இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு

உயிர்த்தவரின் உடனிருப்பும்,
கொரோனா வழி வந்த உடனிருப்பும்

திருதூதர் பணிகள் 2:14 , 22-33
1 பேதுரு 1: 17-21
லூக்கா 24:13-35

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே, இன்றைய காலக்கட்டத்தில் உடனிருப்பு என்ற சொல்லை வெறும் வார்த்தையாக மட்டும் பார்க்காமல் அதை உணர்வுப்பூர்வமாக ஒவ்வொருவரும் அனுபவித்து வருகின்றோம். பிறந்த குழந்தைக்கு தாயின் உடனிருப்பு மிகப்பெரிய அடைக்கலமாக இருக்கும்; மருத்துவர்களின் உடனிருப்பு இன்று நோயாளிகளுக்கு ஆறுதலாக இருக்கும்; வயதான பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் உடனிருப்பு தனிமை என்ற நோயை அகற்றிவிடும். இப்படியாக கடந்த ஒருமாத காலமாக ஒவ்வொரு மனிதரும் தங்களது வீடுகளில் கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் கிருமி ஏற்படுத்திய பயத்தால் இன்று உலக நாடெங்கிலும் வீடுகளுக்குள்ளே இருந்து உறவுகளின் உடனிருப்பை ஒவ்வொருவரும் உணர்வுப்பூர்வமாக அனுபவித்து வருகின்றோம். இந்த உறவுகளின் உடனிருப்பு நம்மை அன்றாடம் திடப்படுத்துகின்றது. குறிப்பாக இன்றைய நாளில் நான் எனது குருத்துவ நாளை சிறப்பிக்கின்றேன். இன்றைய நாளில் கடவுளின் உடனிருப்பையும், உறவுகளின் உடனிருப்பையும், நன்கு அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கின்றேன். மேலும் இந்த இணையதள உடனிருப்பு வழியாக எத்தனையோ மக்களுக்கு இறைவிசுவாசத்தை கொண்டு சேர்க்க கடவுளின் கரம் என்னை வழிநடத்துகின்றது. உறவுகள் அனைவருக்கும் என்னுடைய ஜெபம் கலந்த உடனிருப்பும், வாழ்த்துக்களும்.

அதைப்போலவே இயேசுவின் இறப்பு அதனால் சீடர்களுக்கு ஏற்ப்பட்ட அவருடைய பிரிவு ஒருவித பயத்தை அளித்தது. இத்தருணத்தில் உயிர்த்த ஆண்டவருடைய உடனிருப்பு சீடர்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. அதைப்போலவே கொரோனா எற்படுத்திய பயம், அதனால் நாம் சமூதாயத்திலிருந்து நம்மையே நாம் தனித்திருத்தல்; விலகியிருத்தலை கடைபிடித்தாலும் வீடுகளில் நம்முடைய உறவுகளோடு வாழ்ந்து வரும் உடனிருப்பு நமக்கு ஆறுதலாக இருக்கின்றது. இத்தருணத்தில் ஆண்டவர் தன்னுடைய உடனிருப்பு வழியாக நாம் கடவுளின் நம்பிக்கையை பெற்று நம்பிக்கைய இழந்த நம் உறவுகளுக்கு நம்பிக்கை தர இன்றைய வாசகங்கள் வழியாக கடவுள் நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.

