சுதந்திர தின விழா மற்றும் புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா மண்ணக வாழ்வை விண்ணக வாழ்வாக்கிய பாவமற்றவரின் நிலைதிருவெளிப்பாடு 11:19;12:1-6,10 1கொரிந்தியர் 15:20:26 லூக்கா 1:39-56
இறைஇயேசுவில் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே! இன்று நமது தாய் திருநாடு சுதந்திரம் அடைந்து தனது 75வது விழாவைச் சிறப்பிக்கின்றது. அத்தோடு நம்முடைய திருஅவை அன்னை மரியா, உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் என்பதை, பெருவிழாவாக நாம் இன்று சிறப்பிக்கின்றோம். இந்த இரண்டு நிகழ்வுகளுமே மனித குலத்தின் விடுதலையைப் போற்றுகின்றது.
இந்திய தேசத்தின் விடுதலை
முதலாவதாக இந்திய சுதந்திரம் என்பது இப்போதைக்குச் சாத்தியமல்ல என்ற அவநம்பிக்கையில் நாடே துவண்டு கிடந்த தருணத்தில் “என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்ற உணர்ச்சி மிக்க பாடல் வரிகளும், ‘அஞ்சி அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாதப் பொருள் இல்லை அவனியிலே’என்று சொந்த நாட்டிலே அடிமைகளாக வாழ்ந்த மக்களுக்கு விடுதலையை நோக்கி என்ற விருது வாக்கோடு ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்தச் சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என்ற பாரதியின் சுதந்திர உணர்வுப் பாடல்கள் விடுதலை காற்றை சுவாசிக்கச் செய்தது. இந்த இந்திய சுதந்திரத்திற்கு இந்திய தேசியக் கொடி, இந்திய தேசத் தலைவர்கள், இவர்களின் தியாகம் நமக்கு அடிமையிலிருந்து விடுதலையை பெற்றுக்கொடுத்தது. இரத்தம் சிந்தி பெற்ற நமது சுதந்திரத்தையும், தியாகிகளையும் நினைத்துப் பார்க்கும் நாளாக இன்று அமைகின்றது.
யூதேயா தேசத்தின் விடுதலை
இரண்டாவதாக 2000 ஆண்டுகளுக்கு முன்பாக இதே அடிமைத்தனம் யூதேயா நாடு முழுவதும் இருந்தது. இந்த அடிமைதனத்திலிருந்து சாதாரண ஏழைகுடும்பத்தில் பிறந்த பெண்ணின் சுதந்திர பாடல் மக்களுக்கு விடுதலை காற்றை சுவாசிக்கச் செய்தது. "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. 48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். 49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். 50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். 51 அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். 52 வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். 53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்” என்று விடுதலைக்காண பாடல் பெண்குலத்தையே மேன்மைபடுத்தியது. அடங்கிங் கிடந்த பெண் சமுதாயம் விடுதலையை நோக்கி நகர ஆரம்பித்தது.
பாவ வாழ்வில் இருந்து விடுதலை
முன்றாவதாக பாவம் என்ற அடிமைதனத்தில் வாழ்ந்தவர்களுக்கு விடுதலையும் விண்ணக வீட்டையும் கடவுள் பொக்கிஷமாக கொடுத்த நாள் தான் இது. எனவே இந்தியர்களே, திரு அவையின் அன்பு பிள்ளைகளே உங்கள் அனைவருக்கும் பெருவிழா நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
புனித மரியாவின் விண்ணேற்ப்பு நிகழ்வுகள்
பிரியமானவர்களே அன்னை மரியாவின் விண்ணேற்பை பற்றி பல கதைகள் உண்டு. உதாரணமாக அன்னை மரியாவின் இறுதிக்காலம் நெருங்கியதை அறிந்த திருத்தூதர்கள் எருசலேமுக்கு சென்று, அவரிடம் ஆசி பெற்றனர். இதையடுத்து, மரணம் அடைந்த அன்னையின் உடலை, திருத்தூதர்கள் யூத முறைப்படி கல்லறையில் அடக்கம் செய்தனர். வழக்கம் போல தாமதமாக எருசலேம் சென்ற தோமையார் அன்னை மரியாவின் கல்லறையை பார்க்க விரும்பி அன்னையின் கல்லறையைத் திறந்தபோது, அவரது உடல் அங்கு இல்லை. பின்பு திருத்தூதர் தோமாவுக்கு காட்சி அளித்த அன்னை மரியா, தாம் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்தில் இருப்பதை உறுதி செய்தார். இந்நிகழ்வையே இந்த பெருவிழா சுட்டிக் காட்டுகிறது.
