இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பெந்தகோஸ்தே பெருவிழா

Holy Spirit is the Antibodies of Christians - தூய ஆவியாரும் நோய் எதிர்ப்பு சக்தியும்

திருதூதர்பணி 2:1-11
கலாத்தியர் 5:16-25
யோவான் 15:26-27;16:12-15

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே திருச்சபையின் பிறந்தநாள், தூய ஆவியாரின் பெருவிழாவை இன்று சிறப்பிக்கின்றோம். உயிருக்கு பயந்து ஓடி ஒதுங்கி அடைபட்ட வாழ்க்கை வாழ்ந்த சீடர்கள் அனைவரும் திடப்படுத்தப்பட்டு இயேசுவுக்கு சாட்சிகளாக வாழ தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் தான் இது. படிக்காத சீடர்கள் அனைவரும் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களின் தாய்மொழியில் பேசி மக்கள் அனைவரையும் மலைத்துபோக செய்த நாள் தான் இது. இப்படிப்பட்ட மாபெரும் செயலை செய்ய உறுதுணையாக இருந்தவர் மூன்றாம் ஆளாகிய தூய ஆவியானவர். இந்த தூய ஆவியானவரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழவும் அவரின் விருப்பத்தை நம்வாழ்வில் நிறைவேற்றவும் வரம் வேண்டுவோம்.

அன்புக்குரிவர்களே இன்று உலகமெங்கும் மக்கள் அனைவரையும் அச்சுருத்திக்கொண்டிருக்கும் தொற்று நோய்யான கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு வர வேண்டுமானால் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும். இந்த நோய் எதிர்பு சக்தியை ஆண்டிபாடிஸ் என்று ஆங்கிலத்தில் அழைப்பர். இந்த ஆண்டிபாடிஸ் உடலில் ஒய் (Y) வடிவிலான அமைப்பை கொண்டுள்ளது.

நமது உடம்பிலுள்ள நிணநீர் மண்டலம் (Human Lymphatic System)) நம்மை தொற்று மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இதுவே உடலிலுள்ள நச்சுப்பொருள், கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்களை வெளியேற்ற வகை செய்கிறது. இம்மண்டலம் நம் உடலின் நோய் எதிர்ப்புசக்தி செயல்பாட்டிற்கு பெரும் பங்கு வகிக்கிறது. எப்போது நம் உடலில் பாக்டீரியாக்கள், வைரஸ் உள் நுழைகிறதோ அப்போது இந்த நிணநீர்க்கலங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த நிணநீர்க்கலங்கள் அந்த நுண்ணுயிரிகளைக் கொல்லக்கூடிய எதிர்ப்புப் பொருளான ஆண்டிபாடிஸ் (Antibodies)களை உருவாக்கும். நிணநீர் மண்டலம் உடலின் வேண்டாப் பொருட்களை வெளியேற்றும் வடிகாலாகவும் செயல்படுகிறது.

நமது உடலில் நோய் தாக்கும்போது, உடலில் எதிர்ப்பு சக்தி காரணமாக ஆண்டிஜென் உருவாகும். இப்படி உருவாகும் ஆண்டிபாடியானது நமது வாழ்நாள் முழுவதும் உடலிலேயே இருக்கும். நம்மை ஒரு முறை தாக்கிய அதே வைரஸ் மீண்டும் நமது உடலுக்குள் நுழைய முடியாத வகையில் இந்த ஆண்டிபாடிக்களே தற்காத்துக்கொள்ளும். ஒரு முறை அம்மை நோய் வந்துவிட்டால் மீண்டும் வராது என்பதற்கான அடிப்படைக் காரணம் இது தான். இது தான் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியாகும். கொரோனா வைரஸ் கிருமியிடம் இருந்து நம்மை பாதுகாக்க (Antibodies) நமக்கு தேவை.