பிரியமானவர்களே கடவுளுடைய (தந்தையினுடைய) உடனிருப்பு இயேசுவை மரண வேதனையிலிருந்து விடுவித்து உயிர்ப்பு என்ற கொடையை கொடுத்தது. கடவுளுடைய உடனிருப்பை பற்றி தாவீது அரசர் கடவுளுக்கு நன்றி புகழ் பாடுவதை நமக்கு முதல் வாசகம் நமக்கு கூறுகின்றது. அதைப்போலவே இயேசு கிறிஸ்துவின் உடனிருப்பு வழியாக கடவுள் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று தூய பேதுரு இரண்டாம் வாசகத்தில் கூறுகின்றார். மேலும் உயிர்த்த ஆண்டவரின் உடனிருப்பை எம்மாவுஸ் சீடர்கள் அனுபவித்து உணர்வுப்பூர்வமாக அறிந்து கொண்டதை நற்செய்தி வாசகம் நமக்கு கூறுகின்றது. இன்று ஆண்டவர் இயேசு உயிர்த்துவிட்டார் என்ற செய்தி எனக்கு கடவுளின் உடனிருப்பை சுட்டிக்காட்டி எனது நம்பிக்கையை திடப்படுத்துகின்றதா? அதைப்போலவே கொரோனா வழி வந்த என்னுடைய உடனிருப்பு எனது குடும்ப உறவுகளுக்கு நம்பிக்கையத் தருகின்றதா? சிந்திப்போம்!

ஆண்டவரின் உடனிருப்பை எப்படி அறிந்து கொள்வது?

ஆண்டவர் தன்னுடைய உடனிருப்பை எம்மாவுஸ் சீடர்களுக்கு படிப்படியாக விளக்குகின்றார். உயிர்த்த ஆண்டவரின் உடனிருப்பை கண்டு கொண்ட எம்மாவுஸ் சீடர்கள் மற்ற சீடர்களுக்கு சாட்சிகளாக இருக்கின்றனர். இன்று நாமும் ஆண்டவரின் உடனிருப்பை உள்ளப்பூர்வமாக உணர்ந்து கொண்டு வாழ எம்மாவுஸ் சீடர்களோடு நாமும் பயணிப்போம்.

01. உரையாடலில் வெளிப்படும் கடவுளின் உடனிருப்பு

கடவுள் தன்னுடைய உடனிருப்பை உரையாடல் வழியாக பல நேரங்களில் வெளிப்படுத்தியுள்ளார். உதாரணமாக ஆதாமுக்கும், ஏவாளுக்கும் கடவுள் தன்னுடைய உடனிருப்பை உரையாடல் வழியாக வெளிப்படுத்துகின்றார். தொடக்கநூல் 3:9-ல் ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, "நீ எங்கே இருக்கின்றாய்?" என்று கேட்டு உரையாடல் வழியாக தன்னுடைய உடனிருப்பை உணர்ந்துகொள்ளச் செய்கின்றார்.

மேலும்
தொடக்கநூல் 4:6-ல் ஆண்டவர் காயினிடம், "நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்? எனக்கூறி காயினுக்கும், ஆபேலுக்கும் உரையாடல் வழியாக தன்னுடைய உடனிருப்பை வழியாக வெளிப்படுத்துகின்றார். மேயீசனுக்கு கடவுள் ஒரு நண்பனைப் போல உரையாடி தன்னுடைய உடனிருப்பை வெளிப்படுத்துகின்றார். விப 3-ம் அதிகாரதில் எரியும் முட்புதர் வழியாக கடவுள் மோயீசனுடன் உரையாடி தன்னுடைய பிரசன்ணத்தை வெளிப்படுத்துகின்றார். மேலும் விப 33: 11 -ல் “ஒருவன் தன் நண்பனிடம் பேசுவது போலவே ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார்”. இப்படியாக, நீதித்தலைவர்கள், இறைவாக்கினர்கள் அனைவரிடமும் கடவுள் உரையாடுகின்றார். தன்னுடைய உடனிருப்பை வெளிப்டுத்துகின்றார். இப்படியாக உரையாடலில் வெளிப்படும் கடவுளின் உடனிருப்பை பழைய ஏற்பாடு முழுவதும் நாம் காணமுடியும்.

