இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 12-ம் ஞாயிறு

புயலை அடக்க பூந்தென்றலாய் மாறுவோம்

யோபு 38:1,8-11
2 கொரிந்தியர் 5:14-17
மாற்கு 4:35-41

இறைஇயேசுவில் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே கடந்த வாரம் கேதுரு மரம் பற்றி சிந்தித்தோம். இன்று கலிலேயக் கடலின் புயலை அடக்க பூந்தென்றலாய் புறப்பட்ட நமதாண்டவர் இயேசுவை பற்றி சிந்திப்போம். இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் இயேசுவின் பேரன்பால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் புயலையும் பூந்தென்றலாக்க முடியும் என்று நமக்கு கூறுகின்றார். முதல் வாசகத்தில் யோபுவுக்கு ஆறுதல் அளிக்க கடவுள் சூறாவளியை தன்வயப்படுத்துகின்றார். பூந்தென்றலாய் தலையனை வைத்து உறங்கிக் கொண்டிருந்த இயேசு கலிலேயக் கடலின் புயலையும், காற்றையும் தன்வசப்படுத்துகின்றார். புயலும் பூந்தென்றலும் இரு வெவ்வேறு துருவங்கள். ஆனால் புயலை அடக்க பூந்தென்றலே சிறந்தது. நாமும் நம்முடைய வாழ்வின் வரும் புயல்களை அடக்க பூந்தென்றலாய் மாறுவோம்.

மனித வாழ்வின் நாம் சந்திக்கும் புயல்கள்

இன்றைய சூழலில் இயற்கை சீற்றங்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறி வருகின்றது. சுனாமி, தானே, வர்தா, ஒக்கி ,கஜா, நிவர் என இயற்கை தரும் புயல்களை நாம் சந்தித்துள்ளோம். அத்தோடு இயற்கையோ, செயற்கையோ கொரோனா என்ற புயல் மனித இனத்தையே கொஞ்சம் கொஞ்சமாக அன்றாடம் அழித்து வருகின்றது. ஆனால் மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த போது மனித வாழ்வில் புயலும் இல்லை; புயல் போன்ற சீற்றங்களும் இல்லை. கடவுள் படைத்த உலகம் பூந்தென்றலாய் இருந்தது. இயற்கையை சீண்டினான் இயற்கை கலிலேய கடலின் புயலாய் வெடிக்கின்றது.

கலிலேயக் கடல்
கலிலேயக் கடல் (Sea of Galilee) இயேசுவின் பணி வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கின்றது. இஸ்ரேல் நாட்டின் மிகச்சிறந்த இயற்கையின் கொடையாக கலிலேயக் கடல் அமைந்துள்ளது. இது மனித இதயம் போன்ற வடிவம் கொண்ட ஏரிப் பகுதியாகும். 23 கிலோமீட்டர் நீளமும் 13 கிலோமீட்டர் அகலமும் 700 அடிகள் ஆழமும் கொண்டு 166 சதுர கிலோ மீட்டருக்குப் பரந்து விரிந்திருக்கும். இது கடல் என்று செல்லப்பட்டாலும் ஏரி என்று அழைப்பதே சிறந்தது.. இது “திபேரியக் கடல்” என்றும் “கெனசரேத்து ஏரி” (Lake of Gennesaret) என்றும் அழைக்கப்படுகின்றது.

கலிலேயக் கடல், விசித்திரங்களுக்குப் பெயர் பெற்றது. பல நேரங்களில் பேரமைதி கொண்டும், சில நேரங்களில் திடீர், திடீர் என்று புயலாலும், சூறைக்காற்றாலும், மழையாலும் பயமுறுத்தக் கூடியது. காரணம் இது அமைந்திருக்கின்ற புவியியல் அமைப்புதான் உடனடி பருவநிலை மாற்றத்துக்குக் காரணம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த புயலையும், காற்றையும் மீறியே இக்கடலில் மக்கள் தொழில் செய்து வருகின்றனர். காரணம் புயல் அவர்களுக்கு புதிதல்ல; பூந்தென்றலே…


கலிலேய நகரத்து சீடர்கள்
ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களை கலிலேய கடல் பகுதியில் இருந்து அழைக்கின்றார். இந்த கலிலேய கடலுக்கு பலமுறை வந்திருக்ககூடும். இந்த மக்களின் வாழ்வு முறையைப் பற்றி நன்கு அறிந்திருந்த இயேசு, மீன்பிடிப்பவர்களை, அதுவும் கலிலேயக்கடலில் மீன்பிடிப்பவர்களை அழைக்கின்றார்.