நமது திரு அவையில் மரியாவைப் பற்றி உள்ள விசுவாச கோட்பாடுகள்
விசுவாச கோட்பாடுகள் என்பது நம்முடைய விசுவாசத்தை கட்டிக்காக்க, தெளிவுப்படுத்த திருச்சபை வெளியிடுகிற மறை உண்மைகள் தான் விசுவாச கோட்பாடுகளாக அறிவிக்கப்படுகின்றது. அதிலே அன்னை மரியாவிற்கு நமது திருஅவையிலே நான்கு முக்கிய விசுவாச கோட்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. அவை என்ன?
ஜனவரி 1- ஆம் தேதி நாம் கொண்டாடுகின்ற அன்னை மரியாள் இறைவனின் தாய் என்ற விழா, ஆகஸ்ட் 15 தேதி இன்று நாம் கொண்டாடுகின்ற அன்னை மரியாளுடைய விண்ணேற்பு பெருவிழா,
டிசம்பர் 8 –ஆம் தேதி நாம் கொண்டாடுகின்ற அமலோற்பவ அன்னை பெருவிழா மற்றும்
மரியாள் முக்காலத்திற்கும் எப்பொழுதும் கன்னி என்ற கோட்பாடுகள்.
மற்ற மூன்று விசுவாச கோட்பாடுகளுக்கும் இந்த விண்ணேற்பு விசுவாச கோட்பாடுக்கும் சற்று வித்தியாசம் உண்டு. கி.பி 431 –ல் எபேசு திருச்சங்கம் கூடி, மக்களின் நம்பிக்கையை வலுவூட்டும் வகையிலே இயேசு 100% சதவீத கடவுள், 100% மனிதன் என்றும் அன்னை மரியாள் இறைவனின் தாய் என்றும் மக்களுடைய விசுவாசத்தை கட்டிக்காப்பதற்கு இந்த முதல் விசுவாச கோட்பாட்டை வெளியிட்டது. அன்னை மரியாள் லூர்து நகரிலே பெர்னதெத்திற்கு காட்சி கொடுத்தபொழுது, அவருடைய திருவாயினின்று வெளிப்படுத்திய உண்மை, “நாமே அமல உற்பவம்”. திருத்தந்தை 9-ம் பத்திநாதர் 1854-ம் ஆண்டு மக்களுடைய நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான இந்த விசுவாச கோட்பாட்டை அறிவித்தார். கி.பி 649–ல் திருத்தந்தை முதலாம் மார்ட்டின் அவர்களால் வலியுறுத்தப்பட்டு, வெளியிடப்பட்டதுதான், கன்னி மரியாள் எப்பொழுதும், முக்காலத்திற்கும் கன்னியாக இருக்கிறார் என்ற விசுவாச கோட்பாடு.
