எப்படி சாத்தியமாகும்? இவற்றை எப்படி நடைமுறைப்படுத்துவது? இன்று அரசாங்கம் நமக்கு கூறுவது போல நம்முடைய வீட்டின் கதவுகளை அடைத்துக் கொண்டு பாடுகளின் ஆண்டவர் கூறும் நம்முடைய உள்ளறையாகிய ஆன்மா என்ற ஊருக்குள் சென்று, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை காணும்படி தவம், தர்மம், இறைவேண்டல் செய்யுங்கள் என்கின்றார். இதுதான் ஆண்டவர் விரும்புவது. ஆண்டவர் விரும்பும் ஊருக்குள் சென்று ஆண்டவருடைய பாடுகளை தியானிப்போம்.

கழுதைக்குட்டியை அவிழ்த்து வருதல்.
இரண்டாவதாக ஊருக்குள் சென்று கழுதைக்குட்டியை அவிழ்த்;து வாருங்கள்.
பிரியமானவர்களே கழுதையின் பயன்பாடுகளைப் பற்றி நாம் நன்கு அறிவோம். நம்முடைய பெற்றோரின் கால கட்டங்களில் இந்த கழுதையானது அழுக்கு துணிகளை சுமந்து செல்லும் வாகனமாக இருந்தது. ஆப்பிரிக்கா நாடுகளில் நாங்கள் வாழ்ந்த பகுதியில் கழுதையானது பாரங்களை சுமக்கும் வாகனமாக பயன்படுத்தப்படுகின்றது. மொத்தத்தில் கழுதை பிறரின் பராங்களையும், அழுக்கு சுமைகளையும் சுமக்கும் பணியை தனக்கே சொந்தமாக்கிக் கொண்டது. இன்று ஆண்டவவர் கழுதைக்குட்டியை அவிழ்த்து வாருங்கள் என்று கூறும் போது நம்முடைய பாவம் என்ற கட்டுகளில் நம்மையே அவிழ்த்துக் கொண்டும், பிறருடைய பாவங்களை சுமந்து கொண்டு ஆண்டவரிடம் திரும்ப அழைக்கின்றார்.

பிரியமானவர்களே இந்த கொரோனா வைரஸ் மக்களை தாக்கியதிலிருந்து நிறைய செய்திகள் நம்மிடையே உலா வருகின்றன. இதில் பாவ வாழ்க்கையில் இருந்து திரும்பி வருங்கள் என்ற செய்தி ஒவ்வொரு நாளும் நமக்கு கூறப்படுகின்றது. உதாரணமாக அன்று சாலமோன் அரசர் ஆண்டவருக்கான இல்லத்தை கட்டி முடித்த பிறகு அன்று இரவு சாலமோனுக்கு தோன்றி ஆன்டவர் இவ்வாறாக
2குறிப்பேடு 7:11-14 ல்; “ஆண்டவர் சாலமோனுக்கு இரவில் தோன்றி, நான் உன் விண்ணப்பத்தை ஏற்று, இவ்விடத்தை எனக்கு பலியிடும் கோவிலாகத் தேர்ந்து கொண்டுள்ளேன். நான் மழை பெய்யாதவாறு வானத்தை அடைத்தாலும், நாட்டை அழிக்க வெட்டுக்கிளிகளுக்கு கட்டளையிட்டாலும், என் மக்களிடையே கொள்ளை நோயை அனுப்பினாலும், எனது பெயரை போற்றிடும் என் மக்கள் சிறுமையுற்று தங்கள் பாவங்களிலிருந்து மனம் வருந்தி, இரந்து மன்றாடி என் திருமுகத்தை நாடினால் வானத்திலிருந்து அவர்களது மன்றாட்டுகளைக் கேட்டு அவர்கள் பாவங்களை மன்னிப்பேன். அவர்களது நாட்டுக்கு நலன் அளிப்பேன். இவ்விடத்தில் எழுப்பப்படும் வேண்டுதல்களை என் கருணைக் கண் கொண்டு நோக்கி கவனத்தோடு செவிகொடுப்பேன்” எனக் கூறுவார்.

இன்று ஆலயஙகள் அனைத்;தும் அடைக்கப்பட்டு நம்முடைய ஒவ்வொரு இல்லமும் இறைவேண்டல் செய்யும் இடமாகவும், ஆண்டவர் தம்மையே பலிபொருளாக ஒப்புக்கொடுக்கும் பலிபிடமாகவும் நமது இல்லங்கள் மாறி வருகின்றன. இப்படிப்பட்ட நம்முடைய வீட்டில் இருந்து எழுப்பப்படும் மன்றாட்டுகளுக்கு கடவுள் கவனமுடன் செவிசாய்ப்பேன் என்று கட்டளையிடுகின்றார். எனவே அன்புக்குறியவர்களே நம்முடைய வீட்டில் இருந்த வண்ணம், உள்ளம் என்ற ஊருக்குள் சென்று நம்முடைய உள்ளத்திலும், உறவுகளிலும், நம் இல்லத்திலும் இருக்கும் பாவம் என்ற சுமைகளை இணம் கண்டுகொண்டு அவற்றை எல்லாம் அவிழ்த்து ஆண்டவரை நோக்கி வருவோம். பாடுகளின் நாயகனை நம் இல்லத்தில் இருந்து தியானிப்போம்.