அதைப்போலவே புதிய ஏற்ப்பாட்டில் இயேசு சமாரியப் பெண்ணிடம் உரையாடல் வழியாக கடவுளின் உடனிருப்பை வெளிப்படுத்துகின்றார்.
யோவான் 4:25-26 அப்பெண் அவரிடம், "கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்" என்றார். இயேசு அவரிடம், "உம்மோடு பேசும் நானே அவர்" என்றார். அதைப்போலவே சீடர்களுக்கும், மார்த்தா, மரியா என பலருக்கும் நம்முடைய கடவுள் தன்னுடைய உடனிருப்பை உரையாடல் வழியாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றார். இன்றும் இவரது உடனிருப்பை நம்முடைய அன்றாட உரையாடல் வழியாக நமக்கு வெளிப்படுத்துகின்றார்.

வாரத்தின் முதல் நாள் விடியற் காலையிலேயே ஒருசில பெண்கள் இயேசுவின் கல்லறை நோக்கி பயணிக்கின்றனர். அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை. அந்த குழப்பமான சூழலில் தீடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றி அவர்களோடு உரையாடுகின்றனர். “ அவர்கள் அப்பெண்களை நோக்கி, "உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்” என்றனர். உரையாடல் வழியாக உயிர்த்த ஆண்டவரை அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றனர்.

மீண்டுமாக உயிர்த்த ஆண்டவர் மரியாவுக்கு தோன்றி மரியா என்று அழைத்த போது ரபூணி எனச் சொல்லி கடவுளின் உடனிருப்பை உணர்ந்து கொள்கின்றார். உரையாடல் வழியாக தன்னையே வெளிப்படுத்துகின்றார். குறிப்பாக எம்மாவுஸ் சீடர்களுக்கு பதினொரு கிலோ மீட்டர் நடந்து செல்லும் நேரம் வரை அவர்களோடு உயிருள்ள மனிதனாக உரையாடுகின்றார். இந்த எம்மாவுஸ் சீடர்களுக்குத் தான் தன்னுடைய உடனிருப்பை பல மணிநேரங்கள் அவர்களேடு செலவிடுகின்றார். ஆண்டவர் உரையாடிக் கொண்டே செல்கின்றார். ஆனால் அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.


இன்றும் பல வழிகளில், பல நேரங்களில் கடவுள் நம்மோடு உரையாடிக் கொண்டு இருக்கின்றார். நம்முடைய கண்கள் அவரை கண்டுணர முடிகின்றதா? அல்லது அந்த எம்மாவுஸ் சீடர்களைப் போல நம்முடைய கண்களும் மறைக்கப்பட்டுள்னவா?

ஒவ்வொரு நாளும் நம் ஏதோ ஒரு வகையில் உரையாடிக் கொண்டுதான் இருக்கின்றோம். நம்முடைய உரையாடல் கடவுளின் உடனிருப்பை பிறருக்கு எடுத்துகாட்டுகிறதா? அதிலும் குறிப்பாக இன்று மனிதர்களை அச்சுருத்தும் கொரோனா வைரஸ் வந்ததிலிருந்து உறவுகள் அனைவரோடும் இணைந்து உரையாட, உறவாட நல்லதொரு வாய்ப்பு. இந்த உறவுகளோடு ஒன்றினைந்து வாழும் உடனிருப்பு எனக்கு நம்பிக்கையை தருகின்றது. அதைப்போல உயிர்த்த ஆண்டவர் அவருடைய உடனிருப்பை உரையாடல் வழியாக வெளிப்படுத்தும் போது நானும், என் வீட்டாரும் அவரை உணர்ந்து கொள்கின்றோமா?

02. இறை வார்த்தை வழியாக வரும் கடவுளின் உடனிருப்பு

வார்த்தை வழியாக அவருடைய உடனிருப்பை நமக்கு வழங்கும் கடவுள். யோவான்1:14 “வார்த்தை மனிதரானார் நம்மிடையே குடிகொண்டார்”. மேலும் எபிரேயர் 4:12-ல் “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது”. இவ்வறாக வார்த்தையாகிய கடவுள் நம்மோடு குடிகொண்டு, நம்முடைய சிந்தனைகளை சீர்தூக்கி பார்ப்பவராக இருக்கின்றார்.