காரணம் அமைதியே உருவான அழகிய கடல் ஒருபுறம்; ஆனால் எர்மோன் மலையிலிருந்து வரும் குளிர்ந்த காற்று, திடீரென இதன் அலைகளைப் படைகளாகத் திரட்டி, பேரொலிகளையும் பேரலைகளையும் எழுப்பிப் புயலாக மாற்றி விடுகிறது. எனவேதான் கலிலேயக்கடல் விசித்திரமானது. இங்கு வசிக்கும் மக்களும் விசித்திரமானவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட இயேசுவின் சீடர்களும் சற்றே விசித்திரமானவர்கள் தான். புயலும், காற்றும் மீனவர்களுக்கு புதிதல்ல. ஆனல் மீனவர்களான சீடர்கள் புயலுக்குப் பயந்து அலறி இயேசுவிடம் வந்து "ஆண்டவரே, காப்பாற்றும் நாங்கள் சாகப் போகிறோம்" என்று சொல்லி தச்சுத்தொழில் செய்த இயேசுவை மீனவர்கள் உதவிக்கு அழைக்கின்றனர். இது விசித்திரமல்ல..

கலிலேய கடலை நன்கு அறிந்த சீடர்கள் புயலைப் பார்த்து ஏன் பயப்பட வேண்டும்? இரண்டாவதாக கடலை பற்றி அறியாத இயேசு, தலையனை கொண்டு எந்த விதமான பதற்றமும் இல்லாமல் எப்படி உறங்கிக் கொண்டிருக்க முடியும்? முன்றாவதாக இயேசு, விசித்திரமான மனநிலையைக் கொண்ட சீடர்களைப் பார்த்து "நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?" என்று கூறி புயலையும், காற்றையும் அவரால் எப்படி அடக்க முடிந்தது? காரணம் புயல் அவருக்கு பூந்தென்றலே… புயலை அடக்க வேண்டிய சீடர்களுக்கு இயேசுவின் செயல் விசித்திரமாகவும், வித்தியாசமாகவும் இருக்கின்றது.

ராஜன் என்பவர் ஒரு பிரபலமான வங்கியில் பணிபுரிபவர். உலக நடப்புகளை நன்கு அறிந்தவர். ஒருநாள் அவருக்கு அலைபேசியில் ஒரு நண்பர் அறிமுகமாகின்றார். அவர் அவருடைய பணிச் சேவையைப் பாரட்டி ஒருமிகப்பெரிய தொகையை அவருக்கு அளிப்பதாக வாக்குறுதி அளிக்கின்றார். அந்த பணத்தை வைத்து பல ஏழைகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கின்றார். இவர்களுடைய உறவு பறிமாற்றம் அன்றாடம் தொலைபேசி வழியாக ஆழப்படுத்தப்படுகின்றது. உலக நடப்புகளை தெரிந்து வைத்திருந்தாலும் தனக்கு என்று வருகின்றபோது பலர் கீழே விழுந்து விடுகின்றனர். ராஜன் அவர்களை முழுமையாக நம்பி அவர்கள் கூறுவதை கேட்க ஆரம்பிக்கின்றார்.

