இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் முப்பதாம் ஞாயிறு

கிரிக்கெட் விளையாட்டும் பார்த்திமேயு என்ற பார்வையற்றவரும்

எரேமியா 31:7-9
எபிரேயர் 5:1 -6
மாற்கு 10: 46-52

இறை இயேசு கிறிஸ்துவில் மிகப் பிரியமான சகோதர சகோதரிகளே இன்று ஆண்டின் பொதுக்காலம் 30-ம் ஞாயிறை நாம் என்று சிறப்பிக்கின்றோம். இன்றைய நாளின் இறை வார்த்தையானது நம்முடைய கடந்த கால வாழ்க்கை, பாவம் நிறைந்த வாழ்க்கையை, நம்மை பற்றிய தவறான விமர்சனங்கள் போன்ற நமக்கு எதிராக இருக்கும் எல்லா சூழ்நிலைகளையும் தூக்கி எறிந்துவிட்டு, துணிவோடு ஆண்டவரிடம் எழுந்து வர நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

ஆம் பிரியமானவர்களே ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார், நம்மோடு இருந்து செயலாற்றுகிறார் என்பதை இன்றைய வார்த்தை வழிபாடு நமக்கு தெளிவுபடுத்துகின்றது. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் தன்னுடைய உடன்படிக்கையை புதுப்பிக்கக்கூடியதாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் கடவுள் தான் படைத்த மனிதர்களோடு “நானே உங்கள் கடவுள் நீங்கள் என்னுடைய மக்கள்” என்று கூறி பல கலக்கட்டங்களில் உடன்படிக்கையை ஏற்படுத்துகின்றார்.

உடன்படிக்கை மற்றும் ஓப்பந்தம்.
இன்றைய உலகிலே ஒப்பந்தம் உடன்படிக்கை இவை இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றது. ஒப்பந்தம் என்பது ஆங்கிலத்தில் காண்ட்ராக்ட் என்று சொல்வார்கள். உடன்படிக்கை என்பது கவனென்ட் என்று சொல்வார்கள். இன்றைய சூழலில் குடும்ப வாழ்க்கையாக இருந்தாலும் சரி அல்லது குருத்துவ வாழ்க்கையாக இருந்தாலும் சரி உடன்படிக்கையில் தொடங்கிய பலருடைய பயணம் ஒப்பந்தத்திலே முடிகின்றது. ஒப்பந்தம் என்பது வாணிப அடிப்படையிலானது; பணம் அடிப்படையிலானது. அதாவது உதாரணமாக ஒரு கட்டடம் கட்ட முடிவெடுத்து இன்ஜினியரை அழைத்து இந்த கட்டடம் கட்டி முடிப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்று அவரோடு சேர்ந்து ஒப்பந்தம் போட்டு அதில் கையெழுத்திட்டு அந்த கட்டிடம் முடிக்கின்ற வரை எனக்கும் அந்த இன்ஜினியருக்கும் வணிக ரீதியான உறவு ஏற்படும். இந்த உறவு கட்டிடம் கட்டி முடித்தவுடன் முறிந்துவிடும். உதாரணமாக நீங்கள் வீடு கட்டி இருப்பீர்கள். ஒரு 10 வருடம் கழித்து இப்பொழுது இன்ஜினியரிடம் சென்று ஐயா என்னுடைய வீடு ஓழுகுகின்றது. எனக்கு புது வீடு கட்டித் தாருங்கள் அல்லது நீங்கள் எனது பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்கமுடியுமா? அப்படியே கேட்டாலும் இது செல்லுபடியாகுமா? அவரும் பணத்தை திருப்பிதர முன்வருவாரா? நிச்சயம் இது இயலாத காரியம். இதுதான் ஒப்பந்தம்.

ஆனால் உடன்படிக்கை அப்படியன்று! தொடக்கத்தில் இருந்து கடைசி வரை உடன்படிக்கையானது உறுதியோடு இருக்கும். உடன்படிக்கை என்பது பிளவுபடாத தன்மையைக் கொண்டது. அது இரத்த உறவுக்கு இணையானது. இதனால்தான் உடன்படிக்கைகள் இரத்தத்தில் நிறைவு செய்யப்பட்டது என்று பழைய ஏற்பாட்டிலே நாம் நிறைய வாசிக்கின்றோம். இயேசு கிறிஸ்துவும் புதிய ஏற்பாட்டில் தன்னுடைய இறுதி இராவுணவின் போது அப்ப, இரச கிண்ணத்தை எடுத்து வானோக்கி கண்களை உயர்த்தி “இது எனது உடன்படிக்கையின் இரத்தம்” மாற் 14:24. என்று சொல்லி தன்னுடைய இரத்தத்தினால் உடன்படிக்கையை நிறைவு செய்கின்றார்.