குறிப்பாக கொரோனா நோய்எதிர்ப்பு சக்திக்கு பலரும் பலவிதமான மருந்துகள், கசாயம், உணவு மாற்றங்கள் என பல கருத்துக்களை நம்மிடம் கூறுகின்றனர். உதாரணமாக வெற்றிலை, மிளகு, கிராம்பு, மஞ்சள் இதுபோன்ற பொருட்களை நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி ஆண்டிபாடிஸ் நம் உடலில் உருவாகி கொரோனா வைரஸை முற்றிலும் அழித்துவிடும் என்று மருத்துவர்களும், உறவினர்களும் கூறுவதை நாம் பார்த்து வருகின்றோம். அதைப்போலவே கிறித்தவர்களாகிய நமக்கு சாத்தானின் சூழ்ச்சியிடமிருந்தும், சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தும் நம்மை பாதுகாக்க தூயஆவி என்னும் ஆண்டிபாடிஸ் நமக்கு தேவை. இந்த தூயஆவிஎன்னும் ஆண்டிபாடிஸ் நம் உடவில் இருந்தால் எந்த விதமான சாத்தானின் சோதனைகளையும், சூழ்ச்சிகளையும் நாம் முறியடித்துவிடலாம். அதனால்த்தான் தூய பவுல் 1கொரி 6:19-ல் நம்முடைய உடல்கள் தூய ஆவி தங்கும் கோவில் என்று கூறினார். இந்த தூய ஆவி என்னும் (Antibodies)சை அவ்வப்போது புதுப்பித்து வீரியமுள்ளதாக மாற்ற வேண்டும். இன்று தூயஆவியாரின் பெருவிழாவில் இந்த தூயஆவியின் ஆண்டிபாடிசை புதுப்பிப்போமா!

ஆண்டிபாடியான தூயஆவியின் செயல்பாடுகள்

1. நம்மோடு தங்கியிருக்கும் தூய ஆவியார்:

ஆண்டிபாடிஸ் நம்உடம்பில் தங்கியிருக்கும் போது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. அதனால் எதிரியான வைரசோடு போரடி வெற்றிகொள்ள முடிகின்றது. அதைப்போலவே தூயஆவியனவர் நம்மோடும், நமக்குள்ளும் இருக்கும்போது அலகையான சாத்தானின் சூழ்ச்சிகளில் இருந்து வெளிவரமுடியும். அதையே யோவான் நற்செய்தி 14:17-ல் “அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.” தூய ஆவியார் இரண்டு விதங்களில் நம்மிடையே தங்கியிருக்கின்றார். “உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.”

1. உங்களோடு தங்கியிருக்கும் தூயஆவியார்

உங்களோடு என்று சொல்லும் போது ஒரு நண்பனைப் போல அருகில் இருந்து செயலாற்றுபவர். இன்றைய நற்செய்தியிலே “நான் உங்களோடு இருக்கின்றேன் அதைப்போலவே நீங்களும் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகின்றீர்கள்.” என்கின்றார். மேலும் யோவான் 15:4-ல் “நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது.” கொடியும் செடியும் இணைந்திருப்பது போல தூயஆவியார் நம்மோடு இணைந்திருக்கின்றார்.

2. உங்களுக்குள் இருக்கும் தூயஆவியார்
கடவுள் மனிதனை படைத்த போது அவனுக்கு உருவம் இருந்தது ஆனால் உயிர் இல்லை. எனவே கடவுள் தன்னுடைய உயிர்மூச்சை ஊத மனிதன் உயிர் உள்ளவன் ஆனான் என்று தொடக்கநூலில் படிக்கின்றோம். உயிர்மூச்சை தந்த தூயஆவியனவர் ஒவ்வொரு மனிதனுக்குள் இருந்து செயலாற்றுகின்றார். இதையே திருமுழுக்கு என்ற அருட்சாதனம் வழியாக நாம் உணரலாம். அதாவது ஒவ்வொரு குழந்தையும் மண்ணில் பிறக்கும் போது பாவநிலையிலே பிறக்கின்றது. இந்த பாவக்கறையை அழிக்க திருமுழுக்கு வழியாக தூயஆவியானவர் நமக்குள்ளே தங்கியிருந்து செயலாற்றுகின்றார்.