இதை அறிந்த பணம் பறிக்கும் கும்பல் ஒரு நாள் அவருக்கான பணம், ஏழைகளுக்கான பொருட்களை பார்சல் முலமாக அனுப்பி வைப்பதாக கூறுகின்றார். அந்த பார்சலுக்கான இரசீதையும், அந்த பார்சலில் உள்ள பொருட்களையும் போட்டோ வழியாக அவருக்கு அனுப்புகின்றார். மறுநாள் கலையில் பார்சல் ஆபீசிலிருந்து அழைப்பு வருகின்றது. நீங்கள் பார்சலுக்கான தொகையை கட்டிவிடுங்கள். உங்கள் வீட்டிற்கே நாங்கள் அதை அனுப்பி வைக்கின்றோம் என கூறுகின்றனர். இவரும் பணத்தை அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கின்றார்.

அடுத்தநாள் மீண்டுமாக அவர்கள் அந்த பார்சலில் வெளிநாட்டு பணம் இருப்பதாகவும், அதற்கான வரியை நீங்கள் செலுத்தவேண்டும். அப்போது தான் அந்த பணத்தை உங்களுக்கு அனுப்பமுடியும் என கூறுகின்றனர். இவரும் அதை நம்பி அவர்கள் கேட்ட பணத்தை அனுப்புகின்றார். மீண்டுமாக அவர்கள் வெளிநாட்டு பணத்தை அப்படியே உங்களுக்கு அனுப்ப முடியாது. அதை இந்திய பணமாக மாற்றி உங்களது வங்கி கணக்கிற்கு அனுப்புவதாக ஆர்.பி.ஐ யிலிருந்து கூறுகின்றனர் எனச் சொல்லி போலியான ஆர்.பி.ஐ இரசிதை அனுப்பி வைக்கின்றனர். வங்கியிலே பணிபுரிந்தாலும் இவரும் அவர்களின் வார்த்தையை நம்பி பெரிய தொகையை அனுப்புகின்றார்.


கடைசியில் இவர் தான் ஏமாற்றப்படுவதாக ஏதோ ஓர் உணர்வு அவருக்கு தென்படுகின்றது. இதையறிந்த பணம் பரிக்கும் அந்த கும்பல் தங்களுடைய வங்கி கணக்கு, அலைபேசி எண்கள் அனைத்தையும் செயலிலக்க செய்து விடுகின்றனர். வங்கியில் பணிபுரிந்து பலவித பாரட்டுகளைப் பெற்ற மனிதர், எத்தனையோ மக்களுக்கு பணம் பரிக்கும் கும்பலை பற்றி கருத்துகளை கூறியவர் இன்று தான் முழுமையாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கடனில் சிக்குண்டு, குடும்பத்திலும், உறவுகளிடமும் கெட்ட பெயரை வாங்கிக் கொண்டு விரக்தியின் உச்சியில் மனநோயாளியாக இருக்கின்றார்.

பிரியமானவர்களே அமைதியாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்வில் ஆசை என்ற காற்று விசியது. தன்னிலை மறந்து, தன்னிடம் உள்ள திறமைகளை உணராத போது புயல் புகம்பமாய் வீசியது. அமைதியில் இளைப்பாற வேண்டிய அவரது உள்ளம் தற்கொலை, மனநோய் என்ற புயல் காற்றால் சீரழிந்து விட்டது அவரது வாழ்வு.

பிரியமானவர்களே இங்கு இயேசுவின் சீடர்களுக்கு கலிலேயாக் கடலைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். புயல், பூகம்பம், பேரலை அவர்களுக்கு புதிதல்ல. ஆனால் இன்று படகில் இருந்த அனைவருக்கும் பயம். சீடர்கள், மீனவர்கள் என்ற தன்னிலை மறந்தவர்களாக இருக்கின்றனர். மீனவர்களுக்கே உள்ள தனித்திறமையான புயலை எதிர்த்து போரடும் குணத்தை உணரமுடியாதவர்களாய் இருக்கின்றனர். எனவே புயலும், பெருங்காற்றும் அவர்களை சாகும் நிலைக்கு தள்ளி விடுகின்றது. சீடர்களைப் போல, ராஜனைப் போல நம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற சிந்தனையை மறந்து நம்முடைய வாழ்வில் வரும் புயல்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என சிந்திப்போமா?