அன்னை மரியாளுடைய விண்ணேற்பு பெருவிழா பின்னனி
ஆனால் அன்னை மரியாளுடைய விண்ணேற்பு கோட்பாடு மட்டும் சற்று வித்தியாசமான வரலாற்று பின்னனி கொண்டது. முதலில் உள்ள மூன்று விசுவாச கோட்பாடுகள் திருஅவையின் முயற்சியால், திருத்தந்தையர்களின் முயற்சியால் மக்களின் நம்பிக்கை வாழ்வை கட்டியெழுப்ப உருவாக்கப்பட்ட்து. அன்னை மரியாளுடைய விண்ணேற்பு மறைக்கோட்பாடு மக்களின் நம்பிக்கையில் இருந்து உருவாகியது. அப்போஸ்தலர்களுடைய காலத்திலிருந்தே இவ்விழா கொண்டாடப்பட்டு வந்ததாக மரியில் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். கி.பி.370ஆம் ஆண்டு அந்தியோக்கு நகரில், ‘மரியாவின் நினைவு நாள்’ சிறப்பிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. 400ல் எருசலேமுக்கு பரவிய இந்த விழா, 500ஆம் ஆண்டுக்கு முன்பே பாலஸ்தீன் முழுவதும் ஆகஸ்ட் 15ந்தேதி கொண்டாடப்பட்டது. ‘மரியா துயில் கொண்ட’ விழா என்ற பெயரில் 6ஆம் நூற்றாண்டில் கீழைத் திருச்சபையில் சிறப்பிக்கப்பட்டது. அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலைத் திருச்சபைக்கு பரவிய இந்த திருநாள், ‘விண்ணகப் பிறப்பு விழா’ என்று பெயர் பெற்றது. 580களில் பைசாந்திய பேரரசு முழுவதும், ஆகஸ்ட் 15ந்தேதி மரியாவின் விண்ணகப் பிறப்பு விழாவை கொண்டாட பேரரசர் மவுரிஸ் ஏற்பாடு செய்தார். 7ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய புனித வில்லிபிரார்ட் நாள்காட்டியில், மரியாவின் விண்ணகப் பிறப்பு விழா காணப்படுகிறது. 8ஆம் நூற்றாண்டில் மரியாவின் விண்ணேற்பு விழா என்று பெயர் பெற்ற இந்த திருநாளை, திருத்தந்தை முதலாம் ஆத்ரியன் திருச்சபை முழுவதற்கும் அறிமுகம் செய்தார். 799ல் கூடிய சால்ஸ்பர்க் சங்கத்தின் 10வது விதியிலும் இந்த விழா இடம் பிடித்துள்ளது. 847ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித 4ம் லியோ, மரியாவின் விண்ணேற்பு விழாவிற்கான எண்கிழமையை திருவழிபாட்டில் இணைத்தார். திருத்தந்தை 12-ஆம் பத்திநாதரால் 1950-ஆம் ஆண்டுதான் முழுமையாக இது மறையுண்மையாக திரு அவையில் அறிவிக்கப்பட்டது.
விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட விவிலிய மாந்தர்கள்
தொடக்க நூல் 5-வது அதிகாரத்தில் 24-ல் நாம் வாசிக்கிறோம். “ஏனோக் என்ற ஒரு நல்ல மனிதர் இருந்தார். அவர் கடவுளோடு நடந்து கொண்டிருந்தார், பின்பு அவரைக் காணவில்லை. கடவுள் அவரை எடுத்துக்கொண்டார்” என்று வாசிக்கிறோம். மேலும் 2 அரசர்கள் புத்தகம் 2:11-ல் “எலியாவும், எலிசாவும் உரையாடிக் கொண்டிருந்தபொழுது, நெருப்புத் தேரும், குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களை பிரிக்க, எலியா சுழல் காற்றில் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறார்”.
மனிதர்கள் ஏன் கடவுளால் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றனர்?
நல்லவர்கள் இறப்பதில்லை; கடவுளால் உயிரோடு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவியது. அதையொட்டியே விவிலியத்தை சற்று கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால், கடவுளால் விண்ணுலகிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அனைவரும் நீதியுள்ள மனிதர்களாக, கடவுளுக்கு உகர்ந்தவர்களாக வாழ்ந்தனர். எனவே கடவுள் அவர்களுக்குத் தந்த பரிசு தான் விண்ணுலக மாட்சி. அப்படியானால் மரியாள் நல்லவராக, கடவுளுக்கு உகந்தவராக, பாவக்கறையின்றி பிறந்ததால் நிச்சயம் அவரும் உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் நம்முடைய திருச்சபை தந்தையர்கள் கூறுவதுபோல ஆண்டவர் இயேசுவும் இறந்தார் எனவே அன்னை மரியாவும் இறந்திருக்க வேண்டும். இறந்த இவர் உடலோடும் ஆன்மாவோடும் தனது மகன் கிறிஸ்துவால் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்
புனித கன்னி மரியாள் ஏன் விண்ணுலகிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்?