கடவுள் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்டது ஒப்பந்தம் கிடையாது; மாறாக உடன்படிக்கையே. கடவுள், தன்னுடைய உடன்படிக்கையை மீறாதவர். ஆனால் மக்கள் கடவுளுக்கு எதிராக தவறுகள் செய்து கடவுளின் உடன்படிக்கைக்கு எதிராக மக்கள் செல்கின்ற பொழுது “நாம் நம்பத்தகாதவர்கள் எனினும் அவர் நம்பத்தகுந்தவர் ஏனெனில் தம்மையே மறுக்க இயலாதது என்று 2 திமோதி 2: 13 ல் கூறுகின்றார். இப்படி தான் படைத்த மக்களை தேடிச்சென்று இஸ்ராயேல் குடும்பங்கள் எல்லாவற்றுக்கும் நான் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள் என தன்னுடைய உடன்படிக்கையை இன்றைய முதல் வாசகத்ததில் புதுப்பிக்கின்றார். இந்த உடன்படிக்கையின் முன்னூதாரமாக கடவுளை நம்பியவர்கள் என்றுமே கைவிடப்படார் என்பதற்கு பார்வையற்ற பார்த்திமேயு நமக்கு சாட்சியாக விளங்குகின்றார்.

பிரியமானவர்களே கிரிக்கெட் விளையாட்டு இன்று உலக மக்கள் அனைவரையும் குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் இந்த கிரிக்கெட் விளையாட்டிற்கு அடிமைகளாக இருக்கின்றனர் என்று சொன்னால் அது நிதர்சன உண்மையாகும். இந்த விளையாட்டு நமக்கு நிறைய பாடங்களை குறிப்பாக 5 பாடங்களை கற்றுக் கொடுக்கின்றது என்று சொற்பொழிவாளர் சுகி சிவம் கூறுகின்றார். அதிலே மூன்று முக்கிய பாடங்கள் நமக்கும் பார்வையற்ற பார்த்திமேயுவிற்கும் பொருந்தும்.

1. ஒருவரை அழிக்க ஒன்று சேர்க்கும் கூட்டம்.
கிரிக்கெட் விளையாட்டு என்பது ஒரு மட்டையையும் ஒரு பந்தையும் கொண்டு 11 பேர் சேர்ந்து விளையாடும் விளையாட்டு. வழக்கமாக ஒருவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி பலசாலி என்று நிருபிக்க ஒருவனுக்கு ஒருவர் சண்டை போடுவது அல்லது ஒருவனுக்கு ஒருவர் விளையாடி வெற்றி பெருவது தான் சிறந்தது. ஒத்தைக்கு ஒத்தையாக நின்று விளையாடி ஜெயிக்க வேண்டும். ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் ஒருவர் பந்து போடுகின்றார். ஒருவர் பந்தை அடிக்கின்றார். ஒத்தைக்கு ஒத்தையாக விளையாடுகின்றனர். ஆனால் இந்த ஒரு பேட்ஸ் மேன் அல்லது பந்தை அடிப்பவரை ஒழிக்க 10 பேர் கொண்ட கும்பல் காத்திருக்கின்றது. இந்த பத்துபேரின் வேலையே ஒருவரை ஒழித்து கட்டுவதுதான். ஆக ஒருவன் வாழ்வில் முன்னேற வேண்டுமானால் தன்னோடு இருக்கும் 10 எதிரிகளை முறியடித்துதான் வெற்றிபெற முடியும். அதைப்போலவே பார்த்திமேயு என்ற பார்வையற்றவர் அன்றாடம் தன்னுடைய வயிற்று பிழைப்பிற்கு போராட வேண்டியிருந்திருக்கும். அதிலும் இவர் இயேசுவிடம் நான் மீண்டும் பார்வை பெறவேண்டும் என வேண்டுகின்றார். அப்படியானால் ஏதோவெரு காரணத்தினால் இவர் தன்னுடைய பார்வையை இழந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட மனிதர்கள் அன்றாட எதிரிகளை போராடி ஜெயிக்க வேண்டியிருக்கும்.

2. வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகமடா
இந்த விளையாட்டில் மற்றொரு முக்கியமான பக்கம் பங்கேற்பாளர்கள். ஒருவன் பந்தை எரிகிறான் ஒருவன் அதை அடிக்கின்றான். இவரை ஒழிக்க 10 பேர் கொண்ட கூட்டம் காத்திருக்கின்றது. ஆனால் இதையும் தாண்டி 10 ஆயிராம் பேர் அங்கு ஏன் வந்திருக்கின்றனர். தன் வேலைகளை விட்டுவிட்டு அடுத்தவரை ஒழிந்து போவதை பார்ப்பதற்கு சேர்ந்த கூட்டம் தான் அது. இந்த கூட்டத்தின் வேலை கத்திக்கொண்டு இருப்பது மட்டும்தான். 4 அடித்தாலும் கத்தும், 6 அடித்தாலும் கத்தும், பந்தை பிடித்தாலும் கத்தும், அவுட் ஆனாலும் கத்தும், எல்.பி.டபல்யூ ஆனாலும் கத்தும். இப்படி பேட்ஸ்மேனை அழிக்கவும், ஊக்கமுட்டவும் ஒரு கூட்டம் கத்திக்கொண்டே நம்மோடு சேர்ந்து பயணிக்கும். இந்த கூட்டத்தை தாண்டிதான் அவனது வெற்றி இருக்கும்.

இன்றைய உலகம் வாழ்ந்தாலும் ஏசும்; தாழ்ந்தலும் ஏசும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இக்கூற்று பார்த்திமேயுவின் வாழ்வில் உண்மையாகின்றது. இவரோ பார்வையற்றவர்; உதவுவதற்கு யாருமில்லாதவர்; பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்; இயேசுவின் புதுமைகளை கண் கூடாக கண்ட மக்கள் கூட்டம் இவரை அதட்டுகின்றது. கூட்டத்தில் இருந்த ஒருவர் கூட இவருக்கு பரிதாபபட இல்லாத சூழல். இதைக்கண்டவுடன் பார்த்திமேயு தானாக முன்வந்து தன்னை காப்பாற்ற தன்னால் மட்டுமே முடியும் என்ற மனநிலைக்கு வந்து ‘தாவீதின் மகனே எனக்கு இரங்கும்’ என்று உரக்க கத்துகின்றான். தன்னை சுற்றியுள்ளவர்களின் பேச்சுக்கு இடம் கொடுக்காமல் தன்னுடைய இலட்சியத்தில் உறுதியோடு இருந்து இறுதியில் வெற்றி பெருகின்றான்.


3. ஒரு உண்மையின் குரல் 1000 பொய்களின் குரலை அழித்துவிடும் ஒருவன் பந்தை எரிகின்றான். மற்றவன் அடிக்கின்றான். அடித்தவனுக்கு தெரியும் தான் அவுட் இல்லையென்று… மாறாக பந்தை எரிந்தவன் அவுட் என்று கத்துவான், அங்கு விளையாடிய 10 பேர் கூட்டம் அப்படியே அவுட் என்று கத்துவர் அத்தோடு மட்டுமல்ல, அந்த விளையாட்டை வேடிக்கை பார்க்க கூடிய பத்தாயிரம் பங்கேர்பாளர்கள் அனைவரும் சேர்ந்து ஒருவனை அழிக்க “அவுட்” “அவுட்” என்று கத்திக் கொண்டிருக்கும். பிரியமானவர்களே சற்று இந்த பேட்ஸ் மேன் நிலைமையை சற்று சிந்தித்துப் பார்ப்போம். அனைவருமே இவன் அவுட் என்று கத்திக் கொண்டிருக்கும் போது இவனது மனசாட்சி சொல்லும் தான் அவுட் இல்லையென்று. இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தில் ஒருவர் கூடவா நல்லவர் இல்லை என்று நினைக்கும் போது இந்த பத்தாயிரத்தில் ஒருவன் நல்லவன் அவரே “அம்பயர்” என்ற மனிதர் வந்து “நாட் அவுட்” என்று சொன்னவுடன் அனைத்து தீமையின் குரலும் அடங்கி ஒடுங்கி போய்விடும்.