1. புயல் நம் வாழ்வை தாக்கும் போது இயேசு செய்ததைப் போல செய்வோமா!
மாற்கு 4:38 அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார் என வாசிக்கின்றோம். அன்புக்குரியவர்களே கலிலேயாக் கடலை பற்றியும், அதன் புயல் காற்றை பற்றி நிச்சயம் இயேசு கேள்விபட்டிருக்க வேண்டும். அனைத்தையும் அறிந்த இயேசு படகில் ஏறியவுடன் பின்பகுதியில் தலையணை வைத்து தூங்குகின்றார். எதைப்பற்றியும் கவலைப்படாதவர்கள் மட்டுமே தலையணை வைத்து ஆழ்ந்து தூங்கமுடியும். அதுவும் கடலின் தன்மைகளை அறிந்திருந்தாலும் புயல், புகம்பம் பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் பூந்தொன்றலாய் இயேசு உறங்குகின்றார். நாமும் நம்முடைய வாழ்வில் புயல் போன்ற பிரட்சனைகள் வரும் போது பூகம்பமாய் எழுகின்றோமா? அல்லது பூந்தென்றலாய் வந்தது வரட்டும் என்று அமைதியில் இளைப்பறுகின்றோமா?

நிகழ்காலப்பொழுதில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள். நாளை என்ன நடக்கலாம் அல்லது அடுத்த விநாடி என்ன நேரிடும் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நேரம் வரும்போது கடினமான விஷயங்களைச் சமாளிக்க கடவுள் உங்களுக்கு உதவுவார் என்ற முழுநம்பிக்கையில் வாழ்வை செலுத்தும் போது புயல் நமக்கு பூந்தொன்றலாய் மாறும்.

2. தப்பிக்க வழி இல்லாமல் ஆபத்தானதை சந்திக்க கடவுள் நம்மை கைவிடமாட்டார் என்பதை உணர்வோம்.
இயேசு சீடர்களைப் பார்த்து படகின் வழியாக அக்கறைக்கு செல்வோம் வாருங்கள் என அழைத்து அவர்களோடு பயணிக்கின்றார். இயேசுவுக்கு நிச்சயம் கடலில் என்ன நடக்க போகின்றது என்பதை முற்றிலும் அறிந்தவர். உதாணரமாக இறுதிஇராஉணவின் போது “உங்களில் ஒருவன் என்னை காட்டிக்கொடுப்பான் என்றும் அதுவும் நான் யாருக்கு அப்பத்தை தருகின்றேனோ அவனே அவன்” என்று இயேசு கூறியிருந்தார். அப்படியானால் யார் தன்னை காட்டிக்கெடுப்பான் என்று அறிந்த இயேசுவுக்கு கடலில் என்ன நடக்கும் என்பது அவருக்கு தெரியாதா என்ன?

பழைய ஏற்ப்பாட்டில் இஸ்ராயேல் மக்கள் அனைவரும் மோயீசனுக்கு எதிராக முணுமுணுக்கின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க வழிதெரியாமல் மோயீசன் கடவுளிடம் முறையிடுகின்றார்.
எண்ணிக்கை 11: 21 –ல் மோயீசன் கடவுளிடம் “என்னோடு இருக்கும் காலாட்படையினர் ஆறு இலட்சம் அவர்கள் ஒருமாதம் முழுவதும் உண்ண அவர்களுக்கு இறைச்சி தருவேன் என்று நீர் சொல்லியிருக்கின்றீர். எங்களிடம் உள்ள கால்நடைகளும் போதாது, கடலில் உள்ள மீன்களும் போதாது; இது எங்கனம் நிகழும் என்று கேட்டபோது 23-வது இறைவார்த்தை ஆண்டவரின் கை குறுகிவிட்டதா? என்ன? இப்பொழுது எனது வார்த்தையின் படி எல்லாம் நடக்கும் என கடவுள் வாக்களித்து மோயீசனோடும், இஸ்ராயேல் மக்களோடும் தொடர்ந்து பயணிக்கின்றார்”.