இறைவார்த்தை வழியாக ஒவ்வொரு நாளும் கடவுளின் உடனிருப்பை உணர்வுப்பூர்வமான அறிந்து வருகின்றோம். இதையே உயிர்த்த ஆண்டவர் எம்மாவுஸ் சீடர்களுக்கு தன்னுடைய உடனிருப்பை இறைவார்த்தை மூலமாக விளக்குகின்றார்.
லூக்கா 24:27 மோசே முதல் இறைவாக்கினர் வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். இந்த எம்மாவுஸ் சீடர்கள் ஒருவரையொருவர் நோக்கி, "வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?" என்று பேசிக் கொண்டார்கள். இன்றும் இறைவார்த்தை வழியாக கடவுள் தன்னுடைய உடனிருப்பை வெளிப்படுத்தி வருகின்றார். இந்த கொரோனாவினால் வீடுகளிலே முடங்கியிருக்கும் நாம் இறைவார்த்தை அடங்கிய விவிலியத்தை எடுத்து படிக்கும் போதும், இறைவார்த்தையை மற்றவர்களுக்கு விளக்கும் போதும், அவ்வார்த்தையை தியானிக்கும் போதும், அதை கையில் எடுத்துச் செல்லும் போதும், கடவுளின் உடனிருப்பை உணர்ந்து கொள்ளலாம். இறைவார்த்தை வழியாக கடவுளின் உடனிருப்பை உணரும் போது நம்முடைய உள்ளமும் பற்றி எரியும்.

03.கூடிவாழும் போது வெளிப்படும் கடவுளின் உடனிருப்பு

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் கூடி வழும் போது கடவுளின் உடனிருப்பை நம்மால் உணரமுடியும். இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்து கூறிய வார்த்தைகள். மத்தேயு நற்செய்தி 18:20-ல் “இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்”. மேலும் கடவுளை நம்பும் அனைவரும் ஒத்த கருத்துடையவராகவும், கூடிவாழவும் தூய பவுல் 1கொரிந்தியர் 1:9-10 ல் “கடவுள் நம்பிக்கைக்குரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார். சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே; நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள் என்கிறார்.

ஆகவே நாம் ஒன்றுபட்டு, ஒத்தகருத்தோடு கூடி வாழும் போது கடவுளின் உடனிருப்பு வெளிப்படும். இதைப்போலத்தான் இயேசு உயிரோடு இருந்த பேது ஒன்றாக கூடி வாழ்ந்த சீடர் கூட்டம் அவர் இறந்த போது ஒவ்வொருவரும் தனித்தனியாக செல்ல ஆரம்பித்தனர். உதரணமாக இராயப்பர் நான் மீன்பிடி தொழிலுக்குச் செல்கிறேன் என கிளம்பிவிட்டார். இரண்டு சீடர்கள் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். இப்படி பிரிந்து கிடந்த சீடர்களை ஒன்றுகூட்டி அனைவரும் ஒரே குடும்பமாக கூடிவாழ அவர்களோடு பயணிக்கின்றார்.

எம்மாவுஸ் வழியிலே இயேசுவும் அவர்களேடு உரையாடிக் கொண்டுதான் சென்று கொண்டிருந்தனர் ஆனால் சீடர்களால் ஆண்டவரின் உடனிருப்பை உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்கள் ஒன்றாக கூடி அப்பத்தை பிட்கும் போது ஆண்டவரை கண்டு கொண்டனர். உயிர்த்த ஆண்டவரை கண்டுகொண்ட பிறகு தனித்து வாழ அவர்கள் முடிவெடுக்கவில்லை. மாறாக உடனே அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு எருசலேமில் உள்ள மற்ற சீடர்களிடம் செல்கின்றனர். அதைப்போலவே எருசலேமில் ஒன்றாக கூடி இருந்த சீடர்களும் உயிர்த்த ஆண்டவரை உணர்ந்து கொள்கின்றனர். இப்போது அனைத்து சீடர்களும் ஒன்றாக கூடி தாங்கள் உணர்ந்து கொண்ட இயேசுவை ஒருவர் மற்றவரிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.