01. என்னைப் பொருத்தவரையில் அன்னை மரியாள் இறந்திருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.
ஆண்டவர் இயேசு இறந்தார் என்றால் வார்த்தையான இறைவன் மண்ணுலகிற்கு இறங்கி வருகின்றார். 100 சதவிகிதம் மனிதனாகவே வாழ்கின்றார். மனிதர்கள் சந்திக்கின்ற எல்லா சோதனைகளையும் சந்திக்கின்றார். உதாரணமாக எபிரேயர் 4:15 “எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் அவர் பாவம் செய்யாதவர்”. பாவம் செய்யாதவரை கடவுள் பாவ நிலையை ஏற்க வைக்கின்றார். 1 கொரி 5:21 “நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்”. கடவுளின் சாயலை இழந்த மனித குலத்தை மீட்டெடுக்க கடவுளே பாவப்பட்ட மனித தன்மையை ஏற்க பாவம் அறியாத பெண்ணிடமிருந்து பிறக்கின்றார். லூக்கா 1:35-ல் “வானதூதர் மரியாவிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்” என்கிறார். அதே வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 28 "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார். அருள்மிகப் பெற்றவருக்கு இருள் என்ற சாவுக்கு இடமில்லை. எனவே அன்னை மரியாள் இறவாமலே விண்ணகப் பிறப்பை அடைந்திருக்க கூடும்
02. பாவம் செய்பவர்கள் இறக்க வேண்டும்; பாவம் செய்யாதவர்கள் எப்படி இறக்க முடியும்?
உரோமையர் 6:12 “ஆகவே, உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய உங்கள் உடலின்மீது ஆட்சி செலுத்தவிடாதீர்கள்.14 பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்தக் கூடாது; ஏனெனில் நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல; மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்”. பாவம் செய்பவர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்; ஆனால் பாவம் செய்யாதவர்கள் கடவுள் தரும் அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள். அன்னை மரியாள் கடவுளின் ஆட்சிக்கு உட்பட்டவர் எனவே இறப்பு சாத்தியமில்லை. மேலும் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 6: 23 -ல் “பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு; மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு”. ஆக பாவம் செய்தவர்களுக்கு மரணம் உண்டு; ஆனால் எந்தவித பழிபவாமுமே அறியாத மரியாளுக்கு நிச்சயம் மரணம் நிகழ வாய்ப்புகள் இல்லை. எனவே மரணிக்காமலே விண்ணேற்றம் அடைந்திருக்க முடியும்.
03. கடவுளின் அருளை பெற்றுக்கொண்டவர்கள் மரணத்தின் மீது வெற்றிகொண்டவர்கள்
கடவுளின் அருளை கண்டடைந்தவர்களுக்கு ஆண்டவரோடு இணைந்து வாழும், நிலைவாழ்வு பரிசாக கிடைக்கின்றது. அன்னை மரியாவுக்கு கடவுளின் தூதர் கட்சியளித்த போது “மாரியா அஞ்ச வேண்டாம் கடவுளின் அருளை கண்டடைந்துள்ளீர்” என்றார். கடவுளின் அருளை கண்டடைந்த மரியாவுக்கு மண்ணக இறப்பு என்பது இல்லை. எனவே விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். உரோமையர் 5:21 “சாவின் வழியாய்ப் பாவம் ஆட்சி செலுத்தியதுபோல், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் அருள் ஆட்சி செய்கிறது; அந்த அருள்தான் மனிதர்களைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கி, நிலைவாழ்வு பெற வழிவகுக்கிறது” அன்னை மரியாள் கடவுளின் அருளை கண்டடைந்தவர். எனவே கடவுள் அவரை உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொண்டார்.