இதே நம்பிக்கையை ஆபிரகாமும் கொண்டிருந்தார். உரோமையர் 4:20 –ல் “கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஐயப்படவேயில்லலை; நம்பிக்கையில் அவர் வலுப்பெற்றார்”. இயேசுவின் பிரசன்னத்தை சீடர்கள் உணர்ந்தனர் புயல் பூந்தென்றலாய் மாறியது. ஆக ஆபத்தான காரியங்கள் நம்மை அனுகும் போது கடவுள் நம்மோடு உடனிந்து செயல்படுகின்றார் என்று எப்போது நாம் உணர்கின்றோமோ அந்நொடியே புயல் நமக்கு பூந்தென்றலாய் மாறும்.

3. நாம் எதிர்கொள்ளும் துன்பங்களால் கடவுள் அசைவதில்லை!

மனிதர்கள் சந்திக்கும் துன்பங்கள் எண்ணிலடங்கா. துன்பங்கள் நம்மை தாக்கும் போது பல வேளைகளில் துவண்டு விடுகின்றோம். ஏன் மனித வழ்வையே முடித்துக் கொள்ளும் அளவிற்கு நாம் சென்று விடுகின்றோம். ஆனால் துன்பங்கள் நம்மை தாக்கும் போது நாம் துவண்டு விடாமல் இருக்க கடவுள் விரும்கின்றார். உதாரணமாக 1 தெசலோனிக்கர் 3 : 3 “நீங்கள் படும் துன்பங்களால் எவரும் மனம் தளர்ந்து போகாதவாறு, உங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தி உங்களை ஊக்குவிக்க அவரை அனுப்பினோம். துன்பங்கள் வந்தே தீரும் என்பது உங்களுக்குத் தெரியும்” எனக்கூறி நம்மை திடப்படுத்துகின்றார்.

மேலும் எசாயா 63 : 9 துன்பங்கள் அனைத்திலும் கடவுள் அவர்களின் மீட்பர் ஆனார்; தூதரோ வானதூதரோ அல்ல, கடவுளே நேரடியாக அவர்களை விடுவித்தார்; தம் அன்பினாலும் இரக்கத்தினாலும் அவர்களை மீட்டார்; பண்டைய நாள்கள் அனைத்திலும் அவர்களைத் தூக்கிச் சுமந்தார் என தான் படைத்த மக்கள் சந்திக்கும் துன்பங்களைக் கண்டு கடவுள் கலங்கி விடவில்லை.
அதைப்போலவே கடலில் கொந்தளித்த புயலில் ஆண்டவரே நாங்கள் சாகப்போகின்றோம் என்று சீடர்கள் துவண்ட போதிலும் கடவுள் அவர்களை காப்பாற்றுகின்றார். ஏசாயா 41: 10 “அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்” என்கிறார்.

படகு, புயல் காற்றால் அலைக்களிக்கப்பட்டு படகே முழ்கும் நிலைக்குச் சென்றாலும் இயேசு எதுவும் நடக்காதது போல தலையணைவைத்து உறங்குகின்றார். நாமும் நம்முடைய அன்றாட வாழ்வில் புயல் போன்ற பிரட்சனைகள் வரும் போது ஆண்டவரைப்போல நம்பிக்கையில் உயர்ந்து அசையாமல் இருப்போம். புயலும் பூந்தென்றலாய் மாறிவிடும்.

4. புயல்களுக்கு மத்தியில் இருக்கும்போது கடவுளை அழைப்போம்
திருப்பாடல் 86:7 “என் துன்ப நாளில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; நீரும் எனக்குப் பதிலளிப்பீர்” என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப சீடர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு புயலோடு போராடுகின்றனர். எப்பொழுது தங்களால் தங்களையே காப்பாற்ற முடியாது என்ற சிந்தனை வந்த போது ஆண்டவரை அழைத்து அவரிடம் அடைக்கலம் புகுகின்றனர். புயலும், காற்றும் அவருக்கு கீழ்படிகின்றன. எனவே துன்ப நேரங்களில் ஆண்டவரை அழைப்போம். கூப்பிட்ட குரலுக்கு நம்மை காப்பவரும் அவரே. திருப்பாடல் 118:6 “ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்?” என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப துன்ப நேரங்களில் ஆண்டவரை அழைப்போம் நம்முடைய புயல்களை பூந்தென்றலாய் மாற்றுவோம்.