ஆக நம்மை அழிக்க பத்தாயிரம் தீய சக்திகள் திரண்டு வந்தாலும் ஒரு நல்லவர் நமக்காக காத்திருப்பார். தீமையின் குரல் பலமாக, சக்தி மிகுந்து ஒலித்தாலும் ஒரே ஒரு உண்மையின் குரல் அனைத்து தீமைகளையும் அழித்துவிடும். ஆயிரம் மக்கள் கூட்டத்திற்கு நடுவே பார்த்திமேயு “தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்று கூறியபோது மக்களின் குரல் இவனை அதட்டுகின்றது, அமைதியாக இருக்க சொல்கின்றது. ஆனால் பார்த்திமேயுவின் குரல் இயேசுவின் செவிகளுக்கு எட்டுகின்றது. உடனே இயேசு அவரை அழையுங்கள் என்று கூறியவுடன் இவரை அதட்டிய கூட்டம்; பேசாது இருக்குமாறு சொன்ன கூட்டம் இப்போது துணிவுடன் எழுந்து வாரும் இயேசு உம்மை கூப்பிடுகிறார் என்கின்றனர். ஒரு நல்லவரின் குரல் ஓராயிரம் மக்களின் குரலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றது. இன்றும் நம்மை சுற்றி எத்தனையோ விமர்சனங்கள் நம்மை தாக்கும் போது நாம் நேர்மையாக இருந்தோமென்றால் நிச்சயம் உண்மை நம்மை விடுவிக்கும்.


அன்புக்குரியவர்களே எரிக்கோ நகரம் புனிதர்களின் நகரம் என்று அழைத்தாலும் அது மிகையாகாது. பாவிகள் பலர் இயேசுவின் சீடர்களாக மாறுகின்றனர். உதாரணமாக பாவியான சக்கேயு ஆபிரகாமின் மகனாக மாறுகின்றார். இன்று இயேசுவும் அவருடைய சீடர்களும் எரிக்கோ என்ற நகரத்திற்கு வருகின்றனர். திரளான மக்கள் அந்நகரைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இத்தருணத்தில் பார்வையற்ற பார்த்திமேயு புனிதனாக, புதிய மனிதானக வாழ முற்படுகின்றார். ஒத்தமை நற்செய்திகள் என்றழைக்கப்படும் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள 12 பொதுவான புதுமைகளில், 12வது புதுமையான பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறும் நிகழ்வு நம்மை புதிய மனிதனாக வாழ நமக்கு ஐந்து வழிகளில் அழைப்புவிடுக்கின்றது.

1. வாழ்வில் நாம் எதையும் இழக்கலாம். ஆனால், நம்பிக்கையை மட்டும் இழக்கக்கூடாது.
இந்த பார்வையற்ற மனிதர் தன்னிடம் இருந்த சொத்து, உறவு என அனைத்தையும் இழந்து கடைசியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் இயேசுவின் மீது உள்ள நம்பிக்கையை கொஞ்சமும் இழக்கவில்லை. அவரது நம்பிக்கை நாசரேத்தூர் இயேசுவை தாவீதின் மகனாக பார்க்கும் அளவிற்கு உயர்ந்து நிற்க்கின்றது.

2. இயேசுவின் இரக்கத்தில் நம்பிக்கை கொண்டு அவரிடம் விடாது மன்றாட வேண்டும்.
இந்த மனிதன் இழந்த பார்வையை மீண்டும் பெறுவதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கின்றான். நிச்சயம் ஒருநாள் நான் குணம் பெருவேன் என்ற அவனது மன்றாட்டுக்கு கடவுள் செவிசாய்க்கின்றார். நாம் ஏறெடுக்கும் ஒவ்வொரு மன்றாட்டும் வீண்போகாது என்பதற்கு இவர் முன்னூதரனமாக இருக்கின்றார்.