04. ஜென்ம பாவத்தை வென்றவர் ஜென்ம இறப்பையும் வென்றிருக்க வேண்டும்
கடவுள் தன்னுடைய மகனை இவ்வுலகில் பிறக்கவைக்க வாய்ப்புகள் தேடிய பொழுது மண்ணுலகில் பிறந்த அனைவருமே ஆதாம், ஏவால் செய்த ஜென்ம பாவத்தில் பிறந்தவர்களாக இருக்கின்றனர். கடவுள் மகனாக பிறக்க வேண்டுமென்றால் பாவிகள் வழியாக பிறக்க இயலாது. எனவே அன்னை மரியாவை கடவுள் தேர்ந்தெடுத்து பாவம் அறியாதவராக அவரை பிறக்க வைக்கின்றார். அதனால்த்தான் அன்னை மரியாவை அமல உற்பவி என்று நாம் அழைக்கின்றோம். ஆக எந்தவித பாவமும் அறியாத அன்னை கடவுளின் மகனை பெற்றெடுக்க கடவுளால் தேர்ந்து கொள்ளப்படுகின்றார். பாவம் இல்லாத பெண் வழியாக கடவுள் மனிதராகின்றார். எனவே பாவம் செய்தவர்களுக்கு மரணம் நிச்சயம் என்ற சூழலில் பாவமே அறியாதவருக்கு நிச்சயம் மரணம் நிகழ வாய்ப்புகள் குறைவு. ஜென்ம பாவமில்லாமல் பிறந்த அன்னைக்கு ஜென்ம இறப்பிற்கு வாய்ப்பு இல்லை. எனவே கடவுளால் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் என்றால் அது மிகையாகாது. அதுவே உண்மையாகும்.
இந்த உண்மையை அறிந்த திருத்தந்தை 12ம் பயஸ் (பத்திநாதர்) அவர்கள், 1950ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி Munificentissimus Deus எனப்படும் திருத்தூது கொள்கை விளக்கத்தின் வழியாக, மரியாள் உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என விசுவாசப் பேருண்மையாக அறிவித்தார்.
சுதந்திர விழாவும் மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவும் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?
மரியாவின் விண்ணேற்பு என்ற வார்த்தை வழியாக இதன் பொருளை உணர்ந்துகொள்வோமா!
01. வி – விடுதலையை நோக்கி பயணிப்போம்.
அன்புக்குரியவர்களே ஆகஸ்டு 15 நம் அனைவருக்கும் மிகமுக்கியமான நாள். அன்னை மரியாவின் விண்ணேற்பு, அந்நிய சக்திகளிடமிருந்து விடுதலை பெற்ற நாள் என்று இவ்விழாவை நாம் சிறப்பிக்கின்றோம். இரத்தம் சிந்தி பெற்ற நமது நாட்டின் விடுதலை இன்று கயவர்களின் கையில் சிக்கியுள்ளது. மக்களின் முன்னேற்றத்தை மறந்து “தான்” என்ற சுயநல முன்னேற்றத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் உழைக்கின்றனர். நாடும் நாட்டு மக்களும் கடனில் சிக்கி தவிக்கும் மத்தியில் எல்லா அரசியல் தலைவர்களும் கோடிகளில் வாழ்கின்றனர். 75 ஆண்டுகள் நகர்ந்தும் இன்னும் சுதந்திரமாக யாரும் நடமாட முடியாத சூழலில் நாம் வாழ்கின்றோம்.