5. நாம் சந்திக்கும் புயல்களில் நம்மோடு இருப்பவர்களை தேற்றுவோம்.
யோபு 7 : 1 “மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே?” என்று யோபு கூறுவதை நாம் பார்க்கின்றோம். ஒன்றல்ல இரண்டல்ல ஒவ்வொரு நிமிடமும் யோபுவுக்கு அவருடைய வாழ்வு போரட்டமாய் இருந்தது. ஆனால் தான் துன்பத்தால் போரடினாலும் தன்னோடு இருப்பவர்களை திடப்படுத்துகின்றார். அவருடைய மனைவி யோபுவிடம், "இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே?" என்றாள் யோபு 2 : 9. அதற்கு யோபு "நீ அறிவற்ற பெண்போல் பேசுகிறாய்! நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமையைப் பெறக்கூடாது?" என்று கூறி தன்னுடைய துன்பத்திலும் தன்னோடு இருப்பவர்களை திடப்படுத்துகின்றார்.

அன்புக்குரியவர்களே நம்முடைய வாழ்வில் துன்பங்களை சந்திக்கும் போது நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு நம்மால் ஆறுதல் கூறமுடிகின்றதா?. சீடர்கள் நாங்கள் சாகப்போகின்றோம் என்று கேட்கும் போது ஆண்டவரும் படகில் தான் இருக்கின்றார். சீடர்கள் புயலில் இறக்கின்றார்கள் என்றால் இயேசுவும் படகில் தான் இருக்கின்றார். அவருக்கும் சாவு உண்டு. ஆனால் புயல் காற்றால் சிக்குண்டவர்களைப் பார்த்து
“இயேசு, "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டு அவர்களை திடப்படுத்தகின்றார். புயலும் காற்றும் இவருக்கு கீழ்படிந்து பேரமைதி உண்டாகியது. புயல் பூந்தென்றலாய் மாறியது.

6. எந்தவொரு சூழ்நிலையிலும் எதாவது கற்றுக்கொள்ள தயாராக இருங்கள்.
மனிதர்களே நீங்கள் விதை (நம்பிக்கை என்னும்) விதையை விதைத்துக் கொண்டே இருங்கள். முளைத்தால் அது மரம்; இல்லாவிட்டால் அது மண்ணுக்கு உரம் என்று கூறுவார்கள். ஆக சூழ்நிலைகளைக் கண்டு பழிப்பதைக் காட்டிலும் அதிலிருந்து நம் வாழ்க்கைகு தேவையான பாடங்களை நாம் கற்றுக்கொள்வது சிறந்தது. இன்று இறைவார்த்தையைக் கேட்ட நான் என்வாழ்விற்றகு எதை கற்றுக்கொள்ள போகின்றேன். தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் 4: 11 “எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்கக் கற்றுக் கொண்டுள்ளேன். எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்”.

மீனவர்களான சீடர்கள் இன்று கலிலேயக் கடலின் புயலும், பெருங்காற்றும் அவர்களை பயத்திலும், கலக்கத்ததிலும் இட்டுச் சென்றாலும் தங்களுடைய உடல் உழைப்பு மட்டும் போதாது கடவுளின் உடனிருப்பும், அவரை தக்க நேரத்தில் அழைக்கவும் சீடர்கள் கற்றுக் கொண்டனர். ஆண்டவரின் உடனிருப்பை ஒவ்வொரு நொடியும் உணர்ந்து கொள்வோம். வாழ்வில் வரும் புயல்களை பூந்தென்றலாய் மற்று இறைவனை அழைப்போம்.