ஆம் பிரியமானவர்களே, இன்று இந்த கொரோனா வைரஸ் காரணமாக நாமும் ஒன்றாக, ஒரே குடும்பமாக வீடுகளில் வாழ்ந்து வருகின்றோம். கடந்த காலங்களில் நம் குடும்ப உறுப்பினர்களோடு நாம் செலவிட்ட நேரங்கள் மிகவும் குறைந்ததே. வேலைப்பழு காரணமாக 24 மணி நேரமும் ஓயாது உழைத்துக் கொண்டிருந்தவர்களை ஒரு சிறிய கிருமி ஒட்டுமொத்த உலகத்தையும் அவரவர் குடும்பத்தோடு ஒன்றினைந்து வாழ நமக்கு கற்றுக் கொடுத்து விட்டது. இப்படி நாம் கூடி வாழும்போது உயிர்த்த ஆண்டவரின் உடனிருப்பை நம்மால் உணாந்துகொள்ள முடியும்.

ஆனால் எப்போது பிரிவினைகளும், சண்டைகளும் வேறுபாடுகளும் நம்மில் இருக்கும் போது நம்முடைய கண்கள் ஆண்டவரை காண முடியாமல் மறைக்கப்பட்டிருக்கும். எனவே உயிர்த்த ஆண்டவரின் உடனிருப்பை உணர வேண்டுமானால் நாம் அனைவரும் கூடி வாழவேண்டும். கூடி வாழ்ந்தால் நம்முடைய உறவுகளுக்கு கோடி நன்மை.

04. அப்பம் பிட்கும் போது வரும் கடவுளின் உடனிருப்பு

புதிய ஏற்ப்பாட்டில் கடவுளின் உடனிருப்பை இயேசு அப்பம் பிட்பதின் வழியாக தன்னுடைய சீடர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். மத்தேயு நற்செய்தி 26:26 –ல் அவர்கள் உணவருந்திக் கொண்டிருந்த பொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டு தன் சீடருக்குக் கொடுத்து, "இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்" என்றார். தன்னுடைய உடனிருப்பை அப்பம் பிட்பதன் வழியாக வெளிப்படுத்துகின்றார். மேலும் தூய பவுல் 1கொரிந்தியர் 10: 16-17-ல் நாம் கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்.

இப்படி ஒரே அப்பத்தை பகிர்ந்து உண்ணும் போது ஆண்டவரின் உடனிருப்பை நம்மால் உணரமுடியும். அப்படித்தான் இந்த எம்மாவுஸ் சீடர்களும் வழிநெடுகிலும் ஆண்டவரோடு பேசிக்கொண்டும், உரையாடிக் கொண்டும் வருகின்றனர். அப்பொழுதெல்லாம் அவரின் உடனிருப்பை அவர்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. எப்பொழுது இயேசு அப்பத்தை பிட்டு அவர்களுக்கு கொடுத்தாரோ அந்நேரமே ஆண்டவரை கண்டுணர்ந்து கொள்கின்றனர். இன்றும் ஒவ்வொரு திருப்பலியின் போதும் அப்ப வடிவில் தன்னுடைய உடனிருப்பையும், பிரசண்ணத்தையும் நமக்கு வெளிப்படுத்தி வருகின்றார். அவரை உணர்ந்து கொள்கின்றோமா? அல்லது உணர்ந்து கெள்ள முடியாமல் நமது கண்கள் மறைக்கப்பட்டுள்ளனவா? நற்கருணையில் உயிர்த்த ஆண்டவரின் உடனிருப்பை கண்டுகொள்ள நம்முடைய கண்களை திறக்க ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