உதாரணமாக இன்றைய இந்திய அரசியல் தலைவர்கள் இந்திய மக்களை சந்திக்க பலத்த பாதுகாப்போடும், புல்லட் புருப் உடைகள், புல்லட் புருப் வாகனங்களில் வலம் வருகின்றனர். உயிர் வாழும் அரசியல் தலைவர்கள் சுதந்திர இந்தியாவில் சுதந்திரம் இல்லாமல் உலா வருகின்றனர். இறந்து போன தலைவர்கள் சிலைகளில் கூட பத்திரமாக இருக்க முடிவதில்லை. சிலை உடைப்பு, செருப்பு மாலை என்ற பெயரில் அவர்களின் சிலைகளுக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு, கம்பி வேலி என்று சிலை கூட சுதந்திரமாக இல்லாத சூழலில் நமது இந்தியா சென்று கொண்டிருக்கின்றது. பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், என அனைத்து சுதந்திரத்தையும் இழந்து நிற்கின்றோம். சுதந்திர போரட்ட வீரர்களின் தியாகம், அவர்களது இரத்தம் மதிப்பிழந்து உள்ளது. இத்தருணத்தில் அடிமைத்தனத்தை உணர்ந்த அன்னை மரியாளைப் போல நாமும் நமது விடுதலைக்காக உழைக்க முற்படுவோம். இதுமுதல் எல்லாத் தலைமுறையும் என்னை பேறுபெற்றவர் என அழைக்கட்டும் என கூறியது போல இந்த நாள் முதல் எல்லா மக்களும் உண்மையான விடுதலையை பெற்று வாழட்டும் என சபதம் எடுப்போம். குறிப்பாக விடுதலையை நோக்கிய பயணத்தில் முதலில் நம்மையும், நமது குடும்பத்தையும் ,நமது சமுதாயத்தையும் சுதந்திர காற்றை சுவாசிக்கச் செய்ய உழைப்போம்.
02. விண்: விண்ணக வாழ்வை அடைய மண்ணகத்திலே நம்மை தயார் செய்வோம்
இலட்சியம் உள்ள மனிதன் நிச்சயம் வெற்றியடைவான் என்ற கூற்றுக்கு ஏற்ப நமது இலட்சியம் விண்ணகத்தை நோக்கியே இருக்கட்டும். மண்ணக வாழ்வு என்பது நிரந்தரமல்ல. நிரந்தரமற்ற வாழ்வு எனத் தெரிந்தும் அதை மகிழ்ச்சியாக வாழ நாம் அன்றாடம் உழைக்கின்றோம். ஆனால் விண்ணகம் நமக்கு நிரந்தரமானது. நிரந்தரமான வாழ்வை நமக்கு ஏற்றார் போல அமைத்துக்கொள்ள நாம் எடுக்கும் முயற்ச்சிகள் என்ன? கிரேக்க தத்துவஞானி பிளேட்டே கூறுவார் விண்ணகம் என்பது உண்மையானது; மண்ணகம் என்பது விண்ணகத்தின் ஜெராக்ஸ் காப்பி. எனவே விண்ணக வாழ்வை அடைவதற்கு நம்மையே நாம் ஆயத்தம் செய்வோம். 1 பேதுரு 5:6-ல் “கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்”. அன்னை மரியாள் தன்னையே தாழ்த்தி, கடவுளின் வார்த்தையை அன்றாடம் வாழ்வாக்கினார். விண்ணக வாழ்வை மண்ணிலே வாழத் தொடங்கினார். எனவே கடவுள் அவரை ஏற்ற காலத்தில் விண்ணகத்திற்கு எடுத்துக்கொண்டார். ஆக தாழ்ச்சி என்ற புண்ணியத்தை கடவுளின் அருளால் மண்ணிலே வாழ்வாக்குவோம்! விண்ணகத்தை உரிமையாக்கிக் கொள்வோம்.
03. னே – (நே) நேர்மறையான சிந்தனையோடு வாழ்வோம்
எண்ணங்கள் நம் வாழ்வை அழகுபடுத்தும் வண்ணங்கள் என்று கூறுவார்கள். மனித இயல்பு வழக்கமாக எதிர்மறையாக சிந்திக்கக்கூடியது. உதாரணமாக எதை செய்யக்கூடாது எனச் சொல்கின்றோமே அதைத்தான் மனது விரும்பும். அதை அடையும் வரை மனது போராடிக் கொண்டிருக்கும். ஆதாம் – ஏவாள் – விலக்கப்பட்ட கனி. கடவுள் கூறுவதற்கு முன்பு அந்த மரம் அங்கேதான் இருந்தது. கனியும் இருந்தது. ஆனால் அதன் மீது ஆசை வரவில்லை. ஆனால் எப்போது அந்த மரத்தை காண்பித்து அதை உண்ணாதே என்று சொன்னபோது அதன்மீது ஆசை வருகின்றது. பறித்து உண்கின்றனர். அதற்கான தண்டணையை பெற்றுக்கொள்கின்றனர். இப்படித்தான் எதிர்மறை எண்ணங்கள் நமது வாழ்வை அன்றாடம் சிரழித்து வருகின்றது.