பிரியமானவர்களே ஆண்டிபாடிஸ் நமது உடலில் தங்கியிருக்கும்போது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் போது நாம் உடல் ஆரோக்கியத்தோடு இருக்க முடியும். எனவே நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தூயஆவியனவர் நம்மோடு தங்கியிருக்கின்றார். நீங்களும் நானும் அவரோடு தங்கியிருக்கின்றோமா? அவரோடு தங்கியிருக்கும் போது தான் நாம் மிகுந்த கனிதரமுடியும். எனவே தூயஆவியாரோடு இணைந்திருக்க நம்மை புதுப்பிப்போம்.

2. தூய ஆவியனவர் நமக்கு கற்றுத்தந்து நினைவூட்டுவார்.

வைரசோ, பாக்டிரியாவே மனித உடலில் உள்ளே செல்லும்போது பலவிதமான மாற்றங்கள் குறிப்பாக காய்ச்சல், சளி, இருமல் தென்படுகின்றன. இந்த உடல் நோய்களே ஆண்டிபாடிஸ் இல்லை என்பதை நமக்கு நினைவுபடுத்துகின்றது. அதைப்போலவே தூயஆவிநமக்கு கற்றுதந்து நாம்எப்படி வாழவேண்டும் என்பதை நினைவூட்டுகின்றது. யோவான் நற்செய்தி 14:26-ல் “என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் தூயஆவியார் உங்களுக்கு நினைவூட்டுவார்” என்கின்றார்.

தூய ஆவியானவர் கற்றுத்தருபவை எவை?

ஏசாயா 11:2-ல் “ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு மற்றும் ஏழாவதாக பக்தியையும் தூயஆவியார் அவர்களுக்கு கற்றுத்தருவார் என்கிறார் தூய தாமஸ் அக்குவினாஸ். அதைப்போலவே தூயஆவியார் நாம் எதை, எப்படி, பேசவேண்டும் என நமக்கு நினைவூட்டுகின்றார். மத்தேயு 10:19-20-ல் "என்ன பேசுவது, எப்படிப் பேசுவது" என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்.”

ஆம்பிரியமானவர்களே இன்றும் இந்த கொரோனா தொற்று நோய் நமக்கு நிறைய பாடங்களை குறிப்பாக தூய்மையைப் பற்றி கற்றுத்தந்துள்ளது. அடிக்கடி சானிடைசர் கொண்டு வெளிப்புற உடலை நம்மையே நாம் தூய்மைபடுத்தி வருகின்றோம். அதைப்போலவே நாமும் தூய மனிதர்களாக வாழ தூயஆவியானவர் கற்றுத்தருவதை நினைவில் கொண்டு நம்முடைய உட்புறமான ஆன்மாவை தூய்மையாக்கி வாழ முயற்ச்சிப்போம்.

3. தூயஆவியார் இயேசுவுக்கு சான்றுபகர்வார்.

தூயஆவியார் ஆண்டவர் இயேசுவுக்கு எப்போதும் சான்று பகர்கின்றார். யோவான் 15:26-ல் “தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.” மேலும் மத்தேயு 3:16-17-ல் ஆண்டவர் இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். “உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று சொல்லி இயேசுவை இறைமகன் என்று கூறி தூயஆவி சான்று பகர்கின்றார்.

இன்றும் பெருந்தொற்றில் இருந்து தப்பித்தவர்கள் கொரோனாவுக்கு சான்று பகர்கின்றனர். இவர்களின் அனுபவம் மற்றவர்களுக்கு சான்றாக அமைகின்றது. தூயஆவியார் இயேசுவுக்கு சான்று பகர்ந்தார். அதைப்போலவே கடவுளின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும் நம் வழியாக தூயஆவியார் சான்று பகரும் வாழ்க்கையை வாழ முயற்ச்சிப்போம்.