3. நமது இறைநம்பிக்கை பயனற்றது என்று பிறர் நம்மைச் சோர்ந்துபோக வைத்தாலும்கூட, இன்னும் அதிக நம்பிக்கையுடன் மன்றாட வேண்டும்.
நம்மை சுற்றியுள்ள உறவுகள் நமக்கு நம்பிக்கையும், புதிய உத்வேகத்தையும் தருவதாக இருக்க வேண்டும். ஆனால் பணம், பதவி இருந்தால் நம்மோடு உறவாடும் உறவுகள் உலக செல்வங்கள இழக்கும்போது நாம் அனைவருமே தனிமரமாகின்றோம். இவ்வேளையில் இறைநம்பிக்கை மட்டுமே நமக்கு வாழ்வுதரும் என பார்வையற்ற பார்த்திமேயு நமக்கு கற்றுத்தருகின்றார்.

4. நாம் மீண்டும் பார்வை அடைய இயேசுவை நோக்கிப் பார்க்க வேண்டும்.
தவறுவது மனித இயல்பு; ஆனால் மீண்டு எழுவது இறைஇயல்பு என்ற வார்த்தைக்கு ஏற்ப நம்முடைய பழைய பாவ வாழ்வில் இருந்து மீண்டு எழ முயற்ச்சிக்க வேண்டும். ஆக நம்முடைய இலட்சியங்கள் தெளிவாக இருக்கும்போது நாம் விரும்பியதை அடையலாம். இயேசு இவரிடம் நான் உமக்கு என்னசெய்ய வேண்டும் என்ற கேட்டவுடன் “நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்” என்கிறார். ஆக தன்னுடைய இலட்சியத்தில் உறுதியோடு இருந்த பார்த்திமேயு மீண்டும் பார்வைபெற்று குணம் பெறுகின்றான்.

5. இயேசுவின் அருள்கரத்தால் தொடப்பட்ட பின், இயேசுவை வாழ்நாள் முழுவதும் பின்தொடரவேண்டும்.
இயேசு பார்த்திமேயுவைப் பார்த்து “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உன்னை நலமாக்கியது” என்றவுடன் தன்வழி செல்லாமல் இறை வழி செல்கின்றார். இயேசுவை பின்பற்றி நடக்கின்றார். இன்று நாமும் கடவுளிடம் வேண்டி பல வரங்களை பெருகின்றோம். வரங்களை பெற்ற நாம் நம்வழியிலே பயணிக்கின்றோமா? அல்லது வரங்களை பொழிந்த இறைவழி நடக்கின்றோமா?

கண் பார்வையிழந்த பர்த்திமேயு இயேசுவை இறைவனாக கண்டுகொள்கின்றார். தெளிந்த கண் பார்வைகொண்ட பரிசேயர்கள் பார்வையற்றவர்களாக இருக்கின்றனர். இந்த உலகில் கண்ணிருந்தும் குருடர்களாக மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு பார்த்திமேயு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றார்.


2. நாசரேத்தூர் இயேசுவா…? தாவீதின் மகனா…?
எரிக்கோவை விட்டு வெளியேரும் மக்கள் கூட்டம் ஒருபுறம்; இயேசுவை பின்பற்றும் மக்கள் கூட்டம் ஒருபுறம். இவைஇரண்டிற்கும் மத்தியில் பார்வையற்ற மனிதன் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றான். “நாசரேத்தூர் இயேசுதாம் போகின்றார்” என்று கேள்விப்பட்டு பர்த்திமேயு இயேசுவை 'நாசரேத்து இயேசுவே' என்று அழைக்காமல், ‘இயேசுவே, தாவீதின் மகனே எனக்கு இரங்கும்' என்று அழைத்ததன் பயனாக தான் விரும்பிய பார்வையை பெற்றுக்கொள்கின்றார். மத்தேயு 11:25-26 : இயேசு, "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்” இயேசுவை எல்லோரும் நசரேத்தூரில் பிறந்த ஒரு மனிதராக பார்க்கும்போது, பர்த்திமேயு மட்டும் இயேசுவை மெசியாவாக, தாவீதின் மகனாக பார்த்த தோடல்லாமல், உரக்க கூறி அறிக்கையிடுகிறார். பார்வையை இழந்து வாழ்ந்த ஓருவன் பார்வைபெற்று புதிய மனிதான வாழ முற்படுகின்றான். விவிலிய நாயகன் பார்த்திமேயுவைப் போல நாமும் இயேசுவை இணம் கண்டு புதிய பார்வைபெற்று புதியமனிதர்களாக வாழமுயற்ச்சிப்போம்.