இது ஆண்டவருக்கு தேவை
மூன்றாவாதாக தன்னுடைய சீடர்களைப் பார்த்து உங்களிடம் இது யாருக்கு என்று கேட்டால் இது ஆண்டவருக்கு தேவை எனக் கூறுங்கள் என்பார்.

இன்று ஆண்டவருக்கு தேவையானது எது? நம்முடைய பதில்… ஆண்டவருக்கு தேவையானது ஆண்டவரோடு நாம் செலவழிக்கும் நம்முடைய நேரம். நம்முடைய நேரத்தைத்தான் ஆண்டவர் விரும்புகின்றார். மாற்கு நற்செய்தி 3:13-ல் இயேசு தனக்கு விரும்பியவர்களை தன்னிடம் வரவழைத்தார் எதற்காக? அவரோடு இருப்பதற்காக!. படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் தனிமையை வெறுத்தவர். அதனால் தான் மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல எனச்சொல்லி அவனோடு இருப்பதற்காக ஏவளைப் படைக்கின்றார். இவர்கள் இருவரும் ஆண்டவரோடு இருக்க விரும்பி அவர்களை தன்னுடைய தோட்டத்தில் குடியேற வைக்கின்றார். ஆனால் நடந்ததோ வேறு!. கடவுள் நம்மோடு இருக்கின்றார். நாம் அவரோடு இருக்கின்றோமா? ஓய்வு நாட்கள் என்றுகூட பாராது வேலை வேலை என உழைத்த நமக்கு இந்த கொரோனா வைரஸ் மூலம் நம்முடைய நேரத்தை அவருக்காக செலவிட நம்மை அழைக்கின்றார்.

தூய லூக்கா நற்செய்தியில் ஆண்டவர் மார்த்தாவைப் பார்த்து “மார்த்தா மார்த்தா நீ பலவற்றைப் பற்றி கவலைப்படுகின்றாhய் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கை தோந்தெடுத்துக் கொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது. லூக் 10:42. மரியா தன்னுடைய வீட்டில் அமர்ந்து கொண்டே ஆண்டவருக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து விட்டார் இன்று நாமும் வீட்டில் இருந்த படியே ஆண்டவருக்கு தேவையானதை தேர்ந்து கொள்ள முயற்ச்சிப்போம். யாராவது நம்மிடம் கேட்டால் இந்த நாட்கள் ஆண்டவருக்கு தேவை என பதிலுரைப்போம்.

ஆம், பிரியமனவர்களே பாடுகளின் ஞாயிறாகிய இன்று அரசாங்கத்திற்கு கீழ்படிந்து நம்முடைய வீட்டின் கதவுகளை மூடிக்கொண்டு ஆன்மா என்ற ஊருக்குள் சென்று, பாவம் என்ற சுமையை அவிழ்த்;துக் கொண்டு, மரியாள் தேர்ந்து கொண்ட நல்ல பங்கை நாமும் நம்முடைய வீட்டிலே இருந்து கொண்டு தேர்ந்தெடுப்போம்!.


குருத்து ஞாயிற்றில் குரோனா வைரசோடு ஆண்டவரின் பாடுகளில் பயனிப்போம்.

இயேசு – ஊருக்குள் செல்லுங்கள்… ஆன்மா என்ற ஊருக்குள் செல்லுங்கள்
எப்படி செல்வது?
அரசாங்கம் சொல்வது போல நீங்கள் வீட்டிலே இருந்து, கதவுகளை அடைத்தால் ஆன்மா என்ற ஊருக்குள் பயனிக்கலாம்.
யாராவது உங்களிடம்; இது ஏன் இப்படி என்று கேட்டால் நம்முடைய பதில் இது ஆண்டவருக்குத் தேவை என பதிலளிப்போம். பாடுகளின் ஞாயிற்றில் குடும்பமாக இணைந்து ஓசான்ன கீதங்களை பாடி பக்தியோடு பயனிப்போம்.

இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும், நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர்…ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது, வாதை உம் கூடாரத்தை நெருங்காது. நீர் செல்லும் இடமெல்லாம் உம்மை காக்கும்படி தம் தூதர்களுக்கு அவர் கட்டளையிடுவார். திபா 91.

அருட்பணி. வேதபோதக சகாய செல்வராஜ், கப்புச்சின்
உளவியல் ஆலேசனை இல்லம், பதோனி, திருச்சி.