4. தூயஆவியார் நம்மிடம் உள்ள தவறான கருத்துகளை சுட்டிகாட்டுவார்.

அன்றாடம் சமூகவளைத்தளங்களில் கொரோனாவைப் பற்றிய தவறான கருத்துக்களை நாம் படித்தும், கேட்டும் வருகின்றோம். இந்த தவறான கருத்து நம்மை தவறான பாதைக்கு இட்டுச்செல்கின்றது. அதைத்தான் கொரோனா இரண்டாம் அலை நமக்கு உணர்த்தி வருகின்றது. அதைப்போலவே உண்மைக்கு எதிராக பலவிதமான கருத்துகளை நாம் கூறிவருகின்றோம். ஆனால் தூய ஆவியனவர் உண்மையை வெளிப்படுத்துபவர். உண்மையை வெளிப்படுத்தும் தூயஆவியனவர் நாம் கொண்டுள்ள தவறான கருத்துகளை குறிப்பாக பாவம், நீதி, தீர்ப்பு போன்ற கருத்துகளுக்கு உண்மையான விளக்கத்தை வழங்குகின்றார். உதாரணமாக யோவான்16:8-ல் “தூயஆவி வந்து பாவம், நிதீ, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார்” என்கிறார்.

பாவம் பற்றிய சிந்தனை

இன்றைய உலகில் பாவம் செய்யும்போது குற்றஉணர்ச்சிகள் எதுவும் இல்லாமலே பலவிதமான பாவங்களை நாம் கட்டிக்கொள்கின்றோம். அப்படியே பாவம் செய்தாலும் பாவசங்கீர்தனத்தில் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற சிந்தனையை நாம் கொண்டுள்ளோம். ஆனால் எந்தெந்த பாவங்கள் மன்னிக்கப்படும், எவையெல்லாம் மன்னிக்கப்படாது என ஆண்டவர் நமக்கு தெளிவுபடுத்துகின்றார். ஆண்டவர் இயேசு மத்தேயு 12:31-32-ல் “எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தூய ஆவிக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது. மக்களுடைய மற்றப் பாவங்கள், பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும். மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்.” இன்றைய நாளில் தூயஆவிக்கு எதிராக நாம் செய்யும் பாவங்கள் என்னென்ன என்பதை அறிந்து பாவம் பற்றிய சரியான புரிதலோடு வாழ முயற்ச்சிப்போம்.

தூயஆவிக்கு எதிராக நாம் செய்யும் பாவங்கள் என்ன?

மனித உடல் தூய ஆவி தங்கும் கோவில் என்கிறார் தூய பவுல். இந்த உடலுக்கு எதிராக நாம் செய்யும் பாவங்கள் அனைத்துமே தூயஆவிக்கு எதிரான பாவங்கள் தான். இதையே தூய பவுல் கலாத்தியர் 5:19-21-ல் “ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி சட்டவிரோதமான பாலியல் ஆசை, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம்” முதலியவை ஆகும். தூயஆவிக்கு எதிராக நாம் கட்டிக்கொள்ளும் பாவம் ஏதும் மன்னிக்கப்படாது. எனவே நம்முடைய பாவத்திற்கு எதிராக கருத்துகளை மாற்றி புண்ணிய வழியில் நடக்க முயற்ச்சிப்போம்.