அன்புக்குரியவர்களே இந்த எம்மாவுஸ் சீடர்கள் விரக்தியில், சோகத்தில், எல்லாம் முடிந்துவிட்டது என்ற சூழ்நிலையில் எருசலேமை விட்டு செல்கின்றனர். எருசலம் என்பது கடவுளின் பிரசன்னம் நிறைந்த பகுதி. உதாரணமாக திருப்பாடல் 122:9-ல் நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே (எருசலேமில்) இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். மேலும் எரேமியா 3:17-ல் எருசலேமை "ஆண்டவரின் அரியணை" என அழைப்பார்கள். ஆண்டவரின் பெயரை முன்னிட்டு எல்லா மக்களினத்தாரும் எருசலேமில் வந்து கூடுவர். எனவே எருசலம் என்பது கடவுளின் பிரசன்னம் நிறைந்த பகுதியாகும்.

இன்று கடவுள் குடியிருக்கும் எருசலேம் எது?

கடவுள் வாழும் இடம் எருசலேம். அப்படியானால் கடவுளின் பிரசன்னத்தை நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் நம்முடைய நற்கருணை ஆலயங்கள் அனைத்தும் எருசலேம் என அழைக்கப்படும்.

எதுவெல்லாம் நற்கருணை ஆலயங்கள்?

முதலிலே, கற்கலால் கட்டப்பட்டு நற்கருணை பேழையைத் தாங்கியுள்ள ஒவ்வொரு ஆலயமும் நற்கருணை ஆண்டவரின் உடனிருப்பு பகுதி. இரண்டாவதாக அந்த நற்கருணையை தகுதியான முறையில் உட்கொள்ளும் போது நாம் அனைவருமே நடமாடும் நற்கருணை பேழைகள் தான். ஆண்டவரின் உடனிருப்பு ஆலயம் நம்முடைய உடல். மூன்றாவதாக, இன்று இந்த கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் இருந்தே நற்கருணை கொண்டாட்டத்தை பார்க்கும் போதும், அதில் பங்கெடுக்கும் போதும் நம்முடைய இல்லங்கள் ஒவ்வொனறும் ஆண்டவர் குடியிருக்கும் நற்கருனை பேழைகளாக மாறி வருகின்றன.

பிரியமானவர்களே, எம்மாவுஸ் சீடர்கள் ஆண்டவரின் உடனிருப்பை உரையாடல் வழியாகவும், இறைவார்த்தையை பகிர்வதின் வழியாகவும், கூடி வாழும் போதும், அப்பத்தை பிட்டு அதில் பங்கெடுக்கும் போதும் அவரை கண்டு கொண்டனர். இன்று ஆண்டவரை, அவருடைய உடனிருப்பை கண்டுகொள்ள நாம் எடுக்கும் முயற்ச்சிகள் என்ன? நம்முடைய உறவுகளோடு பகையில்லாமல் உரையாடுகின்றோமா? அன்றாடம் இறைவார்த்தை தியானிக்கின்றோமா?, உறவுகளோடு சேர்ந்து கூடி வாழ்கின்றோமா?, திருப்பலியில் பங்கெடுத்து அப்பத்தை ஆண்டவரின் நற்கருணையை பெற்றுக்கொள்கின்றோமா? நம்முடைய கண்கள் ஆண்டவரின் உடனிருப்பை கண்டு கொள்ள மறைக்கப்பட்டுள்ளனவா? அல்லது உயிர்த்த ஆண்டவரை கண்டு கொண்டு உடனிருக்கும் உறவுகளுக்கும், உடனிருப்பை வெளிப்படுத்தும் இறைவனுக்கும் சாட்சியாக வாழப் போகின்றோமா?

அருட்பணி . வேத சகாய செல்வராஜ், கப்புச்சின்
உளவியல் ஆலோசனை இல்லம், பதோனி, திருச்சி.