அன்னை மரியாவுக்கும் கடவுளின் தூதர் நீ கருவுற்று ஒரு மகனை பெற்றெடுப்பாய் என்று கூறியவுடன் எதிர்மறை எண்ணம் அவரையும் தாக்குகின்றது. “இது எங்கணம் நிகழும். நான் கன்னியாயிற்றே”. இந்த எதிர்மறை எண்ணத்தை “கடவுளால் எல்லாம் நிகழும்” என்ற கடவுளின் வார்த்தையால் நேர்மறையாக மாற்றுகின்றார். கடவுளின் தாயாக உயர்கின்றார். இன்று விண்ணக வீட்டையும் தனதாக்குகின்றார். அரசர் தாவீதின் வாழ்விழும் எப்படி கோலியாத்தை வெல்லமுடியும் என்ற எதிர்மறையான சிந்தனை வந்தபோது கடவுளின் கிருபையால் நேர்மறையான எண்ணத்தோடு செல்கின்றார். எதிரியைக் கொன்று அரசராகின்றார். நம்முடைய வாழ்விழும் உன்னால் முடியாது… இதற்கு நீ தகுதியில்லாதவன்… எதற்கும் உதவாதவன்… போன்ற எதிர்மறை எண்ணங்களால் அன்றாடம் சோதிக்கப்படுகின்றோம்.
இதைத்தான் கூறுவார்கள் நேர்மறைசிந்தனை நம் காரில் இருக்கும் ஆக்சிலேட்டர் போன்றது. எதிர்மறை சிந்தனை நம் காரில் இருக்கும் பிரேக் போன்றது. ஆக்சிலேட்டர் பிரேக் இரண்டுமே முக்கியமானது என்றாலும் தடங்கலில்லா பாதையில் ஆக்சிலேட்டர்தான் 90% சதவீதத்திற்கு மேல் பயன்படுத்தப்படும். தடங்கலுள்ள பாதையில் கூட பிரேக்கை விட ஆக்ஸிலேட்டர் அதிகமாக பயன்படுத்தினால்தான் கார் முன்னேறிச்செல்லும். ஆம் பிரியமானவர்களே மனித இயல்பு எதிர்மறையாக சிந்திக்கக்கூடியது. அதனால் நேர்மறையாக சிந்திக்க அடிக்கடி பயிற்சி எடுத்துக்கொள்ளும் போது நாம் வெற்றியை நோக்கி பயணிக்க முடியும்.
04. னேற்- (நேர்) நேர்மையான வாழ்க்கையை வாழ்வோம்
அன்புக்குரியவர்களே இன்றைய சமுதாயத்தில் ஒழுக்கம், நேர்மை இவற்றைக் காண்பது அரிதாகவே உள்ளது. ஒழுக்கம், நேர்மை உடையவர்கள் பரிதாபத்திற்குரியவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறுவதில்லை. மாறாக வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள். பணம் கொடுத்தால் பொய் சாட்சி சொல்வது, பிறர் சொத்தை அபகரிக்க நினைப்பது, ஒரு பொய்யையே பலமுறை சொல்லி அதை உண்மையாக்குவது, சுயநலத்தோடு வாழ்வது என்ற சித்தாந்தத்தில் நமது வாழ்வு சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் நேர்மையானவர்கள் சிலராகி, நேர்மையற்றவர்கள் பலராகி விட்டதுதான். உதாரணமாக பெற்றோர்களிடம் நேர்மை இருந்தால் தான் பிள்ளைகளிடமும் நேர்மை இருக்கும். ஆசிரியர்களிடம் நேர்மை இருந்தால் தான் மாணவர்களிடமும் நேர்மை இருக்கும். வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதற்கு நேர்மை அவசியம். உதாரணமாக லூக்காஸ் 19 : 17 தலைவர் அவரிடம், "நன்று, நன்று நம்பிக்கைக்கு உரிய நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நேர்மைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்" என்று கூறி தலைவர் அவரை உயர்த்துகின்றார். அதைப்போலவே அன்னை மரியாவும், சூசையும் நேர்மையான பெற்றோராக வாழ்ந்தனர். இயேசுவும் நேர்மைக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தார். எனவே நாமும், நமது பிள்ளைகளையும் நேர்மையாக வாழ தயார்படுத்துவோம். உடலும், மனதும் தூய்மையாக இருப்பின் நாம் நினைக்கின்ற எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் வலிமையும், வழியும் தானாக பிறக்கும். இதுவே நேர்மையானவர்களுக்கான பண்பு ஆகும். அன்னை மரியாவின் நேர்மை அவரை விண்ணகத்திற்கு உயர்த்தியது.