நீதி பற்றிய சிந்தனை

கடவுளின் நீதியைப் பற்றி தொடக்கநூலில் 18:25-ல் “ஆண்டவரே தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?" என்கிறார் ஆபிரகாம். அப்படியானால் கடவுளின் நீதி எது? கடவுள் மீது கொள்ளும் நம்பிக்கையே கடவுளின் நீதியாக கருதப்படுகின்றது. தூய பவுல் உரோமையர் 1:17-ல் "நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர்" . அதைப்போலவே ஆபிரகாமும் தன்னுடைய நூறாவது வயதிலும் கடவுள் மீதுகொண்டள்ள நம்பிக்கையை அவர் இழக்கவில்லை. எனவே ஆபிரகாமின் நம்பிக்கை அவருக்கு நீதியாக கருதப்பட்டது. உரோமையர் 4: 22 மற்றும் கலாத்தியர் 3:6-ல் “ஆபிரகாமைப் பாருங்கள்! "அவர் கடவுள்மீது நம்பிக்கை கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்.” இன்றும் கொரோனா பெருந்தொற்று நம்மை தாக்கினாலும் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கை நம்மை விடுவிக்கும்.

தீர்ப்பு பற்றிய சிந்தனை

இன்றைய சூழலில் எங்கு பணம், பதவி, செல்வாக்கு உள்ளதோ அங்கே தீர்ப்புகள் மாற்றி எழுதப்படுகின்றது. கொரோனா பற்றிய நம்முடைய தீர்ப்பும் தவறாகவே இருந்தது. உதாரணமாக கொரோனா இந்தியாவிற்கு வராது, மாஸக் அணிந்தால் கொரோன வராது,... இப்படியாக தவறான தீர்ப்பு எழுதியவர்களை கடவுள் கண்டிக்கின்றார், வெறுக்கின்றார். உதாரணமாக நீதிமொழிகள் 17:15 “குற்றம் செய்தவரை நேர்மையானவரென்றும்; நேர்மையானவரைக் குற்றம் செய்தவரென்றும் தீர்ப்புக் கூறுகிறவர்களை ஆண்டவர் அருவருக்கிறார்.” நம்முடைய இந்த தீர்ப்பு பற்றிய சிந்தணை தவறு என தூயஆவியனவர் நமக்கு சுட்டிக்காட்டுகின்றார். மத்தேயு 7 : 1 பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள் மத்தேயு 5 : 22-ல் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; "தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ "முட்டாளே" என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; "அறிவிலியே" என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். மத்தேயு 12 : 36-ல் மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும்” என்கிறார் ஆண்டவர். எனவே தீர்ப்பு பற்றிய சிந்தனைகளை புதுப்பிப்போம். முதலில் நமக்கு நாமே தீர்ப்பு அளிப்போம். இரண்டாவதாக நமக்கு நாம் அளிக்கும் தீர்ப்பை போலவே மற்றவர்களுக்கும் தீர்ப்பு அளிக்க தூயஆவியாரின் வரம் வேண்டுவோம்.

பிரியமானவர்களே மனதிற்கும், உடலுக்கும், உறவுகளுக்கும் நோய்எதிர்ப்பு சக்தியை தரும் ஆண்டிபாடியான தூயஆவியை பெற்றுக்கொண்ட அனைவரும் உயிர்த்த ஆண்டவருக்கு சாட்சிகளாக வாழ்ந்தனர். தங்களுடைய உடலிலும், மனதிலும் தூயசிந்தனைகளை கொண்டிருந்தனர். தூயஆவியின் கனிகளை பெற்று வாழந்தனர். நாமும் தூயஆவியானவர் தரும் ஆண்டிபடியான மாத்திரையாகிய அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் போன்ற குணநலன்களால் நம்மை நிரப்புவோம். நோய்எதிர்ப்பு சக்திகளை பெற்று நலமோடும் வளமோடும் வாழ்வோம். தூயஆவி உங்களையும், உங்கள் குடும்பஉறுப்பினர்கள் அனைவரையும் வழிநடத்தட்டும்.

அருட்பணி. வேத போதக சகாயசெல்வராஜ், கப்புச்சின் உளவியல் ஆலேசகர், திருச்சி