05. பு: மண்ணகத்தில் புண்ணியங்களை சேர்த்துக்கொள்வோம்.
மண்ணகத்தில் நாம் செய்யும் புண்ணியங்கள் விண்ணகத்திற்கான நுழைவாயில். லூக்கா நற்செய்தி 16: 19-31 செல்வரும் இலசரும் என்ற நிகழ்வை நாம் வாசிக்கின்றோம். இருவருமே மண்ணகத்தில் வாழ்ந்தவர்கள் தான். ஆனால் புண்ணியங்களை சேர்க்க மறந்தவன் தீயிலே வதைபடுகின்றான். உயிரோடு வாழும் போது புண்ணியங்களை சேர்க்க மறந்து விட்டால் விண்ணகத்திற்கான வழியையும் மறந்துவிடக் கூடும். இந்த கொரோனா காலத்தில் நாம் நிறைய மனிதர்களை இழந்து விட்டோம். புண்ணிய வாழ்வு வாழ்ந்தவர்கள் நிச்சயம் விண்ணகத்தை உரிமையாக்கி இருப்பார்கள். நாம் உயிரோடு இருப்பதற்கு காரணம் நம்முடைய புண்ணிய வாழ்வு விண்ணகத்திற்கு போதாது. எனவேதான் கடவுள் நம்மை விட்டு வைத்திருக்கின்றார். எனவே நம்முடைய புண்ணியங்களை விரல் விட்டு எண்ண முயற்ச்சிப்போம். உதாரணமாக புனித அன்னாவும் - புனித ஜோக்கிமும் செய்த புண்ணியங்கள் கடவுளின் பார்வையில் உன்னதமாக கருதப்பட்டது. எனவே அன்னை மரியாள் ஜென்ம பாவமில்லாமல் பிறக்கலானார். இவர்களுடைய புண்ணியவாழ்வு அன்னை மரியாவை விண்ணுலகிற்கு இட்டுச்சென்றது. பெற்றோர்களே உங்களது புண்ணிய வாழ்வு உங்களது குடும்பங்களை உயர்த்தட்டும். இறந்த பிறகு புண்ணியங்களை நம்மால் சேர்க்க முடியாது; எனவே உயிரோடு இருக்கும் போதே புண்ணிய வாழ்விற்கு நம்மை நெறிபடுத்துவோம்.
அன்புக்குரியவர்களே அன்னை மரியாவின் விண்ணேற்பு நாளில்
வி – விடுதலையை நோக்கி பயணிப்போம் என்றும்
விண்: விண்ணக வாழ்வை அடைய மண்ணகத்திலே நம்மை தயார்செய்வோம் என்றும்
னே – (நே) நேர்மறையான சிந்தனையோடு வாழ்வோம் என்றும்
னேற்- (நேர்) நேர்மையான வாழ்க்கையை வாழ்வோம் என்றும்
பு: மண்ணகத்தில் புண்ணியங்களை சேர்த்துக்கொள்வோம் என்றும் முடிவு எடுப்போம். விண்ணகத்தை உரிமையாக்கிகொள்வோம்.
|